வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 86


பாகம் 86

டிசம்பர் 6, 1832ல் ஒஹாயோவிலுள்ள கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். வேதாகம மொழிபெயர்ப்பின் கையெழுத்துப் பிரதியை தீர்க்கதரிசி பரிசீலனை செய்து தொகுத்துக் கொண்டிருந்தபோது இந்த வெளிப்படுத்தல் பெறப்பட்டது.

1–7, கோதுமை மற்றும் பதரைப்பற்றிய உவமையின் அர்த்தத்தை கர்த்தர் கொடுக்கிறார்; 8–11, மாம்சத்தின் பிரகாரமாய் சட்டப்படியான சந்ததியாருக்கான ஆசாரியத்துவத்தின் ஆசீர்வாதங்களை அவர் விவரிக்கிறார்.

1 கோதுமை மற்றும் பதரைப்பற்றிய உவமை குறித்து என்னுடைய ஊழியக்காரர்களாகிய உங்களுக்கு மெய்யாகவே இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார்:

2 இதோ, மெய்யாகவே நான் சொல்லுகிறேன், உலகம்தான் நிலம், அப்போஸ்தலர்கள் விதை விதைப்பவர்கள்.

3 அவர்கள் நித்திரையடைந்த பின்பு, சபையின் மிகவும் துன்பப்படுத்துகிறவனும், மதமாறுபாடுள்ளவனும், வேசியுமான சகல தேசங்களையும் அவளுடைய பாத்திரத்திலே பானம் பண்ணவைக்கிற, பாபிலோனின் இருதயங்களில் ஆளுகை செய்ய, சத்துருவான சாத்தான் அமருகிறான், இதோ அவன் பதரை விதைக்கிறான்; ஆகவே, பதர் கோதுமையை நெருக்கி சபையை வனாந்தரத்திற்குள் துரத்துகிறது.

4 ஆனால் இதோ, கடைசி நாட்களில், இப்போதும்கூட கர்த்தர் வார்த்தையைக் கொண்டுவருவதற்கு ஆரம்பிக்கும்போது, இலை வெளிவருகிறது, இன்னமும் மென்மையாயிருக்கிறது,

5 இதோ, நான் மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், வயல்களை அறுக்க அனுப்பப்பட ஆயத்தமாகவும் காத்துக்கொண்டுமிருக்கிற தூதர்கள் இரவும் பகலும் கர்த்தரிடத்தில் கூக்குரலிடுகிறார்கள்;

6 ஆனால் கர்த்தர் அவர்களுக்குச் சொல்லுகிறார், இலை இன்னமும் மென்மையாயிருக்கும்போது, கோதுமையையும் நீங்கள் அழிக்காதிருக்கும்பொருட்டு, பதரைப் பிடுங்காதிருங்கள் (ஏனெனில் மெய்யாகவே உங்கள் விசுவாசம் பலவீனமாயிருக்கிறது).

7 ஆகவே, அறுப்புக்கு முழுமையாக விளையும்வரை கோதுமையும் பதரும் ஒன்றாக வளர்வதாக; பின்னர் பதர்களுக்கு மத்தியிலிருந்து நீங்கள் முதலில் கோதுமையை சேகரியுங்கள், கோதுமையை சேகரித்தபின்பு, இதோ, பதர்கள் கட்டுக்களாக கட்டப்படும், வயல் சுட்டெரிக்கப்படவிருக்கிறது.

8 ஆகவே, உங்களுடைய பிதாக்களின் வம்சத்தின் வழியாக ஆசாரியத்துவம் தொடர்ந்த உங்களிடம் இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார்,

9 ஏனெனில் மாம்சத்தின் பிரகாரமாய் நீங்களே சட்டப்படியான சந்ததியாயிருக்கிறீர்கள், தேவனுக்குள் கிறிஸ்துவுடன் உலகத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறீர்கள்,

10 ஆகவே, உங்கள் ஜீவனும் ஆசாரியத்துவமும் நிலைத்திருக்கிறது, உலகத்தோற்ற முதல் சகல பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாய்களால் பேசப்பட்ட சகல காரியங்களின் மறுஸ்தாபிதம்வரை உங்களின் மூலமாகவும் உங்களின் வம்சத்தின் மூலமாகவும் நிலைத்திருக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.

11 ஆகவே புறஜாதியாருக்கு ஒளியாக இருந்து, இந்த ஆசாரியத்துவத்தின் மூலமாக, என்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இரட்சகராக என்னுடைய தயவில், தொடர்ந்திருந்தால் நீங்கள் பாக்கியவான்களாயிருக்கிறீர்கள். இதை கர்த்தர் சொன்னார். ஆமென்.