வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132


பாகம் 132

திருமண உடன்படிக்கையின் நித்தியத்தையும், பலதார திருமணத்தைப்பற்றிய கொள்கையையும் சேர்த்து புதிய மற்றும் நித்திய உடன்படிக்கைக்கு சம்பந்தப்பட்டதை, ஜூலை 12, 1843ல் பதிவு செய்யப்பட்டு, இலினாயின் நாவூவில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். 1843ல் வெளிப்படுத்தல் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்த வெளிப்படுத்தலில் உடன்பட்டிருக்கிற சில கொள்கைகள், 1831ன் ஆரம்பத்திலிருந்தே தீர்க்கதரிசியால் அறியப்பட்டிருந்தது என ஆதாரங்கள் குறிப்பிடுகிறது. அதிகாரப்பூர்வ பிரகடனம் 1 பார்க்கவும்.

1–6, புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையின் மூலமாக மேன்மையடைதல் பெறப்படுகிறது; 7–14, அந்த உடன்படிக்கையின் காலவரையறைகளும் நிபந்தனைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன; 15–20, சிலஸ்டியல் திருமணங்களும் அதைத் தொடர்ந்த குடும்பமும் மனுஷர்கள் தேவர்களாக மாற சாத்தியமாக்குகிறது; 21–25, குறுகலானதும் இடுக்கமுமான பாதை நித்திய ஜீவியங்களுக்கு நடத்துகிறது; 26–27, பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவதூஷணத்துக்கு சம்பந்தப்பட்ட நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது; 28–39, நித்திய பலன் மற்றும் மேன்மையடைதலுக்கான வாக்குத்தத்தங்கள் எல்லா காலங்களிலும் தீர்க்கதரிசிகளுக்கும் பரிசுத்தவான்களுக்கும் செய்யப்பட்டிருக்கின்றன; 40–47, பூமியிலும் பரலோகத்திலும் முத்திரிக்கவும் கட்டவும் ஜோசப் ஸ்மித்துக்கு வல்லமை கொடுக்கப்பட்டிருக்கிறது; 48–50, அவருடைய மேன்மையடைதலை அவர்மேல் கர்த்தர் முத்திரிக்கிறார்; 51–57, உண்மையும் சத்தியமுமாயிருக்க எம்மா ஸ்மித் ஆலோசனை கொடுக்கப்பட்டார்; 58–66, பலதார திருமணம்பற்றிய சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.

1 மெய்யாகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் உனக்கு கர்த்தர் சொல்லுகிறார், என்னுடைய ஊழியக்காரர்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் என்னுடைய ஊழியக்காரர்களாகிய மோசே, தாவீது, சாலொமோன் அவர்கள் அநேக மனைவிகளையும் மறுமனையாட்டிகளையும் வைத்திருப்பதின் கோட்பாடையும் கொள்கையையும்பற்றி அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் என்னிடத்தில் நீ விசாரிக்கிற அளவில்,

2 இதோ, இந்தக் கருத்தைப்பற்றி நானே உன்னுடைய தேவனாகிய கர்த்தர் பதிலளிப்பேன்.

3 ஆகவே, உனக்குக் கொடுக்கப்போகிற அறிவுரைகளைப் பெறவும் கீழ்ப்படியவும் உன்னுடைய இருதயத்தை ஆயத்தப்படுத்து; ஏனெனில் இந்த நியாயப்பிரமாணம் வெளிப்படுத்தப்பட்டவர்கள் யாவரும், அதற்கு கீழ்ப்படியவேண்டும்.

4 ஏனெனில் இதோ, ஒரு புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையை உனக்கு நான் வெளிப்படுத்தினேன், இந்த உடன்படிக்கைக்கு நீ கீழ்ப்படியவில்லையானால் பின்னர் நீ ஆக்கினைக்குள்ளாவாய்; ஏனெனில் இந்த உடன்படிக்கையை எந்த மனுஷனும் மறுதலித்து என்னுடைய மகிமைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டான்.

5 ஏனெனில் என்னுடைய கைகளில் ஒரு ஆசீர்வாதத்தைப் பெறும் யாவரும் உலகத்தோற்றத்திற்கு முன்பிருந்து அமைக்கப்பட்டிருக்கிற அந்த ஆசீர்வாதத்திற்கும் அதிலுள்ள நிபந்தனைகளுக்கும் நியமிக்கப்பட்டிருக்கிற நியாயப்பிரமாணத்தின்படி ஜீவிப்பார்கள்.

6 புதிய மற்றும் நித்திய உடன்படிக்கைக்கு சம்பந்தப்பட்டதைப்போல, என்னுடைய மகிமையின் பரிபூரணத்திற்காக அது ஏற்படுத்தப்பட்டது; ஒரு பரிபூரணத்தைப் பெறுகிறவன் அதிலிருந்து நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்கவேண்டும், அல்லது அவன் ஆக்கினைக்குள்ளாக்கப்படுவான் என தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

7 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்த நியாயப்பிரமாணத்தின் நிபந்தனைகள் இவைகளே: உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், பத்திரங்கள், கட்டாயக் கடமைகள், பொருத்தனைகள், ஆணைகள், செய்கைகள், தொடர்புகள், சங்கங்கள், அல்லது எதிர்பார்ப்புகள் அனைத்தும் அபிஷேகிக்கப்பட்ட அவரால் இப்போதைக்கும் நித்தியத்திற்கும் வாக்குத்தத்தத்தின் பரிசுத்த ஆவியால் செய்யப்படாததும் பிரவேசிக்கப்படாததும், முத்திரிக்கப்படாததுமாயிருக்கிற அந்த வல்லமையைத் தரித்திருக்க பூமியில் நான் நியமித்த என்னால் அபிஷேகிக்கப்பட்டவன் வழியாக (கடைசி நாட்களில் இந்த வல்லமையைத் தரித்திருக்க என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்பை நான் நியமித்தேன், பூமியின்மேல் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த ஆசாரியத்துவத்தின் வல்லமையும் திறவுகோல்களும் அருளப்பட்டிருக்கிறது) வெளிப்படுத்தலாலும் கட்டளையாலும் செய்து பிரவேசிக்கப்படாத, மிகுந்த பரிசுத்தமாயிருக்கிற அது மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலுக்குப்பின் அதற்கு தகுதி, நற்குணம், அல்லது சக்தியிருக்காது; ஏனெனில் மனுஷர்கள் மரிக்கும்போது இந்த முடிவுவரை செய்யப்படாத எல்லா ஒப்பந்தங்களுக்கும் முடிவிருக்கும்.

8 இதோ, என்னுடைய வீடு ஒழுங்கின் வீடாகும், குழப்பத்தின் வீடல்ல என தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

9 என்னுடைய நாமத்தில் செய்யப்படாத ஒரு காணிக்கையை நான் ஏற்றுக் கொள்வேனோ என கர்த்தர் சொல்லுகிறார்?

10 அல்லது நான் நியமிக்காததை உன்னுடைய கைகளிலிருந்து நான் பெற்றுக் கொள்வேனோ?

11 உலகத் தோற்றத்திற்கு முன்பே நானும் என்னுடைய பிதாவும் உங்களுக்கு நியமனம் செய்த நியாயப்பிரமாணத்தினாலே அல்லாது உங்களை நான் நியமிப்பேனோ?

12 நானே உன்னுடைய தேவனாகிய கர்த்தர்; என்னையன்றி அல்லது என்னுடைய நியாயப்பிரமாணமான என்னுடைய வார்த்தையன்றி ஒருவனும் என் பிதாவிடத்தில் வரமாட்டான் என்ற இந்த கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன் என கர்த்தர் சொல்லுகிறார்.

13 மனுஷர்களாலோ, சிங்காசனங்களாலோ, அல்லது துரைத்தனங்களாலோ, அல்லது வல்லமைகளாலோ, அல்லது கீர்த்தியுள்ளவைகளாலோ, அவைகள் எதுவாயிருந்தாலும், அது என்னாலோ அல்லது என்னுடைய வார்த்தையாலோ அல்லாமலிருந்தால், உலகத்திலுள்ள யாவும் கீழே எறியப்படும், என கர்த்தர் சொல்லுகிறார், உயிர்த்தெழுதலிலும் அதற்குப் பின்னரும் மனுஷர்கள் மரித்த பின்பு நிலைத்திருக்காது, என உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

14 ஏனெனில் நிலைத்திருக்கிற காரியங்கள் எல்லாம் என்னுடையவைகள்; என்னுடையவைகளல்லாத காரியங்கள் எல்லாம் அசைக்கப்பட்டு அழிக்கப்படும்.

15 ஆகவே, உலகத்தில் ஒரு மனுஷன் அவனுக்கு ஒரு மனைவியை திருமணம் செய்து, என்னாலோ அல்லது என்னுடைய வார்த்தையால் அல்லாமல் அவளை அவன் திருமணம் செய்தால், உலகத்தில் அவனிருக்குமட்டும், அவளோடு அவன் இருக்குமட்டும் அவளோடு அவன் உடன்படிக்கை செய்கிறான், அவர்கள் மரிக்கும்போது, அவர்கள் உலகத்தைவிட்டுப் போகும்போது அவர்களுடைய உடன்படிக்கையும் திருமணமும் அமுலிலிருக்காது; ஆகவே, அவர்கள் உலகத்திலில்லாதபோது எந்த நியாயப்பிரமாணத்தாலும் அவர்கள் கட்டப்படவில்லை.

16 ஆகவே, அவர்கள் உலகத்திலில்லாதபோது அவர்கள் திருமணம் செய்வதில்லை அல்லது திருமணத்தினால் கொடுக்கப்படுவதில்லை; ஆனால் பரலோகத்தின் தூதர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அந்த தூதர்கள் பணிவிடை செய்யும் ஊழியக்காரர்களாய், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையுடைய தகுதியுள்ளோருக்கு பணிவிடை செய்கிறார்கள்.

17 ஏனெனில் இந்த தூதர்கள் என்னுடைய நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்கவில்லை; ஆகவே அவர்களால் பெருக முடியாது, ஆனால் நித்தியம் முழுமைக்கும் அவர்களுடைய இரட்சிப்பின் நிலைமையில் மேன்மையடைதலில்லாமல் பிரிக்கப்பட்டு தனிமையிலிருப்பார்கள்; ஆகவே அவர்கள் தேவர்களில்லை, ஆனால் என்றென்றைக்கும் தேவனின் தூதர்களாயிருப்பார்கள்.

18 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு மனுஷன் ஒரு மனைவியை திருமணம் செய்துகொண்டு, இப்போதைக்கும் நித்தியம் முழுமைக்கும் அவளோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தால், அந்த உடன்படிக்கை என்னுடையதாகவோ அல்லது என்னுடைய நியாயப்பிரமாணமாயிருக்கிற என்னுடைய வார்த்தையுடையதாகவோ இல்லாதிருந்து, இந்த வல்லமையை அவர் மூலமாக நான் அபிஷேகித்த, நியமித்தவரான வாக்குத்தத்தத்தின் பரிசுத்த ஆவியானவரால் முத்திரிக்கப்படாதிருந்தால், பின்னர் அவர்கள் உலகத்திற்கு வெளியேயிருக்கும்போது அதற்கு மதிப்பிராது, அமுலிலுமிருக்காது, ஏனெனில் அவர்கள் என்னாலோ அல்லது என்னுடைய வார்த்தையாலோ இணைக்கப்படவில்லை என கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உலகத்திலில்லாதபோது அங்கே அது பெறப்படமுடியாது, ஏனெனில் அவர்கள் கடந்துபோக முடியாதவர்களான தூதர்களும் தேவர்களும் அங்கே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆகவே என்னுடைய மகிமையை அவர்களால் சுதந்தரித்துக்கொள்ள முடியாது; ஏனெனில் என்னுடைய ஆலயம் ஒழுக்கத்தின் வீடு என தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

19 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய நியாயப்பிரமாணமாயிருக்கிற என்னுடைய வார்த்தையால், புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையால், இந்த வல்லமைக்கும் இந்த ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களுக்கும் அவர் மூலமாக நான் அபிஷேகித்த, நியமித்தவரான வாக்குத்தத்தத்தின் பரிசுத்த ஆவியானவரால் ஒரு மனுஷன் ஒரு மனைவியை திருமணம் செய்துகொண்டால்; நீங்கள் முதல் உயிர்த்தெழுதலில் வெளியே வருவீர்கள் என இது அவர்களுக்குச் சொல்லப்படும்; அது முதல் உயிர்த்தெழுதலுக்குப் பின்னால், அடுத்த உயிர்த்தெழுதலிலிருந்தால்; சிங்காசனங்களையும், ராஜ்யங்களையும், அதிகாரங்களையும், வல்லமைகளையும், ஆளுகைகளையும், எல்லா உயரங்களிலும் ஆழங்களிலும் சுதந்தரித்துக் கொள்வாய்; பின்னர், நீங்கள் குற்றமற்ற இரத்தத்தை சிந்தும் எந்த கொலையையும் செய்யக்கூடாது எனவும், என்னுடைய உடன்படிக்கையில் நிலைத்திருந்து குற்றமற்ற இரத்தத்தை சிந்தும் எந்த கொலையையும் செய்யாதிருந்தால், இப்போதைக்கும் நித்தியம் முழுமைக்கும் என்னுடைய ஊழியக்காரன் அவர்கள் மேல் வைத்த சகல காரியங்களிலும் அது அவர்களுக்குச் செய்யப்படும்; அவர்கள் உலகத்திற்கு வெளியே இருக்கும்போது அது முழு அமலிலிருக்கும்; ஒரு பரிபூரணமாயிருக்கிறதும் என்றென்றைக்குமாய் சந்ததிகளுக்கு ஒரு தொடர்ச்சியுமாயிருக்கிற மகிமை, அவர்கள் தலைகளின்மீது முத்திரிக்கப்பட்டதைப் போல சகல காரியங்களிலும் அவர்களுடைய மேன்மையடைதலுக்கும், மகிமைக்கும் அங்கே அமைக்கப்பட்டிருக்கிற தூதர்களையும், தேவர்களையும் அவர்கள் கடந்து போவார்கள் என ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படும்.

20 பின்னர் அவர்கள் தேவர்களாயிருப்பார்கள், ஏனெனில் அவர்களுக்கு முடிவில்லை; ஆகவே அவர்கள் அநாதியாய் என்றென்றைக்குமாய் இருப்பார்கள், ஏனெனில் அவர்கள் தொடர்ந்திருக்கிறார்கள்; பின்னர் அவர்கள் யாவருக்கும் மேலிருப்பார்கள், ஏனெனில் சகல காரியங்களும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்கும். பின்னர் அவர்கள் தேவர்களாயிருப்பார்கள், ஏனெனில் சகல வல்லமையும் அவர்களுக்கிருந்து தூதர்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பார்கள்.

21 மெய்யாகவே மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என்னுடைய பிரமாணத்தில் நிலைத்திருந்தாலொழிய இந்த மகிமையை நீங்கள் அடையமுடியாது.

22 ஏனெனில் மேன்மையடைதலுக்கும், தொடருகிற ஜீவியங்களுக்கும் நடத்துகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர், ஏனெனில் உலகத்தில் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, நீங்கள் என்னை அறியவும் இல்லை.

23 ஆனால் உலகத்தில் நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டால், நீங்கள் என்னை அறிவீர்கள், நானிருக்குமிடத்தில் நீங்களும் இருக்கும்படியாக உங்களுடைய மேன்மையை அடைவீர்கள்.

24 ஞானமுள்ள மெய்யான ஒரே தேவனையும், அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறியும் இதுவே நித்திய ஜீவியங்கள். நானே அவர். ஆகவே என்னுடைய நியாயப்பிரமாணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.

25 விசாலமான வாசலும் விரிவான வழியும் மரணங்களுக்கு வழி நடத்துகின்றன; அவ்வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர், ஏனெனில் அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை, அவர்கள் என்னுடைய நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்கவுமில்லை.

26 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய வார்த்தையின்படி ஒரு மனுஷன் ஒரு மனைவியை திருமணம் செய்து, என்னுடைய நியமிப்பின்படி வாக்குத்தத்தத்தின் பரிசுத்த ஆவியால் அவர்கள் முத்திரிக்கப்பட்டு, அவன் அல்லது அவள் புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையில் எந்த பாவத்தை அல்லது மீறுதலையும் எல்லாவிதமான தேவதூஷணத்தைச் செய்தாலும், அவர்கள் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துகிற, எந்த கொலையையும் செய்யாதிருந்தால், இருந்தும் அவர்கள் முதல் உயிர்த்தெழுதலில் எழுந்து வந்து அவர்களுடைய மேன்மையில் பிரவேசிப்பார்கள்; ஆனால் அவர்கள் மாம்சத்தில் அழிக்கப்பட்டு மீட்பின் நாளில் சாத்தானின் தாக்குதலுக்கு ஒப்படைக்கப்படுவார்கள் என தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

27 நீங்கள் என்னுடைய புதிய, மற்றும் நித்திய உடன்படிக்கையைப் பெற்றபிறகும் நீங்கள் கொலை செய்து குற்றமற்ற இரத்தத்தை சிந்தி என்னுடைய மரணத்திற்குள் ஏறி உலகத்திலும் உலகத்திற்கு வெளியேயும் பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவதூஷணம் மன்னிக்கப்பட முடியாது என தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; இந்த நியாயப்பிரமாணத்தில் நிலைத்திராதவன் என்னுடைய மகிமைக்குள் எந்த வகையிலும் பிரவேசிக்க முடியாது, ஆனால் ஆக்கினைக்குள்ளாவான் என கர்த்தர் சொல்லுகிறார்.

28 நானே உன்னுடைய தேவனாகிய கர்த்தர், உலகத்தோற்றத்திற்கு முன்பே என்னாலும் என்னுடைய பிதாவினாலும் நியமனம் செய்யப்பட்ட என்னுடைய பரிசுத்த ஆசாரியத்துவத்தின் பிரமாணத்தை நான் உனக்குக் கொடுப்பேன்.

29 வெளிப்படுத்தலாலும், கட்டளையாலும், என்னுடைய வார்த்தையாலும் அவன் பெற்ற யாவுமான சகல காரியங்களையும் ஆபிரகாம் பெற்றான் என கர்த்தர் சொல்லுகிறார், மற்றும் அவனுடைய மேன்மைக்குள் அவன் பிரவேசித்து அவனுடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான்.

30 அவனுடைய வம்சத்தையும் அவனுடைய சந்ததியையும் குறித்து ஆபிரகாம் வாக்குத்தத்தங்களைப் பெற்றான்; அவனுடைய வம்சத்தவனே நீ, ஜோசப் என்ற பெயருடையவன், என்னுடைய ஊழியக்காரன். அது அவர்கள் உலகத்திலிருக்குமட்டும் தொடரும். ஆபிரகாமையும் அவனுடைய சந்ததியையும் எடுத்துக்கொண்டால் உலகத்திற்கு வெளியேயும் அவர்கள் தொடர்ந்திருக்க வேண்டும், உலகத்திலும், உலகத்திற்கு வெளியேயும் அவர்கள் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைப் போல; அல்லது கடற்கரை மணலை நீ எண்ணவேண்டியதிருந்தால், உன்னால் அவைகளை எண்ண முடியாது.

31 இந்த வாக்குத்தத்தம் உனக்கும்கூட, ஏனெனில் நீ ஆபிரகாமுடையவன், வாக்குத்தத்தம் ஆபிரகாமிற்கு செய்யப்பட்டது; இந்த நியாயப்பிரமாணத்தால் என்னுடைய பிதா தன்னை மகிமைப்படுத்துகிற அவருடைய கிரியைகளின் தொடர்ச்சி இருக்கிறது.

32 ஆகவே, நீ போய் ஆபிரகாமின் பணிகளைச் செய்; என்னுடைய நியாயப்பிரமாணத்திற்குள் நீ பிரவேசி, நீ இரட்சிக்கப்படுவாய்.

33 ஆனால் என்னுடைய நியாயப்பிரமாணத்திற்குள் நீ பிரவேசிக்கவில்லை என்றால் ஆபிரகாமிற்கு என்னுடைய பிதா செய்த அவருடைய வாக்குத்தத்தத்தை நீ பெறமுடியாது.

34 தேவன் ஆபிரகாமிற்கு கட்டளையிட்டார், ஆபிரகாமிற்கு மனைவியாக ஆகாரை, சாராள் கொடுத்தாள். அவள் ஏன் இதைச் செய்தாள்? ஏனென்றால் இது ஒரு நியாயப்பிரமாணமாயிருந்தது; ஆகாரிடமிருந்து அநேக ஜனங்கள் பரவினார்கள். ஆகவே வாக்குத்தத்தமான இது பிற காரியங்களுக்கு மத்தியில் நிறைவேறியது.

35 ஆகவே, ஆபிரகாம் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டானோ? மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், இல்லை; ஏனெனில் கர்த்தராகிய நான் இதைக் கட்டளையிட்டேன்.

36 தன்னுடைய குமாரனான ஈசாக்கைப் பலிகொடுக்குமாறு ஆபிரகாம் கட்டளையிடப்பட்டான்; ஆயினும் அது எழுதப்பட்டிருந்தது: கொலை செய்யாதிருப்பாயாக. ஆயினும் ஆபிரகாம் மறுக்கவில்லை, அவனுடைய நீதியென்று இது எண்ணப்பட்டது.

37 ஆபிரகாம் மறுமனையாட்டிகளைப் பெற்று அவனுக்கு அவர்கள் பிள்ளைகளைப் பெற்றார்கள், அவனுடைய நீதியென்று இது எண்ணப்பட்டது, ஏனெனில் அவர்கள் அவனுக்குக் கொடுக்கப்பட்டார்கள், அவன் என்னுடைய நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருந்தான்; அவர்களுக்கு கட்டளையிடப்பட்டதையன்றி வேறொன்றையும் செய்யாத ஈசாக்கையும், யாக்கோபையும் போல அவன் என்னுடைய பிரமாணத்தில் நிலைத்திருந்தான்; அவர்களுக்கு கட்டளையிடப்பட்டதையன்றி அவர்கள் வேறொன்றையும் செய்யாததால் வாக்குத்தத்தங்களின்படி அவர்கள் மேன்மையடைதலுக்குள் பிரவேசித்து, தூதர்களாயல்ல, தேவர்களாக சிங்காசனங்களில் வீற்றிருக்கிறார்கள்.

38 சிருஷ்டிப்பின் ஆரம்பத்திலிருந்து இந்நேரம்வரை தாவீதும், என்னுடைய ஊழியக்காரர்களாகிய சாலொமோனும் மோசேயும், என்னுடைய ஊழியக்காரர்களாகிய பிற அநேகரைப்போலவும் அநேக மனைவிகளையும் மறுமனையாட்டிகளையும் பெற்றிருந்தார்கள்; என்னிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொள்ளாத அந்தக் காரியங்களைத்தவிர அவர்கள் எதிலும் பாவஞ்செய்யவில்லை.

39 என்னுடைய ஊழியக்காரனான நாத்தானின் மற்றும் இந்த வல்லமையின் திறவுகோல்களைக் கொண்டிருந்த பிற தீர்க்கதரிசிகளின் கையால் தாவீதின் மனைவிகளும் மறுமனையாட்டிகளும் என்னிடமிருந்து அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தார்கள்; உரியா மற்றும் அவனுடைய மனைவியின் விவகாரத்தைத் தவிர இந்த காரியங்கள் எதிலும் எனக்கு விரோதமாக அவன் பாவஞ்செய்யவில்லை; ஆகவே அவனுடைய மேன்மையடைதலிலிருந்து அவன் விழுந்து அவனுடைய பங்கைப் பெற்றான்; உலகத்திற்கு வெளியே அவைகளை அவன் சுதந்தரித்துக் கொள்ளமாட்டான், ஏனெனில் வேறொருவனுக்கு நான் அவைகளைக் கொடுத்தேன் என கர்த்தர் சொல்லுகிறார்.

40 நானே உன்னுடைய தேவனாகிய கர்த்தர், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப், ஒரு நியமிப்பை நான் உனக்குக் கொடுத்தேன், சகல காரியங்களையும் மறுஸ்தாபிதம் செய்தேன். நீ விரும்புவதைக் கேள், என்னுடைய வார்த்தையின்படி அது உனக்குக் கொடுக்கப்படும்.

41 விபசாரத்தைக் குறித்து நீ கேட்டபடியால், மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், புதிய மற்றும் நித்திய உடன்படிக்கையில் ஒரு மனுஷன் ஒரு மனைவியை ஏற்றுக்கொண்டு அவள் மற்றொரு மனுஷனுடனிருந்தால், பரிசுத்த அபிஷேகத்தால் நான் அவளை நியமிக்கவில்லை, அவள் விபச்சாரம் செய்திருக்கிறாள் மற்றும் அவள் அழிக்கப்படுவாள்.

42 அவள் புதிய மற்றும் நித்திய உடன்படிக்கைக்குள் இல்லாமலிருந்து அவள் மற்றொரு மனுஷனுடனிருந்தால், அவள் விபச்சாரம் செய்தாள்.

43 அவளுடைய புருஷன் மற்றொரு ஸ்திரீயுடனிருந்து அவன் ஒரு பொருத்தனைக்கு உட்பட்டிருந்தால் அவன் தன்னுடைய பொருத்தனையை மீறி விபசாரம் செய்தான்.

44 அவள் விபசாரஞ் செய்யாமல், ஆனால் குற்றமில்லாமலும் அவளுடைய பொருத்தனையை மீறாதவளுமாயிருந்து அதை அவள் அறிந்திருந்தால், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப், இதை நான் உனக்கு வெளிப்படுத்துகிறேன், பின்னர் விபசாரஞ் செய்யாத, ஆனால் உண்மையுள்ளவனாயிருக்கிற அவனிடம் அவளைக் கொடுக்க என்னுடைய பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வல்லமையால் உனக்கு அதிகாரமிருக்கும்; ஏனெனில் அவன் அநேகத்தின் மேல் அதிகாரியாக்கப்படுவான்.

45 ஏனெனில் ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களையும் வல்லமையையும் நான் உன்மீது அருளியிருக்கிறேன், அதனால் சகல காரியங்களையும் நான் மறுஸ்தாபிதம் செய்து, ஏற்றகாலத்தில் சகல காரியங்களையும் உனக்கு அறிய வைத்திருக்கிறேன்.

46 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், பூமியில் நீ முத்திரிக்கும் எதுவும் பரலோகத்திலும் முத்திரிக்கப்படும்; என்னுடைய நாமத்திலும் என்னுடைய வார்த்தையிலும் பூமியில் நீ எதைக் கட்டினாலும் பரலோகங்களில் அது நித்தியமாய்க் கட்டப்படும்; எவர்களுடைய பாவங்களை பூமியில் நீ மன்னிக்கிறாயோ அவைகள் பரலோகங்களில் நித்தியமாய் மன்னிக்கப்படும்; எவர்களுடைய பாவங்களை பூமியில் நீ விட்டு வைத்திருக்கிறாயோ, பரலோகத்திலும் விட்டுவைக்கப்பட்டிருக்கும் என கர்த்தர் சொல்லுகிறார்.

47 மீண்டும் மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், எவர்களை நீ ஆசீர்வதிக்கிறாயோ அவர்களை நான் ஆசீர்வதிப்பேன், எவர்களை நீ சபிக்கிறாயோ அவர்களை நான் சபிப்பேன் என கர்த்தர் சொல்லுகிறார்; ஏனெனில் கர்த்தராகிய நானே உன்னுடைய தேவன்.

48 மீண்டும் மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப், என்னுடைய வார்த்தையாலும் என்னுடைய நியாயப்பிரமாணத்தின்படியும் பூமியிலே நீ எதைக் கொடுத்தாலும், பூமியில் எவர்களுக்கு நீ எதைக்கொடுத்தாலும் அது என்னுடைய வல்லமையுடனும் ஆசீர்வாதங்களுடனும் விசாரிக்கப்படும், சாபங்களுடனல்ல என கர்த்தர் சொல்லுகிறார், பூமியிலும் பரலோகத்திலும் ஆக்கினைக்குள்ளாகாதிருக்கும்.

49 ஏனெனில் நானே உன்னுடைய தேவனாகிய கர்த்தர், உலகத்தின் முடிவுபரியந்தமும் நித்தியம் முழுமைக்கும் உன்னுடனேகூட இருப்பேன்; ஏனெனில் மெய்யாகவே உன்னுடைய மேன்மையடைதலை உன்மீது முத்திரித்து, உன்னுடைய பிதாவான ஆபிரகாமுடன் என்னுடைய பிதாவின் ராஜ்யத்தில் ஒரு சிங்காசனத்தை ஆயத்தம்பண்ணுகிறேன்.

50 இதோ, நான் உன்னுடைய தியாகங்களைப் பார்த்தேன், உன்னுடைய சகல பாவங்களையும் மன்னிப்பேன்; நான் உனக்குச் சொன்னபடி கீழ்ப்படிதலில் உன்னுடைய தியாகங்களை நான் பார்த்தேன். ஆகவே போ, ஆபிரகாமின் குமாரனான ஈசாக்கின் பலியை நான் ஏற்றுக்கொண்டதைப்போல, உன்னுடைய தப்புவித்தலுக்கான ஒரு வழியை உண்டுபண்ணுவேன்.

51 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்: அவள் தன்னையே தடை செய்து அவளுக்கு கொடுக்கும்படியாக நான் உனக்குக் கட்டளையிட்டவற்றில் பங்கெடுக்காமலிருக்கும்படியாக நான் உனக்குக்கொடுத்த என்னுடைய பணிப் பெண்ணான உன்னுடைய மனைவியான எம்மா ஸ்மித்துக்கு நான் ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்; ஏனெனில் உடன்படிக்கையாலும் பலியாலும் உன்னுடைய கைகளில் ஒரு காணிக்கையை நான் கேட்கும்படியாக ஆபிரகாமிற்கு நான் செய்ததைப்போல உங்கள் யாவருக்கும் நிரூபிக்க நான் அதைச் செய்தேன் என கர்த்தர் சொல்லுகிறார்.

52 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்குக் கொடுக்கப்பட்ட சகலவற்றையும் எனக்கு முன்பாக குணசாலியாகவும் சுத்தமாகவுமிருக்கிற என்னுடைய பணிப் பெண்ணான எம்மா ஸ்மித் பெறுவாளாக; சுத்தமில்லாதவர்கள், சுத்தமானவர்கள் என அவர்கள் சொல்லி, அழிக்கப்படுவார்கள் என கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.

53 ஏனெனில் நானே உன்னுடைய தேவனாகிய கர்த்தர், நீ என்னுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிவாய்; அநேகத்தின் பேரில் அவன் அதிகாரியாக்கப்படும்படியாக நான் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்குக் கொடுக்கிறேன்; ஏனெனில் ஒரு சில காரியங்களில் அவன் உண்மையுள்ளவனாய் இருந்திருக்கிறான், இப்போதிலிருந்து நான் அவனைப் பெலப்படுத்துவேன்.

54 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்பிடம் தரித்திருந்து இசைந்திருக்கும்படி என்னுடைய பணிப் பெண்ணான எம்மா ஸ்மித்துக்கு நான் கட்டளையிடுகிறேன், வேறொருவருடனுமல்ல. ஆனால் இந்தக் கட்டளையில் அவள் தரித்திராமலிருந்தால் அவள் அழிக்கப்படுவாள் என கர்த்தர் சொல்லுகிறார்; ஏனெனில் நானே உன்னுடைய தேவனாகிய கர்த்தர், என்னுடைய நியாயப்பிரமாணத்தில் அவள் தரித்திராவிட்டால் அவளை அழிப்பேன்.

55 ஆனால் இந்தக் கட்டளைக்கு அவள் கீழ்ப்படியாமலிருந்தால், பின்னர் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் அவளுக்கு சகல காரியங்களையும் அவன் சொன்னதைப்போல செய்வானாக; அவனை நான் ஆசீர்வதித்து பலுகப்பண்ணி, இந்த உலகத்தில் தகப்பன்மார்களையும் தாய்மார்களையும், சகோதர சகோதரிகளையும், வீடுகளையும் நிலங்களையும், மனைவிகளையும், பிள்ளைகளையும், நித்திய உலகங்களில் நித்திய ஜீவன்களின் கிரீடங்களையும் ஒரு நூறத்தனையாக அவனுக்குக் கொடுப்பேன்.

56 மீண்டும் மெய்யாகவே நான் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்பின் மீறுதல்களை என்னுடைய பணிப் பெண் மன்னிப்பாளாக; பின்னர் எனக்கு விரோதமாக அவள் மீறுதல் செய்யும்போது, அவளுடைய மீறுதல்கள் மன்னிக்கப்படும்; உன்னுடைய தேவனாகிய கர்த்தராகிய நான் அவளை ஆசீர்வதிப்பேன், அவளை பலுகப்பண்ணுவேன், அவளுடைய இருதயத்தை களிகூரச் செய்வேன்.

57 மீண்டும் நான் சொல்லுகிறேன், ஒரு சத்துரு வந்து அவனை அழித்துவிடாதிருக்கும்படியாக என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் அவனுடைய சொத்தை அவனுடைய கையைவிட்டு போகாதிருக்கச் செய்வானாக; ஏனெனில், சாத்தான் அழிக்கப் பார்க்கிறான்; ஏனெனில், உன்னுடைய தேவனாகிய கர்த்தர் நானே, அவன் என்னுடைய ஊழியக்காரன், இதோ, உன்னுடைய பிதாவாகிய ஆபிரகாமுடன் நானிருந்ததைப்போல, அவனுடைய மேன்மையடைதல் மற்றும் மகிமை வரை நான் அவனோடேகூட இருக்கிறேன்.

58 இப்பொழுது ஆசாரியத்துவத்தின் நியாயப்பிரமாணத்தைக் குறிப்பிடும்போது அதைக் குறித்து அநேக காரியங்களிருக்கின்றன.

59 மெய்யாகவே என்னுடைய சொந்தக் குரலாலும் என்னை அனுப்பியவரின் குரலாலும் ஆரோனைப்போல என்னுடைய பிதாவால் ஒரு மனுஷன் அழைக்கப்பட்டு, இந்த ஆசாரியத்துவத்தின் வல்லமையின் திறவுகோல்களுடன் நான் அவனை தரிப்பித்தால், என்னுடைய நியாயப்பிரமாணத்தின்படியும் என்னுடைய வார்த்தையினாலும் என்னுடைய நாமத்தினாலே அவன் எதைச் செய்தாலும், அவன் பாவம் செய்யமாட்டான், நான் அவனை நீதிமானாக்குவேன்.

60 ஆகவே, ஒருவனும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்மீது கைபோடாதிருப்பானாக; ஏனெனில் நான் அவனை நீதிமானாக்குவேன்; ஏனெனில் அவனுடைய மீறுதல்களுக்காக அவனுடைய கைகளினால் எனக்கு அவசியமாயிருக்கிற தியாகத்தை அவன் செய்கிறான் என, உன்னுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

61 மீண்டும் ஆசாரியத்துவத்தின் நியாயப்பிரமாணத்திற்கு சம்பந்தப்பட்டதைப்போல எந்த மனுஷனாவது ஒரு கன்னிகைக்கு நியமிக்கப்பட்டிருந்து, மற்றொருத்தியை நியமிக்க விரும்பினால், முதலாமானவள் அவளுடைய ஒப்புதலைக் கொடுத்து, அவன் இரண்டாமவளை நியமித்து, அவர்கள் கன்னிகைகளாயிருந்து, வேறெந்த மனுஷனுக்கும் பொருத்தனை செய்யப்படாதிருந்தால் பின்னர் அவன் நீதிமானாக்கப்படுகிறான், அவர்கள் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால் அவன் விபச்சாரஞ்செய்யமுடியாது; ஏனெனில் வேறொருவருக்குமல்லாது, அவனுக்குச் சொந்தமானதுடன் அவன் விபசாரம் செய்ய முடியாது.

62 இந்த நியாயப்பிரமாணத்தால் அவனுக்கு பத்து கன்னிகைகள் கொடுக்கப்பட்டிருந்தால், அவனால் விபசாரஞ்செய்யமுடியாது, ஏனெனில் அவர்கள் அவனுக்கு சொந்தமானவர்கள், அவர்கள் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; ஆகவே அவன் நீதிமானாக்கப்படுகிறான்.

63 ஆனால் அவள் நியமிக்கப்பட்ட பின்பு பத்து கன்னிகைகளில் ஒருத்தி அல்லது இன்னொருத்தி மற்றொரு மனுஷனுடனிருந்தால் அவள் விபசாரஞ் செய்தாள், அவள் அழிக்கப்படுவாள்; ஏனெனில் என்னுடைய கட்டளையின்படியும், மனுபுத்திரர்களின் ஆத்துமாக்களை அவர்கள் ஆதரிக்கும்படியாக உலகத்தோற்றத்திற்கு முன்பாக என்னுடைய பிதாவால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தை நிறைவேற்றவும், நித்திய உலகங்களில் அவர்களுடைய மேன்மையடைதலுக்காகவும் பலுகிப்பெருகி பூமியை நிரப்ப அவனுக்கு அவர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; ஏனெனில் என்னுடைய பிதா மகிமைப்படும்படியாக இங்கே அவருடைய பணி தொடர்ந்தது.

64 மீண்டும் மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்த வல்லமையின் திறவுகோல்களைத் தரித்திருக்கிற எந்த மனுஷனாவது ஒரு மனைவியைக் கொண்டிருந்தால், இந்த காரியங்களுக்கு சம்பந்தப்பட்டிருப்பதைப்போல என்னுடைய ஆசாரியத்துவத்தின் நியாயப்பிரமாணத்தை அவளுக்கு அவன் போதித்தால், பின்னர் அவள் நம்பிக்கை வைத்து அவனுக்கு பணிவிடை செய்வாள் அல்லது அவள் அழிக்கப்படுவாள் என உன்னுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; ஏனெனில் நான் அவளை அழிப்பேன்; ஏனெனில் என்னுடைய நியாயப்பிரமாணத்தைப் பெற்று அதில் நிலைத்திருக்கிற யாவர்மீதும் என்னுடைய நாமத்தை நான் விளங்கப்பண்ணுவேன்.

65 ஆகவே இந்த நியாயப்பிரமாணத்தை அவள் பெறாதிருந்தால், அவனுடைய தேவனாகிய கர்த்தராகிய நான் அவனுக்குக் கொடுக்கிற சகல காரியங்களையும் அவன் பெறுவது எனக்கு நியாயமாயிருக்கும், ஏனெனில் என்னுடைய வார்த்தையின்படி அவள் நம்பிக்கை வைத்து அவனுக்கு ஊழியம் செய்யவில்லை; பின்னர் அவள் மீறியவளாகிறாள், ஆகாரை மனைவியாக ஏற்றுக்கொள்ள ஆபிரகாமுக்கு நான் கட்டளையிட்டபோது நியாயப்பிரமாணத்தின்படி ஆபிரகாமுக்கு ஊழியம் செய்த சாராளின் பிரமாணத்திலிருந்து அவன் விலக்கப்பட்டிருப்பான்.

66 இப்பொழுது, இந்த பிரமாணத்திற்கு சம்பந்தப்பட்டதைப்போல, மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், இப்போதிலிருந்து அதிகமானவற்றை நான் உனக்கு வெளிப்படுத்துவேன்; ஆகவே, தற்போதைக்கு இது போதும். இதோ, நானே அல்பாவும் ஓமெகாவாயுமிருக்கிறேன். ஆமென்.