வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 117


பாகம் 117

ஜூலை 8, 1838ல் மிசௌரியின் பார் வெஸ்டில் வில்லியம் மார்க்ஸ், நீவல் கே. விட்னி மற்றும் ஆலிவர் கிரேஞ்சரின் உடனடி கடமைகளைக் குறித்து, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்.

1–9, உலகப்பிரகாரமான காரியங்களை கர்த்தரின் ஊழியக்காரர்கள் இச்சியாதிருக்க வேண்டும், ஏனெனில் “கர்த்தருக்கு ஆஸ்தி எம்மாத்திரம்?”; 10–16, ஆத்துமாவின் சிறுமையை அவர்கள் விட்டுவிட வேண்டும், அவர்களின் தியாகங்கள் கர்த்தருக்கு பரிசுத்தமானவையாய் இருக்கும்.

1 என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் மார்க்ஸூக்கும், என்னுடைய ஊழியக்காரனாகிய நீவல் கே. விட்னிக்கும் மெய்யாகவே இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், சீக்கிரத்திலேயே அவர்கள் தங்களுடைய வியாபாரங்களை முடித்துக்கொண்டு, கர்த்தராகிய நான் பூமியின்மீது மீண்டும் பனிக்கட்டிகளை அனுப்பும் முன்பு கர்த்லாந்து தேசத்திலிருந்து பயணம் செய்வார்களாக.

2 அவர்கள் விழித்து, எழுந்து வருவார்களாக, தங்கவேண்டாம், ஏனெனில் கர்த்தராகிய நான் அதைக் கட்டளையிடுகிறேன்.

3 ஆகவே, அவர்கள் தங்கினால் அவர்களுக்கு அது நலமாயிருக்காது.

4 அவர்களுடைய சகல பாவங்களுக்காகவும், தங்களுடைய சகல இச்சையான ஆசைகளுக்காகவும் எனக்கு முன்பாக அவர்கள் மனந்திரும்புவார்களாக என கர்த்தர் சொல்லுகிறார், ஏனெனில் ஆஸ்தி எனக்கு எம்மாத்திரம்? என கர்த்தர் சொல்லுகிறார்.

5 கர்த்லாந்தின் ஆஸ்திகள் கடன்களுக்காக கொடுக்கப்படுவதாக என கர்த்தர் சொல்லுகிறார். அவைகள் போகட்டுமென கர்த்தர் சொல்லுகிறார், மீதியானவை உங்களுடைய கரங்களிலிருப்பதாக என கர்த்தர் சொல்லுகிறார்.

6 ஏனெனில் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்தின் மச்சங்களையும், மலைகளின் மிருகங்களையும் நான் வைத்திருக்கவில்லையா? பூமியை நான் சிருஷ்டிக்கவில்லையா? பூமியிலுள்ள தேசங்களின் சகல சேனைகளின் எதிர்காலங்களை நான் வைத்திருக்கவில்லையா?

7 ஆகவே, தனிமையான இடங்கள் துளிர்த்து, பூத்து ஏராளமாய்க் கொண்டுவர நான் செய்யமாட்டேனோ என கர்த்தர் சொல்லுகிறார்.

8 அதிக முக்கிய பொருட்களை கவனிக்காமல், துளியாக உள்ளதை நீ கைப்பற்றும்படியாக ஆதாம்-ஓந்தி-ஆமானின் மலைகளிலும், ஒலஹா ஷினேஹா சமவெளிகளிலும், அல்லது ஆதாம் வாழ்ந்த தேசத்தில் போதுமான இடமில்லையா?

9 ஆகவே, என்னுடைய ஜனங்களுடைய தேசமான சீயோனாகிய இங்கே வாருங்கள்.

10 என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் மார்க்ஸ் ஒரு சில காரியங்களில் உண்மையுள்ளவனாய் இருப்பானாக, அவன் அநேகருக்கு அதிபதியாயிருப்பான். பார் வெஸ்ட் பட்டணத்தில் என்னுடைய ஜனங்களுக்கு மத்தியில் அவன் தலைமை தாங்குவானாக, என்னுடைய ஜனங்களின் ஆசீர்வாதங்களுடன் அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக.

11 நிகோலைட்டேன் கூட்டத்துக்காகவும் அவர்களுடைய இரகசிய அருவருப்புகளுக்காகவும் எனக்கு முன்பாக அவனுடைய ஆத்துமாவின் சகல சிறுமைத்தனத்திற்காகவும் என்னுடைய ஊழியக்காரனாகிய நீவல் கே. விட்னி வெட்கப்படுவானாக என கர்த்தர் சொல்லுகிறார். மற்றும் ஆதாம்-ஓந்தி-ஆமானின் தேசத்திற்கு வந்து என்னுடைய ஜனங்களுக்கு ஒரு ஆயராக இரு என கர்த்தர் சொல்லுகிறார், பெயரளவில் அல்ல, ஆனால் செயலில் என கர்த்தர் சொல்லுகிறார்.

12 மீண்டும் நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கிரேஞ்சரை நான் நினைவுகூருகிறேன் இதோ, தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் அவனுடைய நாமம் பரிசுத்தமாக நினைவுகூரப்படும் என மெய்யாகவே நான் அவனுக்குச் சொல்லுகிறேன் என கர்த்தர் சொல்லுகிறார்.

13 ஆகவே, என்னுடைய சபையின் பிரதான தலைமையின் மீட்பிற்காக அவன் கருத்தாய் பிரயாசப்படுவானாக என கர்த்தர் சொல்லுகிறார். அவன் விழும்போது அவன் மீண்டும் எழுவான், ஏனெனில் அவனுடைய தியாகம் அவனுடைய வருவாயை விட எனக்கு அதிக பரிசுத்தமாயிருக்கும் என கர்த்தர் சொல்லுகிறார்.

14 ஆகவே, அவன் இங்கே சீயோனின் தேசத்திற்கு சீக்கிரமாய் வருவானாக; ஏற்ற காலத்திலே என்னுடைய ஜனங்களின் பலனுக்காக என்னுடைய நாமத்திலே அவன் ஒரு வியாபாரியாக்கப்படுவான் என கர்த்தர் சொல்லுகிறார்.

15 ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கிரேஞ்சரை எந்த மனுஷனும் உதாசீனம் செய்யாதிருப்பானாக, ஆனால் என்னுடைய ஜனங்களின் ஆசீர்வாதங்கள் அவனோடு என்றென்றைக்குமிருப்பதாக.

16 மீண்டும் மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், கர்த்லாந்து தேசத்திலுள்ள என்னுடைய ஊழியக்காரர்கள் யாவரும் தங்களுடைய கர்த்தராகிய தேவனையும், என்னுடைய வீட்டையும், அதைப் பரிசுத்தமாக ஆசரிக்கவும் பாதுகாக்கவும் என்னுடைய ஏற்ற காலத்திலே காசுக்காரர்களை கவிழ்க்கவும் நினைவுகூருவீர்களாக என கர்த்தர் சொல்லுகிறார். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.