2010–2019
ஏழெழுபது தரம் மட்டும்
ஏப்ரல் 2018


ஏழெழுபது தரம் மட்டும்

தடைக்கற்கள் மற்றும் பரிபூரணமின்மை நிறைந்த வாழ்க்கையின் மத்தியிலும், இரண்டாம் வாய்ப்புக்காக நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

தவறுகள் வாழ்க்கையின் உண்மைகள். ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கில் கூட தவறுகள் செய்யாமல் பியானோவை திறமையாக வாசிக்கக் கற்பது முடியாததாகும். ஒரு அன்னிய மொழியைக் கற்க ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கில் கூட, தவறுகள் செய்து ஒருவர் அவமானத்தை எதிர்கொள்ள வேண்டும். உலகின் மாபெரும் விளையாட்டு வீரர்கள் கூட தவறு செய்வதை நிறுத்துவதில்லை.

“வெற்றி என்பது தோல்வி அடையாதது அல்ல, ஆனால் வைராக்கியம் இழக்காமல் தோல்வியிலிருந்து தோல்விக்கு செல்வதாகும்,” என சொல்லப்பட்டிருக்கிறது1

பல்பைக் கண்டுபிடித்துவிட்டு தாமஸ் எடிசன் இந்த அர்த்தத்தில் சொன்னார், “நான் ஆயிரம் முறை தோற்கவில்லை, பல்பு ஆயிரம் படிக்கட்டுகள் தாண்டிய கண்டுபிடிப்பு.” 2 சார்லஸ் எப். கெட்டரிங் தோல்விகளை, “சாதனைச் சாலையின் அடையாளங்கள் என்றார்.” 3 நம்பத் தகுந்த வகையில், நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளும், தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி ஞானத்தின் பாடமாகிறது,

நெப்பியின் அசைக்கமுடியாத விசுவாசம் கடைசியில் அவன் பித்தளைத் தகடுகளைப் பெறும் வரை, தோல்வியிலிருந்து தோல்விக்குச் செல்ல அவனுக்கு உதவியது. இஸ்ரவேலருடன் எகிப்திலிருந்து வெளியேற கடைசியில் அவன் வெற்றிபெறும் முன் மோசேக்கு 10 முயற்சிகள் தேவைப்பட்டன.

நெப்பியும் மோசேயும் கர்த்தரின் பணியில் இருந்ததால், முதல் முயற்சியிலேயே வெற்றிபெற கர்த்தர் தலையிட்டு ஏன் உதவவில்லை என ஒருவர் வியக்கலாம். வெற்றிபெறும் முயற்சிகளில் தடுமாறவும் தோற்கவும் அவர்களை ஏன் அனுமதித்தார், நம்மையும் ஏன் அனுமதிக்கிறார்? அந்தக் கேள்விக்கான பல முக்கிய பதில்களில் சில இங்கே:

  • முதலாவதாக, “இவை நமக்கு அனுபவம் கொடுக்கும், மற்றும் நமது நன்மைக்காகவே,” என கர்த்தர் அறிவார். 4

  • இரண்டாவதாக, “நல்லதன் மதிப்பை நாம் அறியும்படிக்கு, கசப்பானதை ருசிக்க,” அவர் நம்மை அனுமதிக்கிறார். 5

  • மூன்றாவதாக, “யுத்தம் கர்த்தருடையது,” 6 எனவும் அவரது பணியை நாம் அவரது கிருபையால் மட்டுமே நிறைவேற்றி அவரைப்போல் ஆக முடியும் எனவும் நிரூபிக்கவே. 7

  • நான்காவது, “எதிர்ப்பிலும்,”8 “உபத்திரவத்தின் குகையிலும்,”9 “புடமிட” முடியாத, கிறிஸ்துவைப் போன்ற ஏராளமான தன்மைகளை விருத்தி செய்யவும் தீட்டவும் நமக்கு உதவவுமே.

ஆகவே, தடைக்கற்களும் பரிபூரணமின்மையும் நிறைந்த வாழ்க்கையில், இரண்டாவது சந்தர்ப்பங்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

1970ல், பி.ஒய்.யூ-வில் புதிதாய் சேர்ந்தவனாக, ஒரு மிகச் சிறந்த பேராசிரியரான ஜே பாலிப் கற்பித்த, பௌதிகத்துக்குத் தேவையானவைகள் என்ற ஆரம்ப பாடத்திட்டத்தில் சேர்ந்தேன். பாடத்திட்டத்தின் ஒவ்வொரு பாடத்தையும் முடித்த பிறகு, அவர் ஒரு பரீட்சை வைப்பார். சி க்ரேட் எடுத்த மாணவன் அதிக மார்க் எடுக்க விரும்பினால், அதே பாடத்தை வைத்து மாற்றப்பட்ட ஒரு பரீட்சையை எழுத பேராசிரியர் பாலிப் அனுமதிப்பார். இரண்டாவது முயற்சியில் மாணவன் பி க்ரேட் வாங்கி, இன்னும் திருப்தியடையாவிட்டால், அவன் அல்லது அவள் மூன்றாம் முறையும், நான்காம் முறையும் மேலும் மேலும் எழுதலாம். ஏராளமான இரண்டாம் சந்தர்ப்பங்களை அனுமதித்து, நான் மிகச் சிறப்பாக ஆகவும், கடைசியில் பௌதிகத்துக்குத் தேவையானவைகளில் அவரது வகுப்பில் ஏ வாங்கவும் அவர் எனக்கு உதவினார்.

படம்
பேராசிரியர் ஜே பாலிப்

தோல்வியை சோகமாக அல்லாமல் படிப்பினையாகவும், தோல்வியைக் குறித்து பயப்படாமல் அதிலிருந்து கற்கவும் தொடர்ந்து முயற்சிக்க, அவரது மாணவர்களுக்கு உணர்த்திய அவர் அசாதாரணமான ஞானமிக்க பேராசிரியர்.

அவரது பௌதீக வகுப்பில் பயின்ற 47 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில் இந்த மாமனிதரை தொலைபேசியில் அழைத்தேன். அவர்களது க்ரேடை அதிகரிக்க மாணவர்களுக்கு மட்டற்ற சந்தர்ப்பங்களை கொடுப்பதற்கு அவர் ஏன் தயாராயிருந்தார் என நான் அவரிடம் கேட்டேன். அவரது பதில், “நான் மாணவர்கள் தரப்பிலேயே இருக்க விரும்பினேன்.”

மனதின் தவறுகள் அல்லது தோல்விகளைத் தொடர்ந்து, இரண்டாம் சந்தர்ப்பங்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கும்போது, பாவங்களை மேற்கொள்வதிலும், அல்லது இருதயத்தின் தோல்விகளின்போது இரண்டாம் சந்தர்ப்பம் கொடுக்கும்போதும், நாம் இரட்சகரின் கிருபை குறித்து வியப்புறுகிறோம்.

இரட்சகரை விட நமது தரப்பில் யாருமில்லை. நமது பரீட்சைகளை எழுதவும், திரும்பவும் எழுதவும் அவர் நம்மை அனுமதிக்கிறார். அவரைப்போலாக, சிலவற்றைச் சொல்ல வேண்டுமானால், சுபாவ மனுஷனுடன் நமது அன்றாட போராட்டங்களாகிய பசியைக் கட்டுப்படுத்துதல், பொறுமையும் மன்னிப்பும் கற்றுக்கொள்ளுதல், சோம்பேறித்தனத்தை மேற்கொள்ளுதல், செய்யத் தவறியதால் வந்த பாவங்களைத் தவிர்த்தல், போன்ற எண்ணற்ற இரண்டாம் சந்தர்பங்கள் தேவைப்படும். தப்பு செய்வது மனித இயல்பானால், நமது தன்மைகள் மனுஷீகமில்லாமல் தெய்வீகமாவதற்கு எத்தனை தோல்விகள் நமக்கு தேவைப்படும்? ஆயிரங்கள். மில்லியன் அதிகமாக கூட ஆகலாம்.

நமது ஒரே பரிந்து பேசுபவராக, குறுகிய இடுக்கமான பாதை எல்லா பக்கங்களில் இருந்தும் சோதனைகளாலும் எதிர்ப்புகளாலும் பரவிக்கிடக்கிறது என அறிந்து, நமது உலக சோதனையில் வெற்றி பெற தேவைப்படுகிற அநேக சந்தர்ப்பங்களை நமக்குக் கொடுக்க இரட்சகர் அளவிட முடியாத விலையைக் கொடுத்தார்.

நாம் வாழ்க்கையின் பாடுகளை எதிர்கொள்ளும்போது நமது நம்பிக்கையை பலமாக வைத்துக்கொள்ள, இரட்சகரின் கிருபை எப்போதும் தயாராக இருக்கிறது. அவரது கிருபை “உதவி அல்லது பலத்தின் தெய்வீக வழி, ... அவர்கள் தங்கள் சிறந்த முயற்சியை செய்த பிறகு, ஆண்களும் பெண்களும் நித்திய ஜீவனையும் மேன்மைப்படுதலையும் பற்றிக்கொள்ள அனுமதிக்கிற சாத்தியமாக்கும் வல்லமை.”10 குறுகிய இடுக்கமான பாதையில் அவர்கள் தடுமாறினாலும், அவர் உணர்த்தி, பாரத்தை இலகுவாக்கி, பெலப்படுத்தி, விடுதலையாக்கி, பாதுகாத்து, குணமாக்கி, அல்லது தன் ஜனத்துக்கு “உதவி செய்யும்போது,” நமது பயணம் முழுவதும் அவரது கிருபை மற்றும் அன்பான கண் நம்மீது இருக்கும்.11

மனந்திரும்புதல் வைராக்கியத்தை இழக்காமல், தோல்வியிலிருந்து தோல்விக்கு செல்ல நம்மை அனுமதித்து, சாத்தியப்படுத்தக்கூடிய எப்போதும் அடையக்கூடிய வரமாகும். மனந்திரும்புதல் நாம் தோற்கக்கூடிய அவரது ஆதரவுத் திட்டமல்ல. மனந்திரும்புதல் நாம் செய்வோம் என அறிகிற அவரது திட்டம் ஆகும். இது மனந்திரும்புதலின் சுவிசேஷம், தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னபடி, “இது ஒரு வாழ்நாள் பாடத்திட்டம்.”12

இந்த மனந்திரும்புதலின் வாழ்நாள் பாடத்திட்டத்தில், திருவிருந்து அவரது மன்னிப்பை தொடர்ந்து சாத்தியமாக்குகிற கர்த்தர் வகுத்த வழியாகும். நொறுங்கிய இருதயத்தோடும் நருங்கிய ஆவியோடும் நாம் பங்கேற்றால், உடன்படிக்கையின் பாதையில் தோல்வியிலிருந்து தோல்விக்கு நாம் முன்னேறும்போது, அவர் நமக்கு வாரந்தோறும் மன்னிப்பு வழங்குகிறார். ஏனெனில் “அவரது பாவங்கள் பொருட்டின்றி எனது உள்ளம் அவர்கள் மீது மனதுருக்கத்தால் நிறைந்திருக்கிறது.” 13

ஆனால் எத்தனை முறை அவர் நம்மை மன்னிக்கிறார்? அவரது நீடிய சாந்தம் எவ்வளவு அதிகமானது? ஒரு சமயத்தில், பேதுரு இரட்சகரிடம் கேட்டான், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றம் செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதரம் மட்டுமோ?”14

படம்
பேதுருவும் இயேசுவும்

அநேகந்தரம் மன்னிப்பதன் தவறை ஏழு தரம் தேவைக்கு அதிகமானது என வலியுறுத்தவும், பரோபகாரத்துக்கு எல்லையிருக்கிறது எனவும் ஒருவேளை பேதுரு நினைத்திருக்கலாம். பதிலாக, முக்கியமாக பேதுருவிடம் கணக்கிடாதிருக்க மட்டுமல்ல, மன்னிப்புக்கு வறையரை உண்டுபண்ணாதிருக்க சொன்னார்.

“அதற்கு இயேசு ஏழுதரம் மாத்திரமல்ல, ஏழெழுபது தரமட்டும் என்று உனக்குச் சொல்கிறேன்” என்றார்.15

தெளிவாகவே, இரட்சகர் 490 என்ற அதிக வரையறையை ஏற்படுத்தவில்லை. திருவிருந்தில் பங்கேற்கும் வரையறை 490, பின்பு 491வது முறையில், ஒரு பரலோக தணிக்கையாளர் தலையிட்டு, “நான் மிகவும் வருந்துகிறேன், உனது மனந்திரும்பும் அட்டை காலாவதியாகி விட்டது, இப்போதிலிருந்து நீ உனது சொந்தப் பொறுப்பிலிருக்கிறாய்,” என்பதற்கு ஒப்பாயிருக்கும்.

எழெழுபது முறை என்ற கணக்கை கர்த்தர் அவரது அளவிட முடியாத பாவநிவர்த்திக்கும், அவரது எல்லையற்ற அன்புக்கும், அளவற்ற கிருபைக்கும் உருவகமாக பயன்படுத்தினார். “ஆம் எவ்வளவுக்கெவ்வளவு என் ஜனங்கள் மனந்திரும்புவார்களோ, அவ்வளவாய் எனக்கு விரோதமான அவர்களது பாவங்களை நான் மன்னிப்பேன்.”16

திருவிருந்து பாவம் செய்ய அனுமதி என்று அர்த்தமில்லை. மரோனியின் புஸ்தகத்தில் இச்சொற்றொடர் சேர்க்கப்பட்டதற்கு இதுவே காரணம்: “அவர்கள் அடிக்கடி மனந்திரும்பி உண்மையான நோக்கத்தோடு மன்னிப்பை நாடினால், அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள்.” 17

உண்மையான நோக்கம் என்பதில் உண்மையான முயற்சி மற்றும் உண்மையான நோக்கம் என்பதுவும் இருக்கிறது. மனந்திரும்புதலை வரையறுக்க வேதங்களின் வழிகாட்டி பயன்படுத்துகிற முக்கிய வார்த்தை “மாற்றம்.” “மனம் மற்றும் இருதயத்தின் மாற்றம் தேவனிடத்தில் ஒருவரை, மற்றும் பொதுவாக வாழ்க்கையில் புதிய மனோபாவத்தை ஏற்படுத்துகிறது.” 18 அப்படிப்பட்ட மாற்றம் ஆவிக்குரிய வளர்ச்சியில் முடிகிறது. பின்னர் நமது வெற்றி தோல்வியிலிருந்து தோல்விக்கு செல்லாமல், வைராக்கியம் குறையாமல் தோல்வியிலிருந்து தோல்விக்கு வளர்கிறது.

மாற்றத்தைப் பொருத்தவரை, இந்த எளிய சிந்தனையை கருத்தில் கொள்ளுங்கள். “மாறாதவை அப்படியே இருக்கின்றன.” வெளிப்படையான சத்தியம் உங்கள் புத்திசாலித்தனத்தை அவமானப்படுத்த அல்ல, அது தலைவர் பாய்ட் கே. பாக்கரின் ஆழ்ந்த ஞானம். அவர் சொன்னார், “நாம் மாறிக்கொண்டிருக்கும்போது, நாம் மாறுகிறோம்.”20

நாம் நமது இரட்சகர்போல் ஆக தொடர்ந்து முயற்சிக்காததால், 20 நமது பலவீனங்கள் இருப்பினும், வளரவும் முன்னேறவும் வாஞ்சையுடன், நாம் விழும் ஒவ்வொரு முறையும், நாம் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்க வேண்டும். நமது பலவீனத்தில் அவர் உறுதியளிக்கிறார், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.”21

டைம்- லாப்ஸ் புகைப்பட முறைகளில் மட்டுமே நமது சரீர வளர்ச்சியைக் காண முடியும். அதுபோல நமது ஆவிக்குரிய வளர்ச்சி காலத்தின் பின்னோக்கிய பார்வை இல்லாமல் யூகிக்க முடியாதது. நமது முன்னேற்றத்தை அடையாளம் காணவும், “கிறிஸ்துவில் திட நம்பிக்கையாய் பூரணமான நம்பிக்கையின் பிரகாசத்தோடும் முன்னேறிச் செல்ல,”22 நமக்கு உணர்த்த, அந்த உருப்பெருக்கியினூடாக ஒழுங்காக ஒரு சுயபரிசோதனை செய்வது ஞானமாயிருக்கும்.

அவர்களுடைய சமூகத்துக்கு திரும்பும் நமது பயணத்தில், நமக்கு எண்ணற்ற இரண்டாம் சந்தர்ப்பங்களை அனுமதிக்கிற, நமது பரலோக பெற்றோர் மற்றும் இரட்சகரின் அன்பான தயவுக்கும், பொறுமைக்கும், நீடிய சாந்தத்துக்கும் நான் நன்றியுடையவனாயிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.