வேதங்கள்
ஆல்மா 48


அதிகாரம் 48

அமலேக்கியா, நேபியருக்கு விரோதமாய் லாமானியரை ஏவிவிடுதல் – மரோனி, கிறிஸ்தவர்களின் நோக்கத்தை காப்பதற்கென்று தன் ஜனத்தை ஆயத்தப்படுத்துதல் – அவன் சுதந்திரத்திலும், உரிமையிலும் களிகூர்ந்து தேவனில் வல்லமையுள்ள மனுஷனாய் இருத்தல். ஏறக்குறைய கி.மு. 72.

1 இப்பொழுதும், அந்தப்படியே, அமலேக்கியா ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்ட உடனே, அவன் நேபியின் ஜனங்களுக்கு விரோதமாய் லாமானியரின் இருதயங்களைத் தூண்டத் துவங்கினான்; ஆம் தங்கள் கோபுரங்களிலிருந்து நேபியருக்கு விரோதமாய் லாமானியரிடத்தில் பேச அவன் ஆட்களை நியமித்தான்.

2 தனது திட்டங்களை இதுவரைக்கும் நிறைவேற்றி, ஆம், லாமானியர் மேல் ராஜாவாக்கப்படும்படிக்கு, நியாயாதிபதிகளின் பத்தொன்பதாம் வருஷ ஆளுகையின் பிற்பகுதியிலே, இப்படியாக அவன் நேபியர்களுக்கு விரோதமாய் அவர்களின் இருதயங்களைத் தூண்டி விட்டு, தேசம் முழுவதையும், ஆம், தேசத்திலிருக்கும் சகல ஜனங்களான நேபியர் மேலும், லாமானியர் மேலும், ஆளுகை செய்யவேண்டுமெனவும் வகை தேடினான்.

3 ஆகவே அவன் நேபியருக்கு விரோதமாய் யுத்தத்திற்கு போக, லாமானியரில் ஓர் எண்ணிறைந்த சேனையை ஏகமாய் கூடச் செய்யுமளவும், அவன் அவர்களின் இருதயங்களைக் கடினமாக்கி, அவர்களின் மனதைக் குருடாக்கி, அவர்களைக் கோபம் மூளச் செய்து, தனது திட்டத்தை நிறைவேற்றினான்.

4 அவன் தனது ஜனத்தின் எண்ணிக்கையின் மிகுதியினிமித்தம், நேபியர்களை மேற்கொண்டு, அவர்களை அடிமைத்தனத்திற்குள்ளாகக் கொண்டுவரத் தீர்மானமாயிருந்தான்.

5 இப்படியாக நேபியர்களின் பெலத்தையும், அவர்களின் மறைவிடங்களையும், அவர்களுடைய பட்டணங்களின் பெலவீனமான பகுதிகளையும் நன்கு அறிந்தவர்களான, சோரமியர்களைப் பிரதான சேனாதிபதிகளாக நியமித்தான். ஆகவே, அவன் அவர்களைத் தன் சேனைகளின் மீது பிரதான சேனாதிபதிகளாக நியமித்தான்.

6 அந்தப்படியே, அவர்கள் தங்கள் பாளயத்தோடு, வனாந்தரத்தினுள் சாரகெம்லா தேசத்தை நோக்கிப் போனார்கள்.

7 இப்பொழுது, அந்தப்படியே, அமலேக்கியா இப்படியாக தனது வஞ்சகத்தினாலும் தந்திரத்தினாலும், வல்லமையைப் பெற்றுக்கொண்டிருக்கையில், மாறாக மரோனி, ஜனங்கள் தங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கவேண்டுமென, அவர்களின் மனங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

8 ஆம், அவன் நேபியர்களின் சேனைகளைப் பெலப்படுத்தி, சிறு அரண்களை அல்லது பாதுகாப்பு ஸ்தலங்களைக் கட்டினான்; தன் சேனைகளைச் சூழ, சுற்றியும் மண்குவியல்களை ஏற்படுத்தி, அவர்களைச் சூழ தேசம் முழுவதிலும், தங்களின் எல்லா பட்டணங்களைச் சுற்றியும், ஆம், தங்களின் தேச எல்லைகளைச் சுற்றியும் கற்களாலான மதில்களையும் கட்டினான்.

9 அவர்களுடைய பெலவீனமான அரண்களில் அவன் அதிக எண்ணிக்கையிலான மனுஷரை நிறுத்தினான்; இப்படியாக அவன் நேபியர்களால் சுதந்தரிக்கப்பட்ட தேசத்தை அரண்களை ஏற்படுத்தி பெலப்படுத்தினான்.

10 தங்களுடைய தேவனாகிய கர்த்தருக்காக அவர்கள் ஜீவிக்கும்படியும், கிறிஸ்தவர்களின் நோக்கம் என்று அவர்களின் சத்துருக்களால் அழைக்கப்படுகிறதை அவர்கள் காக்கும்படியும், அவன் அவர்களின் சுதந்திரத்தையும், அவர்களின் தேசங்களையும், அவர்களின் மனைவிகளையும், அவர்களின் பிள்ளைகளையும், அவர்களின் சமாதானத்தையும் காத்துக்கொள்ள இப்படியாக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

11 மரோனி பெலமுள்ளவனும் பராக்கிரமசாலியுமாயிருந்தான்; அவன் பூரண விவேகமுள்ளவனாயிருந்தான்; ஆம், அவன் இரத்தம் சிந்துதலில் களிகூராத மனிதனாயிருந்தான்; அவன் ஆத்துமா தன் தேசத்தின் விடுதலையிலும், சுதந்திரத்திலும் தன் சகோதரர் சிறைத்தனத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும், விடுபடுவதிலும் சந்தோஷமடைந்தது.

12 ஆம், தன் ஜனத்தின் மேல், தன் தேவன் அருளிய அநேக சிலாக்கியங்களுக்காவும், ஆசீர்வாதங்களுக்காகவும், நன்றி செலுத்துவதில் தன்னுடைய இருதயம் பூரித்திருந்த மனுஷனாயிருந்தான்; தன் ஜனத்தின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் மிகவும் பிரயாசப்பட்ட மனுஷன்.

13 ஆம், அவன் கிறிஸ்துவின் விசுவாசத்தில் உறுதியாயிருந்த மனுஷன். அவன் தன் இரத்தத்தை சிந்துமளவிற்கும் கூட, தன் ஜனத்தையும், தன் உரிமைகளையும், தன் தேசத்தையும், தன் மார்க்கத்தையும் காக்க, ஆணையிட்டு சத்தியம் செய்திருந்தான்.

14 இப்பொழுதும் தேவைப்பட்டால், தங்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் இரத்தம் சிந்துமளவுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ளும்படி, நேபியர் போதிக்கப்பட்டிருந்தனர்; ஆம், ஒருக்காலும் எவருக்கும் கேடு உண்டாக்கக் கூடாதென்றும், ஆம், தங்கள் சத்துருக்களுக்கு விரோதமாய் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக அல்லாமல், வேறெதற்காகவும் பட்டயத்தை உயர்த்தக் கூடாதென்றும், போதிக்கப்பட்டிருந்தார்கள்.

15 அப்படிச் செய்வதின் மூலம் தேசத்தில் தங்களை தேவன் விருத்தியடையப் பண்ணுவார் என்பதும், அல்லது வேறு வார்த்தைகளிலெனில், தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதில் அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்தால், அவர் தங்களை தேசத்தில் விருத்தியடையப் பண்ணுவார் என்பதும், ஆம், அவர்களின் ஆபத்தைப் பொறுத்து அவர் அவர்களைப் பறந்தோடவோ, அல்லது யுத்தத்திற்காக ஆயத்தப்படவோ, எச்சரிப்பார் என்பதும் அவர்களது விசுவாசமாயிருந்தது;

16 மேலும் தங்கள் சத்துருக்களுக்கு விரோதமாய் அவர்கள் போய் தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டுமா, என்று தேவன் தங்களுக்குத் தெரியப்பண்ணி, அப்படிச் செய்வதின் மூலம் கர்த்தர் தங்களை விடுவிக்கப் பண்ணுவார் என்பதுமே, மரோனியின் விசுவாசமாயிருந்தது. அவன் இருதயம் இதிலே களிகூர்ந்தது. இரத்தம் சிந்துதலில் அல்லாமல் நன்மை செய்வதிலும், தன் ஜனத்தைக் காப்பதிலும், ஆம், தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதிலும், ஆம், அக்கிரமத்தை எதிர்ப்பதிலுமே.

17 ஆம், மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எல்லா மனுஷரும் மரோனியைப் போல இருந்திருந்தால், இருப்பதால், எப்போதாவது இருப்பார்களெனில், இதோ, நரகத்தின் வல்லமைகள் அனைத்தும் என்றென்றைக்குமாய் தகர்க்கப்படிருக்கும்; ஆம், பிசாசு மனுபுத்திரரின் இருதயங்களின்மீது ஒருபோதும் வல்லமை கொள்ளமாட்டான்.

18 இதோ, அவன் மோசியாவின் குமாரனாகிய அம்மோனைப் போலவும், ஆம், மோசியாவின் மற்ற குமாரரைப் போலவும், ஆம், ஆல்மாவைப் போலவும், அவனுடைய குமாரரைப் போலவும் இருந்தான்; ஏனெனில் அவர்கள் யாவரும் தேவனுடைய மனுஷராய் இருந்தார்கள்.

19 இப்பொழுதும் இதோ, ஏலமனும், அவன் சகோதரரும், ஜனத்திற்கு செய்த சேவை, மரோனி ஜனத்திற்கு செய்ததிலும் குறைந்ததல்ல. ஏனெனில் அவர்கள் தேவ வார்த்தையைப் பிரசங்கித்து, தங்கள் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கிற சகல மனுஷருக்கும் மனந்திரும்புதலுக்கேதுவான ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.

20 இப்படியாக அவர்கள் இருந்தார்கள். அவர்களின் வார்த்தைகளின் நிமித்தம், ஜனங்கள் கர்த்தருக்கு மிகவும் பிரியமானவர்களாகுமளவும் தங்களையே தாழ்த்தினார்கள். இப்படியாக அவர்கள் தங்களுக்குள்ளே யுத்தங்களிலிருந்தும், பிணக்குகளிலிருந்தும், ஆம், நான்கு வருஷமளவும் விலகியிருந்தார்கள்.

21 ஆனால், நான் சொன்னதுபோல பத்தொன்பதாம் வருஷத்தின் பிற்பகுதியில், ஆம், அவர்கள் தங்களுக்குள்ளிருந்த தங்கள் சமாதானத்தையும் பொருட்படுத்தாமல், தங்கள் சகோதரராகிய லாமானியரோடு தயக்கமுடன் யுத்தம்பண்ண கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

22 ஆம், முடிவாக, அவர்கள் அதிக தயக்கமுடனிருந்தாலும், லாமானியரோடு போராடிய யுத்தங்கள் அநேக வருஷங்கள் வரைக்கும் ஓய்ந்து போகவில்லை.

23 இப்பொழுதும் அவர்கள் இரத்தம் சிந்துதலில் ஆனந்தம் கொள்ளாததால், அவர்கள் லாமானியருக்கு விரோதமாய் யுத்தக் கருவிகளை எடுப்பதற்கு மனம் வருந்தினார்கள்; ஆம், இது மாத்திரம் அல்ல, அவர்கள் தங்கள் சகோதரரில் அநேகரை, தங்கள் தேவனை சந்திக்க ஆயத்தமற்றவர்களாய், இந்த உலகைவிட்டு ஒரு நித்திய உலகத்திற்கு அனுப்பினதற்குக் கருவியாய் இருந்தமைக்கும் வருத்தப்பட்டார்கள்.

24 இருப்பினும், ஒரு காலத்தில் தங்கள் சகோதரராயிருந்தவர்களும், ஆம், தங்கள் சபையிலிருந்து பிரிந்து, கலகம் விளைவித்து, தங்களை விட்டுப்போய் லாமானியருடன் சேர்ந்துகொண்டு தங்களை அழிக்கப்போன, காட்டுமிராண்டித்தனமான கொடுமையினால் தங்கள் மனைவிகளும் தங்கள் பிள்ளைகளும் படுகொலை செய்யப்படும்படியாக அவர்கள் தங்கள் ஜீவனைக் கொடுக்க விரும்பவில்லை.

25 ஆம், அங்கே தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற யாரேனும் இருக்கும் மட்டும், நேபியர்களின் இரத்தத்தினிமித்தம், தங்களின் சகோதரர் களிகூர்ந்திருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்கள் தம்முடைய கட்டளைகளைக் கைக்கொண்டால், அவர்கள் தேசத்தில் விருத்தியடைவார்கள், என்பதே கர்த்தரின் வாக்குத்தத்தமாய் இருந்தது.