வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 99


பாகம் 99

ஆகஸ்டு 29, 1832ல் ஒஹாயோவிலுள்ள ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக ஜான் மர்டாக்குக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஜான் மர்டாக் ஒரு வருஷத்துக்கும் மேலாக சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது தாயில்லாத அவருடைய பிள்ளைகள் அவருடைய மனைவி ஜூலி கிளாப்பின் மரணத்துக்குப் பின்னர் ஏப்ரல் 1831ல் பிற குடும்பங்களுடன் ஒஹாயோவில் வசித்துவந்தனர்.

1–8, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஜான் மர்டாக் அழைக்கப்பட்டார், அவரை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் கர்த்தரை ஏற்றுக்கொள்ளுகிறார்கள், அவர்கள் இரக்கத்தைப் பெறுவார்கள்.

1 இதோ, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் மர்டாக்குக்கு இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், துன்புறுத்தலுக்கும் துன்மார்க்கத்திற்கும் மத்தியில் அங்குள்ள குடிகளுக்கு என்னுடைய நித்திய சுவிசேஷத்தை அறிவிக்க வீடு வீடாக, ஊர் ஊராக, பட்டணம் பட்டணமாக கிழக்கு தேசங்களுக்குப் போக நீ அழைக்கப்பட்டாய்.

2 உன்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னுடைய பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதலுடன் என்னுடைய வார்த்தையை அறிவிக்க உனக்கு அதிகாரமிருக்கும்.

3 ஒரு சிறுபிள்ளையைப்போல உன்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளுகிறான்; அவர்கள் பாக்கியவான்களாயிருப்பார்கள், ஏனெனில் அவர்கள் இரக்கத்தைப் பெறுவார்கள்.

4 உன்னை ஏற்றுக் கொள்ளாதவன் என்னுடைய பிதா மற்றும் அவருடைய ஆலயத்தினால் தள்ளப்படுவான்; அவர்களுக்கு விரோதமாக ஒரு சாட்சிக்காக வழியில் இரகசிய இடங்களில் உன்னுடைய கால்களை சுத்தப்படுத்திக்கொள்.

5 இதோ, புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதப்பட்டதைப்போல, எனக்கு விரோதமாக அவர்கள் செய்த அவர்களுடைய சகல அவபக்தியான கிரியைகளுக்காக நியாயந்தீர்க்க சீக்கிரத்திலே நான் வருகிறேன்.

6 இப்பொழுது, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், உன்னுடைய பிள்ளைகள் போஷிக்கப்படும் வரைக்கும் மற்றும் பட்சமாய் சீயோனின் ஆயரிடத்தில் அனுப்பப்படும் வரைக்கும் நீ போக வேண்டுமென்பது அவசியமில்லை.

7 சில வருஷங்களுக்குப் பின்னர், என்னிடம் நீ விரும்பி கேட்டால், உன்னுடைய சுதந்தரங்களை சொந்தமாக்கிக்கொள்ள நன்மையான தேசத்திற்கும் நீ போகலாம்;

8 இல்லையெனில், நீ எடுத்துக் கொள்ளப்படும் வரைக்கும் என்னுடைய சுவிசேஷத்தை அறிவிப்பதில் நீ தொடர்வாயாக. ஆமென்.