வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19


பாகம் 19

அநேகமாக 1829ன் கோடையில் நியூயார்க்கின் மான்செஸ்டரில் ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். தீர்க்கதரிசி அவரது வரலாற்றில் “மனுஷனாலல்லாமல், நித்தியமான அவரால் மார்டின் ஹாரிஸுக்கு, கொடுக்கப்பட்ட ஒரு தேவ கட்டளை” என்று இதை அறிமுகப்படுத்தினார்.

1–3, கிறிஸ்துவுக்கு சகல வல்லமையுமிருக்கிறது; 4–5, சகல மனுஷரும் மனந்திரும்பவேண்டும் அல்லது பாடனுபவிக்க வேண்டும்; 6–12, நித்திய தண்டனை தேவனின் தண்டனையாயிருக்கிறது; 13–20, அவர்கள் மனந்திரும்பினால் அவர்கள் பாடனுபவியாதிருக்க, கிறிஸ்து எல்லாருக்காகவும் பாடுபட்டார்; 21–28, மனந்திரும்புதலின் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்; 29–41, நற்செய்தியை அறிவியுங்கள்.

1 நானே கர்த்தராகிய கிறிஸ்து, அல்பாவும் ஓமெகாவாகவுமிருக்கிறேன் ஆம், அவராகிய நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிற உலகத்தின் மீட்பர்.

2 நான் யாருடையவனோ, எனது பிதாவாகிய என்னைக் குறித்த, அவரது சித்தத்தை நான் நிறைவேற்றி முடித்தேன். சகல காரியங்களையும் நான் எனக்கு கீழ்படுத்திக் கொள்ளவே, இதைச் செய்தேன்.

3 உலகத்தின் முடிவில், ஒவ்வொரு மனுஷனும் அவன் செய்த கிரியைகள் மற்றும் செயல்களின்படி அவனை நியாயந்தீர்த்து, அதன் குடிகள்மீது நான் அனுப்புகிற நியாயத்தீர்ப்பின் பெரும் கடைசி நாளில், உலகத்தின் முடிவில் சாத்தானையும் அவனது கிரியைகளையும் அழிப்பதற்காக சகல வல்லமையையும் தக்கவைத்திருக்கிறேன்.

4 நிச்சயமாக ஒவ்வொரு மனுஷனும் மனந்திரும்பவேண்டும் அல்லது பாடனுபவிக்க வேண்டும், ஏனெனில் தேவனாகிய நான் முடிவற்றவர்.

5 ஆகவே நான் கொடுக்கிற தீர்ப்புகளை நான் திரும்பப் பெறமாட்டேன், ஆனால் ஆபத்துகள் தொடர்ந்துவரும், ஆம் எனது இடது பாரிசத்தில் காணப்படுகிறவர்களுக்கு அழுகையும், ஒப்பாரியும், பற்கடிப்புமான கேடுகள் ஏற்படும்.

6 ஆயினும், இந்த வேதனைக்கு முடிவிருக்காது என எழுதப்படவில்லை, ஆனால் முடிவற்ற வேதனை என எழுதப்பட்டிருக்கிறது.

7 மீண்டும், நித்திய ஆக்கினை என எழுதப்பட்டிருக்கிறது; ஆகவே மொத்தத்தில் எனது நாமத்தின் மகிமைக்காக இது மனுபுத்திரரின் இருதயங்களின்மேல் கிரியை செய்யும் என பிற வேதங்களைவிட இதில் அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

8 ஆகவே, இந்த இரகசியத்தை உனக்கு நான் விவரிப்பேன், ஏனெனில் எனது அப்போஸ்தலர்களைப் போலவே நீயும் அறிந்துகொள்வது அவசியமாகும்.

9 இந்தக் காரியத்தில் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவனாகிய உன்னிடத்தில் நீ எனது இளைப்பாறுதலில் பிரவேசிக்க வேண்டுமென்பதால் நான் பேசுகிறேன்.

10 ஏனெனில், இதோ, தேவதன்மையின் இரகசியம் எவ்வளவு பெரியதாயிருக்கிறது! ஏனெனில், இதோ, நான் முடிவற்றவர், எனது கரத்திலிருந்து கொடுக்கப்படும் தண்டனை முடிவற்றதாயிருக்கும், ஏனெனில் முடிவற்றதென்பது எனது நாமம். ஆகவே,

11 நித்திய தண்டனை தேவனின் தண்டனை.

12 முடிவற்ற தண்டனை தேவனின் தண்டனை.

13 ஆகவே, மனந்திரும்பி, எனது நாமத்தில் எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனிடமிருந்து நீ பெற்ற கட்டளைகளைக் கைக்கொள்ள நான் உனக்கு கட்டளையிடுகிறேன்;

14 எனது சர்வ வல்லமையினால் நீ அவைகளைப் பெற்றுக்கொண்டாய்;

15 ஆகவே, மனந்திரும்ப நான் உனக்கு கட்டளையிடுகிறேன், மனந்திரும்பு, அல்லாவிட்டால் நான் எனது வாயின் கோலாலும், எனது மூர்க்கத்தாலும், எனது கோபத்தாலும் உன்னை அடிப்பேன், உனது வேதனைகள் அதிகமாயிருக்கும், எவ்வளவு அதிகமென்பதை நீ அறியமாட்டாய், எவ்வளவு கொடியதென நீ அறியமாட்டாய், ஆம் தாங்கிக்கொள்ள எவ்வளவு கடினமானதென நீ அறியமாட்டாய்,

16 ஏனெனில் இதோ, அவர்கள் மனந்திரும்பினால் அவர்கள் பாடுபடாதிருக்க, தேவனாகிய நான் எல்லோருக்காகவும் இவற்றை அனுபவித்தேன்;

17 ஆனால் அவர்கள் மனந்திரும்பவில்லையென்றால் என்னைப்போலவே அவர்களும் பாடுபடவேண்டும்;

18 இந்த வேதனை, சகலத்திற்கும் மேலான தேவனாகிய என்னையே வேதனையினிமித்தம் நடுங்கி, ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் கசிந்து, சரீரம் ஆவி இரண்டிலும் பாடுபடவைத்தது. நான் கசப்பான பானம்பண்ணி குறுகிப்போகாமலிருக்க விரும்புகிறேன்.

19 ஆயினும் பிதாவுக்கே மகிமையுண்டாவதாக, மனுபுத்திரருக்காக நான் பங்கெடுத்து எனது ஆயத்தங்களை முடித்தேன்.

20 ஆகவே நீ மனந்திரும்ப மீண்டும் நான் உனக்கு கட்டளையிடுகிறேன்; இல்லையேல் எனது சர்வவல்லமையினால் நான் உன்னைத் தாழ்த்துவேன். மேலும் உன் பாவங்களை நீ அறிக்கை பண்ணு, இல்லையென்றால், நான் சொன்ன இந்த தண்டனைகளை அனுபவிப்பாய். ஆம், எனது ஆவியை நான் எடுத்துக் கொண்ட நேரத்திலே நீ இவற்றை சிறிய அளவிலே மிகக்குறைவாக அனுபவித்தாய்.

21 நீ மனந்திரும்புதலையேயன்றி வேறு எதையும் பிரசங்கிக்காதே, அது எனது ஞானத்திற்கு தோன்றும்வரை உலகத்திற்கு இந்தக் காரியங்களை காட்டாதேயென்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

22 ஏனெனில் இப்பொழுது அவர்களால் மாம்சத்தை தின்ன முடியாது, ஆனால் அவர்கள் பாலைக் குடிக்க வேண்டும், ஆகவே அவர்கள் அழிந்து போகாதபடிக்கு, இந்தக்காரியங்களை அவர்கள் அறியக்கூடாது.

23 என்னிடமிருந்து கற்றுக்கொள், எனது வார்த்தைகளுக்குச் செவிகொடு; எனது ஆவியின் சாந்தத்தில் நட, என்னில் உனக்கு சமாதானம் உண்டாயிருக்கும்.

24 நானே இயேசு கிறிஸ்து; எனது பிதாவின் சித்தத்தின்படி நான் வந்தேன், அவரது சித்தத்தை நான் செய்கிறேன்.

25 உனது அயலானின் மனைவியை இச்சியாதிருக்கவும், அல்லது உன் அயலானது ஜீவனை நாடாதிருக்கவும் மீண்டும் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

26 மேலும், உனது சொந்த ஆஸ்தியை நீ இச்சியாதிருப்பாயாக, ஆனால் சத்தியமும் தேவனின் வார்த்தையும் அடங்கியிருக்கிற மார்மன் புஸ்தகத்தை அச்சடிப்பதற்காக அதை இலவசமாக கொடு என மீண்டும் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

27 புறஜாதியாருக்கு எனது வார்த்தையாயிருக்கிற அவை, சீக்கிரத்திலே அவர்கள் சுவிசேஷத்தை நம்பும்படியாகவும், ஏற்கனவே வந்துவிட்ட மேசியாவைத் தேடாமலிருக்கும்படிக்கும், லாமானியர்களின் மீதியாயிருக்கிற யூதர்களுக்குப் போகும்படிக்கே.

28 நீ சத்தமிட்டும் உன் இருதயத்திற்குள்ளாகவும், ஆம், உலகத்திற்கு முன்பாகவும், இரகசியமாகவும், பகிரங்கமாகவும் தனியாகவும் ஜெபிக்கும்படியாக மீண்டும் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

29 நீ நற்செய்தியை, ஆம், மலைகளுக்கு மேலும், ஒவ்வொரு உயர்ந்த இடங்களின் மேலும், நீ பார்க்க அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு ஜனத்துக்கு மத்தியிலும் அறிவி.

30 முழு மனத்தாழ்மையோடு, என்மீது நம்பிக்கை வைத்து, நிந்திப்பவர்களுக்கு எதிராக நிந்திக்காமல், நீ இதைச் செய்வாயாக.

31 மதக்கொள்கைகளை நீ பேசக்கூடாது, ஆனால் மனந்திரும்புதலையும், இரட்சகர்மேல் விசுவாசத்தையும், ஞானஸ்நானத்தாலும், ஆம், பரிசுத்த ஆவியான, அக்கினியாலும் பாவமன்னிப்பை நீ அறிவி.

32 இதோ, இந்தக் காரியத்தைக் குறித்து நான் உனக்குக் கொடுக்கக்கூடிய இது ஒரு மகத்தானதும் கடைசி கட்டளையாகவுமிருக்கிறது, ஏனெனில் இது உனது அன்றாட வாழ்க்கைக்கும் உனது வாழ்வின் முடிவு வரைக்கும் போதுமானது.

33 இந்த ஆலோசனைகளை நீ அசட்டை பண்ணினால், நீ துக்கத்தை, ஆம், நீ மற்றும் உனது ஆஸ்தியின் அழிவுக்கேதுவான துன்பத்தைப் பெறுவாய்.

34 உனது ஆஸ்தியின் ஒரு பகுதியை, ஆம், உனது நிலங்களின் பகுதியையும், உனது குடும்பத்தை தாங்க போதுமானது தவிர எல்லாவற்றையும் கொடு.

35 அச்சடிப்பவரோடு நீ செய்த ஒப்பந்தப்படி கடனை செலுத்து, அடிமைத்தனத்திலிருந்து உன்னை விடுவித்துக்கொள்.

36 உனது குடும்பத்தைப் பார்க்க நீ விரும்பும்போது தவிர உனது குடும்பத்தையும் வீட்டையும் விட்டுப்போ;

37 எல்லாரிடமும் சகஜமாகப் பேசு; ஆம், பிரசங்கி, புத்திசொல், சத்தியத்தை ஒரு உரத்தகுரலில், களிகூருதலின் சத்தத்தோடு ஓசன்னா, ஓசன்னா, கர்த்தராகிய தேவனின் நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக என பிரகடனம் செய்!

38 எப்பொழுதும் ஜெபம்பண்ணு, நான் உன்மேல் எனது ஆவியை ஊற்றுவேன், ஆம், நீ பெறப்போகிற அழிந்துபோகக்கூடிய, பூமியின் செல்வங்களைக் காட்டிலும், அதிகமாக, உனது ஆசீர்வாதங்கள் பெரிதாயிருக்கும்.

39 இதோ, களிகூருதலில்லாமல், சந்தோஷத்தில் உனது இருதயத்தை உயர்த்தாமல் இதை உன்னால் படிக்கமுடியுமா?

40 அல்லது ஒரு குருட்டு வழிகாட்டியாய் அதிகதூரம் ஓடமுடியுமா?

41 அல்லது தாழ்மையாகவும் சாந்தமாகவும் எனக்கு முன்னால் நீ ஞானமாக நடந்துகொள்ளமுடியாதா? ஆம், உனது இரட்சகரான என்னிடத்தில் வா. ஆமென்.