வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 56


பாகம் 56

ஜூன் 15, 1831ல் ஒஹாயோவிலுள்ள கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். எஸ்றா தாயர் வாழ்ந்துவந்த பிரடெரிக் ஜி. வில்லியம்ஸின் பண்ணையில் அவருடைய கடமைகளைக் குறித்து அவருக்குக்காக ஜோசப் ஸ்மித் பெற்றுக்கொண்ட இந்த வெளிப்படுத்தல் முந்தைய ஒரு வெளிப்படுத்தலுக்கு (வசனம் 8 கட்டளையைக் குறிக்கிறது) கீழ்ப்படியாததற்காக அவரைக் கண்டிக்கிறது. தாமஸ் பி. மார்ஷூடன் மிசௌரிக்கு பயணம் செய்ய தாயரின் அழைப்பையும்கூட பின்வரும் வெளிப்படுத்தல் ரத்து செய்கிறது (பாகம் 52:22 பார்க்கவும்)

1–2, இரட்சிப்பைப் பெற பரிசுத்தவான்கள் தங்கள் சிலுவையை எடுத்துக் கொண்டு கர்த்தரைப் பின்பற்றவேண்டும்; 3–13, கர்த்தர் கட்டளையிடுகிறார், திரும்பப் பெறுகிறார், கீழ்ப்படியாதவர்கள் புறம்பே தள்ளப்படுகிறார்கள்; 14–17, ஏழைகளுக்கு உதவாத ஐஸ்வரியவானுக்கு ஐயோ, இருதயங்கள் நொறுங்காத ஏழைகளுக்கு ஐயோ; 18–20, இருதயத்திலே சுத்தமுள்ள ஏழைகள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

1 எனது நாமத்தை அறிவிக்கிற ஜனங்களே, கேளுங்கள் என கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; ஏனெனில் இதோ, கலகக்காரர்களுக்கு எதிராக என்னுடைய கோபம் மூண்டது, தேசங்களின்மேல் விசாரிப்பின் மற்றும் கோபத்தின் நாளில் அவர்கள் என்னுடைய புயத்தையும் என்னுடைய கோபத்தையும் அறிந்துகொள்வார்கள்.

2 தன்னுடைய சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றாதவனும் என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாதவனுமானவன் இரட்சிக்கப்படமாட்டான்.

3 இதோ, கர்த்தராகிய நான் கட்டளையிடுகிறேன்; நான் கட்டளையிட்ட பின்பு, கட்டளை மீறப்பட்டு கீழ்ப்படியாதவன் என்னுடைய ஏற்ற காலத்தில் அறுப்புண்டு போவான்.

4 ஆகவே, கர்த்தராகிய நான், எனக்கு நன்மையாகத் தோன்றுகிறபடி கட்டளையிடுகிறேன், திரும்பப் பெறுகிறேன்; இவை அனைத்தும் கலகக்காரர்களின் தலைகளின்மேல் பதிலளிக்கப்படவேண்டும் என கர்த்தர் சொல்லுகிறார்.

5 ஆகவே, என்னுடைய ஊழியக்காரர்களாகிய தாமஸ் பி. மார்ஷ் மற்றும் எஸ்றா தாயருக்குக் கொடுத்த கட்டளைகளை நான் திரும்பப்பெறுகிறேன், மிசௌரி தேசத்திற்கு சீக்கிரத்திலே தனது பயணத்தை மேற்கொள்ளவேண்டுமென்று எனது ஊழியக்காரனாகிய தாமஸூக்கும், அவனோடு போகவேண்டுமென்று எனது ஊழியக்காரனாகிய சேலா ஜெ. கிரிப்பின்னுக்கும் ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறேன்.

6 ஏனெனில் இதோ, தாம்சனிலுள்ள வணங்காக்கழுத்துடைய என் ஜனங்களின் கலகத்தின் விளைவாக எனது ஊழியக்காரர்களாகிய சேலா ஜெ. கிரிப்பின்னுக்கும் நீவலுக்கும் கொடுக்கப்பட்ட கட்டளையை நான் திரும்பப்பெறுகிறேன்.

7 ஆகவே, எனது ஊழியக்காரனாகிய நீவல் நைட் அவர்களோடே இருப்பானாக; எனக்கு முன்பாக நருங்குண்டதாயிருக்கிற எவ்வளவு பேரும் போகலாம், நான் நியமித்த தேசத்திற்கு அவனால் வழிநடத்தப்படுவார்களாக.

8 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரனாகிய எஸ்றா தாயர் அவனது பெருமையிலிருந்தும், அவனது சுயநலத்திலிருந்தும் மனந்திரும்பவேண்டும், அவன் வாழ்ந்துகொண்டிருக்கிற இடத்தைப்பற்றி நான் அவனுக்குக் கொடுத்த முந்தைய கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும்.

9 இதை அவன் செய்தால், தேசத்தில் எந்த பிரிவுகளும் உண்டாக்கப்படாதிருப்பதால், இன்னமும்கூட மிசௌரி தேசத்திற்குப்போக அவன் நியமிக்கப்படலாம்;

10 இல்லையென்றால் அவனுக்கு செலுத்தப்பட்ட பணத்தை அவன் பெற்றுக்கொண்டு, இடத்தை விட்டுப்போய் என்னுடைய சபையிலிருந்து வெளியே அறுப்புண்டு போவான் என சேனைகளின் கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்;

11 வானமும் பூமியும் கடந்து போனாலும், இந்த வார்த்தைகள் கடந்து போகாது, ஆனால் நிறைவேற்றப்படும்.

12 எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவர் பணத்தை செலுத்தவேண்டியது அவசியமாயிருந்தால், இதோ, மீண்டும் மிசௌரி தேசத்தில் கர்த்தராகிய நான் அவனுக்காக அதை செலுத்துவேன், அவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்கள், அவர்களுடைய செயலுக்கேற்ப மீண்டும் பலனடைவார்கள்;

13 ஏனெனில் அவர்களின் சுதந்தரத்தின் தேசங்களிலும் அவர்கள் செய்கிறவைகளின்படி அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.

14 இதோ, என்னுடைய ஜனங்களுக்கு கர்த்தர் இப்படியாகச் சொல்லுகிறார், நீங்கள் செய்யவேண்டிய, மனந்திரும்பவேண்டிய அநேக காரியங்களுண்டு, ஏனெனில், இதோ, உங்களுடைய பாவங்கள் என்னிடத்தில் வந்தன, அவைகள் மன்னிக்கப்படவில்லை, ஏனெனில் உங்களுடைய சொந்த வழிகளில் நீங்கள் ஆலோசனையை நாடினீர்கள்.

15 உங்கள் இருதயங்கள் திருப்தியடையவில்லை. சத்தியத்திற்கு நீங்கள் கீழ்ப்படியவில்லை, ஆனால் அநீதியில் ஆனந்தமடைகிறீர்கள்.

16 உங்கள் பொருளை ஏழைக்குக் கொடுக்காத ஐஸ்வரியவான்களே உங்களுக்கு ஐயோ, ஏனெனில் உங்கள் ஐஸ்வரியங்கள் உங்களுடைய ஆத்துமாக்களை அரித்துப் போடும்; விசாரிப்பு, நியாயத்தீர்ப்பு மற்றும் கடுங்கோபத்தின் நாளில் இதுவே உங்களுடைய புலம்பலாயிருக்கும்: அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலம் முடிந்தது, என்னுடைய ஆத்துமா இரட்சிப்படையவில்லை!

17 நொறுங்காத இருதயங்களுடைய, நருங்குண்ட ஆவிகளில்லாத, திருப்தியடையாத வயிறுகளைக் கொண்டவரும், பிற மனுஷர்களின் பொருட்களின்மேல் கைகளை வைப்பதிலிருந்து அடக்காமலும், பொருளாசை நிறைந்திருக்கிற கண்களைக் கொண்டும், தங்கள் கைகளால் பிரயாசப்படாத, ஏழை மனுஷர்களே, உங்களுக்கு ஐயோ!

18 ஆனால் இருதயத்தில் சுத்தமுள்ள, இருதயங்கள் நொறுங்குண்ட, நருங்குண்ட ஆவிகளுடைய ஏழைகள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்களுடைய விடுதலைக்காக வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வரக்கூடிய தேவனின் ராஜ்யத்தை அவர்கள் காண்பார்கள்; ஏனெனில் பூமியின் கொழுமையும் அவர்களுடையது.

19 ஏனெனில் இதோ, கர்த்தர் வருகிறார், அவருடைய பலன் அவரோடிருக்கும், ஒவ்வொரு மனுஷனுக்கும் அவர் சரிக்கட்டுவார், ஏழைகள் களிகூருவார்கள்;

20 தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்குமாய் அவர்களுடைய சந்ததியர் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். இப்பொழுது உங்களிடத்தில் பேசி முடிக்கிறேன், அப்படியே ஆகக்கடவது. ஆமென்.