வேதங்கள்
ஆல்மா 16


அதிகாரம் 16

அம்மோனிகாவின் ஜனத்தை லாமானியர் அழித்துப்போடுதல் – நேபியரை சோரம் வழிநடத்தி, லாமானியர்களின் மேல் அவர்களை வெற்றி சிறக்கப்பண்ணுதல் – ஆல்மாவும் அமுலேக்கும் இன்னும் அநேகரும் வசனத்தைப் பிரசங்கித்தல் – கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு அவர் நேபியருக்கு தரிசனமாவார் என்று, அவர்கள் போதித்தல். ஏறக்குறைய கி.மு. 81–77.

1 அந்தப்படியே, நேபியின் ஜனங்கள்மீது, நியாயாதிபதிகளின் ஆளுகையின் பதினோறாம் வருஷத்தின், இரண்டாம் மாதம் ஐந்தாம் நாள் வரைக்கும், சாரகெம்லா தேசத்தில் சில வருஷங்களாய் யுத்தங்களும், பிணக்குகளுமில்லாமல் சமாதானம் நிலைபெற்றிருந்தது. அந்த பதினோறாம் வருஷத்தின் இரண்டாம் மாதத்தின் ஐந்தாம் நாளிலே தேசமெங்கிலும் யுத்த முழக்கம் கேட்கப்பட்டது.

2 ஏனெனில் இதோ, லாமானியரின் சேனைகள் வனாந்தரத்தின் பக்கமாய் தேசங்களின் எல்லைகளுக்குள் புகுந்தார்கள். அம்மோனிகா பட்டணத்தினுள் பிரவேசித்து, ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை அழித்துப்போடத் தொடங்கினார்கள்.

3 இப்பொழுதும், அந்தப்படியே, அவர்களை தேசத்தைவிட்டுத் துரத்த நேபியர்கள் போதுமானவர்களைக் கொண்ட சேனையைத் திரட்டுமுன், அவர்கள் அம்மோனிகா பட்டணத்தினுள்ள ஜனங்களையும் நோவா பட்டணத்தின் எல்லைகளிலுள்ள சிலரையும் நிர்மூலமாக்கி, மற்றும் பலரை வனாந்தரத்தினுள் சிறைபிடித்துச் சென்றார்கள்.

4 இப்பொழுது, அந்தப்படியே, வனாந்தரத்தினுள் சிறைபிடிக்கப்பட்டுப் போனோரை மீட்க நேபியர்கள் வாஞ்சித்திருந்தார்கள்.

5 ஆகவே நேபியர்களின் சேனைகளுக்கு சேனாதிபதியாய் நியமிக்கப்பட்டிருந்தவன், (அவனது பெயர் சோரம். லேகி, ஆகா என்ற இரண்டு குமாரர்கள் அவனுக்குண்டு) ஆல்மா சபையின் பிரதான ஆசாரியனென்றும், தீர்க்கதரிசன ஆவியை அவன் பெற்றிருந்தான் என்றும் சோரமும், அவனுடைய இரண்டு குமாரர்களும் அறிந்தவர்களாய், அவர்கள் அவனிடம்போய், லாமானியர்களால் சிறைபிடிக்கப்பட்டுப்போன, தங்கள் சகோதரரைத் தேடி, தாங்கள் வனாந்தரத்தினுள் போவது கர்த்தருடைய சித்தந்தானா, என்று அவனிடமிருந்து அறிந்துகொள்ள விரும்பினார்கள்.

6 அந்தப்படியே, இதைக்குறித்து ஆல்மா கர்த்தரிடத்தில் விசாரித்தான். பின்னும் ஆல்மா திரும்பிவந்து அவர்களை நோக்கி: இதோ லாமானியர் மேன்தி தேசத்தின் எல்லைகளுக்கு புறம்பே, தென் வனாந்தரத்திலுள்ள சீதோன் நதியை கடந்துபோவார்கள். இதோ, அவர்களை நீங்கள் அங்கே சீதோன் நதியின் கிழக்கே சந்திப்பீர்கள். அங்கே லாமானியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுப்போன உம்முடைய சகோதரரை கர்த்தர் உங்களிடத்தில் ஒப்படைப்பார், என்றான்.

7 அந்தப்படியே, சோரமும் அவனுடைய குமாரர்களும், சீதோன் நதியை தங்கள் சேனைகளுடனே கடந்து, மேன்தி பட்டணத்தின் எல்லைகளுக்கு அப்பால், சீதோன் நதியின் கிழக்கு திசையிலுள்ள தென் வனாந்தரத்தினுள் அணிவகுத்துச் சென்றனர்.

8 அவர்கள் லாமானியர்களின் சேனைமேல் விழுந்தார்கள், லாமானியர்கள் சிதறடிக்கப்பட்டு வனாந்தரத்தினுள் துரத்தப்பட்டார்கள்; லாமானியர்களால் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் சகோதரரை மீட்டார்கள். சிறைபிடிக்கப்பட்டுப்போன அவர்களில் யாதொருவனும் கொல்லப்படவில்லை. தங்களுடைய சொந்த தேசங்களை சுதந்தரிக்கும்படி தங்களுடைய சகோதரர்களால் கொண்டு வரப்பட்டார்கள்.

9 லாமானியர்கள் தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டும், அம்மோனிகா ஜனங்கள் அழிக்கப்பட்டும், நியாயாதிபதிகளின் பதினோறாம் வருஷம் முடிவுற்றது. ஆம், அம்மோனிகாவில் ஜீவித்திருந்த சகல ஆத்துமாக்களும், மகத்துவம் பொருந்திய தங்கள் பட்டணத்தை தேவனால் அழிக்கமுடியாதென்று, அவர்கள் சொன்ன அந்த மகா நகரமும் அழிக்கப்பட்டது.

10 இப்படியாக இதோ, ஒரே நாளில் அது பாழாக்கப்பட்டது; பிணங்கள் நாய்களாலும், வனாந்தரத்தின் மிருகங்களாலும் சின்னாபின்னமாக்கப்பட்டன.

11 இருப்பினும், அநேக நாட்களுக்குப் பின்பு அவர்களுடைய சடலங்கள் பூமியின் பரப்பின் மேலே குவிக்கப்பட்டன. அவைகள் சிறிது மண்ணால் மூடப்பட்டன. அவைகளின் துர்நாற்றத்தினாலே ஜனங்கள் அம்மோனிகா தேசத்தை சுதந்தரிக்க அநேக வருஷமளவும் போகாதிருந்தார்கள். கொல்லப்பட்டுப்போனவர்கள் நிகோர் விசுவாசத்தைச் சார்ந்திருந்தபடியாலும், அவர்களுடைய தேசங்கள் பாழாய்க் கிடந்ததினிமித்தமும், அது நிகோரின் பாழ்க்கடிப்பு என்று வழங்கப்பட்டது.

12 நேபியின் ஜனங்கள்மேல் நியாயாதிபதிகளினுடைய ஆளுகையின் பதினான்காம் வருஷமளவும், நேபியருக்கு விரோதமாய் யுத்தம் செய்ய லாமானியர் வரவில்லை. இப்படியாக மூன்று வருஷமளவும் நேபியின் ஜனங்கள் தேசமெங்கிலும் தொடர்ந்து சமாதானத்தைப் பெற்றிருந்தார்கள்.

13 ஆல்மாவும் அமுலேக்கும், ஜனங்களுக்கு அவர்களுடைய ஆலயங்களிலேயும், பரிசுத்த ஸ்தலங்களிலேயும், யூதர்களைப்போலவே இவர்கள் கட்டின ஜெபவீடுகளிலும் மனந்திரும்புதலைப் பிரசங்கித்தார்கள்.

14 இப்படியாய் தங்களுடைய வார்த்தைகளை எத்தனைபேர் கேட்பார்களோ, அத்தனைபேருக்கும் பட்சபாதமின்றி,தொடர்ந்து தேவனுடைய வார்த்தையை போதித்து வந்தார்கள்.

15 இவ்விதமாய் ஆல்மாவும் அமுலேக்கும், ஊழியம் செய்யும்படி தெரிந்துகொண்ட அநேகரும், தேசமெங்கிலும் வசனத்தை பிரசங்கிக்கப் போனார்கள். சபையானது தேசமெங்கிலும், சுற்றிலுமுள்ள பகுதிகளிலும் நேபியர்களுக்குள்ளேயும் ஸ்தாபிக்கப்படுவது பரவியது.

16 அவர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இல்லை; மனுபுத்திரரின் சிந்தனைகளை ஆயத்தப்படுத்த, அல்லது தம் வருகையின் காலத்தில் அவர்களுக்குள்ளே போதிக்கப்படும் வார்த்தையை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாகவும், மனுபுத்திரரின் மனங்களை ஆயத்தப்படுத்தும் பொருட்டாகவும், கர்த்தர் தேசமெங்கும் தம் ஆவியை ஊற்றினார்.

17 எனவே வசனத்திற்கு விரோதமாய் அவர்கள் கடினப்பட்டுப்போகாமலும், அவர்கள் அவிசுவாசிகளாயிருந்து அழிக்கப்படாமல், வசனத்தை மகிழ்ச்சியுடனே பெற்றுக்கொண்டு, தேவனாகிய தங்கள் கர்த்தருடைய இளைப்பாறுதலினுள் பிரவேசிக்கவும் மெய்யான திராட்சைக்கொடியில் ஒட்டப்பட்ட கிளை போலிருக்கவும், தேசமெங்கும் தம் ஆவியை ஊற்றினார்.

18 ஜனங்களுக்குள்ளே போன அந்த ஆசாரியர்கள் சகல பொய்யுரைகளுக்கும், சூதுகளுக்கும், பொறாமைகளுக்கும், தர்க்கங்களுக்கும், துர்க்குணங்களுக்கும், தூஷணங்களுக்கும், திருடுகளுக்கும், கொள்ளைகளுக்கும், சூறையாடலுக்கும், கொலைக்கும், விபசாரம்பண்ணுதலுக்கும், சகல காமவிகாரத்திற்கும் விரோதமாய் பிரசங்கித்து, இவைகளை நடப்பிக்கக்கூடாதென்றும் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

19 தேவகுமாரனின் வருகையைக் குறித்தும், அவருடைய பாடுகளையும் மரணத்தையும் குறித்தும், மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்தும் சீக்கிரமாய் வரவிருக்கிறவைகளைக் குறித்தும் அறிவித்தார்கள்.

20 ஜனங்களில் அநேகர் தேவகுமாரன் வரப்போகிற இடத்தைக் குறித்து விசாரித்தார்கள்; அவர் தமது உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அவர்களுக்கு தரிசனமாவார் என்று போதிக்கப்பட்டார்கள்; இதை ஜனங்கள் மிகுந்த சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோடும் கேட்டார்கள்.

21 தேசமெங்கிலும் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்பு, பிசாசுக்கு விரோதமாய் ஜெயம்கொண்டு, தேவ வசனம் அதனுடைய தூயதன்மையில் தேசமெங்கிலும் அறிவிக்கப்பட்டது. கர்த்தர் தம் ஆசீர்வாதங்களை ஜனங்கள்மீது ஊற்றினார். இப்படியாய் நேபியின் ஜனங்கள்மேல் நியாயாதிபதிகளினுடைய ஆளுகையின் பதினான்காம் வருஷமும் முடிவுற்றது.