வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 118


பாகம் 118

ஜூலை 8, 1838ல் மிசௌரியின் பார் வெஸ்டில் “கர்த்தாவே, பன்னிருவரைக் குறித்து உமது சித்தத்தை எங்களுக்குக் காட்டுவீராக” என்ற வேண்டுதலுக்கு பதிலாக, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்.

1–3, பன்னிருவரின் குடும்பங்களுக்கு கர்த்தர் தேவையானவற்றைக் கொடுப்பார்; 4–6, பன்னிருவரின் காலியிடங்கள் நிரப்பப்படும்.

1 மெய்யாகவே இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார்: உடனடியாக ஒரு மாநாடு நடத்தப்படுவதாக; பன்னிருவர் ஏற்படுத்தப்படுவார்களாக; வீழ்ந்து விட்டவர்கள் இடத்தை நிரப்ப பிற மனுஷர் நியமிக்கப்படுவார்களாக.

2 என்னுடைய வார்த்தையை அறிவிக்க கொஞ்சக் காலத்திற்கு சீயோன் தேசத்தில் என்னுடைய ஊழியக்காரனாகிய தாமஸ் தங்கியிருப்பானாக.

3 அந்த மணி நேரத்திலிருந்து மீதியானோர் தொடர்ந்து பிரசங்கிப்பார்களாக. இருதயத்தின் முழு தாழ்மையிலும், சாந்தத்திலும், அடக்கத்திலும், நீடிய சாந்தத்திலும் இதை அவர்கள் செய்தால், கர்த்தராகிய நான் அவர்களுடைய குடும்பங்களின் தேவைகளுக்கு கொடுப்பேன் என வாக்குத்தத்தம் செய்கிறார்; அநுகூலமான ஒரு வாசல் இப்போதிலிருந்து அவர்களுக்காகத் திறக்கப்படும்.

4 அடுத்த வசந்தத்தில் பரந்த தண்ணீர்கள் மேல் போவதற்கு அவர்கள் புறப்படுவார்களாக, அங்கே அவர்கள் என்னுடைய முழுமையான சுவிசேஷத்தை அறிவித்து என்னுடைய நாமத்தில் சாட்சி கொடுப்பார்களாக.

5 அடுத்த ஏப்ரல் இருபத்தாறாவது நாளில் என்னுடைய வீடு கட்டுமிடத்தில் பார் வெஸ்ட் பட்டணத்தில் என்னுடைய பரிசுத்தவான்களைவிட்டு அவர்கள் பிரிந்து செல்வார்களாக என கர்த்தர் சொல்லுகிறார்.

6 வீழ்ந்து போனவர்களின் இடங்களை நிரப்பவும் அவர்களுடைய நியமிப்புகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் டெய்லரும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் இ. பேஜும் என்னுடைய ஊழியக்காரனாகிய வில்பர்ட் உட்ரப்பும் என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லார்ட் ரிச்சர்ட்ஸூம் நியமிக்கப்படுவார்களாக.