வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 35


பாகம் 35

டிசம்பர் 7, 1830ல் நியூயார்க்கின் பயெட்டியில் அல்லது அதற்கருகில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் சிட்னி ரிக்டனுக்கும் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த சமயத்தில், வேதாகமத்தை மொழிபெயர்ப்பதில் தீர்க்கதரிசி ஏறக்குறைய தினமும் ஈடுபட்டிருந்தார். ஜூன் 1830ன் ஆரம்பத்தில் மொழிபெயர்ப்பு ஆரம்பமாகி, ஆலிவர் கௌட்ரியும் ஜான் விட்மரும் எழுத்தர்களாக பணிபுரிந்தார்கள். இப்பொழுது அவர்கள் பிற கடமைகளுக்கு அழைக்கப்பட்டிருப்பதால் இந்த பணியில் தீர்க்கதரிசியின் எழுத்தராக பணிபுரிய தெய்வீக ஏற்படுத்தலில் சிட்னி ரிக்டன் அழைக்கப்பட்டார். (வசனம் 20ஐப் பார்க்கவும்). இந்த வெளிப்படுத்தலுக்கு பதிவின் முன்னுரையாக “(ஒஹாயோவிலிருந்து) கர்த்தரிடம் விசாரிக்கும்படிக்கு டிசம்பரில் சிட்னி ரிக்டன் வந்தார், அவருடன் எட்வர்ட் பாட்ரிட்ஜூம் வந்தார். இந்த சகோதரர்கள் வந்துசேர்ந்தவுடன் இப்படியாக கர்த்தர் பேசினார்” என ஜோசப் ஸ்மித்தின் வரலாறு அறிவிக்கிறது.

1–2, மனுஷர்கள் எவ்வாறு தேவகுமாரர்களாகலாம்; 3–7, ஞானஸ்நானம் கொடுக்கவும் பரிசுத்த ஆவியின் வரத்தை அருளவும் சிட்னி ரிக்டன் அழைக்கப்பட்டார்; 8–12, விசுவாசத்தால் அடையாளங்களும் அறிகுறிகளும் உண்டாக்கப்பட்டன; 13–16, ஆவியின் வல்லமையால் கர்த்தரின் ஊழியக்காரர்கள் தேசங்களை மிதித்து நொறுக்குவார்கள்; 17–19, இரகசியங்களின் திறவுகோல்களை ஜோசப் ஸ்மித் தரித்திருக்கிறார்; 20–21, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், கர்த்தருடைய வருகையின் நாளில் இருப்பார்கள்; 22–27, இஸ்ரவேல் இரட்சிக்கப்படும்.

1 அல்பாவும் ஓமெகாவாயுமிருக்கிற, தொடக்கமும் முடிவுமாயிருக்கிற அவரது மார்க்கம் ஒரு நித்திய சுற்றாயிருக்கிற, நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிற, கர்த்தராகிய உங்களுடைய தேவனின் சத்தத்தைக் கேளுங்கள்.

2 உலகத்தின் பாவங்களுக்காக சிலுவையிலறையப்பட்ட, தேவகுமாரனாகிய நானே இயேசு கிறிஸ்து, எனது நாமத்தை நம்புகிற அநேகரும் தேவகுமாரர்களாவார்கள், பிதாவில் நான் ஒன்றாயிருப்பதைப்போல, என்னில் பிதா ஒன்றாயிருப்பதைப்போல, நாங்கள் ஒன்றாயிருக்கும்படிக்கு, என்னில் ஒன்றாயிருப்பார்கள்.

3 இதோ, எனது ஊழியக்காரனாகிய சிட்னி, உன்னையும் உனது வேலைகளையும் நான் பார்த்தேன் என மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன். உனது ஜெபங்களை நான் கேட்டேன், ஒரு மகத்தான பணிக்கு உன்னை ஆயத்தப்படுத்தினேன்.

4 நீ பாக்கியவானாயிருப்பாய், ஏனெனில் நீ மகத்தான காரியங்களைச் செய்வாய். இதோ, எனக்கு முன்பாகவும் வரவேண்டிய எலியாவுக்கு முன்பாகவும் பாதையை ஆயத்தப்படுத்த யோவானைப்போல நீ அனுப்பப்பட்டாய், இதை நீ அறியாதிருந்தாய்.

5 மனந்திரும்புதலுக்காக தண்ணீரால் நீ ஞானஸ்நானம் கொடுத்தாய், ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை;

6 ஆனால் இப்பொழுது, தண்ணீரால் நீ ஞானஸ்நானம் கொடுக்க உனக்கு ஒரு கட்டளையை நான் கொடுக்கிறேன், பழங்காலத்து அப்போஸ்தலர்களைப்போலவே, இவர்களும் கைகள் வைக்கப்படுவதால் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள்.

7 தேசத்தில் புறஜாதியாருக்கு மத்தியிலும் ஒரு மகத்தான பணி நடைபெறும், ஏனெனில் அவர்களின் மதிகேடும் அருவருப்புகளும் சகல ஜனங்களின் கண்களிலும் வெளியரங்கமாக்கப்படும்.

8 ஏனெனில் நானே தேவன், எனது கரம் குறுகிப்போவதில்லை; எனது நாமத்தில் நம்பிக்கை கொண்ட யாவருக்கும் அற்புதங்களையும், அறிகுறிகளையும் அதிசயங்களையும், நான் காண்பிப்பேன்.

9 விசுவாசத்தில் எனது நாமத்தில் யார் கேட்டாலும் அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; அவர்கள் வியாதியஸ்தர்களை சொஸ்தப்படுத்துவார்கள்; அவர்கள் குருடர் தங்கள் பார்வையைப் பெறவும், செவிடர்கள் காது கேட்கவும், ஊமையரைப் பேசவும், முடவரை நடக்கவும் செய்வார்கள்.

10 மனுபுத்திரருக்கு பெரிய காரியங்கள் காட்டப்படவேண்டிய காலம் சீக்கிரமாக வருகிறது;

11 ஆனால் அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடிக்கும்படிச் செய்த, பாபிலோனின்மேல் வரும் பாழ்க்கடிப்புகளைத் தவிர, விசுவாசமில்லாமல் எதுவும் காட்டப்படமாட்டாது.

12 இந்த சந்ததிக்குள் நான் அனுப்பிய என்னுடைய பரிபூரண சுவிசேஷத்தைப் பெற ஆயத்தமாயிருக்கிறவர்களைத் தவிர எவனும் நன்மை செய்யவில்லை.

13 ஆகவே, கல்லாதவர்களும் அலட்சியம் பண்ணப்பட்டவர்களும், என்னுடைய ஆவியின் வல்லமையால் ஜாதிகளை மிதித்து நொறுக்க உலகத்தில் பலவீனமானவைகளை அழைக்கிறேன்;

14 அவர்கள் புயம் என்னுடைய புயமாயிருக்கிறது, நான் அவர்களின் பரிசயமும் கேடகமாயுமிருப்பேன்; அவர்களை அரைக் கட்டுவேன், அவர்கள் எனக்காக கடுமையாய்ப் போரிடுவார்கள்; அவர்களின் எதிரிகள் அவர்களின் பாதங்களின் கீழிருப்பார்கள்; அவர்களுக்காக பட்டயத்தை விழப்பண்ணுவேன், என்னுடைய கோபத்தின் அக்கினியால் நான் அவர்களை பாதுகாப்பேன்.

15 சிறுமையானவர்களுக்கும் சாந்த குணமுள்ளவர்களுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும், எனது வருகைக்காக அவர்கள் காத்திருப்பார்கள், ஏனெனில் அது சமீபித்திருக்கிறது,

16 அத்திமரத்தின் உவமையை அவர்கள் அறிந்துகொள்வார்கள், ஏனெனில் இப்பொழுதே கோடை காலம் சமீபித்திருக்கிறது.

17 எனது ஊழியக்காரனாகிய ஜோசப் மூலமாக சுவிசேஷத்தின் பரிபூரணத்தை நான் அனுப்பியிருக்கிறேன்; பலவீனத்தில் நான் அவனை ஆசீர்வதித்திருக்கிறேன்;

18 அவன் என்னோடிருந்தால், உலகத் தோற்றத்திலிருந்து முத்திரிக்கப்பட்ட, இந்த சமயத்திலிருந்து எனது வருகையின் காலம் வரையுள்ள அந்தக் காரியங்களின் இரகசியங்களின் திறவுகோல்களை நான் அவனுக்குக் கொடுத்தேன், இல்லையென்றால் அவனுக்குப் பதிலாக மற்றொருவனை நான் ஏற்படுத்துவேன்.

19 ஆகவே, அவனது விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு அவனைக் கவனித்துக் கொள், சகலத்தையும் அறிந்திருக்கிற பரிசுத்த ஆவியான தேற்றரவாளனால் இது கொடுக்கப்படும்.

20 அவனுக்காக நீ எழுதவேண்டுமென்ற ஒரு கட்டளையை நான் உனக்குக் கொடுக்கிறேன்; நான் தெரிந்துகொண்டவர்களின் இரட்சிப்புக்காக அவைகள் எனது நெஞ்சில் இருப்பதைப்போல வசனங்கள் கொடுக்கப்படும்;

21 ஏனெனில் அவர்கள் எனது குரலைக் கேட்பார்கள், என்னைக் காண்பார்கள், உறங்காமலிருப்பார்கள், எனது வருகையின் நாளில் விழித்திருப்பார்கள்; ஏனெனில் நான் பரிசுத்தமாயிருப்பதைப்போல, அவர்கள் சுத்திகரிக்கப்படுவார்கள்.

22 இப்பொழுது நான் உனக்குச் சொல்லுகிறேன், அவனோடு இரு, அவன் உன்னோடு பயணம் செய்வான்; அவனைக் கைவிடாதே, நிச்சயமாக இந்தக் காரியங்கள் நிறைவேற்றப்படும்.

23 நீ எழுதாதிருக்கும்வரை, இதோ, தீர்க்கதரிசனமுரைக்க அது அவனுக்குக் கொடுக்கப்படும்; அவனுக்குக் கொடுக்கப்படுகிறபடியே நீ என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அவனது வார்த்தைகளை நிரூபிக்க பரிசுத்த தீர்க்கதரிசிகள் கூறியவற்றை ஆராய்ந்து பார்.

24 நீ பிணைக்கப்பட்டிருக்கிற கட்டளைகள் உடன்படிக்கைகள் யாவற்றையும் கைக்கொள்ளுவாயாக; உன்னுடைய நன்மைக்காக நான் வானத்தை அசைக்கப்பண்ணுவேன், சாத்தான் நடுங்குவான், சீயோன், மலைகளின்மேல் களிகூர்ந்து செழித்தோங்கும்;

25 என்னுடைய சொந்த ஏற்ற காலத்தில் இஸ்ரவேல் இரட்சிக்கப்படும்; நான் கொடுத்த திறவுகோல்களால் அவர்கள் நடத்தப்பட்டு, இனிமேல் தாறுமாறாக்கப்பட மாட்டார்கள்.

26 உங்கள் இருதயங்களை உயர்த்தி சந்தோஷமாயிருங்கள், உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறது.

27 சிறு மந்தையே பயப்படாதே, நான் வரும்வரை ராஜ்யம் உன்னுடையதாயிருக்கிறது. இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன். அது அப்படியே ஆகக்கடவது. ஆமென்.