வேதங்கள்
ஆல்மா 44


அதிகாரம் 44

சமாதான உடன்படிக்கையைச் செய்யவேண்டும். இல்லையேல் அழிக்கப்படுவார்களென்று மரோனி லாமானியருக்கு கட்டளையிடுதல் – சேராகெம்னா இக்கோரிக்கையை நிராகரித்தல், யுத்தம் தொடர்தல் – மரோனியின் சேனைகள் லாமானியரை வீழ்த்துதல். ஏறக்குறைய. கி.மு. 74–73.

1 அந்தப்படியே, அவர்கள் நின்று அவர்களிடமிருந்து ஒரு அடி பின்வாங்கினார்கள், மரோனி சேராகெம்னாவை நோக்கி: இதோ, சேராகெம்னாவே, நாங்கள் இரத்த பிரியர்களான மனுஷராயிருக்க வாஞ்சிப்பதில்லை. எங்கள் கைகளில் நீங்கள் அகப்பட்டிருப்பதை நீ அறிவாய். இருப்பினும் உங்களைக் கொன்றுபோட எங்களுக்கு மனதில்லை.

2 இதோ, அதிகாரத்திற்காகவோ, உங்கள் இரத்தத்தை சிந்தவேண்டுமென்பதற்காகவோ உங்களுக்கு விரோதமாய் யுத்தம் பண்ண வரவில்லை. உங்களில் ஒருவரையும் அடிமைத்தனத்தின் நுகத்துக்கு கொண்டுவரவேண்டுமென்றும் நாங்கள் வாஞ்சிப்பதில்லை. ஆனால் நீங்களோ இம்முகாந்திரத்தினிமித்தமே எங்களுக்கு விரோதமாய் வந்திருக்கிறீர்கள்; ஆம், எங்கள் மார்க்கத்தினிமித்தம் எங்கள்மேல் கோபம் கொண்டிருக்கிறீர்கள்.

3 ஆனால் இப்பொழுது, கர்த்தர் எங்களோடுகூட இருக்கிறதை நீங்கள் காண்கிறீர்கள். அவர் உங்களை எங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றும் பார்க்கிறீர்கள். இது எங்கள் மார்க்கத்தினிமித்தமும், கிறிஸ்துவிலுள்ள எங்கள் விசுவாசத்தினிமித்தமும் இது எங்களுக்கு சம்பவித்தது என்று, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இப்பொழுதும் எங்களின் இந்த விசுவாசத்தை நீங்கள் அழிக்க முடியாது என்றும் காண்கிறீர்கள்.

4 இப்பொழுதும் இதுவே தேவன் மேலிருக்கும் மெய்யான விசுவாசம் என்று நீங்கள் காண்கிறீர்கள்; ஆம், நாங்கள் அவருக்கும் எங்களுடைய விசுவாசத்திற்கும், எங்களுடைய மார்க்கத்திற்கும் உண்மையுள்ளவர்களாய் இருக்கும்வரைக்கும் தேவன் எங்களை ஆதரித்து, பாதுகாத்து உயிரோடு வைப்பார். நாங்கள் மீறுதலினுள் விழுந்து, எங்களுடைய விசுவாசத்தை மறுதலித்தாலொழிய கர்த்தர் நாங்கள் அழிக்கப்பட விடார்.

5 இப்பொழுதும் சேராகெம்னாவே, எங்கள் விசுவாசத்தினிமித்தமும், எங்கள் மார்க்கத்தினிமித்தமும், எங்கள் வழிபாட்டின் சடங்குகளினிமித்தமும், எங்கள் சபையினிமித்தமும், எங்கள் மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிற அந்த பரிசுத்த ஆதரிப்பினிமித்தமும், எங்கள் தேசங்களோடும், எங்கள் நாட்டோடும், எங்களை இணையப்பண்ணுகிற அந்த சுதந்திரத்தினிமித்தமும், ஆம், எங்கள் சகல மகிழ்ச்சிக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிற பரிசுத்த தேவ வார்த்தையை நாங்கள் பாதுகாப்பதனிமித்தமும், எங்களுக்கு மிகவும் பிரியமான எல்லாவற்றினாலுமே, உங்கள்மேல் நாங்கள் அதிகாரத்தைப் பெற, எங்கள் கைகளைப் பெலப்படுத்திய, அந்த சர்வ வல்ல தேவனுடைய நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன்

6 ஆம், இது மாத்திரமல்ல, ஜீவன் மேல் நீ கொண்டிருக்கும் சகல பற்றினிமித்தம், எங்களிடம் உன் யுத்த ஆயுதங்களை ஒப்படைத்து விடவேண்டுமென உனக்குக் கட்டளையிடுகிறேன். நீ உன் வழியே போய், எங்களுக்கு விரோதமாய் மறுபடியும் யுத்தத்திற்கு வராதிருப்பாயானால், நாங்கள் உன் இரத்தத்தை நாடாமல், உன் ஜீவனைத் தப்புவிப்போம்.

7 இப்பொழுதும் இதோ, நீ எங்கள் கைகளில் அகப்பட்டிருக்கிறாய். நீ இதைச் செய்யவில்லையெனில் என் மனுஷர் உங்கள் மேல் விழுந்து நீங்கள் நிர்மூலமாகும்படி உங்கள் சரீரங்களில் மரணக் காயங்களை ஏற்படுத்த கட்டளையிடுவேன். பிறகு இந்த ஜனத்தின் மேல் யார் வல்லமை கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்; ஆம், பின்பு யார் அடிமைத்தனத்திற்குள்ளாக கொண்டுவரப்படுவார்கள் என்று காண்போம்.

8 இப்பொழுதும், அந்தப்படியே, சேராகெம்னா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, அவன் முன் வந்து, தன் பட்டயத்தையும், தன் உடைவாளையும், தன் வில்லையும் மரோனியின் கைகளில் ஒப்படைத்து, அவனை நோக்கி: இதோ, எங்கள் யுத்த ஆயுதங்கள்; நாங்கள் அவைகளை உங்களிடத்தில் ஒப்படைக்கிறோம். ஆனால் உங்களிடத்தில் நாங்கள் ஒரு வாக்குறுதி செய்து கொள்வதில்லை, ஏனெனில் நாங்களும், எங்கள் பிள்ளைகளும் அதை முறித்துப்போடுவோம் என்று அறிந்திருக்கிறோம்; ஆதலால் எங்கள் யுத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, நாங்கள் வனாந்தரத்தினுள் போக எங்களை அனுமதியும்; இல்லாவிடில் நாங்கள் பட்டயங்களை திரும்பவும் எடுத்துக்கொண்டு அழிவோம், அல்லது ஜெயிப்போம்.

9 இதோ, நாங்கள் உங்கள் விசுவாசத்தைச் சார்ந்தவர்களல்ல; தேவனே எங்களை உங்கள் கைகளுக்குள் ஒப்புக்கொடுத்தார், என்று நாங்கள் விசுவாசிப்பதில்லை; ஆனால் உங்களுடைய தந்திரமே எங்கள் பட்டயத்திலிருந்து உங்களைக் காப்பாற்றியது, என்று நம்புகிறோம். இதோ, உங்களுடைய மார்புக்கவசங்களும், உங்களுடைய கேடயங்களுமே உங்களைக் காப்பாற்றின என்றான்.

10 இப்பொழுது சேராகெம்னா இவ்வார்த்தைகளைப் பேசி முடித்த பின்பு, மரோனி தான் வாங்கியிருந்த பட்டயத்தையும், யுத்த ஆயுதங்களையும் சேராகெம்னாவிடம் திரும்பக் கொடுத்து, இதோ, நாம் இந்தப் பிரச்சினையை முடித்துக் கொள்வோம்.

11 இப்பொழுது நான் பேசின வார்த்தைகளை, மறுபடியும் என்னால் திரும்பப் பெறமுடியாது. ஆதலால் நீங்கள் மறுபடியும் எங்களுக்கு விரோதமாக யுத்தத்திற்கு வருவதில்லை என்ற வாக்குறுதியோடு கூட நீங்கள் புறப்படவில்லையெனில் கர்த்தர் ஜீவிக்குமளவும் நீங்கள் புறப்பட்டுப்போவதில்லை. இப்பொழுது நீங்கள் எங்களுடைய கைகளில் அகப்பட்டிருப்பதினாலே, நாங்கள் உங்கள் இரத்தத்தை பூமியில் சிந்தப்பண்ணுவோம், அல்லது நான் முன் வைத்த கட்டுப்பாடுகளுக்கு நீங்கள் கீழ்ப்பட்டிருப்பீர்கள், என்றான்.

12 இப்பொழுதும் மரோனி இவ்வார்த்தைகளைப் பேசினபோது சேராகெம்னா தன் பட்டயத்தை எடுத்துக் கொண்டான்; அவன் மரோனியின்மீது கோபம்கொண்டு, மரோனியைக் கொன்றுபோடும்படி முன்னே ஓடினான். ஆனால் அவன் தன் பட்டயத்தை உயர்த்தியபோதோ, இதோ, மரோனியின் போர்ச் சேவகரில் ஒருவன் அதைத் தரை மட்டுமாய் அடித்தான். அதன் கைப்பிடி உடைந்து போயிற்று. அவன் சேராகெம்னாவின் உச்சந்தலையை தரையில் விழப்பண்ணும்படியாய் அவனை வெட்டினான். சேராகெம்னா அவர்களிடமிருந்து பின்வாங்கி, தன் போர்ச் சேவர்களுக்குள்ளே ஓடினான்.

13 அந்தப்படியே, அங்கே நின்று சேராகெம்னாவின் உச்சந்தலையை வெட்டிப்போட்ட போர்ச்சேவகன், தரையிலிருந்து முடியைப்பிடித்து அந்த உச்சந்தலையை எடுத்து, அதைத் தன் பட்டயத்தின் நுனியின் மேல் வைத்து, அதை அவர்களுக்கு முன்னே நீட்டி உரத்த சத்தமாய்:

14 நீங்கள் உங்கள் யுத்த ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, சமாதான உடன்படிக்கையோடு புறப்படாவிடில், உங்கள் தலைவனுடைய உச்சந்தலை பூமியில் விழுந்ததைப்போலவே, நீங்களும் பூமியில் விழுந்து போவீர்கள், என்றான்.

15 அங்கே அநேகர் இந்த வார்த்தைகளைக் கேட்டும் பட்டயத்தின்மேல் உச்சந்தலை இருப்பதைக் கண்டும் திகிலடைந்தார்கள்; அநேகர் வந்து மரோனியின் காலடியில் தங்கள் யுத்த ஆயுதங்களைப் போட்டு சமாதான உடன்படிக்கையினுள் பிரவேசித்தார்கள். உடன்படிக்கையினுள் பிரவேசித்த யாவரையும் வனாந்தரத்தினுள் புறப்பட்டுப்போகும்படி அனுமதித்தார்கள்.

16 இப்பொழுது, அந்தப்படியே, சேராகெம்னா மிகவும் கோபம்கொண்டு, தன் போர்ச்சேவகரில் மீதியானோரை கோபத்திற்குள்ளாகவும், நேபியருக்கு விரோதமாய் அதிக பெலத்தோடு சண்டை போடவும் தூண்டினான்.

17 இப்பொழுதும் மரோனி லாமானியரின் பிடிவாதத்தினால் கோபம்கொண்டான்; அதனால் அவன் தன் ஜனம் அவர்கள்மேல் விழுந்து அவர்களைக் கொல்ல வேண்டுமென, அவர்களுக்குக் கட்டளையிட்டான். அந்தப்படியே, அவர்கள் அவர்களைக் கொல்லத் துவங்கினார்கள்; ஆம், லாமானியர் தங்கள் பட்டயங்களினாலும், தங்களின் பெலத்தோடும் சண்டையிட்டார்கள்.

18 ஆனால் இதோ, நேபியரின் கருக்கான பட்டயங்கள் அவர்களுடைய நிர்வாண சருமங்களையும், வெற்றுத் தலைகளையும் பதம் பார்த்தன, ஆம், இதோ, அவர்கள் குத்தப்பட்டார்கள், மற்றும் வெட்டப்பட்டார்கள்; அவர்கள் நேபியரின் பட்டயங்களுக்கு முன்பாக மிகச் சீக்கிரமாய் விழுந்தார்கள்; மரோனியின் போர்ச்சேவகன் தீர்க்கதரிசனமுரைத்திருந்ததைப் போலவே அவர்கள் விழத் துவங்கினார்கள்.

19 இப்பொழுது தாங்கள் யாவரும் அழிக்கப்பட்டுப் போகவிருப்பதை சேராகெம்னா கண்டபோது, அவன் மரோனியை நோக்கி, அவர்கள் தங்களில் மீந்திருக்கிறவர்களை தப்புவித்தால், அவர்களுக்கு விரோதமாய் இனி மறுபடியும் யுத்தத்திற்கு வருவதில்லையென்று, தானும் தன்னுடைய ஜனமும் அவர்களோடு உடன்படிக்கை செய்வதாக வாக்குத்தத்தம் செய்து, உரக்க கூக்குரலிட்டான்.

20 அந்தப்படியே, மரோனி மரணக் கிரியை ஜனங்களுக்குள்ளே மறுபடியும் நின்றுபோகும்படிச் செய்தான். பின்பு அவன் லாமானியரிடமிருந்து யுத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டான்; அவனோடு அவர்கள் சமாதான உடன்படிக்கையினுள் பிரவேசித்த பின்பு, அவர்கள் வனாந்தரத்தினுள் புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

21 இப்பொழுது அவர்களின் மரித்தோரின் இலக்கம் மிகுதியாயிருந்தபடியால் இலக்கம் எண்ணப்படவில்லை; ஆம், நேபியரிலும், லாமானியரிலும் மரித்தோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாயிருந்தது.

22 அந்தப்படியே, அவர்கள் தங்கள் மரித்தோரை சீதோன் தண்ணீர்களிலே போட்டார்கள், அவர்கள் அப்படியே போய் சமுத்திரத்தின் ஆழங்களிலே புதையுண்டிருக்கிறார்கள்.

23 மரோனியின் அல்லது நேபியரின் சேனைகள் தங்களுடைய வீடுகளுக்கும் தங்களுடைய தேசங்களுக்கும் திரும்பி வந்தார்கள்.

24 இப்படியாக நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் பதினெட்டாம் வருஷ ஆளுகையும் முடிவுற்றது. நேபியின் தகடுகளின் மேல் எழுதப்பட்ட ஆல்மாவின் பதிவும் இப்படியாக முடிவுற்றது.