வேதங்கள்
ஆல்மா 20


அதிகாரம் 20

அவனுடைய சிறைப்பட்ட சகோதரரை விடுவிக்க, கர்த்தர் அம்மோனை மித்தோனிக்கு அனுப்புதல் – அம்மோனும், லாமோனியும், அந்த தேசம் யாவிற்கும் மேல் ராஜாவாயிருக்கிற லாமோனியின், தகப்பனைக் காணுதல் – அம்மோன், அந்த வயதான ராஜாவினிடத்தில் தன் சகோதரரை விடுவிக்க உத்தரவு கொடுக்குமாறு வற்புறுத்தல். ஏறக்குறைய கி.மு. 90.

1 அந்தப்படியே, அவர்கள் அத்தேசத்தில் சபையை ஸ்தாபித்த பின்பு, லாமோனி ராஜா அம்மோனை தன் தகப்பனுக்கு காண்பிக்கும்படி, அம்மோனும் தன்னுடனே நேபியின் தேசத்திற்கு வரவேண்டுமென்று வாஞ்சித்தான்.

2 கர்த்தருடைய சத்தம் அம்மோனுக்கு உண்டாகி: நீ நேபியின் தேசத்திற்கு போகாதிருப்பாயாக. ஏனெனில் ராஜா உன் பிராணனை வாங்கத் தேடுவான்; ஆனால் நீ மித்தோனிக்குப் போவாயாக; ஏனெனில் இதோ உன் சகோதரராகிய ஆரோனும், மூலொக்கியும், ஆம்மாவும் சிறையிலிருக்கிறார்கள் என்றார்.

3 இப்பொழுது, அந்தப்படியே, அம்மோன் இதைக் கேட்டபோது அவன் லாமோனியை நோக்கி: இதோ என் சகோதரனும், உடன் ஊழியரும் மித்தோனியில் சிறையிலிருப்பதாலே நான் அவர்களை விடுவிக்கப் போகிறேன் என்றான்.

4 இப்பொழுது லாமோனி, அம்மோனை நோக்கி: நீர் கர்த்தருடைய பெலத்தால் சகலத்தையும் செய்யக்கூடுமென, நான் அறிந்திருக்கிறேன். எனினும் இதோ, நான் உம்மோடு கூட மித்தோனிக்கு வருகிறேன்: ஏனெனில் அந்தியோம்னோ என்று பெயர்கொண்ட மித்தோனி தேசத்து ராஜா என் சிநேகிதன், ஆதலால் நான் மித்தோனி தேசத்திற்குப் போய் அந்த தேசத்து ராஜாவினிடத்தில் இச்சகமாய்ப் பேசுகிறேன். அவனும் உம் சகோதரரை சிறையிலிருந்து வெளியேற்றுவான், என்றான். இப்பொழுது லாமோனி அவனை நோக்கி: உம் சகோதரர் சிறையிலிருக்கிறார்கள் என்று உமக்குச் சொன்னது யார், என்று கேட்டான்.

5 அதற்கு அம்மோன் அவனை நோக்கி: தேவனேயன்றி ஒருவரும் எனக்குச் சொல்லவில்லை. அவர் என்னிடத்தில், நீ போய் மித்தோனி தேசத்தில் சிறைப்பட்டிருக்கிற உன் சகோதரரை விடுவிப்பாயாக என்றார், என்றான்.

6 லாமோனி இவைகளைக் கேட்டபோது, தன் வேலையாட்கள், தன்னுடைய குதிரைகளையும், இரதங்களையும் ஆயத்தப்படுத்த வேண்டுமென்று, கட்டளை பிறப்பித்தான்.

7 பின்னும் அவன் அம்மோனை நோக்கி: வாரும், நானும் உம்முடனே கூட மித்தோனி தேசத்திற்கு வருகிறேன். ராஜா உம் சகோதரரை சிறையிலிருந்து வெளியேற்றும்படிக்கு, அங்கே ராஜாவினிடத்திலே பரிந்து பேசுகிறேன், என்றான்.

8 அந்தப்படியே, அம்மோனும் லாமோனியும் அங்கே பிரயாணம் பண்ணுகையில், தேசம் யாவின் மீதும் ராஜாவான லாமோனியின் தகப்பனை சந்தித்தார்கள்.

9 இதோ, லாமோனியின் தகப்பன் அவனை நோக்கி: நான் என் குமாரருக்கும், என் ஜனங்களுக்கும் விருந்து படைத்த அந்த நன்நாளில் நீ ஏன் வரவில்லை என்றார்.

10 அவர் பொய்யனின் பிள்ளைகளில் ஒருவனாகிய, இந்த நேபியனுடனே நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய் என்றும் கேட்டார்.

11 அந்தப்படியே, லாமோனி அவனை கோபமடையச் செய்ய பயந்து, தான் சென்றுகொண்டிருப்பதெங்கே, என்று சொன்னான்.

12 அவன் ஆயத்தப்படுத்தியிருந்த விருந்திற்கு, வராமல் தன் சொந்த ராஜ்யத்திலேயே தங்கிவிட்டதின் காரணத்தையும், அவன் தன் தகப்பனிடம் சொன்னான்.

13 லாமோனி இவைகள் யாவையும் அவனிடத்தில் சொன்ன பின்பு, இதோ அவன் திகைத்துப்போகும்படியாய், அவன் தகப்பன் அவனிடத்தில் கோபமடைந்து, லாமோனி, பொய்யனின் குமாரராகிய இந்த நேபியர்களை நீ விடுவிக்கப் போகிறாய். இதோ, அவன் நம் பிதாக்களை கொள்ளையடித்தான். இப்பொழுது அவனுடைய பிள்ளைகள் தங்களுடைய சூழ்ச்சிகளாலும் பொய்யுரைகளாலும், நம்மை வஞ்சித்து, நம்முடைய சம்பத்துக்களை நம்மிடமிருந்து கொள்ளையடித்துப் போகவே, நமக்குள்ளே வந்திருக்கிறார்கள், என்றான்.

14 இப்பொழுது லாமோனியின் தகப்பன், அவன் பட்டயத்தால் அம்மோனைக் கொன்று போடவேண்டுமென்று அவனுக்கு கட்டளையிட்டான். அவன் மித்தோனி தேசத்திற்குப் போகாமல், தன்னுடனே இஸ்மவேலின் தேசத்திற்குத் திரும்ப வேண்டுமென்றும், கட்டளையிட்டான்.

15 லாமோனி அவனை நோக்கி: நான் அம்மோனைக் கொல்லவும் மாட்டேன். இஸ்மவேலின் தேசத்திற்கு திரும்பவும்மாட்டேன். ஆனால், அம்மோனின் சகோதரர் நியாயமுள்ள மனுஷரென்றும், உண்மையுள்ள தேவனுடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளென்றும், நான் அறிந்திருக்கிறபடியாலே, அவர்களை விடுவிக்கும்படி நான் மித்தோனி தேசத்திற்குப் போகிறேன், என்றான்.

16 இவ்வார்த்தைகளை அவன் தகப்பன் கேட்டபோது அவனுடன் கோபம்கொண்டு, அவனை பூமியிலே அடித்துப் போடும்படிக்கு தன் பட்டயத்தை உருவினான்.

17 அம்மோன் முன்னால் வந்து அவனை நோக்கி: இதோ, உம்முடைய குமாரனை கொலை செய்யாதிருப்பீராக; ஆனாலும், இதோ, அவர் தன்னுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பியிருப்பதால், உம்மைவிட, அவர் மரிப்பதே நலம். நீர் இச்சமயத்தில் உம்முடைய கோபத்தில் மரித்துப் போவீராகில், உம்முடைய ஆத்துமா இரட்சிக்கப்படக் கூடாமற்போகும்.

18 பின்னும் நீர் பொறுமையாயிருப்பது அவசியம்; ஏனெனில் நீர் உம்முடைய குமாரனை கொலை செய்தால், அவர் கபடற்றவராயிருப்பதாலே அவருடைய இரத்தம் தேவனாகிய தன் கர்த்தரிடத்தில், பழி உம்மீது சுமரும்படியாய் பூமியிலிருந்து கதறும்; ஒருவேளை நீர் உம் ஆத்துமாவை இழக்க நேரிடும், என்றான்.

19 அம்மோன் இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னபோது, அவன் பிரதியுத்தரமாக: நான் என் குமாரனை கொலை செய்தால், கபடற்றவனின் இரத்தத்தை சிந்துகிறேன், என்று அறிந்திருக்கிறேன்; ஏனெனில், நீயே அவனை அழித்துப்போட வகை தேடுகிறாய், என்றான்.

20 அவன் அம்மோனை வெட்டிப்போடும்படி தன் கையை நீட்டினான். ஆனால் அம்மோன் அவனுடைய குத்துக்களைத் தாங்கிக்கொண்டு, அவன் கையைப் பிரயோகிக்கக் கூடாதபடி, அடித்தான்.

21 ராஜா அம்மோன் தன்னை கொலை செய்யக்கூடும் என்று கண்டபோது, தன் ஜீவனை தப்புவிக்கும்படி அம்மோனிடத்தில் மன்றாடினான்.

22 அம்மோன் தன் பட்டயத்தை உயர்த்தி அவனை நோக்கி: இதோ, என் சகோதரர் சிறையிலிருந்து வெளியேற்றப்பட, நீர் எனக்கு அனுமதி கொடாதிருந்தால், உம்மை அடிப்பேன் என்றான்.

23 இப்போது, ராஜா தன் ஜீவனை இழக்க நேரிடும் என பயந்து: நீ என்னை தப்பவிட்டால், நீ கேட்கிற எதுவாயினும், என் ராஜ்யத்தின் பாதியையும்கூட, உனக்குக் கொடுப்பேன், என்றான்.

24 அம்மோன் தன் வாஞ்சைக்குத் தக்கதாக அந்த வயதான ராஜாவை வழிப்படுத்தியாயிற்று, என கண்டபோது, அவனை நோக்கி: நீர் என் சகோதரர் சிறையிலிருந்து வெளியேறவும், லாமோனி தன் ராஜ்யத்தை தானே வைத்துக்கொள்ளவும், நீர் அவரிடம் அதிருப்தி கொள்ளாமல், அவர் வாஞ்சிக்கிற யாதொரு காரியத்தையும் தானே தன் வாஞ்சைக்கேற்றபடி நிறைவேற்ற அனுமதியளித்தீரானால், உம்மைத் தப்புவிப்பேன்; இல்லாவிடில் நீர் பூமியிலே விழுந்து போகும்படி அடிப்பேன், என்றான்.

25 அம்மோன் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜா தன் ஜீவனினிமித்தம் களிகூர்ந்தான்.

26 அவன் அம்மோன் தன்னை அழித்துப்போட மனதில்லாதிருந்ததையும், தன் குமாரனாகிய லாமோனிமீது அவன் வைத்திருந்த அந்த மிகுதியான அன்பையும் கண்டபோது, அவன் மிகவும் ஆச்சரியப்பட்டு, நான் உன் சகோதரரை விடுதலை செய்யவும், என் குமாரனாகிய லாமோனி தன் ராஜ்யத்தை வைத்துக்கொள்ளவும் வேண்டுமென்பதே, உன் வாஞ்சையாயிருப்பதால், இதோ, இச்சமயம் முதற்கொண்டு இனி என்றென்றுமாயும் என் குமாரன் தன் ராஜ்யத்தை வைத்துக்கொள்வான் என நான் உனக்கு உறுதியளிக்கிறேன்; நான் அவனை இனி அதிகாரம் செய்வதில்லை.

27 உன் சகோதரரை சிறையிலிருந்து வெளியேற்றும்படியும், நீயும் உன் சகோதரரும் என் ராஜ்யத்தினுள் வரவும், உனக்கு அனுமதியளிக்கிறேன். நான் உன்னைக் காண மனதாயிருக்கிறேன் என்றான்; ஏனெனில் அவன் பேசிய வார்த்தைகளினாலும், தன் குமாரனாகிய லாமோனி பேசிய வார்த்தைகளாலும் ராஜா மிகுந்த ஆச்சரியமடைந்து, அவைகளை அறிந்துகொள்ள வாஞ்சித்தான்.

28 அந்தப்படியே, அம்மோனும் லாமோனியும் தங்கள் பிரயாணத்தை மித்தோனி தேசத்தை நோக்கித் துவங்கினார்கள். லாமோனிக்கு அந்த தேசத்தின் ராஜாவினுடைய பார்வையில் தயவு கிடைத்ததினிமித்தம், அம்மோனின் சகோதரர்கள் சிறையிலிருந்து வெளிக்கொண்டுவரப்பட்டார்கள்.

29 அம்மோன் அவர்களைச் சந்தித்தபோது, மிகவும் வேதனைப்பட்டான். ஏனெனில் அவர்கள் நிர்வாணிகளாக, பலத்த கயிறுகளாலே அவர்கள் கட்டப்பட்டிருந்ததாலே, அவர்கள் சருமங்கள் காய்ப்பு காய்த்திருந்தது. அவர்கள் பசியாலும், தாகத்தாலும், பலவிதமான உபத்திரவங்களாலும் கஷ்டப்பட்டார்கள்; ஆயினும் தங்கள் பாடுகள் மத்தியிலும் பொறுமையாயிருந்தார்கள்.

30 அவர்கள், மிகுந்த கடினமுள்ளவர்களும், வணங்காக்கழுத்துள்ளவர்களாயும் இருக்கிற ஜனங்களின் கைகளுக்குள் விழவேண்டியதாயிற்று; ஆகவே, அவர்கள் இவர்களுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காமல், அவர்கள் மித்தோனி தேசத்தை அடையும்வரைக்கும் தள்ளப்பட்டும், அடிக்கப்பட்டும், வீடுதோறும், இடந்தோறும், துரத்தப்பட்டும் வந்தனர்; அங்கே அவர்கள் பிடிக்கப்பட்டு, சிறையிலே அடைக்கப்பட்டு, பலத்த கயிறுகளாலே கட்டப்பட்டு, அநேக நாட்களாய், சிறையிலே வைக்கப்பட்டிருந்தார்கள். பின்பு லாமோனியாலும் அம்மோனாலும் விடுவிக்கப்பட்டனர்.