2010–2019
தேவனிடமிருந்து அருமையான வரங்கள்
ஏப்ரல் 2018


தேவனிடமிருந்து அருமையான வரங்கள்

கிறிஸ்துவில் நாம் சிறிதளவு உண்மையான விசுவாசத்தைப் பிரயோகித்தால், விசுவாசத்தாலும், சந்தோஷத்தாலும், மகிழ்ச்சியாலும், நம்பிக்கையாலும், அன்பாலும் வாழ்க்கை நிரப்பப்பட முடியும்.

என் சகோதர சகோதரிகளே, கர்த்தரின் பிரசன்னத்தை உணரவும், அவரது ஆசீர்வாதங்களைக் கொண்டாடவும், பூர்வகால இஸ்ரவேல் கூடியபோது, வேதாகமத்துக்கு தொடர்புபடுத்தக்கூடிய பழக்கமான, ஒரு பரிசுத்த கூடுகையில் நாம் இப்போது பங்கேற்றிருக்கிறோம். 1 இந்த பூர்வகால பழக்கம் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டிருக்கிற காலத்தில் வாழ நாம் சிலாக்கியம் பெற்றிருக்கிறோம். 2 நீங்கள் பங்கேற்ற மிகப் பரிசுத்த தருணம் குறித்து நீங்கள் உணர்ந்தவற்றை உங்கள் தனிப்பட்ட குறிப்பிதழில் பதிவு செய்ய உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

அண்மையில் நமது அன்பு நண்பரும் தீர்க்கதரிசியுமான தலைவர் தாமஸ்  எஸ். மான்சனுக்கு விடை கொடுத்தோம். நாம் அவரை இழந்தாலும் தன் சபைக்குத் தலைமை தாங்க ஒரு புதிய தீர்க்கதரிசியான தலைவர் ரசல்  எம். நெல்சனை கர்த்தர் அழைத்திருக்கிறார் என்பதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஒரு ஒழுங்கான விதத்தில் நமது சபை வரலாற்றில் நாம் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறோம். இது தேவனிடமிருந்து ஒரு அற்புதமான வரம்.

உயர்த்திய கரங்களால் நாம் தலைவர் நெல்சனை ஆதரித்தபோது, நாம் தேவனின் முன்பு சாட்சியாக நின்று, அவர் தலைவர் மான்சனின் சரியான மாற்று என நாம் அங்கீகரித்தோம். நமது உயர்த்திய கரங்களுடன், அவர் கர்த்தரிடமிருந்து வழிநடத்தல் பெறும்போது, அவரது குரலுக்கு செவிகொடுக்க வாக்களிக்கிறோம்.

கர்த்தர் சொல்லியிருக்கிறார்

“அவர் [சபைத்தலைவர் என அர்த்தம்] பெறுகிறபடி அவர் உங்களுக்குக் கொடுக்கிற வார்த்தைகளுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கள் செவிகொடுக்க வேண்டும். ... ;

ஏனெனில் எல்லா பொறுமையோடும் விசுவாசத்தோடும் என் சொந்த வாயிலிருந்து வந்தது போல அவரது வார்த்தைகளை நீங்கள் பெறுவீர்கள்.” 3

நான் 60 வருடங்களுக்கும் மேலாக புதிய தீர்க்கதரிசியான, தலைவரை அறிவேன். நான் அவருடன் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தில் 33 ஆண்டுகள் சேவையாற்றியிருக்கிறேன். பூமியில் பரிசுத்த ஆசாரியத்துவ திறவுகோல்களை நிர்வகிக்க நமது தலைமை தாங்கும் அப்போஸ்தலராகவும் தீர்க்கதரிசியாகவும் ஆயத்தப்படுத்தியது கர்த்தரின் கரம் என்பதற்கு நான் ஒரு சாட்சி. நாம் ஒவ்வொருவரும் முழுவதுமாக அவரையும் அவரது ஆலோசகர்களையும் ஆதரித்து, அவர்களது வழிநடத்தலைப் பின்பற்றுவோமாக. நாங்கள் மூப்பர் காங் மற்றும் மூப்பர் சோர்ஸைபன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்களாக வரவேற்கிறோம்.

நாம் இந்த மகிமையான வாரக்கடைசியில் கொண்டாடும் நிகழ்ச்சியான, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவர் தன் சீஷர்களுக்குச் சொன்னார், “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக, பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன். 4 இரண்டு அடுக்கு செயலைக் கவனியுங்கள், தேவன் தன் குமாரனை அனுப்புகிறார். தன் பணியை நிறைவேற்ற குமாரன் அநித்திய ஆண்களையும் பெண்களையும் அனுப்புகிறார்.

கர்த்தரின் பணியை செய்ய அழைக்கப்பட்ட அந்த நபர்கள் மனுஷீகமாக பரிபூரணமானவர்கள் அல்ல என அறிவதால் நாம் ஆச்சரியப்படக் கூடாது. மகத்தான பணியை நிறைவேற்ற தேவனால் அழைக்கப்பட்ட நமது பரலோக பிதாவின் குமாரர்கள் மற்றும் குமாரத்திகளான ஆண்களும் பெண்களும், சபையில் தங்கள் பணிகளில் சேவை செய்ய அழைக்கப்பட்டவர்கள், தங்களால் முடிந்த சிறப்பானதைச் செய்ய முயல்பவர்கள், ஆனால் அவர்களில் ஒவ்வொருவரும் பரிபூரணமானவர்கள் அல்ல என வேதங்களிலுள்ள நிகழ்வுகள் விவரிக்கின்றன. இன்று நமக்கும் அதுவே உண்மை.

நாம் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதிலும் ஆதரிப்பதிலும் எப்படி முன்னேறுகிறோம். அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசமான உண்மையான விசுவாசத்தில் ஆரம்பிக்கிறது. இரட்சகரில் விசுவாசமே கிறிஸ்துவின் கோட்பாடு மற்றும் சுவிசேஷத்தின் முதல் கொள்கை ஆகும்.

பல ஆண்டுகளுக்கு முன் நான் பரிசுத்த தேசத்துக்கு சென்றேன். ஒரு கடுகுச் செடியின் அருகில் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது, நான் எப்போதாவது கடுகு விதையைப் பார்திருக்கிறேனா என பி.ஒய்.யூ ஜெருசலேம் மைய இயக்குநர் என்னைக் கேட்டார். நான் பார்த்திருக்கவில்லை, ஆகவே நாங்கள் நின்றோம். கடுகுச் செடியிலிருந்து விதைகளை எனக்குக் காட்டினார். ஆச்சரியமூட்டும் வகையில் அவை சிறியவை.

பின்பு நான் இயேசுவின் போதனைகளை நினைவுகூர்ந்தேன்: “கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த மலையைப் பார்த்து இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது, என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” 5

ஒரு கடுகு விதைபோல சிறு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், குடும்பத்தார், சபையார் மற்றும் சபையில் இன்னும் அங்கத்தினராகாதோர் உள்ளிட்ட தேவனின் பிள்ளைகளோடு நாம் சேவை செய்யும்போது, நம் முன்னேயுள்ள வேலைகளிலுள்ள மலையளவு அதைரியத்தையும் சந்தேகத்தையும் போக்க கர்த்தர் நமக்கு உதவ முடியும்.

சகோதர சகோதரிகளே, கடுகு விதையளவு கூட, கிறிஸ்துவில் உண்மையான சிறிதளவு விசுவாசத்தை நாம் பிரயோகிக்கும்போது, வாழ்க்கை விசுவாசம், சந்தோஷம், மகிழ்ச்சி. நம்பிக்கை மற்றும் அன்பினால் நிரப்பப்படலாம்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அவருக்குக் கொடுத்த அறிவுரையை மூப்பர் ஜார்ஜ் ஏ. ஸ்மித் நினைவுகூர்ந்தார், “எந்தவிதமான கஷ்டங்கள் என்னைச் சூழ்ந்தபோதெல்லாம் நான் ஒருபோதும் அதைரியமடையக்கூடாது என அவர் என்னிடம் சொன்னார். நான் நோவா ஸ்கோட்டியாவின் ஆழமான குழியில் மூழ்கினாலும், கன்மலைகள் என் மீது அடுக்கப்பட்டாலும், நான் அதைரியப்படக்கூடாது, ஆனால் தொடர்ந்து விசுவாசத்தைப் பிரயோகித்து, நல்ல தைரியத்தை காத்துக்கொண்டு, கடைசியில் நான் குவியலின் உச்சிக்கு வர வேண்டும்.” 6

நாம் பவுலின் அறிவிப்பை நினைவுகொள்ள வேண்டும், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” 7 இதை அறிவது தேவனிடமிருந்து மற்றொரு அருமையான வரம்.

நான் குறிப்பிட்ட வரங்களோடு, அனேகமனேகம் வரங்கள் இருக்கின்றன. நான் இப்போது சிலவற்றைப்பற்றி மட்டும் பேசினேன். ஓய்வுநாளின் வரம், திருவிருந்து, பிறருக்கு சேவை, நமது இரட்சகரின் தேவனிடமிருந்து ஒப்பற்ற வரம்.

ஓய்வுநாளின் வல்லமையை சபையிலும் வீட்டிலும் அனுபவிப்பது, ஆனந்தம், சந்தோஷம் மற்றும் எந்த வித கவனச்சிதறலும் இன்றி, கர்த்தரின் ஆவியின் இதமான உணர்வு.

இரவும் பகலும் திரைகள் அவர்களது முகங்களை ஒளிரச்செய்தும், அவர்களது காதுகளிலுள்ள காது சுத்தம் செய்யும் பஞ்சு ஆவியின் அமர்ந்த மெல்லிய சத்தத்தை தடுக்க ஆன்லைனிலும் ஸ்மார்ட் கருவிகளிலும், கிட்டத்தட்ட அநேகர் தங்களை அனுமதிக்கின்றனர். செருகியதை எடுக்க நேரம் இல்லையானால், “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள்,” 8 என்ற அவரது சத்தத்தைக் கேட்கும் சந்தர்ப்பத்தை இழந்து விடுவோம். கர்த்தரால் உணர்த்தப்பட்ட தொழில் நுட்ப முன்னேற்றத்தை சாதகமாக்கிக் கொள்வதில் இப்போது தவறொன்றும் இல்லை. ஆனால் அவற்றை பயன்படுத்துவதில் நாம் ஞானமாக இருக்க வேண்டும். ஓய்வு நாளின் வரத்தை நினைவுகூருங்கள்.

நாம் திருவிருந்து கூட்டத்தின்போது திருவிருந்தைப் பெறும் ஆசீர்வாதம், வழக்கமான ஒன்றாக ஒருபோதும் ஆகிவிடக் கூடாது. ஒரு முழு வாரத்தில் நாம் சிந்தித்து, நமது வாழ்க்கையில் அதிக சமாதானமும், சந்தோஷமும், மகிழ்ச்சியும் பெறுவது 70 நிமிடங்கள் மட்டுமே.

திருவிருந்தில் பங்கேற்பதும் நமது உடன்படிக்கைகளை புதுப்பித்தலும், நாம் அவரை எப்போதும் நினைவுகூர்கிறோம் என கர்த்தருக்கு ஒரு சமிக்ஞை ஆகும்.

பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கு சேவை செய்யும் மற்றொரு சிலாக்கியம், ஒருவரொருவருக்கு சேவை செய்து அவரது நேசகுமாரனின் உதாரணத்தைப் பின்பற்றும் சந்தர்ப்பம் ஆகும்.

நமது குடும்பத்திலும், சபை அழைப்பிலும், சமூக சேவை அமைப்புகளில் நாம் பங்கேற்கும் சில சேவை சந்தர்ப்பங்கள் சாதாரணமானவை.

சபையாரான ஆண்களும் பெண்களும், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் விரும்பினால் அரசின் எந்த நிலை பொது பதவிக்கும் போட்டியிட தயங்கக்கூடாது. நமது குரல்கள் இன்று தேவை, நமது பள்ளிகளிலும், நமது பட்டணங்களிலும், நமது நாடுகளிலும் முக்கியமாகும். ஜனநாயகம் இருக்கிற இடங்களில், சேவை செய்ய விரும்புகிற கனம்பொருந்திய ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்களிப்பது நமது கடமை.

சேவைசெய்ய பணிக்கப்படாத அநேக சந்தர்ப்பங்கள் அசாதாரணமானவை, அவை, நாம் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கிற பிறரிடம் செல்லும்போது வருபவை. நல்ல சமாரியனை ஒரு உதாரணமாக பயன்படுத்தி, நம்மை நாம் நேசிப்பது போல, தேவனையும், அயலாரையும் நாம் நேசிக்க வேண்டும் என நியாய சாஸ்திரிக்கு இயேசு போதித்ததை நினைவு கொள்ளுங்கள். 9

சேவை ஜன்னலைத் திறக்கிறது, அதனால் நாம் கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் புரிந்து கொள்கிறோம். வேதங்கள் போதிக்கிறது போல, அவர் சேவை செய்ய வந்தார், “மனுஷ குமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல் ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகவும் தன்னுடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” 10

பேதுரு, இயேசுவைக் குறிப்பிட்டபோது, இரட்சகரின் அநித்திய ஊழியத்தின் சிறந்த விவரிப்பாக, “நன்மை செய்பவராகச் சுற்றித் திரிந்தார்,” 11 என்ற நான்கு வார்த்தைகளில் கொடுத்திருக்கலாம்.

தேவனின் எல்லா வரங்களிலும் நமது மிகச் சிறந்த அருமையான வரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இயேசு சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவரும் பிதாவினிடத்தில் வரான்.” 12

எங்கள் பிள்ளைகள் தங்களின் பாவங்களின் மன்னிப்புக்காக எதனைக் கண்ணோக்க வேண்டும், என்று அறியும்பொருட்டாக “நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம், கிறிஸ்துவில் களிகூர்கிறோம், கிறிஸ்துவைப்பற்றி போதிக்கிறோம், கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கிறோம், எங்கள் தீர்க்கதரிசனத்தின்படியே நாங்கள் எழுதுகிறோம்,” 13 என அவன் அறிவித்தபோது, இரட்சகரின் முக்கியத்துவத்தை நெப்பி அறிந்தான்.

நமது ஆராதனை ஸ்தலங்களில் இருப்பது அவர் பெயர்தான் என நாம் நினைவுகொள்ள வேண்டும். அவரது நாமத்தில் நாம் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு, திடப்படுத்தப்பட்டு, நியமிக்கப்பட்டு, தரிப்பிக்கப்பட்டு, திருமணத்தில் முத்திரிக்கப்படுகிறோம். நாம் திருவிருந்தில் பங்கேற்று அவரது நாமத்தை நம்மீது தரித்துக் கொள்ள வாக்களிக்கிறோம். உண்மையான கிறிஸ்தவர்களாகிறோம். கடைசியாக திருவிருந்து ஜெபத்தில் அவரை “எப்போதும் நினைவில் கொள்ள” கேட்டுக் கொள்ளப்படுகிறோம். 14

நாளை ஈஸ்டர் ஞாயிற்றுகிழமைக்கு நாம் தயாராகும்போது, கிறிஸ்துவே மேலானவர் என நாம் நினைப்போமாக. அவரே நீதியான நியாயாதிபதி, நமது விசுவாசமிக்க பரிந்து பேசுபவர், நமது ஆசீர்வதிக்கப்பட்ட மீட்பர், நமது நல்ல மேய்ப்பர், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஒரே மேசியா, உண்மையான நண்பர், இன்னும் அதிகமாக. அவர் உண்மையாகவே நமக்கு நமது பிதாவிடமிருந்து மிக அருமையான வரம்.

நமது சீஷத்துவத்தில் நமக்கு அநேக தேவைகள், அக்கறைகள், பணிகள் உண்டு. எனினும் நமது சபை அங்கத்தினரத்துவத்தின் இருதயமாக சில செயல்கள் இருக்க வேண்டும். கர்த்தர் கட்டளையிடுகிறார், “ஆகவே, விசுவாசமாயிரு, நான் உன்னை நியமித்த அலுவலில் இரு, பலவீனருக்கு உதவு, தொங்குகிற கைகளைத் தூக்கி விடு, தளர்ந்த முட்டிகளை பெலப்படுத்து.” 15

இது செயல்படுகிற சபை! இது பரிசுத்தமான மதம்! ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார தேவையிலிருப்போருக்கு உதவி, தூக்கிவிட்டு, பெலப்படுத்தும்போது இதுவே உண்மையான சுவிசேஷம்! அவர்களுடைய இருதயங்களில் பரலோக பிதாவிலும், இயேசு கிறிஸ்துவிலும், அவரது பாவ நிவர்த்தியிலும் அவர்களது விசுவாசத்தின் சாட்சிகள் நிலை கொள்ள, அப்படிச் செய்ய நாம் அவர்களைச் சந்திப்பதும் உதவி செய்வதும் தேவைப்படுகிறது. 16

அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் நமது அங்கத்தினரத்துவம் உள்ளிட்ட தேவனிடமிருந்து வரும் அநேக அருமையான வரங்களை பொக்கிஷப்படுத்த, கர்த்தர் நமக்கு உதவி ஆசீர்வதிப்பாராக. நமது பரலோக பிதாவின் பிள்ளைகள்பால் நாம் அன்பால் நிரப்பப்படுவோமாக. அவர்களது தேவைகளை அறியவும், ஒருவருக்கொருவர் புரிதலையும் பாராட்டையும் அதிகரிக்கும்படியாக, தெளிவான அன்பான வழிகளில் சுவிசேஷத்தைப்பற்றிய அவர்களது கேள்விகளுக்கும் அக்கறைகளுக்கும் பதிலளிக்க சித்தமாயிருக்க வேண்டும் என நான் ஜெபிக்கிறேன்.

இயேசு கிறிஸ்து நமது இரட்சகர் என நான் சாட்சியளிக்கிறேன். நாங்கள் இந்த பொது மாநாட்டில் கற்பிக்கும் அனைத்தும் சபையின் பொது அதிகாரிகளாக உள்ள அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், பொது அதிகாரிகள் மற்றும் தலைமையிலிருக்கும் சகோதரிகளிடமிருந்து உணர்த்துதலால் வருகின்றன. கர்த்தரின் சந்தோஷமும் சமாதானமும் ஒவ்வொருவருடனும் இருப்பதாக என்பதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எனது தாழ்மையான ஜெபமாகும், ஆமென்.