வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 65


பாகம் 65

அக்டோபர் 30, 1831ல் ஒஹாயோவிலுள்ள ஹைரமில் ஜெபத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்.

1–2, தேவனின் ராஜ்யத்தின் திறவுகோல்கள் பூமியில் மனுஷனிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது, சுவிசேஷத்தின் நோக்கம் வெற்றி சிறக்கும்; 3–6, பரலோகத்தின் ஆயிரம் வருஷ ராஜ்யம் வரும், பூமியில் தேவனின் ராஜ்யத்தோடு சேரும்.

1 உன்னதத்திலிருந்து கீழே அனுப்பப்பட்டவரும், பராக்கிரமும் வல்லமையுமுடையவருமான, பூமியின் கடையாந்தரங்கள் மட்டும் போகிறவருமான, ஆம், மனுஷனுக்கு தொனிக்கிறதான அவருடைய சத்தத்தை இதோ, கேளுங்கள். கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்கு பாதைகளை செவ்வைப்படுத்துங்கள்.

2 தேவனின் ராஜ்யத்தின் திறவுகோல்கள் மனுஷனுக்கு பூமியில் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. பூமி முழுவதையும் அது நிரப்பும்வரை மலையிலிருந்து கைகளில்லாமல் வெட்டியெடுக்கப்பட்ட கல் உருண்டோடுவதைப்போல, சுவிசேஷம் பூமியின் கடையாந்தரங்கள் மட்டும் உருண்டு செல்லும்.

3 ஆம், ஒரு சத்தம் கூக்குரலிடுகிறது, கர்த்தரின் வழியை ஆயத்தப்படுத்துங்கள், ஆட்டுக்குட்டியானவரின் விருந்தை ஆயத்தப்படுத்துங்கள், மணவாளனுக்காக ஆயத்தம் பண்ணுங்கள்.

4 கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணுங்கள், அவரது பரிசுத்த நாமத்தை அழையுங்கள், ஜனங்களுக்கு மத்தியில் அவருடைய அற்புதமான கிரியைகளை அறியப்பண்ணுங்கள்.

5 அவருடைய ராஜ்யம் பூமியின்மீது ஸ்தாபிக்கப்படவும், அங்குள்ள குடிகள் அதைப் பெறவும், பூமியில் அமைக்கப்பட்டிருக்கிற தேவனின் ராஜ்யத்தை சந்திக்க அவரது மகிமையின் பிரகாசத்திலே வஸ்திரந்தரித்தவராக பரலோகத்தில் மனுஷகுமாரன் இறங்கி வரப்போகிற நாட்களுக்காக ஆயத்தப்பட்டு, கர்த்தரிடம் செல்லுங்கள்.

6 ஆகவே, தேவனின் ராஜ்யம் வருவதாக, பரலோக ராஜ்யம் வரும்படியாக, தேவனே, நீர் பரலோகத்திலும் பூமியிலும் மகிமைப்படும்படியாக, உம்முடைய சத்துருக்கள் கீழ்ப்படுத்தப்படுவார்களாக, ஏனெனில் கனமும், வல்லமையும், மகிமையும், என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.