வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 54


பாகம் 54

ஜூன் 10, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் நீவல் நைட்டுக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். சொத்துக்கள் நேர்ச்சை செய்யப்படுவதைப்பற்றிய கேள்விகளில் ஒஹாயோவின் தாம்சனில் வாழ்ந்துகொண்டிருந்த சபையின் அங்கத்தினர்கள் அபிப்பிராய பேதங்கொண்டிருந்தனர். சுயநலமும் பேராசையும் வெளிப்பட்டது. ஷேக்கர்ஸூக்கு அவருடைய ஊழியத்தைப் பின்தொடர்ந்து (பாகம் 49ன் தலைப்பைப் பார்க்கவும்). நியூயார்க்கின் கோல்ஸ்வில்லிலிருந்து வந்துகொண்டிருந்த பரிசுத்தவான்களின் சுதந்தரத்திற்கான ஒரு இடமாக அவனது பெரிய பண்ணையை நேர்ச்சை செய்ய அவன் செய்த உடன்படிக்கையை லீமன் கோப்லி மீறினான். அதன் விளைவாக, நீவல் நைட்டும் (தாம்சனில் வாழ்ந்துகொண்டிருந்த அங்கத்தினர்களின் தலைவர்), பிற மூப்பர்களும் எவ்வாறு தொடர்வதென்பதை கேட்டு தீர்க்கதரிசியிடம் வந்தார்கள். தீர்க்கதரிசி கர்த்தரிடம் விசாரித்து இந்த வெளிப்படுத்தலைப் பெற்றார். லீமன் கோப்லியின் பண்ணையை விட்டு மிசௌரிக்கு பயணப்படும்படியாக தாம்சனின் அங்கத்தினர்களுக்கு அது கட்டளையிட்டது.

1–6, இரக்கத்தைப்பெற பரிசுத்தவான்கள் சுவிசேஷத்தின் உடன்படிக்கையைக் கைக்கொள்ள வேண்டும்; 7–10, பாடுகளில் அவர்கள் பொறுமையாயிருக்க வேண்டும்.

1 இதோ, அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமான, உலகத்தின் பாவங்களுக்காக சிலுவையிலறையப்பட்ட கர்த்தர் இப்படியாக சொல்லுகிறார்,

2 இதோ, மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரனாகிய நீவல் நைட், நான் உன்னை நியமித்த அலுவலில் நீ உறுதியாய் நில்.

3 தங்கள் சத்துருக்களிடமிருந்து தப்பிக்க உனது சகோதரர்கள் வாஞ்சித்தால், தங்களின் சகல பாவங்களிலிருந்தும் மனந்திரும்புவார்களாக, எனக்கு முன்பாக உண்மையாக தாழ்மையுள்ளவர்களாயும் நொறுங்குண்டவர்களாயும் ஆகுங்கள்.

4 என்னிடத்தில் அவர்கள் செய்த உடன்படிக்கை மீறப்பட்டதால், அது அவமாய்ப்போய் பயனற்றதாகும்.

5 இந்த இடறல் எவனிடமிருந்து வருகிறதோ அவனுக்கு ஐயோ, ஏனெனில் சமுத்திரத்தின் ஆழத்தில் அவன் மூழ்கி விடுவது அவனுக்கு நலமாயிருக்கும்.

6 ஆனால் உடன்படிக்கையைக் கைக்கொண்டவர்களும் கட்டளையைக் காத்துக்கொண்டவர்களும் பாக்கியவான்களாயிருப்பார்கள், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

7 ஆகவே, உங்கள் சத்துருக்கள் உங்கள்மேல் வராமலிருக்கும்பொருட்டு இப்பொழுது போய், தேசத்தைவிட்டு ஓடிப்போங்கள், உங்கள் பயணத்தை மேற்கொண்டு, உங்கள் தலைவனாயிருக்கப் போகிறவனை உங்களுக்காக பணத்தை செலுத்துபவனை உங்கள் சித்தப்படி நியமியுங்கள்,

8 அப்படியாக, மிசௌரி தேசத்திற்கும், லாமானியர்களின் எல்லைகளுக்கும் உங்கள் பயணத்தை மேற்கு நோக்கிய பகுதிகளுக்கு நீங்கள் மேற்கொள்வீர்கள்.

9 உங்கள் பயணத்தை நீங்கள் முடித்தபின்பு, இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தும்வரை மனுஷர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடத்தைத் தேடுங்கள்.

10 மீண்டும், நான் வரும்வரை உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள், இதோ, நான் சீக்கிரத்திலே வருகிறேன், என்னுடைய பிரதிபலன் என்னுடனேயே இருக்கிறது, சீக்கிரத்திலேயே என்னை நாடுகிறவர்கள் தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் காண்பார்கள். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.