வேதங்கள்
ஆல்மா 8


அதிகாரம் 8

ஆல்மா மீலேக்கிலே பிரசங்கித்து ஞானஸ்நானம் கொடுத்தல் – அம்மோனிகாவிலே அவன் நிராகரிக்கப்படுதல். அவ்விடம் விட்டு புறப்படுதல் – அவன் திரும்பிப்போய் ஜனங்களுக்கு மனந்திரும்புதலைக்குறித்து கூக்குரலிட வேண்டுமென ஒரு தூதன் கட்டளையிடுதல் – அவனை அமுலேக் ஏற்றுக்கொள்ளுதல் – அவ்விருவரும் அம்மோனிகாவிலே பிரசங்கித்தல். ஏறக்குறைய கி.மு. 82.

1 இப்பொழுதும், அந்தப்படியே, எழுதமுடியாத அநேக காரியங்களை கிதியோன் ஜனங்களுக்கு ஆல்மா போதித்து, தான் முன்பு சாரகெம்லா தேசத்தில் செய்ததுபோலவே, சபையின் முறைமையை ஸ்தாபித்த பின்பு, அவன் கிதியோன் தேசத்திலிருந்து திரும்பினான். ஆம், அவன் செய்து முடித்த பிரயாசங்களிலிருந்து ஓய்வெடுக்க சாரகெம்லாவிலிருந்த தன் சொந்த வீட்டிற்குத் திரும்பினான்.

2 இப்படியாக, நேபியின் ஜனங்கள் மீது நியாயாதிபதிகளினுடைய ஆளுகையின் ஒன்பதாம் வருஷம் முடிவுற்றது.

3 அந்தப்படியே, நேபியின் ஜனங்களின் மீது நியாயாதிபதிகளின் பத்தாம் வருஷ ஆளுகையின் துவக்கத்திலே, ஆல்மா அவ்விடத்திலிருந்து புறப்பட்டு வனாந்தர எல்லைகளுக்கு மேற்காயும், சீதோன் நதிக்கு மேற்காயும் இருக்கிற, மீலேக்கின் தேசத்தினுள்ளே பிரயாணம் பண்ணினான்.

4 அவன், தான் அழைக்கப்பட்ட தேவனுடைய பரிசுத்த முறைமையின் பிரகாரமாய் மீலேக் தேசத்திலுள்ள ஜனங்களுக்குப் போதிக்கத் தொடங்கினான். அவன் மீலேக் தேசமெங்கிலுமுள்ள ஜனங்களுக்கு போதிக்கத் தொடங்கினான்.

5 அந்தப்படியே, வனாந்தரத்தின் எல்லையோரங்களிலே அமைந்த தேசங்களிலிருந்து ஜனங்கள் அவனிடத்தில் வந்தார்கள். அவர்களுக்கு தேசமெங்கிலும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.

6 இப்படியாக, அவன் மீலேக்கிலே தன் வேலையை முடித்த பின்னர், அவ்விடம் விட்டுப் புறப்பட்டு மீலேக் தேசத்தின் வடக்கிலே மூன்று நாளளவும் பிரயாணம் பண்ணினான். அவன் அம்மோனிகா என்று அழைக்கப்பட்ட பட்டணத்திற்கு வந்தான்.

7 தங்களுடைய தேசங்களையும், தங்களின் பட்டணங்களையும், தங்களின் கிராமங்களையும், தங்களின் குக்கிராமங்கள் யாவையும், அவைகளை முதற் சுதந்தரித்தவனின் பெயராலே வழங்குவது நேபியின் ஜனங்களுடைய வழக்கமாயிருந்தது. அம்மோனிகா தேசம் என்ற பெயர் வரக்காரணமும் அதுவே.

8 அந்தப்படியே, அம்மோனிகா பட்டணத்திற்கு ஆல்மா வந்தவுடன், அவன் தேவ வசனத்தை அவர்களுக்கு பிரசங்கிக்கலானான்.

9 இப்பொழுது அம்மோனிகா பட்டணத்தாரின் இருதயங்களை சாத்தான் பற்றிப் பிடித்துக் கொண்டமையால், அவர்கள் ஆல்மாவினுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை.

10 அன்றியும் ஆல்மா அதிகமாய் ஆவியினாலே பிரயாசப்பட்டு, பட்டணத்திலிருந்த ஜனங்களின் மீது தேவன் தாமே தமது ஆவியை ஊற்றும்படியாயும், அவர்களுக்கு அவன் மனந்திரும்புதலுக்கேதுவாய் ஞானஸ்நானம் கொடுக்க அருளும்படிக்கும், அவரோடுகூட வல்லமையான ஜெபத்தில் போராடினான்.

11 அன்றியும் அவர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி அவனை நோக்கி: இதோ, நீரே ஆல்மா என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்; தேசத்தின் அநேக பகுதிகளில் உம்முடைய பாரம்பரியத்தின்படி, நீர் ஸ்தாபித்த சபைகளுக்கு நீரே பிரதான ஆசாரியன் என்றும் அறிந்திருக்கிறோம். நாங்கள் உம்முடைய சபையார் அல்ல. அப்படிப்பட்ட புத்தியீன பாரம்பரியங்களிலே நாங்கள் விசுவாசம் கொள்வதில்லை.

12 நாங்கள் உம்முடைய சபையாரல்லாததால் எங்கள் மேல் உமக்கு எந்த அதிகாரமுமில்லை என்று இப்பொழுது அறிவோம்; நீர் நியாயாசனத்தை நேபிகாவிற்கு ஒப்புவித்ததாலே, நீர் எங்களுக்கு பிரதான நியாயாதிபதியும் அல்ல, என்றார்கள்.

13 ஜனங்கள் இப்படிச் சொல்லி, அவனுடைய வார்த்தைகள் யாவையும் எதிர்த்து, அவனை தூஷித்து, அவன் மீது உமிழ்ந்து, அவனை அவர்களுடைய பட்டணத்திலிருந்து துரத்தப் பண்ணினர். அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு ஆரோன் என்றழைக்கப்பட்ட பட்டணத்திற்கு நேராய் பிரயாணம் பண்ணினான்.

14 அந்தப்படியே, அவன் பிரயாணம் பண்ணுகையில் அம்மோனிகா பட்டணத்தாரின் துன்மார்க்கத்தினிமித்தம், மிகுந்த வருத்தத்தினாலும், ஆத்தும வியாகுலத்தினாலும் போராடி துக்கத்தாலே பாரப்பட்டு அமிழ்ந்து போனான். அந்தப்படியே, ஆல்மா துக்கத்தினாலே பாரப்பட்டு அமிழ்ந்து போகையில், இதோ கர்த்தருடைய தூதன் ஒருவன் அவனுக்குத் தரிசனமாகி:

15 ஆல்மாவே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; ஆதலால், உன் தலையை உயர்த்தி, மகிழ்ச்சிகொள்; நீ களிகூர்ந்திருக்க வேண்டிய காரணமுண்டு. தேவனிடத்திலிருந்து நீ முதற்செய்தி பெற்ற சமயம் முதற்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதில் உண்மையுள்ளவனாய் இருக்கிறாய். இதோ, நானே அதை உனக்குக் கொடுத்தேன்.

16 இதோ, நீ அம்மோனிகா பட்டணத்திற்குத் திரும்பிப்போய் அந்தப் பட்டணத்திலுள்ள ஜனங்களுக்கு மறுபடியும் பிரசங்கிக்கவேண்டும் என்று உனக்குக் கட்டளையிடவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்; ஆம், அவர்களிடத்திலே பிரசங்கி, அவர்கள் மனந்திரும்பாவிடில் தேவனாகிய கர்த்தர் அவர்களை அதம்பண்ணுவார், என்று அவர்களுக்குச் சொல்லுவாயாக.

17 இதோ, உன் ஜனத்தினுடைய சுதந்தரத்தை அவர்கள் அழித்துப்போட இச்சமயத்தில் ஆலோசித்து வருகிறார்கள். (ஏனெனில் கர்த்தர் அப்படிச் சொல்லுகிறார்) அது கர்த்தர் தமது ஜனத்திற்கு கொடுத்திருக்கிற கட்டளைகளுக்கும், நியாயத்தீர்ப்புகளுக்கும், கட்டளைகளுக்கும் விரோதமானதாகும் என்றான்.

18 இப்பொழுது, அந்தப்படியே, ஆல்மா கர்த்தருடைய தூதனிடத்திலிருந்து தன் செய்தியைப் பெற்றுக்கொண்ட பின்பு, அவன் அம்மோனிகா தேசத்திற்குத் துரிதமாய் திரும்பிப் போனான். அவன் பட்டணத்தினுள் வேறுவழியாக, அம்மோனிகா பட்டணத்திற்கு தெற்கேயுள்ள வழியாய் பிரவேசித்தான்.

19 அவன் பட்டணத்தினுள் பிரவேசித்தபோது, பசித்தவனாய், ஒரு மனுஷனை நோக்கி: தேவனுடைய தாழ்மையான ஊழியக்காரனாகிய அடியேனுக்குப் புசிக்க ஏதாகிலும் கொடுப்பாயா? என்று ஒரு மனுஷனிடம் சொன்னான்.

20 அதற்கு அந்த மனுஷன், நான் ஒரு நேபியன். தரிசனத்திலே, நீ ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று தூதன் எனக்குச் சொன்ன மனுஷன் நீர்தான். நீரே தேவனுடைய பரிசுத்த தீர்க்கதரிசி, என்று அறிவேன். ஆகையால் என்னோடுகூட என் வீட்டுக்கு வாரும். என் ஆகாரத்தை உமக்குப் பகிர்ந்தளிப்பேன். நீர் எனக்கும் என் வீட்டுக்கும் ஆசீர்வாதமானவராய் இருப்பீர், என்று அறிந்திருக்கிறேன், என்றான்.

21 அந்தப்படியே, அந்த மனுஷன் அவனை தன் வீட்டுக்குள் ஏற்றுக்கொண்டான்; அந்த மனுஷன் அமுலேக் என்று அழைக்கப்பட்டான்; அவன் அப்பத்தையும் இறைச்சியையும் கொண்டுவந்து ஆல்மாவிற்கு அளித்தான்.

22 அந்தப்படியே, ஆல்மா அப்பத்தை புசித்து நிரப்பப்பட்டான்; அவன் அமுலேக்கையும் அவனுடைய வீட்டாரையும் ஆசீர்வதித்தான். அவன் தேவனுக்கு நன்றி தெரிவித்தான்.

23 அவன் புசித்து, நிரப்பப்பட்ட பின்பு, அமுலேக்கை நோக்கி: தேசமெங்கிலுமுள்ள தேவ சபைக்கு, பிரதான ஆசாரியனாகிய ஆல்மா என்பவன் நானே.

24 இதோ, நான் தேவ வசனத்தை இந்த சகல ஜனங்களுக்கும் வெளிப்படுத்தல் மற்றும் தீர்க்கதரிசன ஆவியோடு பிரசங்கிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறேன்; நான் இந்த தேசத்திலிருந்தபோது அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளாமல் துரத்தினார்கள். நான் இத்தேசத்தை பின்னிட்டு என்றென்றுமாய் முகம் பாராமலிருக்க எண்ணினேன்.

25 இதோ, நான் மறுபடியும் திரும்பி, இந்த ஜனத்திற்கு மீண்டும் தீர்க்கதரிசனமுரைத்து, அவர்கள் அக்கிரமங்களைக் குறித்து அவர்களுக்கு விரோதமாய் சாட்சிகொடுக்க கட்டளையிடப்பட்டுள்ளேன்.

26 இப்பொழுதும் அமுலேக்கே, நீ என்னை போஷித்து, என்னை ஏற்றுக்கொண்டபடியினாலே நீ ஆசீர்வதிக்கப்படுவாய். ஏனெனில் நான் அநேக நாட்கள் உபவாசமிருந்ததால், பசியாயிருந்தேன்.

27 பின்னும் ஆல்மா ஜனங்களுக்கு உபதேசிக்கச் செல்லும் முன்பு, அநேக நாட்கள் அமுலேக்குடன் தங்கியிருந்தான்.

28 அந்தப்படியே, ஜனங்கள் அதிகமாய் அக்கிரமங்களைச் செய்வதில் பலப்பட்டார்கள்.

29 பின்னும் வார்த்தை ஆல்மாவுக்கு உண்டாகி: போ; என் தாசனாகிய அமுலேக்கிடம் போ, இந்த ஜனங்களுக்குள்ளே போய், தீர்க்கதரிசனமாய், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் மனந்திரும்புங்கள், நீங்கள் மனந்திரும்பாவிடில், நான் இந்த ஜனத்தை எனது உக்கிரத்தில் விசாரித்து, என் உக்கிரக கோபத்தை திரும்பவொட்டேன், என்று கர்த்தர் சொல்லுகிறாரென்று, சொல்லிற்று.

30 ஆல்மாவும் அமுலேக்கும் ஜனங்களுக்குள்ளே தேவ வசனத்தை அறிவிக்க போனார்கள்; அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள்.

31 அவர்கள் காவற்கிடங்கில் அடைத்து வைக்கப்படவோ, எந்த மனுஷனும் அவர்களைக் கொலை செய்யவோ கூடாதளவிற்கு, அவர்களுக்கு வல்லமை கொடுக்கப்பட்டது; இருப்பினும் அவர்கள் கட்டுக்களால் கட்டப்பட்டு, சிறைகளிலே தள்ளப்படும்வரை தங்கள் வல்லமையைப் பிரயோகிக்கவில்லை. இப்போதும் கர்த்தர் தம் வல்லமையை அவர்களில் வெளிப்படுத்தும்படிக்கே இப்படி நடந்தது.

32 அந்தப்படியே, அவர்கள் போய் தாங்களுக்குக் கர்த்தர் கொடுத்த ஆவி மற்றும் வல்லமையின்படியே ஜனங்களுக்கு தீர்க்கதரிசனமுரைத்து, பிரசங்கித்து வந்தார்கள்.