வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 100


பாகம் 100

அக்டோபர் 12, 1833ல் நியூயார்க்கிலுள்ள பெரிஸ்பர்க்கில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் சிட்னி ரிக்டனுக்கும் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இரண்டு சகோதரர்களும் தங்களுடைய குடும்பங்களை விட்டு அநேக நாட்கள் விலகியிருந்ததால் அவர்களைப்பற்றி சிறிது அக்கறை கொண்டார்கள்.

1–4, ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக ஜோசப்பும் சிட்னியும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவேண்டும்; 5–8, அவர்கள் என்ன சொல்லவேண்டும் என்பதைப்பற்றி அந்நேரமே அவர்களுக்கு அது கொடுக்கப்படும்; 9–12, பிரதிவாசகனாக சிட்னியும், ஜோசப் வெளிப்படுத்துபவராகவும், சாட்சியில் பெலமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்; 13–17, ஒரு பரிசுத்தமான ஜனத்தை கர்த்தர் எழுப்புவார், கீழ்ப்படிதலுள்ளவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.

1 மெய்யாகவே இப்படியாக கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார், என்னுடைய சிநேகிதர்களாகிய சிட்னி மற்றும் ஜோசப், உங்களுடைய குடும்பங்கள் நலமாயிருக்கிறார்கள்; அவர்கள் என்னுடைய கரங்களிலிருக்கிறார்கள், எனக்கு நன்மையாகத் தோன்றுகிறபடி நான் அவர்களுக்குச் செய்வேன்; ஏனெனில் சகல வல்லமையும் என்னிலிருக்கிறது.

2 ஆகவே, என்னைப் பின்பற்றி வாருங்கள், நான் உங்களுக்குக் கொடுக்கிற ஆலோசனைக்குச் செவிகொடுங்கள்.

3 இதோ, இந்த இடத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் என்னிடம் அநேக ஜனங்களிருக்கிறார்கள்; இந்த கிழக்கு தேசத்தின் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு அனுகூலமான கதவு திறக்கப்படும்.

4 ஆகவே, கர்த்தராகிய நான், இந்த இடத்திற்கு நீங்கள் வரும்படி செய்தேன்; ஏனெனில் இப்படியாக ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக அது என்னில் அவசியமாயிருந்தது.

5 ஆகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்த ஜனங்களிடம் உங்கள் குரல்களை உயர்த்துங்கள்; நான் உங்கள் இருதயங்களில் கொடுக்கிற சிந்தனைகளை பேசுங்கள், மனுஷர்களுக்கு முன்பாக நீங்கள் கலக்கமடையாதிருப்பீர்கள்;

6 ஏனெனில் அந்நேரமே அது உங்களுக்குக் கொடுக்கப்படும், ஆம், நீங்கள் என்ன சொல்லவேண்டுமென்பது அப்போதே கொடுக்கப்படும்.

7 ஆனால், என்னுடைய நாமத்தில், எந்த காரியத்தை நீங்கள் அறிவித்தாலும் சகல காரியங்களிலும் இருதயத்தின் பவித்திரத்தில், சாந்தமுள்ள ஆவியில் நீங்கள் அறிவிக்க வேண்டுமென நான் உங்களுக்கு ஒரு கட்டளை கொடுக்கிறேன்.

8 இதை நீங்கள் செய்கிற அளவில் நீங்கள் எதைச் சொன்னாலும் சகல காரியங்களிலும் சாட்சி கொடுப்பதில் பரிசுத்த ஆவி பொழியப்படும் என்ற இந்த வாக்குத்தத்தத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

9 என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி, நீ இந்த ஜனங்களுக்கு ஒரு பிரதிவாசகனாயிருக்கவேண்டும் என்பது எனக்கு அவசியமாயிருக்கிறது. ஆம், மெய்யாகவே, இந்த அழைப்புக்கு, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கு ஒரு பிரதிவாசகனாயிருக்கவும் நான் உன்னை, நியமிப்பேன்.

10 சாட்சியில் பலமாயிருக்க நான் அவனுக்கு அதிகாரம் கொடுப்பேன்.

11 அவனுக்கு நீ ஒரு பிரதிவாசகனாயிருக்கும்படியாக சகல வேதங்களையும் விவரிப்பதில் திறமையுடனிருக்க நான் உனக்கு அதிகாரம் கொடுப்பேன், பூமியில் என்னுடைய ராஜ்யத்தின் காரியங்களுக்கு சம்பந்தப்பட்ட சகல காரியங்களின் நிச்சயத்தை நீ அறிந்துகொள்ளும்படியாக அவன் உனக்கு ஒரு வெளிப்படுத்துபவனாக இருப்பான்.

12 ஆகவே, உங்களுடைய பயணத்தை தொடருங்கள், உங்களுடைய இருதயங்கள் களிகூருவதாக; ஏனெனில் இதோ, முடிவுபரியந்தம் நான் உங்களுடனேயேகூட இருப்பேன்.

13 இப்பொழுது சீயோனைக் குறித்து நான் உங்களுக்கு ஒரு வார்த்தையைக் கொடுக்கிறேன், சிறிது காலத்திற்கு சீயோன் கண்டிக்கப்பட்டாலும்கூட அவள் மீட்கப்படுவாள்.

14 உங்களுடைய சகோதரர்களான என்னுடைய ஊழியக்காரர்களாகிய ஆர்சன் ஹைடும், ஜான் கவுடும் என்னுடைய கரங்களிலிருக்கிறார்கள்; என்னுடைய கட்டளைகளை அவர்கள் கைக்கொள்ளுகிற அளவில் அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.

15 ஆகவே, உங்களுடைய இருதயங்கள் ஆறுதலடைவதாக; ஏனெனில் நேர்மையாக நடக்கிற அவர்களுக்கும், சபையின் பரிசுத்தப்படுதலுக்காகவும் சகல காரியங்களும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்.

16 ஏனெனில் நீதியில் எனக்காக சேவை செய்ய ஒரு பரிசுத்த ஜனத்தை எனக்காக நான் எழுப்புவேன்;

17 கர்த்தரின் நாமத்தில் அழைக்கிற, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற, யாவரும் இரட்சிக்கப்படுவார்கள், அப்படியே ஆகக்கடவது. ஆமென்.