வேதங்கள்
ஆல்மா 51


அதிகாரம் 51

இராஜமனுஷர் சட்டத்தை மாற்றிப்போட்டு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வகைதேடுதல் – பகோரனும் சுதந்திர மனுஷரும் ஜனங்களால் ஏகமனதாய் ஆதரிக்கப்படுதல் – ராஜமனுஷர் தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்ளவேண்டும், இல்லாவிடில் மரணத்திற்குள்ளாக்கப்படுவார்கள், என்று மரோனி எச்சரித்தல் – அமலேக்கியாவும், லாமானியரும் அரண்கள் அமைக்கப்பட்ட அநேக பட்டணங்களைக் கைப்பற்றுதல் – லாமானியப் படையெடுப்பை தியான்கும் திரும்பிப் போகப்பண்ணி அமலேக்கியாவை அவன் கூடாரத்தில் கொன்றுபோடுதல். ஏறக்குறைய கி.மு. 67–66.

1 இப்பொழுதும், அந்தப்படியே, நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் இருபத்தைந்தாம் வருஷ ஆளுகையின் துவக்கத்திலே, இவர்கள் லேகியின் ஜனத்திற்கும், மோரியாந்தனின் ஜனத்திற்கும் இடையே, அவர்களுடைய தேசங்களைக் குறித்த சமாதானத்தை நிலைவரப்பண்ணி, இருபத்தைந்தாவது வருஷத்தை சமாதானத்தில் துவங்கினார்கள்.

2 இருப்பினும், அவர்கள் தேசத்தில் முழு சமாதானத்தை அதிக நாள் நிலைக்கச் செய்யவில்லை. ஏனெனில் பிரதான நியாயாதிபதியாகிய பகோரனைக் குறித்து ஜனங்களுக்குள்ளே ஒரு பிணக்கு உண்டாகத் துவங்கியது; ஏனெனில் இதோ, சட்டத்தின் சில குறிப்பிட்ட பிரிவுகள் மாற்றப்படவேண்டுமென்று ஜனத்தின் ஒரு சாரார் வாஞ்சித்தார்கள்.

3 ஆனால் இதோ, பகோரன் சட்டத்தை மாற்றவோ, மாற்றப்பட அனுமதிக்கவோ இல்லை; ஆதலால் சட்டத்தை மாற்றுவதைக் குறித்த தங்கள் விண்ணப்பத்தோடு தங்கள் குரல்களை அனுப்பியவர்களுக்கு அவன் செவிகொடுக்கவில்லை.

4 ஆதலால், சட்டம் மாற்றப்படவேண்டுமென வாஞ்சித்தவர்கள் அவன் மேல் கோபம்கொண்டு, இனிமேலும் அவன் தேசத்தின் மீது பிரதான நியாயாதிபதியாக இருக்கக்கூடாது, என்று விரும்பினார்கள்; ஆதலால் இந்தக் காரியத்தைக் குறித்து அங்கே சூடான தர்க்கம் உண்டானது, ஆனால் இரத்தம் சிந்தும் அளவிற்கல்ல.

5 அந்தப்படியே, பகோரன் நியாயாசனத்திலிருந்து கீழிறக்கப்படவேண்டுமென்று விரும்பினோர், ராஜமனுஷர் என்று அழைக்கப்பட்டனர். ஏனெனில் அவர்கள் சுதந்திர அரசை கவிழ்க்கவும், தேசத்தின்மேல் ஓர் ராஜாவை நியமிக்கத்தக்கதாயும், சட்டம் மாற்றப்படவேண்டுமென வாஞ்சித்தார்கள்.

6 பகோரன் தேசத்தின்மேல் பிரதான நியாயாதிபதியாய் நிலைத்திருக்க வேண்டுமென விரும்பினோர், தங்கள் மேல் சுதந்திர மனுஷர் என்ற நாமத்தைத் தரித்துக் கொண்டார்கள்; இப்படியாக அவர்களுக்குள்ளே பிரிவினை இருந்தது. ஏனெனில் சுதந்திர மனுஷர் தங்கள் உரிமைகளையும் தங்கள் மார்க்கத்தின் சிலாக்கியங்களையும், ஓர் சுதந்திர அரசைக்கொண்டு காக்கும்படி, ஆணையிட்டார்கள் அல்லது உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.

7 அந்தப்படியே, அவர்களின் பிணக்குக்குரிய இக்காரியம் ஜனங்களின் விருப்பத்தினால் அமைதலாக்கப்பட்டது. அந்தப்படியே, ஜனங்களின் வாக்கு சுதந்திர மனுஷரை ஆதரித்து வந்தது. பகோரன் நியாயாசனத்தை தக்க வைத்துக்கொண்டான். இது பகோரனின் சகோதரர்களுக்குள்ளும், சுதந்திர நோக்கத்தை எதிர்க்கத் துணியாமல், அதைக் காக்க கட்டாயப்படுத்தப்பட்ட, ராஜ மனுஷரை அமைதி பண்ணின, சுதந்திர ஜனங்கள் அநேகருக்குள்ளும் மிகுந்த களிகூருதலை ஏற்படுத்தியது.

8 இப்பொழுது ராஜாக்கள் வேண்டுமென ஆதரித்தோர் உயர் பிறப்பினராயிருந்தார்கள், அவர்கள் ராஜாக்களாகும்படி வகை தேடினார்கள்; அவர்கள் ஜனங்களின்மேல் அதிகாரமும் வல்லமையும் தேடினவர்களால் ஆதரிக்கப்பட்டார்கள்.

9 ஆனால் இதோ, நேபியின் ஜனங்களுக்குள்ளே இப்படிப்பட்ட பிணக்குகள் இருக்கும்படியாக, இது இக்கட்டான நேரமாயிருந்தது. ஏனெனில் இதோ, அமலேக்கியா, லாமானிய ஜனங்களின் உள்ளங்களை நேபியரின் ஜனங்களுக்கு விரோதமாய் திரும்பவும் ஏவிவிட்டான். அவன் தன் தேசத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் போர்ச் சேவகர்களை ஏகமாய்க்கூட்டி, அவர்களுக்கு ஆயுதந்தரிப்பித்து, எல்லாக் கருத்தோடும் யுத்தத்திற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்; ஏனெனில் அவன் மரோனியின் இரத்தத்தைக் குடிக்க சத்தியம் செய்திருந்தான்.

10 ஆனால் இதோ, அவன் செய்துகொண்ட அவனுடைய வாக்குத்தத்தம் மூடத்தனமானது, என்று பார்க்கிறோம்; இருப்பினும் அவன் தன்னையும் தன் சேனைகளையும் நேபியர்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்கு வரும்படி ஆயத்தப்படுத்தினான்.

11 இப்பொழுது, நேபியர்களின் கரத்தினால் அநேக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதினிமித்தம் அவனுடைய சேனைகள் இதுவரை இருந்து வந்ததைப்போல பெரியதாயிருக்கவில்லை; ஆனாலும் தங்களுடைய அதிக இழப்பினைப் பொருட்படுத்தாமல், சாரகெம்லா தேசத்திற்கு வருவதற்கு பயப்படாத அளவில், ஒரு ஆச்சரியமான பெரிய சேனையை அமலேக்கியா ஏகமாய் திரட்டியிருந்தான்.

12 ஆம், அமலேக்கியாவே லாமானியருக்கு தலைமையேற்று வந்தான். அது நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபத்தைந்தாம் வருஷமாயிருந்தது. அதே சமயத்தில்தானே பிரதான நியாயாதிபதியாகிய பகோரனைக் குறித்த பிணக்குக்குரிய விவகாரங்களை அவர்கள் அமைதலாக்கத் துவங்கியிருந்தார்கள்.

13 அந்தப்படியே, ராஜ மனுஷர் என்று அழைக்கப்பட்ட மனுஷர், தங்களுக்கு விரோதமாய் லாமானியர் யுத்தம்பண்ண வந்துகொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது, தங்கள் இருதயங்களிலே பூரிப்படைந்தார்கள்; அவர்கள் ஆயுதங்களைத் தாங்க மறுத்தார்கள், ஏனெனில் அவர்கள் பிரதான நியாயாதிபதியோடும் சுதந்திர ஜனங்களோடும் மிகுந்த குரோதம் கொண்டிருந்ததால், அவர்கள் தங்கள் தேசத்தை தற்காத்துக் கொள்ளத்தக்கதாக ஆயுதங்களை எடுக்க மாட்டார்கள்.

14 அந்தப்படியே, இதையும், தேசத்தின் எல்லைகளுக்குள்ளே லாமானியர் வந்து கொண்டிருந்ததையும், மரோனி கண்டபோது, காக்கவேண்டுமென்று மிகவும் கருத்தாய், தான் பிரயாசப்பட்ட ஜனங்களினுடைய பிடிவாதத்தினிமித்தம், அவன் அதிகம் கோபம் கொண்டான்; ஆம், அவன் மிகவும் கோபம் கொண்டான்; அவன் ஆத்துமா அவர்களுக்கு விரோதமாய் கோபத்தினால் நிறைந்தது.

15 அந்தப்படியே, அவன் ஜனத்தின் ஏகமனதோடு ஒரு மனுவை அத்தேசத்தின் அதிபதிக்கு அனுப்பி, அதை அவன் வாசிக்கவும், அந்த கலகக்காரரை தங்கள் தேசத்தைத் தற்காக்கும்படி கட்டாயப்படுத்தவோ, அல்லது அவர்கள் மரணத்திற்குள்ளாக்கப்படவோ, தனக்கு (மரோனி) அதிகாரம் வழங்கவும் வாஞ்சித்தான்.

16 ஏனெனில் ஜனங்களுக்குள்ளிருந்த இப்படிப்பட்ட பிணக்குகளுக்கும், மறுப்புகளுக்கும், ஓர் முடிவு கட்டுவதே அவனுடைய முதல் வேலையாயிருந்தது; ஏனெனில் இதோ, இது அவர்களின் சகல அழிவுகளுக்கும், இதுகாலம்வரை காரணமாயிருந்தது. அந்தப்படியே, அது ஜனங்களின் விருப்பத்திற்கேற்ப வழங்கப்பட்டது.

17 அந்தப்படியே, தன் சேனை அந்த ராஜமனுஷருக்கு விரோதமாய்ப் போய், அவர்களின் பெருமையையும், அவர்களின் கர்வத்தையும் அழித்து, அவர்களை பூமிக்கு சமானமாய்ப்பண்ண வேண்டும், அல்லது அவர்கள் ஆயுதங்களை எடுத்து, சுதந்திர நோக்கத்தை ஆதரிக்க வேண்டுமென்று, மரோனி கட்டளையிட்டான்.

18 அந்தப்படியே, சேனைகள் அவர்களுக்கு விரோதமாய்ப் போயின; அவர்களோ மரோனியின் மனுஷரை எதிர்த்து சண்டைபோட யுத்தக் கருவிகளை உயர்த்தியபோது, அவர்கள் வெட்டப்பட்டு பூமிக்கு சமானமாக்கப்படுமளவுக்கு அவர்களுடைய பெருமையையும் கனத்தையும் அழித்தார்கள்.

19 அந்தப்படியே, அந்தக் கலகக்காரரில் பட்டயத்தால் வெட்டுப்பட்டவர்கள் நாலாயிரம் பேராயிருந்தார்கள்; சண்டையில் கொல்லப்படாத அவர்களின் தலைவர்கள் பிடிக்கப்பட்டு, இத்தருணத்தில் அவர்களை நியாயம் விசாரிக்க நேரம் இல்லாததால், சிறையினுள் போடப்பட்டார்கள்.

20 அந்தக் கலகக்காரரில் மீதியானோர், பட்டயத்தினால் பூமியில் வீழ்த்தப்பட்டுப் போவதைப் பார்க்கிலும், சுதந்திரக் கொடிக்கு பணிந்தார்கள். சுதந்திரக் கொடியைத் தங்களின் கோபுரங்கள் மேலும், தங்கள் பட்டணங்களிலும் ஏற்றவும், தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்கென்று ஆயுதங்களை எடுக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

21 இப்படியாக மரோனி அங்கே ராஜமனுஷர் என்ற நாமத்தினாலே அறியப்பட்ட ஒருவனும் இல்லாதபடி, அந்த ராஜமனுஷருக்கு ஒரு முடிவு கட்டினான்; இவ்வண்ணம் கர்வத்திற்குரிய இரத்தத்தைப் பெற்றிருக்கிறோம், என்று அறிக்கையிட்ட ஜனங்களின் இறுமாப்புக்கும், பெருமைக்கும், அவன் ஒரு முடிவு கட்டினான்; ஆனால், அவர்கள் தங்கள் சகோதரரைப்போலத் தங்களைத் தாழ்த்தும்படிக்கும், அடிமைத்தனத்திலிருந்து தங்களுடைய சுதந்திரத்திற்காக கடுமையாய்ப் போராடும்படிக்கும் கொண்டுவரப்பட்டார்கள்.

22 இதோ, அந்தப்படியே, மரோனி இப்படியாகத் தன் சொந்த ஜனங்களுக்குள்ளே யுத்தங்களையும் பிணக்குகளையும் உடைத்து, அவர்களை சமாதானத்திற்கும், நாகரீகத்திற்கும் உட்படுத்தி, லாமானியருக்கு விரோதமாய் யுத்தத்திற்கான ஆயத்த ஒழுங்குகளைச் செய்து கொண்டிருக்கும்போது, இதோ, கடற்கரையோரமாய் இருந்த மரோனி தேசத்திற்குள்ளே லாமானியர் வந்திருந்தார்கள்.

23 அந்தப்படியே, மரோனி பட்டணத்தில் போதுமான அளவு நேபியரின் பெலன் இல்லாதிருந்தது. ஆதலால் அமலேக்கியா அவர்களைத் துரத்தி அநேகரை சங்கரித்தான். அந்தப்படியே, அமலேக்கியா பட்டணத்தை வசப்படுத்தி, ஆம், அவர்களுடைய சகல அரண்களையும் வசப்படுத்திக் கொண்டான்.

24 மரோனி பட்டணத்தை விட்டோடினவர்கள் நேபிகா பட்டணத்திற்கு வந்தார்கள்; லேகி பட்டணத்து ஜனங்களும் ஏகமாய்க் கூடி ஆயத்தங்களை மேற்கொண்டு, யுத்தத்திற்காக லாமானியரை எதிர்கொள்ளத் தயாராயிருந்தார்கள்.

25 ஆனால், அந்தப்படியே, லாமானியரை நேபிகா பட்டணத்திற்கு விரோதமாய் யுத்தத்திற்குப் போக அமலேக்கியா அனுமதியாமல், ஒவ்வொரு நகரத்தையும் பராமரித்து, காத்துக்கொண்டிருக்க மனுஷரை நிறுத்தி, கடற்கரையோரமாய் அவர்களை விட்டுவைத்திருந்தான்.

26 இப்படியாக அவன் போய், கடற்கரையோரமாய் அமைந்த கிழக்கு எல்லைகளிலிருந்த நேபிகா பட்டணம், லேகி பட்டணம், மோரியாந்தன் பட்டணம், ஓம்னர் பட்டணம், கித் பட்டணம், மூலெக் பட்டணங்களாகிய, அநேக பட்டணங்களை வசப்படுத்திக் கொண்டான்.

27 இப்படியாக அமலேக்கியாவின் தந்திரத்தினாலே, லாமானியர் தங்கள் எண்ணிறைந்த சேனைகளினால் அநேக பட்டணங்களைக் கைப்பற்றினார்கள். அவைகள் யாவும் மரோனியின் அரணமைக்கின்ற விதத்தினாலே பெலமாய்க் கட்டப்பட்டிருந்தன; அவைகள் யாவும் லாமானியருக்குக் கொத்தளங்களாய் திகழ்ந்தன.

28 அந்தப்படியே, அவர்கள் உதாரத்துவஸ்தலத்தின் எல்லைகளுக்கு அணிவகுத்துப் போய், தங்களுக்கு முன்பாக நேபியர்களைத் துரத்தி, அநேகரைக் கொன்றுபோட்டார்கள்.

29 ஆனால், அந்தப்படியே, மோரியாந்தனைக் கொன்றவனும், அவனுடைய பயணத்தில் அவன் ஜனத்தை தடுத்து நிறுத்தியவனுமாகிய, தியான்குமினால் அவர்கள் எதிர்கொள்ளப்பட்டார்கள்.

30 அந்தப்படியே, தன் எண்ணிறைந்த சேனைகளோடு உதாரத்துவஸ்தலத்தையும், வடக்கேயுள்ள தேசத்தையும், வசப்படுத்த அணிவகுத்துப் போய்க்கொண்டிருக்கும்போது, அமலேக்கியாவையும் அவன் தடுத்து நிறுத்தினான்.

31 இதோ, தியான்குமினாலும், அவனுடைய மனுஷராலும் திரும்பியடிக்கப்பட்டதால் அவன் மனமுறிந்தான், ஏனெனில் அவர்கள் பலத்த போர்வீரராயிருந்தார்கள்; தியான்குமின் சகல மனுஷரும், லாமானியர் மேல் ஆதிக்கம் செலுத்துமளவிற்கு அவர்கள் லாமானியரை தங்கள் பெலத்திலும், தங்கள் யுத்தத் திறமைகளிலும் மிஞ்சினார்கள்.

32 அந்தப்படியே, அவர்கள் இருள் சாயும்வரை, அவர்களைக் கொன்றுபோடுமளவும் தாக்கினார்கள். அந்தப்படியே, தியான்குமும், அவன் மனுஷரும், உதாரத்துவஸ்தலத்தின் எல்லைகளில் தங்கள் கூடாரங்களைப் போட்டார்கள். அமலேக்கியாவோ கடற்கரையோரங்களில் அமைந்த மணற்பரப்பான எல்லைகளில் தனது கூடாரங்களைப் போட்டான். இவ்விதமாக அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள்.

33 அந்தப்படியே, இரவு வந்தபோது தியான்குமும் அவன் வேலைக்காரனும் திருட்டுத்தனமாய், இரவில் வெளியே வந்து, அமலேக்கியாவின் பாளையத்திற்குள் போனார்கள்; இதோ உழைப்பினாலும், பகலின் வெப்பத்தாலும், ஏற்பட்ட மிகுந்த களைப்பினிமித்தம் நித்திரை மயக்கம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.

34 அந்தப்படியே, தியான்கும் தனியாய் ராஜாவின் கூடாரத்திற்குள் நுழைந்து அவன் இருதயத்தை ஒரு ஈட்டியால் குத்தினான்; ராஜா வெகுவிரைவாய் மரணத்திற்குள்ளானபடியால், அவன் தன்னுடைய வேலையாட்களை எழுப்பிவிடவில்லை.

35 அவன் தனியே தன்னுடைய சொந்த பாளையத்திற்கு மறுபடியும் திரும்பினான். இதோ, அவனுடைய மனுஷர் உறங்கிக் கொண்டிருந்தார்கள், அவன் அவர்களை எழுப்பி, தான் செய்த எல்லா காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னான்.

36 லாமானியர் எழுந்து, தங்கள் மீது வராதபடி, தன் சேனைகள் தயாராயிருக்கும்படி, அவன் கட்டளையிட்டான்.

37 இப்படியாக நேபியின் ஜனங்களின் மீதான நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபத்தைந்தாம் வருஷமும் முடிவுறுகிறது; அப்படியே அமலேக்கியாவின் நாட்களும் முடிவுறுகிறது.