வேதங்கள்
ஆல்மா 62


அதிகாரம் 62

கிதியோன் தேசத்திலிருக்கும் பகோரனுக்கு உதவிபுரிய மரோனி அணிவகுத்துச் செல்லுதல் – தங்கள் தேசத்தைத் தற்காக்க மறுக்கும் ராஜ மனுஷர் மரணத்திற்குள்ளாக்கப்படுதல் – பகோரனும் மரோனியும் மறுபடியும் நேபிகாவைக் கைப்பற்றுதல் – அநேக லாமானியர் அம்மோனின் ஜனங்களோடு சேருதல் – தியான்கும் அம்மோரோனைக் கொல்லுதல். பின்பு அவனும் கொல்லப்படுதல் – லாமானியர் தேசத்திலிருந்து துரத்தப்பட்டு, சாமாதானம் ஸ்தாபிக்கப்படுதல் – ஏலமன் ஊழியத்திற்குத் திரும்பி சபையை எழுப்புதல். ஏறக்குறைய கி.மு. 62–57.

1 இப்பொழுதும், அந்தப்படியே, மரோனி இந்நிருபத்தைப் பெற்றபோது, அவனது இருதயத்தில் தைரியம் கொண்டு, பகோரன் தன் தேசத்தின் சுதந்திரத்திற்கும், நோக்கத்திற்கும், துரோகி அல்ல என்பதினாலும், அவனுடைய விசுவாசத்தினிமித்தமும், மரோனியினுடைய இருதயம் மிகுந்த சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டது.

2 அவன், பகோரனை நியாயாசனத்திலிருந்து விரட்டிவிட்டவர்களின் அக்கிரமத்தினிமித்தம், ஆம், அதிலும் குறிப்பாக தங்கள் தேசத்திற்கும் தங்கள் தேவனுக்கும் விரோதமாக கலகம் பண்ணினவர்களினிமித்தம் அதிகம் துக்கித்தான்.

3 அந்தப்படியே, மரோனி, பகோரனின் வாஞ்சையின்படியே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, தன் சேனையின் மீதியானவர்கள் மேல் உள்ள பொறுப்பை லேகிக்கும், தியான்குமிற்கும் கொடுத்துவிட்டு, கிதியோன் தேசத்திற்கு அணிவகுத்தான்.

4 அவன் நுழைந்த எவ்விடத்திலும் சுதந்திரக் கொடியை உயர்த்தினான், கிதியோன் தேசத்தை நோக்கிய தன் அணிவகுப்பு முழுவதிலும் தன்னால் திரட்ட முடிந்த சேனையை பெற்றுக் கொண்டான்.

5 அந்தப்படியே, ஆயிரக்கணக்கானோர் அவனுடைய கொடியின் கீழ் கூடினார்கள், தாங்கள் அடிமைத்தனத்திற்குள் வராதபடி, தங்கள் சுதந்திரத்தை தற்காக்கும்படியாக தங்கள் பட்டயங்களை எடுத்தார்கள்.

6 இப்படியாக, மரோனி தன் அணிவகுப்பு முழுவதிலும் தன்னால் திரட்டமுடிந்த மனுஷரைக் கூடச் செய்த பின்னர், அவன் கிதியோன் தேசத்திற்குள் வந்தான்; அவன் தன் படைகளை பகோரனின் படைகளோடு சேர்த்தபோது அவர்கள் மிகவும் பலமடைந்தார்கள். சாரகெம்லா தேசத்திலிருந்து சுதந்திர மனுஷரைத் துரத்திவிட்டு, அந்த தேசத்தை வசப்படுத்திக்கொண்ட, அக்கலகக்காரரின் ராஜாவான பச்சூஸின் மனுஷரை விட பலமடைந்திருந்தார்கள்.

7 அந்தப்படியே, மரோனியும் பகோரோனும் தங்கள் சேனைகளோடு சாரகெம்லா தேசத்தினுள் சென்று, பட்டணத்திற்கு விரோதமாக போய், பச்சூஸின் ஆட்கள் யுத்தத்திற்கு வரும்மட்டும், அவர்களை எதிர்த்து நின்றார்கள்.

8 இதோ, பச்சூஸ் கொல்லப்பட்டு, அவனுடைய மனுஷர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுப் போனார்கள், பகோரன் தன் நியாயாசனத்தில் மறுபடியும் அமர்த்தப்பட்டான்.

9 பச்சூஸின் மனுஷரும், பிடிபட்டு சிறையினுள் போடப்பட்டிருந்த ராஜ மனுஷரும், சட்டப்படி விசாரிக்கப்பட்டார்கள். அவர்கள் சட்டத்தின்படியே மரணத்திற்குள்ளாக்கப்பட்டார்கள்; ஆம், அந்த பச்சூஸின் மனுஷரும், அந்த ராஜ மனுஷரும், தங்கள் தேசத்தைத் தற்காப்பதற்காக தங்கள் ஆயுதங்களை உயர்த்தாமல், அதற்கு விரோதமாக யுத்தம் பண்ணின எவரும் மரணத்திற்குள்ளாக்கப்பட்டார்கள்.

10 இப்படியாக தங்கள் தேசத்தின் பாதுகாப்பிற்காக, இந்த சட்டம் தீவிரமாய்க் கைக்கொள்ளப்பட வேண்டியது அவசியமாயிற்று. ஆம், தங்கள் சுதந்திரத்தை மறுப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட எவரும் சட்டத்தின்படி கடுமையாய் மரணத்திற்குள்ளாக்கப்பட்டார்கள்.

11 இப்படியாக நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் முப்பதாவது வருஷமும் முடிவுற்றது; மரோனியும் பகோரனும், சுதந்திர நோக்கத்திற்கு உண்மையாயிராத யாவர் மேலும் மரணத்தை வரப்பண்ணி, சாரகெம்லா தேசத்தில் தங்கள் சொந்த ஜனங்களுக்குள்ளே சமாதானத்தை நிலைவரப்பண்ணினார்கள்.

12 அந்தப்படியே, நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் முப்பத்தொன்றாம் வருஷ துவக்கத்திலே, மரோனி, தேசத்தின் அப்பகுதியைக் காப்பதில் ஏலமனுக்கு உதவிபுரிய, உடனே ஆறாயிரம் மனுஷசேனை அனுப்பப்படவும், உணவுகள் அனுப்பப்படவும், பண்ணினான்.

13 லேகி மற்றும் தியான்கும் படைகளுக்கும் அவன் போதுமான அளவு உணவோடு, ஆறாயிரம் மனுஷ சேனை, அனுப்பப்படவும் பண்ணினான். அந்தப்படியே, லாமானியருக்கு விரோதமாய் தேசத்தைப் பலப்படுத்தும்படியாய் இது செய்யப்பட்டது.

14 அந்தப்படியே, மரோனியும் பகோரனும், சாரகெம்லா தேசத்தில் பெரும் படையை விட்டுவிட்டு, நேபிகா பட்டணத்தில் இருக்கும் லாமானியரை வீழ்த்த தீர்மானித்தவர்களாய், தங்களோடு பெரும் படையைக் கூட்டிக்கொண்டு, அந்த பட்டணத்திற்கு நேராய் அணிவகுத்துப் போனார்கள்.

15 அந்தப்படியே, அவர்கள் தேசத்திற்கு நேராய் அணிவகுத்துப்போகும்போதே, லாமானியரில் அநேகம் மனுஷரைப் பிடித்து, அவர்களில் அநேகரை வெட்டி, அவர்களுடைய உணவுகளையும், அவர்களின் யுத்தக் கருவிகளையும் எடுத்துக் கொண்டார்கள்.

16 அந்தப்படியே, அவர்கள் அவர்களை பிடித்துக்கொண்ட பின்பு, நேபியர்களுக்கு விரோதமாய் இனி ஒருபோதும் யுத்தக் கருவிகளை எடுக்கமாட்டோம், என்ற உடன்படிக்கையினுள் அவர்களைப் பிரவேசிக்கும்படியாகச் செய்தார்கள்.

17 அவர்கள் இந்த உடன்படிக்கையினுள் பிரவேசித்த பின்பு, அவர்கள் அம்மோனின் ஜனங்களோடு வாசம் பண்ண அவர்களை அனுப்பினார்கள், கணக்கின்படி கொல்லப்படாதவர்கள் நாலாயிரம் பேராயிருந்தார்கள்.

18 அந்தப்படியே, அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, தங்கள் அணிவகுப்பை நேபிகா தேசத்திற்கு நேராய்த் தொடர்ந்தார்கள். அந்தப்படியே, அவர்கள் நேபிகா பட்டணத்திற்கு வந்தபோது, நேபிகா பட்டணத்தின் அருகேயுள்ள நேபிகா சமபூமியில் பாளயமிறங்கினார்கள்.

19 இப்பொழுது, சமபூமியில் தங்களுக்கு விரோதமாக லாமானியர் யுத்தம்பண்ண வெளியே வரவேண்டுமென்று, மரோனி வாஞ்சித்திருந்தான். ஆனால் லாமானியரோ அவர்களின் மிகுந்த தைரியத்தை அறிந்து, அவர்களின் எண்ணிக்கையின் மிகுதியைக் கண்டபடியினாலே, அவர்களுக்கு விரோதமாக வர அஞ்சினார்கள். ஆதலால் அந்த நாளிலே அவர்கள் யுத்தத்திற்கு வரவில்லை.

20 இரவு சூழ்ந்தபோதோ, மரோனி இரவின் இருளிலேபோய், லாமானியர் தங்கள் சேனையோடு பட்டணத்தின் எப்பகுதியில் பாளையமிறங்கியிருக்கிறார்கள் என்று உளவுபார்க்க அலங்கத்தின்மேல் ஏறினான்.

21 அந்தப்படியே, அவர்கள் நுழைவாயிலின் அருகே கிழக்கேயிருந்தார்கள்; அவர்கள் யாவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுதும் மரோனி தன் சேனைக்குத் திரும்பி, அலங்கத்தின் மேலிருந்து, அலங்கத்தின் உட்பகுதி வரைக்குமாய், பெலமுள்ள கயிறுகளையும், ஏணிகளையும் கீழே தொங்கவிட, அவைகளைத் துரிதமாய் ஆயத்தப்படுத்தும்படிக் கட்டளையிட்டான்.

22 அந்தப்படியே, மரோனி தன் மனுஷர் அணிவகுத்து, அலங்கத்தின் மேல் ஏறி, லாமானியர் தங்கள் சேனைகளோடு பாளையமிறங்காத, ஆம், பட்டணத்தின் மேற்குப் பகுதியிலே இறங்கப் பண்ணினான்.

23 அந்தப்படியே, அவர்கள் யாவரும் தங்களுடைய பெலமான கயிறுகளாலும், தங்கள் ஏணிகளாலும் இரவிலே பட்டணத்திற்குள் இறக்கி விடப்பட்டார்கள்; இப்படியாக காலை வந்தபோது, அவர்கள் யாவரும் பட்டணத்தின் மதில்களுக்குள்ளே இருந்தார்கள்.

24 இப்பொழுதும், லாமானியர் எழுந்து, மதில்களுக்குள்ளே மரோனியின் சேனைகள் இருப்பதைக் கண்டபோது, அவர்கள் மிகவும் பயந்துபோய், நுழைவாயில் வழியே வெளியே ஓடிப்போனார்கள்.

25 இப்பொழுதும் மரோனி அவர்கள் தனக்கு முன்பாக ஓடுகிறதைக்கண்டபோது, தன் மனுஷர் அவர்களுக்கு எதிராகப் போகும்படிச்செய்து, அநேகரை வெட்டி, இன்னும் அநேகரைச் சூழ்ந்து, அவர்களைக் கைதிகளாகப் பிடிக்கச் செய்தான்; அவர்களில் மீதியானோர் கடற்கரை எல்லைகளில் அமைந்த மரோனியின் தேசத்திற்குள் ஓடிப்போனார்கள்.

26 இப்படியாக மரோனியும் பகோரனும் நேபிகாவின் பட்டணத்தை ஒரு ஆத்துமா கூட இழப்பில்லாமல் வசப்படுத்திக்கொண்டார்கள்; லாமானியரில் அநேகர் கொல்லப்பட்டார்கள்.

27 இப்பொழுது, அந்தப்படியே, கைதிகளாக இருந்த லாமானியரில் அநேகர், அம்மோன் ஜனங்களோடு சேர்ந்து, சுதந்திரவாளிகளாய் மாறும்படி விரும்பினார்கள்.

28 அந்தப்படியே, வாஞ்சித்த அனைவருக்கும் அவர்கள் வாஞ்சித்தவைகளுக்கேற்ப அது அனுமதிக்கப்பட்டது.

29 இப்படியாக, லாமானியரின் எல்லா கைதிகளும் அம்மோன் ஜனத்தோடு சேர்ந்து, மிகவும் கடினமாய் உழைக்கவும், நிலத்தைப் பண்படுத்தவும், எல்லாவிதமான தானியங்களை வளர்க்கவும், எல்லா வகையான மந்தைகளையும் கால்நடைகளையும் வளர்க்கவும் துவங்கினார்கள்; இப்படியாக நேபியர்கள் ஒரு பெரிய பாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்; ஆம், அவர்கள் எல்லா லாமானிய கைதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

30 இப்பொழுது, அந்தப்படியே, நேபிகா பட்டணத்தை மரோனி வசப்படுத்திய பிறகு, அநேக கைதிகளைப் பிடித்ததினால், லாமானிய சேனை மிகவும் குறைந்து போயிற்று, அவன் கைதிகளாகப் பிடிபட்டுப்போன அநேக நேபியர்களைத் திரும்பவும் பெற்றதினிமித்தம், மரோனியின் சேனை மிகவும் பெலப்பட்டது. ஆகவே நேபிகா தேசத்திலிருந்து லேகியின் தேசத்திற்கு மரோனி போனான்.

31 அந்தப்படியே, மரோனி தங்களுக்கு விரோதமாய் வருகிறதை லாமானியர் கண்டபோது, அவர்கள் மறுபடியும் பயந்து, மரோனியின் சேனைக்கு முன்பாகப் பறந்தோடினார்கள்.

32 அந்தப்படியே, அவர்கள் லேகியாலும், தியான்குமினாலும் சந்திக்கப்படும்வரை, அவர்களை மரோனியும் அவன் சேனையும் பட்டணந்தோறும் துரத்தினார்கள்; லேகியினிடத்திலிருந்தும், தியான்குமினிடத்திலிருந்தும் லாமானியர் பறந்தோடி, அவர்கள் மரோனியின் தேசத்திலே சேரும்வரை கடற்கரை எல்லைகளில் வந்தார்கள்.

33 லாமானிய சேனைகள் யாவும் ஒன்று திரளும் வகையில், மரோனி தேசத்திலே ஒரே படையாய் கூட்டிச் சேர்க்கப்பட்டன. இப்பொழுது லாமானிய ராஜாவாகிய அம்மோரோனும் அவர்களுடனிருந்தான்.

34 அந்தப்படியே, மரோனி தேசத்தின் எல்லைகளைச் சுற்றிலும், மரோனியும், லேகியும், தியான்குமும் தங்கள் சேனைகளோடு பாளையமிறங்கியிருந்ததால், தெற்கே அமைந்த வனாந்தர எல்லைகளிலும், கிழக்கே அமைந்த வனாந்தர எல்லைகளிலும் லாமானியர் சூழப்பட்டிருந்தார்கள்.

35 அவர்கள் இப்படியாக இராத்தங்கினார்கள். ஏனெனில் இதோ, தியான்குமைத் தவிர நேபியர்களும், லாமானியரும், தங்களுடைய நெடுந்தூர அணிவகுப்பின் நிமித்தம் களைத்துப்போனதால், இரவில் எந்த ஒரு உபாயத்தையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் தியான்குமோ, அதிக போராட்டங்களுக்கும், இரத்தம் சிந்துதலுக்கும், மிகுந்த பஞ்சத்திற்கும் வழிவகுத்த, தங்களுக்கும் லாமானியருக்குமிடையே நடந்து வருகிற, இந்தப் பெரிதும் நெடுநாளானதுமான யுத்தத்திற்கு, அம்மோரோனும் அவன் சகோதரனாகிய அமலேக்கியாவுமே காரணமானவர்கள் என்று எண்ணி, அம்மோரான்மேல் மிகவும் கோபமாயிருந்தான்.

36 அந்தப்படியே, தியான்கும் தன் கோபத்திலே லாமானியப் பாளையத்தில் போய், பட்டணத்தின் அலங்கத்தினுள் இறங்கினான். அவன் கயிறோடு அங்கும் இங்குமாய் திரிந்து, ராஜாவைக் கண்டுபிடித்தான். அவன்மீது ஒரு ஈட்டியை எறிந்தான், அது அவன் இருதயத்தினருகே ஊடுருவிச் சென்றது. ஆனால் இதோ, ராஜா தான் சாகும் முன்பு தன் வேலையாட்களை எழுப்பி விட்டதினால், அவர்கள் தியான்குமைத் துரத்திவந்து வெட்டிப் போட்டார்கள்.

37 இப்பொழுது, அந்தப்படியே, தியான்கும் செத்துப்போனான் என்று லேகியும், மரோனியும் அறிந்தபோது, மிகவும் துக்கித்தார்கள்; ஏனெனில், இதோ, அவன் தன் தேசத்திற்காக அதிக தைரியத்தோடு போராடின மனுஷன், ஆம், சுதந்திரத்திற்கு உற்ற நண்பன். அவன் மிகக் கொடிய பல உபத்திரவங்களை சகித்தவன். ஆனால் இதோ, அவன் மரித்து பூலோகத்தார் போகும் வழியே போய் விட்டான்.

38 இப்பொழுது, அந்தப்படியே, மரோனி மறுநாள் அணிவகுத்துப்போய், லாமானியர்மேல் விழுந்து, அப்படியே அதிக சங்காரம் உண்டாகும்படி அவர்களை வெட்டிப்போட்டார்கள்; அவர்களை தேசத்திலிருந்து துரத்தினார்கள்; அச்சமயத்திலே அவர்கள் நேபியருக்கு விரோதமாய் வராதபடிக்கு, அவர்கள் ஓடிப்போனார்கள்,

39 இப்படியாக நேபியின் ஜனங்களின்மேல் நியாயாதிபதிகளின் முப்பத்தொன்றாம் வருஷ ஆளுகையும் முடிவுற்றது; இப்படியாக அவர்கள் அநேக வருஷங்களாக யுத்தங்களையும், இரத்தம் சிந்துதல்களையும், பஞ்சங்களையும், உபத்திரவங்களையும் கொண்டிருந்தார்கள்.

40 நேபியின் ஜனங்களுக்குள்ளே கொலைகளும், பிணக்குகளும், பிரிவினைகளும், எல்லாவிதமான அக்கிரமமும் இருந்தன; இருப்பினும் நீதிமான்களுக்காக, நீதிமான்களின் ஜெபங்களினாலே, அவர்கள் தப்புவிக்கப்பட்டார்கள்.

41 ஆனால் இதோ, நேபியர்களுக்கும், லாமானியர்களுக்கும் இடையேயான யுத்த காலம் மிகவும் நீண்டிருந்ததினாலே அநேகர் கடினப்பட்டுப்போனார்கள், அநேகர் தங்கள் உபத்திரவங்களினிமித்தம்,மென்மையானவர்களாகி, தாழ்மையின் ஆழங்களிலே, தேவனுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தினார்கள்.

42 அந்தப்படியே, லாமானியர் சுலபமாய் நுழைய ஏதுவான தேசத்தின் பகுதிகளைப் போதுமான அளவு பெலப்படுத்தும்வரைக்குமாய், அவைகளில் அரண்களை எழுப்பிய பின்பு, சாரகெம்லா பட்டணத்திற்கு மரோனி திரும்பிப் போனான்; ஏலமனும் தன் சுதந்திர பூமிக்குத் திரும்பினான்; அங்கு மறுபடியும் ஒருமுறை நேபியின் ஜனங்களுக்குள்ளே சமாதானம் நிலைவரப்பட்டது.

43 மரோனி தன் சேனைகளின் பொறுப்பை மரோனிகா என்ற பெயருடைய தனது குமாரனின் கைகளில் ஒப்படைத்தான்; தன் மீதியான நாட்களைச் சமாதானமாய்க் கழிக்க தனது சொந்த வீட்டுக்குத் திரும்பினான்.

44 பகோரன் தன் நியாயாசனத்திற்குத் திரும்பிப் போனான்; ஏலமன் தேவ வார்த்தையை ஜனங்களுக்குப் போதிக்கும் பொறுப்பை மறுபடியும் தன்மேல் எடுத்துக்கொண்டான்; அநேக யுத்தங்களும் பிணக்குகளும் சம்பவித்ததினால், சபையில் மறுபடியும் ஒழுங்கு முறைகளை நிர்ணயிக்கவேண்டியது அவசியமாயிற்று.

45 ஆதலால், அநேக ஜனங்கள் தங்கள் துன்மார்க்கத்தைக் குறித்து உணரும்படியாகவும், அதினிமித்தம் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, தேவனாகிய தங்கள் கர்த்தருக்காக ஞானஸ்நானம் பெறும்படியாகவும், ஏலமனும் அவன் சகோதரரும் அதிக வல்லமையோடு தேவ வார்த்தையை அறிவித்தார்கள்.

46 அந்தப்படியே, அவர்கள் தேசமெங்கும் தேவ சபையை மறுபடியும் ஸ்தாபித்தார்கள்.

47 ஆம், சட்டத்தைக் குறித்த முறைமைகள் ஏற்படுத்தப்பட்டன. அவர்களுடைய நியாயாதிபதிகளும் பிரதான நியாயாதிபதிகளும் தெரிந்து கொள்ளப்பட்டனர்.

48 நேபியின் ஜனங்கள் தேசத்தில் மறுபடியும் விருத்தியடையத் தொடங்கினார்கள். அவர்கள் பலுகிப்பெருகி தேசத்தில் மறுபடியும் அதிக பெலன் பெறத்துவங்கினார்கள். அவர்கள் மிகவும் ஐஸ்வரியவான்களாகத் துவங்கினார்கள்.

49 ஆனாலும் தங்களுடைய ஐஸ்வரியங்களினிமித்தமும், அல்லது தங்கள் பெலத்தினிமித்தமும், அல்லது தங்களின் விருத்தியினிமித்தமும், அவர்கள் தங்கள் கண்களின் மேட்டிமையால் உயர்த்தப்படவில்லை; அவர்கள் தேவனாகிய தங்கள் கர்த்தரை நினைவுகூர்வதில் தாமதிக்கவுமில்லை. ஆனால் அவர்கள் அவருக்கு முன்பாகத் தங்களை மிகவும் தாழ்த்தினார்கள்.

50 ஆம், அவர்கள் கர்த்தர் தங்களுக்குச் செய்த மகத்துவமான காரியங்களான, மரணத்திலிருந்தும், கட்டுகளிலிருந்தும், சிறைகளிலிருந்தும், எல்லாவிதமான உபத்திரவங்களிலிருந்தும் விடுவித்ததையும், தங்கள் சத்துருக்களின் கைகளுக்குத் தங்களை தப்புவித்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.

51 அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் இடைவிடாமல் தொடர்ந்து ஜெபித்ததால், அவர்கள் தேசத்தில் பெலப்பட்டு விருத்தியடையும்படியாக, கர்த்தர் தம்முடைய வார்த்தைக்கேற்ப அவர்களை ஆசீர்வதித்தார்.

52 அந்தப்படியே, இவைகள் யாவும் சம்பவித்தன. நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் முப்பத்தைந்தாவது வருஷத்தில் ஏலமன் மரணமடைந்தான்.