2010–2019
பரிசுத்த ஆவியின் வல்லமையினால் தீர்க்கதரிசிகள் பேசுகிறார்கள்
ஏப்ரல் 2018


பரிசுத்த ஆவியின் வல்லமையினால் தீர்க்கதரிசிகள் பேசுகிறார்கள்

தீர்க்கதரிசிகளைப் பெற்றிருப்பது, அவரது பிள்ளைகள் மீது தேவனின் அன்பின் அடையாளமாகும். அவர்கள் தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களையும் உண்மையான தன்மைகளையும் அறியப்படுத்துகிறார்கள்.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, நீங்கள் எங்கிருந்தாலும், நேற்று உங்களுடைய ஆதரித்தலின் வாக்குக்காக என்னுடைய உண்மையான ஆழ்ந்த நன்றிகளை உங்களுக்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன். மோசேயைப்போல திக்குவாயும் மந்த நாவும் உள்ளவனாக நான் உணர்ந்தாலும், அவனுக்கு கர்த்தர் சொன்ன வார்த்தைகளில் நான் ஆறுதலடைந்தேன்.

“மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும், குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

“ஆதலால் நீ போ, நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்” (யாத்திராகமம் 4:11–12; வசனம் 10ஐயும் பார்க்கவும்) என்றார்

என்னுடைய அன்பான மனைவியின் அன்பிலும் ஆதரவிலும் நான் ஆறுதலடைந்தேன். கர்த்தர் மீதும், என் மீதும், என்னுடைய குடும்பத்தின் மீதும் அவளுடைய நல்லெண்ணம், அன்பு, மற்றும் மொத்த அர்ப்பணிப்புக்கு அவள் ஒரு எடுத்துக்காட்டாயிருக்கிறாள். என்னுடைய இருதயத்தின் ஒவ்வொரு அணுவிலும் நான் அவளை நேசிக்கிறேன், எங்களில் அவள் ஏற்படுத்தியிருக்கிற நேர்மறையான செல்வாக்குக்காக நான் அவளுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.

சகோதர சகோதரிகளே, தலைவர் ரசல் எம். நெல்சன், பூமியின்மேல் தேவனின் தீர்க்கதரிசி என நான் உங்களுக்கு சாட்சியளிக்க விரும்புகிறேன். அவரைப்போல மிக இரக்கமும் அன்புமுள்ள ஒருவரை நான் ஒருபோதும் கண்டதில்லை. இந்த பரிசுத்த அழைப்புக்கு நான் மிக சிறியவனாக உணர்ந்தாலும் இந்த பொறுப்பை அவர் கொடுத்தபோது அவருடைய வார்த்தைகளும், அவரது கண்களில் தெரிந்த மென்மையான பார்வையும், இரட்சகரின் அன்பால் தழுவப்பட்டதாக என்னை உணரவைத்தது. தலைவர் நெல்சன் அவர்களே, உங்களுக்கு நன்றி. நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம், நேசிக்கிறோம்.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த நாட்களில் பூமியின்மேல் கர்த்தருடைய சித்தத்தை அறியவும் அதைப் பின்பற்றவும் நாடுகிற தீர்க்கதரிசிகளும், ஞானதிருஷ்டிக்காரர்களும், வெளிப்படுத்துபவர்களும் நமக்கிருப்பது ஒரு ஆசீர்வாதமில்லையா? வாழ்க்கையில் நாம் சந்திக்கிற சவால்களிருந்தாலும், உலகத்தில் நாம் தனிமையிலில்லை என்பதை அறிந்துகொள்வது ஆறுதலாயில்லையா. தீர்க்கதரிசி நமக்கிருப்பது அவருடைய பிள்ளைகளுக்காக தேவனின் அன்பின் அடையாளம். தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களையும் அவர்களுடைய உண்மையான தன்மையையும் அவர்களுடைய ஜனங்களுக்கு அவர்கள் அறியவைக்கிறார்கள். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் மூலமாக இதை நான் அறிந்துகொண்டேன்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரதான தலைமையில் அப்போது இரண்டாவது ஆலோசகராயிருந்த தலைவர் ஜேம்ஸ் இ. பாஸ்டிடமிருந்து என் மனைவிக்கும் எனக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. போர்ச்சுகல்லில் ஊழியத் தலைவராகவும் கூட்டாளியுமாக சேவை செய்ய எங்களை அவர் அழைத்தார். ஊழியத்தை ஆரம்பிக்க எங்களுக்கு ஆறு வாரங்கள் மட்டுமே இருப்பதாக அவர் எங்களுக்குக் கூறினார். நாங்கள் ஆயத்தமாயில்லாமலும், போதுமானவர்களில்லை என உணர்ந்தாலும்கூட அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். கடந்த அனுபவத்தின்படி நுழைவு விசாவை முடிக்க ஆறு முதல் எட்டு மாதங்களாகும் என தெரிந்திருந்ததால் அந்த நாட்டில் ஊழியம் செய்ய நுழைவு விசாவைப் பெறுவது அந்த நேரத்தில் எங்களின் மிகமுக்கிய அக்கறையாயிருந்தது.

நுழைவு விசா பிரச்சினையை விரைவாகத் தீர்க்க எங்களுக்கு சாத்தியமாக்க கர்த்தர் ஒரு அற்புதத்தை நிகழ்த்துவார் என எங்களுக்கு விசுவாசமிருக்கிறதா என பின்னர் தலைவர் பாஸ்ட் கேட்டார். எங்களின் பதில் பெரிய “ஆம்” என்றிருந்தது. நாங்கள் உடனேயே ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம். நுழைவு விசாவுக்குத் தேவையான ஆவணங்களை ஆயத்தப்படுத்தி, எங்களால் முடிந்தளவுக்கு மிக விரைவாக எங்களுடைய இளம் குடும்பத்தை தூதரகத்துக்கு அழைத்துச் சென்றோம். அங்கே மிக நேர்த்தியான பெண் ஒருவர் எங்களைச் சந்தித்தார். எங்களுடைய ஆவணங்களை பரிசீலனை செய்து, பரிச்சயமாகி, எங்களிடம் திரும்பி “என்னுடைய நாட்டு மக்களுக்கு உண்மையிலேயே நீங்கள் உதவப்போகிறீர்களா?” என எங்களிடம் அவர் கேட்டார். “ஆம்” என நாங்கள் உறுதியாகப் பதிலளித்து, நாங்கள் இயேசு கிறிஸ்துவை பிரதிபலித்து, அவரைக்குறித்தும் உலகத்தில் அவருடைய தெய்வீக ஊழியத்தைக்குறித்தும் சாட்சியளிப்போம் என விவரித்தோம். நான்கு வாரங்கள் கழித்து நாங்கள் அங்கு சென்று, எங்களுடைய நுழைவு விசாக்களைப்பெற்று, கர்த்தருடைய தீர்க்கதரிசி எங்களுக்குச் செய்யச் சொன்னதைப்போல, ஆறு வாரங்களுக்குள் ஊழியக்களத்தில் இறங்கினோம்

சகோதர சகோதரிகளே, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் தீர்க்கதரிசிகள் பேசுகிறார்கள் என என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நான் சாட்சியளிக்கிறேன். கிறிஸ்துவையும் பூமியின்மேல் அவரின் தெய்வீக ஊழியத்தையும் அவர்கள் சாட்சியளிக்கிறார்கள். கர்த்தரின் மனதையும் இருதயத்தையும் அவர்கள் பிரதிபலித்து, அவரைப் பிரதிபலிக்கவும், தேவன் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் வாழ திரும்புவதற்கு நாம் என்ன செய்யவேண்டுமென நமக்குப் போதிக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நமது விசுவாசத்தை நாம் பிரயோகித்து அவர்களுடைய போதனைகளைப் பின்பற்றும்போது நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். அவர்களைப் பின்பற்றுவதால் நமது வாழ்க்கை சந்தோஷமாகவும் குறைந்த சிக்கலுள்ளதாகவுமாகிறது, நம்முடைய கடினங்களும் பிரச்சினைகளும் தாங்குவதற்கு எளிதாகிறது, நம் நாட்களில் எதிரியின் தாக்குதல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிற ஒரு ஆவிக்குரிய ஆயுதத்தை நம்மைச் சுற்றி நாம் உருவாக்குகிறோம்.

இந்த ஈஸ்டர் நாளில் இயேசு கிறிஸ்து உயிரோடெழுந்தாரென்றும், அவர் ஜீவிக்கிறாரென்றும், அவருடைய தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள், வெளிப்படுத்துபவர்கள் மூலமாக பூமியின்மேல் அவர் அவருடைய சபையை வழிநடத்துகிறாரெனவும் நான் பயபக்தியுடன் சாட்சியளிக்கிறேன். அவரே உலகத்தின் இரட்சகரென்றும் மீட்பரென்றும், அவர் மூலமாகவே நமது அன்புமிக்க தேவனுடைய பிரசன்னத்தில் நாம் இரட்சிக்கப்பட்டு, மேன்மையடைவோம் எனவும் நான் சாட்சியளிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன், அவரைத் தொழுகிறேன். நான் அவரைப் பின்பற்றவும் அவருடைய சித்தத்தின்படி செய்யவும், அவரைப் போலாகவும் நான் விரும்புகிறேன். இந்தக் காரியங்களை, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் தாழமையாக நான் சொல்லுகிறேன், ஆமென்.