வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 130


பாகம் 130

ஏப்ரல் 2, 1843ல் இலினாயின் ராமஸில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தால் கொடுக்கப்பட்ட அறிவுரையின் வகைகள்.

1–3, பிதாவும் குமாரனும் மனுஷர்களுக்கு நேரடியாக தோன்றலாம்; 4–7, ஒரு சிலஸ்டியல் கோளில் தூதர்கள் வசிக்கிறார்கள்; 8–9, சிலஸ்டியல் பூமி ஒரு மகத்தான ஊரீம் தும்மீமாக இருக்கும்; 10–11, சிலஸ்டியல் உலகத்திற்குள் பிரவேசிக்கிற யாவருக்கும் ஒரு வெள்ளை கல் கொடுக்கப்படும்; 12–17, இரண்டாம் வருகையின் நேரம் தீர்க்கதரிசியிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது; 18–19, இந்த ஜீவியத்தில் பெறப்பட்ட புத்திசாலித்தனம் உயிர்த்தெழுதலில் நம்மோடு எழுகிறது; 20–21, பிரமாணத்திற்கு கீழ்ப்படிவதால் சகல ஆசீர்வாதங்களும் வருகிறது; 22–23, பிதாவுக்கும் குமாரனுக்கும் மாம்சமும் எலும்புகளுமுள்ள சரீரங்கள் இருக்கின்றன.

1 அவரிருப்பதைப்போலவே இரட்சகர் தோன்றும் போது அவரை நாம் காண்போம். நம்மைப் போன்ற மனுஷனாக அவரிருப்பதை நாம் காண்போம்.

2 இங்கே நம்மிடையே இருக்கிற அதே பழகும் தன்மையே அங்கேயும் நம்மிடையே இருக்கும், ஆனால் அது இப்போது நாம் அனுபவிக்காத மகிமையான நித்திய மகிமையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

3 யோவான் 14 :23, அந்த வசனத்திலுள்ள பிதாவும் குமாரனும் தோற்றமளிப்பது ஒரு தனிப்பட்ட தோற்றம். பிதாவும் குமாரனும் ஒரு மனுஷனின் இருதயத்திலே வாசம் செய்வதென்பது ஒரு பழைய பிரிவினைவாதமாய் இருக்கிறது, அது பொய்யானதாயிருக்கிறது.

4 அந்த கேள்விக்கு பதிலாவது, அது தேவனின் நேரமும், தூதனின் நேரமும், தீர்க்கதரிசியின் நேரமும் மற்றும் மனுஷனின் நேரமும், அவர்கள் வசிக்கும் கோளத்தின் நேரத்தின்படி கணக்கிடப்படுவதில்லையா?

5 ஆம், என நான் பதிலளிக்கிறேன். ஆனால் இந்த பூமிக்கு சொந்தமானவர்களும் சொந்தமாயிருந்தவர்களுமேயன்றி பணிவிடை செய்ய வேறு எந்த தூதர்களுமில்லை.

6 இந்த பூமியைப்போன்ற ஒரு கோளத்தில் தூதர்கள் வசிப்பதில்லை;

7 ஆனால் கண்ணாடியும் அக்கினியுமான ஒரு கடலைப் போன்ற ஒரு கோளத்தில் அவர்கள் தேவனின் பிரசன்னத்தில் வசிக்கிறார்கள், அங்கே அவர்களுடைய கடந்தகால, நிகழ்கால மற்றும் வருங்கால மகிமைக்கான சகல காரியங்களும் வெளியரங்கமாகி தொடர்ந்து கர்த்தருக்கு முன்பாக இருப்பார்கள்.

8 தேவன் வாசம் செய்யும் இடம் ஒரு மகத்தான ஊரீம் தும்மீமாகும்.

9 அதன் பரிசுத்தமாக்கப்பட்ட அழிவற்ற நிலையில் இந்த பூமி பளிங்குக்கு ஒப்பானதாக செய்யப்பட்டு அதில் வாசம் செய்யும் குடிகளுக்கு ஒரு ஊரீமாகவும் தும்மீமாகவும் இருக்கும், அதனால் ஒரு கீழ்த்தரமான ராஜ்யத்திற்கு அல்லது ஒரு கீழ் நிலையிலிருக்கும் சகல ராஜ்யங்களுக்கும் சம்பந்தப்பட்ட சகல காரியங்களும் அதில் வாசம் செய்பவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்; இந்த பூமி கிறிஸ்துவினுடையதாயிருக்கும்.

10 பின்னர் வெளிப்படுத்தல் 2:17ல் குறிப்பிடப்பட்டிருக்கிற வெண்மையான கல் ஒன்றைப் பெறுகிற ஒவ்வொருவருக்கும் அது ஒரு ஊரீம் மற்றும் தும்மீமாக மாறும், அதனிமித்தம் உயர் நிலையிலிருக்கும் ராஜ்யங்களுக்கு சம்பந்தப்பட்ட காரியங்கள் அறியப்படுத்தப்படும்;

11 சிலஸ்டியல் ராஜ்யத்திற்குள் வருகிற ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்மையான கல் கொடுக்கப்படும், அதில் ஒரு புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும், அதைப் பெறுகிறவனைத் தவிர எந்த மனுஷனும் அதை அறியமாட்டான். புதிய பெயர் முக்கிய வார்த்தையாயிருக்கிறது.

12 அதிக இரத்தம் சிந்துதலுக்கு காரணமாயிருக்கப்போகிற பிரச்சினைகளின் ஆரம்பம் மனுஷகுமாரனின் வருகைக்கு முன்பாக தென் கரோலினாவிலிருக்குமென கர்த்தராகிய தேவனுடைய நாமத்தில் நான் தீர்க்கதரிசனமுரைக்கிறேன்.

13 அநேகமாக அடிமைபற்றிய கேள்வியின் மூலமாக அது எழலாம். டிசம்பர் 25, 1832ல் இதைப்பற்றி நான் கருத்தாய் ஜெபித்துக்கொண்டிருந்தபோது இந்த ஒரு குரல் எனக்கு அறிவித்தது.

14 மனுஷ குமாரனின் வருகையின் நேரத்தை அறிந்துகொள்ள மிக கருத்தாய் ஒரு சமயம் நான் ஜெபித்துக்கொண்டிருந்தபோது பின்வருவனவற்றை திரும்பச் சொன்ன ஒரு குரலை நான் கேட்டேன்

15 ஜோசப், என்னுடைய மகனே, உனக்கு எண்பத்தைந்து வயதாகும்வரை நீ வாழ்ந்தால் மனுஷ குமாரனின் முகத்தை நீ காண்பாய்; ஆகவே இது போதும், இந்தக் காரியத்தில் இனி மேலும் என்னை தொந்திரவுசெய்யாதே.

16 ஆயிரம் வருஷ ஆரம்பத்திற்கு அல்லது சில முன்னாலுள்ள பிரசன்னத்தை இந்த வருகை குறிக்கிறதா அல்லது அவருடைய முகத்தைக் காணும்படியாக நான் மரிக்கவேண்டுமாவென தீர்மானிக்கமுடியாமல் இப்படியாக நான் விடப்பட்டேன்.

17 அந்த நேரத்திற்கு முன்பைவிட மனுஷ குமாரனின் வருகை எந்த சீக்கிரத்திலும் இருக்காதென நான் நம்புகிறேன்.

18 இந்த ஜீவியத்தில் நாம் பெறுகிற எந்த புத்திசாலித்தனத்தின் கொள்கையும் உயிர்த்தெழுதலில் நம்முடன் எழும்.

19 மற்றொருவனைவிட அவனுடைய சிரத்தை மற்றும் கீழ்ப்படிதலின் மூலமாக இந்த ஜீவியத்தில் ஒரு நபர் அதிக அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பெற்றால் மறுமையில் அவன் மிக அதிக மேன்மையடைந்திருப்பான்.

20 சகல ஆசீர்வாதங்களும் முன்னறிவிக்கப்பட்டதின்மேல் இந்த உலகத்தின் அஸ்திபாரங்களுக்கு முன்பே பரலோகத்திலே திரும்பப்பெற முடியாதபடி ஒரு நியாயப்பிரமாணம் கட்டளையிடப்பட்டது,

21 தேவனிடமிருந்து எந்த ஆசீர்வாதத்தையும் நாம் பெறும்போது, அது முன்னறிவிக்கப்பட்ட அந்த நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிதலாலேயாகும்.

22 மனுஷனுடையது போல தொட்டுணரத்தக்கதான மாம்சமும் எலும்புமுள்ள ஒரு சரீரம் பிதாவுக்கிருக்கிறது, குமாரனுக்கும்கூட, ஆனால் பரிசுத்த ஆவிக்கு ஒரு மாம்சமும் எலும்புமுள்ள ஒரு சரீரம் இல்லை, ஆனால் ஆவியான ஒருவர். அப்படியில்லாதிருந்தால் பரிசுத்த ஆவி நம்மில் வாசம் செய்யமுடியாது.

23 பரிசுத்த ஆவியை ஒரு மனுஷன் பெற்றுக்கொள்ளலாம், அது அவன்மேல் இறங்கலாம், அவனோடு வாசம் செய்யாது.