வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 74


பாகம் 74

1830ல் நியூயார்க்கின் வெயின் மாகாணத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். சபை ஸ்தாபனத்திற்கு முன்பே ஞானஸ்நானத்தின் சரியான முறையைப்பற்றி கேள்விகள் எழுந்தன, அதைப்பற்றிய பதில்களைத் தேட அது தீர்க்கதரிசியை நடத்தியது. குழந்தை ஞானஸ்நானத்தை நியாயப்படுத்த அடிக்கடி பயன்படுத்தப்படுகிற வேத வசனமான 1கொரிந்தியர் 7:14வது வசனத்தின் ஒரு விளக்கமே இந்த வெளிப்படுத்தல் என தீர்க்கதரிசியின் வரலாறு குறிப்பிடுகிறது.

1–5, மோசேயின் நியாயப்பிரமாணங்களை கைக்கொள்ளாதிருக்க பவுல் அவனது நாளில் சபைக்கு ஆலோசனையளிக்கிறான்; 6–7, சிறுபிள்ளைகள் பரிசுத்தமானவர்கள், பாவநிவர்த்தியின் மூலமாக சுத்திகரிக்கப்படுகிறார்கள்.

1 அதாவது, அவிசுவாசியான புருஷன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான், அவிசுவாசியான மனைவியும் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள், இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருப்பார்களே, ஆனால் இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாயிருக்கிறார்கள்.

2 இப்பொழுது, அப்போஸ்தலர்களின் நாட்களில், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நம்பாத யூதர்களுக்கு மத்தியில், விருத்தசேதன நியாயப்பிரமாணமிருந்தது.

3 அந்தப்படியே, விருத்தசேதன நியாயப்பிரமாணத்தைப்பற்றி ஜனங்களுக்கு மத்தியில் பயங்கர வாக்குவாதங்கள் எழுந்தன, ஏனெனில், தன்னுடைய பிள்ளைகள் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டுமெனவும், நிறைவேறிவிட்ட மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படவேண்டுமெனவும் அவிசுவாசியான புருஷன் விரும்பினான்.

4 மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படுவதில் வளர்க்கப்பட்டதால் பிள்ளைகள் தங்கள் பிதாக்களின் பாரம்பரியத்திற்கு செவிகொடுத்து, கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நம்பவில்லை, இதனால் அவர்கள் அசுத்தமானார்கள்.

5 ஆகவே, இந்தக்காரணத்திற்காக, மோசேயின் நியாயப்பிரமாணம் அவர்களுக்கு மத்தியிலிருந்து எடுக்கப்படவேண்டுமென்பதைத் தவிர, ஒரு விசுவாசி ஒரு அவிசுவாசியோடு சேரக்கூடாது என்று, கர்த்தருடையதல்லாமல், அவனாகவே அவர்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்தான், இந்தக் காரணத்துக்காகவே அப்போஸ்தலன் சபைக்கு எழுதினான்.

6 அவர்களுடைய பிள்ளைகள் விருத்தசேதனம் இல்லாமலிருக்க வேண்டும்; சிறுபிள்ளைகள் அசுத்தமானவர்கள் என்று சொல்கிற பாரம்பரியம் எடுத்துப்போடப்பட வேண்டும்; ஏனெனில் அது யூதர்களுக்கு மத்தியிலிருந்தது;

7 ஆனால் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக பரிசுத்தப்படுத்தப்பட்டு, சிறுபிள்ளைகள் பரிசுத்தமாயிருக்கிறார்கள்; இதைத்தான் வேதங்கள் சொல்லுகின்றன.