வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 67


பாகம் 67

நவம்பர் 1831 ஆரம்பத்தில் ஒஹாயோவிலுள்ள ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஒரு விசேஷமான மாநாடு நடந்த சந்தர்ப்பத்தில், தீர்க்கதரிசி மூலமாக கர்த்தரிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட வெளிப்படுத்தல்களை பிரசுரிப்பது கருத்தில்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டது (பாகம் 1 தலைப்பைப் பார்க்கவும்). இன்டிபென்டன்ஸ், மிசௌரியில் வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸ் சபையின் அச்சடிப்பு நிலையத்தை சமீபத்தில் ஸ்தாபித்திருந்தார். Book of Commandments ல் (கட்டளைகளின் புஸ்தகத்தில்) வெளிப்படுத்தல்களை வெளியிடவும் 10,000 பிரதிகளை அச்சடிக்கவும் மாநாடு தீர்மானித்திருந்தது (எதிர்பாராத பிரச்சினைகளால் பின்னர் அவை 3000 பிரதிகளாக குறைக்கப்பட்டன) அவர்கள்மேல் பொழியப்பட்ட பரிசுத்த ஆவியால் சாட்சி கொடுக்கப்பட்டதுபோல, வெளியிடப்படுவதற்காக அப்போது தொகுக்கப்பட்ட வெளிப்படுத்தல்கள் மெய்யாகவே சத்தியமானவை என அநேக சகோதரர்கள் பரிசுத்த சாட்சியைக் கொடுத்தார்கள். பாகம் 1 என அறியப்பட்ட வெளிப்படுத்தல் பெறப்பட்ட பின்பு வெளிப்படுத்தலில் பயன்படுத்தப்பட்ட பாஷையைப்பற்றி சில சம்பாஷணைகள் எழுந்தன என ஜோசப் ஸ்மித்தின் வரலாறு குறிப்பிடுகிறது. தற்போதைய வெளிப்படுத்தல் தொடர்ந்தது.

1–3, அவருடைய மூப்பர்களின் ஜெபங்களை கர்த்தர் கேட்டு அவர்களைக் கண்காணிக்கிறார்; 4–9, அவருடைய வெளிப்படுத்தலில் மிகச் சிறியதை திரும்பக்கூற அவர் சவால் விட்டார்; 10–14, உண்மையுள்ள மூப்பர்கள் ஆவியால் உயிர்ப்பிக்கப்பட்டு தேவனின் முகத்தைக் காண்பார்கள்.

1 இதோ, யார் ஒன்று கூடினீர்களோ, யாருடைய ஜெபங்களை நான் கேட்டேனோ, யாருடைய இருதயங்களை நான் அறிந்துகொண்டேனோ, யாருடைய வாஞ்சைகள் எனக்கு முன்பாக வந்ததோ, என்னுடைய சபையின் அந்த மூப்பர்களே கேளுங்கள்.

2 இதோ, என்னுடைய கண்கள் உங்கள்மேல் நோக்கமாயிருக்கின்றன, வானமும் பூமியும் என்னுடைய கைகளில் இருக்கின்றன, கொடுப்பதற்கு நித்தியத்தின் ஐஸ்வரியம் என்னுடையதாயிருக்கிறது.

3 உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களை நீங்கள் பெறவேண்டுமென நம்பி நீங்கள் பிரயத்தனம் செய்தீர்கள்; ஆனால் இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் இருதயங்களிலே பயங்களிருந்தன, மெய்யாகவே நீங்கள் பெறாததற்கு இதுவே காரணம்.

4 இப்பொழுது, கர்த்தராகிய நான், உங்களுக்கு முன்னாலிருக்கிற இந்தக் கட்டளைகளின் சத்தியத்தைப்பற்றிய ஒரு சாட்சியை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

5 உங்களுடைய கண்கள் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவன்மேல் இருந்தன, அவனுடைய பாஷையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அவனுடைய பூரணமின்மையை நீங்கள் அறிவீர்கள்; அவனுடைய பாஷைக்கும் அதிகமாக நீங்கள் சொல்லக்கூடிய அறிவை உங்கள் இருதயங்களிலே நீங்கள் நாடியிருக்கிறீர்கள்; இதையும் நீங்கள் அறிவீர்கள்.

6 இப்பொழுது, கட்டளைகளின் புஸ்தகத்தில், அவைகளுக்கு மத்தியிலே இருக்கிற அற்பமானதைத் தேடி, உங்களுக்கு மத்தியிலே மிகுந்த புத்திசாலியான அவனை நியமியுங்கள்;

7 அல்லது, அதைப்போல ஒன்றை எழுதுகிற யாராவது உங்களுக்கு மத்தியிலிருந்தால், பின்னர் அவைகள் சத்தியமென்று, நீங்கள் அறியீர்கள் எனச் சொல்வதில் நீங்கள் நியாயவான்களாகத் தீர்க்கப்படுகிறீர்கள்;

8 ஆனால் அதைப்போல ஒன்றை உங்களால் எழுத முடியவில்லையென்றால், அவைகள் சத்தியமென நீங்கள் சாட்சி சொல்லவில்லையென்றால் நீங்கள் ஆக்கினைக்குள்ளாவீர்கள்.

9 ஏனெனில் அவைகளில் நீதியின்மை இல்லையென நீங்கள் அறிவீர்கள், நீதியுள்ளவை பரத்திலிருந்து, ஒளியின் பிதாவினிடத்திலிருந்து வருகிறது.

10 மீண்டும், இது உங்கள் சிலாக்கியமாயிருக்கிறது, மற்றும் இந்த ஊழியத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறேன் என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஏனெனில் நீங்கள் போதுமானபடி தாழ்மையாயில்லாததால் நீங்கள் எரிச்சலையும் பயத்தையும் எடுத்துப்போடும் அளவில், எனக்கு முன்பாக உங்களைத் தாழ்த்தும்போது, திரை கிழிக்கப்பட்டு, மாம்ச அல்லது சுபாவ சிந்தையுடன் அல்ல, ஆனால் ஆவிக்குரிய சிந்தையுடன் நீங்கள் என்னைக் காண்பீர்கள்.

11 தேவனின் ஆவியால் உயிர்ப்பிக்கப்பட்டவனைத் தவிர எவனும் எந்த நேரத்திலும் மாம்சத்தில் தேவனைக் கண்டதில்லை.

12 ஜென்ம சுபாவமுள்ள எந்த மனுஷனும், அல்லது மாம்ச சிந்தையோடு தேவனின் பிரசன்னத்தில் தரித்திருப்பதில்லை.

13 இப்பொழுது நீங்கள் தேவனுடைய பிரசன்னத்திலும், தூதர்களின் பணிவிடையுடனும் இருக்கமுடியாது. ஆகவே நீங்கள் பரிபூரணப்படும்வரை பொறுமையில் தொடர்ந்திருங்கள்.

14 உங்கள் மனங்கள் பின்னிட்டுப் போகாதிருப்பதாக; என்னுடைய ஏற்ற காலத்திலே நீங்கள் தகுதியடையும்போது என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனின் கைகளால் அது உங்கள்மேல் அருளப்பட்டதை கண்டு அறிந்து கொள்வீர்கள். ஆமென்.