வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 17


பாகம் 17

மார்மன் புஸ்தகத்தின் பதிவேட்டின் தகடுகளின்மேல் பொறிக்கப்பட்டவற்றை அவர்கள் பார்ப்பதற்கு முன்பு, ஜூன் 1829ல் நியூயார்க்கிலுள்ள பயெட்டியில் ஆலிவர் கௌட்ரிக்கும், டேவிட் விட்மருக்கும், மார்டின் ஹாரிஸுக்கும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். விசேஷித்த மூன்று சாட்சிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்களென மார்மன் புஸ்தகத்தின் தகடுகளின் மொழிபெயர்ப்பிலிருந்து ஜோசப்பும் அவரது எழுத்தரான ஆலிவர் கௌட்ரியும் அறிந்து கொண்டார்கள் (ஏத்தேர் 5:2–4; 2நேபி 11:3; 27:12 பார்க்கவும்). மூன்று விசேஷ சாட்சிகளாக இருக்க ஒரு உணர்த்தப்பட்ட வாஞ்சையால் ஆலிவர் கௌட்ரியும், டேவிட் விட்மரும், மார்டின் ஹாரிஸும் தூண்டப்பட்டனர். தீர்க்கதரிசி கர்த்தரிடம் விசாரித்தார், பதிலுக்கு ஊரீம் மற்றும் தும்மீம் மூலமாக இந்த வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டது.

1–4, தகடுகளையும், பரிசுத்தமான பிற பொருட்களையும் விசுவாசத்தால் மூன்று சாட்சிகளும் பார்ப்பார்கள்; 5–9, மார்மன் புஸ்தகத்தின் தெய்வீகத்தைக் குறித்து கிறிஸ்து சாட்சியளிக்கிறார்.

1 இதோ, நீ எனது வார்த்தையைச் சார்ந்திருக்கவேண்டுமென நான் உனக்குச் சொல்லுகிறேன், இருதயத்தின் முழுநோக்கத்தோடு நீ செய்தால், பர்வதத்தின்மீது கர்த்தருடன் முகமுகமாய் பேசிக்கொண்டிருந்தபோது யாரேதின் சகோதரனுக்குக் கொடுக்கப்பட்ட தகடுகளையும், மார்பு கவசத்தையும், லாபானின் பட்டயத்தையும், அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஊரீம் தும்மீமையும், சிவந்த சமுத்திரத்தின் எல்லைகளில் வனாந்தரத்தில் லேகிக்குக் கொடுக்கப்பட்ட அற்புதமான வழிகாட்டிகளின் ஒரு காட்சியும்கூட நீ பெறுவாய்.

2 பழங்காலத்து தீர்க்கதரிசிகள் பெற்றிருந்த அந்த விசுவாசத்தைப்போல உனது விசுவாசத்தாலும் அவைகளின் ஒரு காட்சியை நீ பெறுவாய்.

3 விசுவாசத்தை நீ பெற்று, உனது கண்களால் அவைகளைக் கண்டபின்பு, தேவனின் வல்லமையால் நீ அவைகளைக் குறித்து சாட்சியளிப்பாய்;

4 எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவன் அழிக்கப்படாதபடிக்கும், இந்த பணியில் மனுபுத்திரருக்குள்ளே எனது நீதியின் நோக்கங்களை நான் கொண்டுவரும்படிக்கும், நீங்கள் இதைச் செய்ய வேண்டும்.

5 நீ அவைகளைக் கண்டதாகவும் எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனும் அவற்றைக் கண்டதாகவும், நீ சாட்சிளிப்பாய், ஏனெனில் அது எனது வல்லமையாலும், அவனுக்கு விசுவாசமிருப்பதாலும் அவற்றை அவன் கண்டான்.

6 புஸ்தகத்தை, நான் கட்டளையிட்ட அந்த பகுதியை அவன் மொழிபெயர்த்திருக்கிறான், உனது கர்த்தரும் உனது தேவனும் ஜீவிக்கிறபடியே இதுவும் மெய்யானது.

7 ஆகவே, நீ அதே வல்லமையையும், அதே விசுவாசத்தையும், அவனைப்போல அதே வரத்தையும் பெற்றிருக்கிறாய்;

8 உனக்கு நான் கொடுத்த எனது இந்த கடைசி கட்டளையின்படி நீ செய்தால், உனக்கெதிராக பாதாளத்தின் வாசல்கள் உன்னை மேற்கொள்ளாது; ஏனெனில் என் கிருபை உனக்குப் போதும், கடைசி நாளின்போது நீ உயர்த்தப்படுவாய்.

9 மனுபுத்திரருக்குள்ளே எனது நீதியின் நோக்கங்களை நான் கொண்டுவரும்படிக்கு உனது கர்த்தரும் உனது தேவனுமான இயேசு கிறிஸ்துவாகிய நானே உன்னிடம் இதைப் பேசினேன். ஆமென்.