வேதங்கள்
ஆல்மா 21


ஆரோன், மூலொக்கி மற்றும் அவர்களுடைய சகோதரர் லாமானியருக்கு பிரசங்கித்தலைப்பற்றிய விவரம்.

அதிகாரங்கள் 21 முதல் 25 உள்ளிட்டவை.

அதிகாரம் 21

ஆரோன் அமலேக்கியருக்கு கிறிஸ்துவைப்பற்றியும், அவருடைய பாவநிவர்த்தியைக் குறித்தும் போதித்தல் – ஆரோனும் அவன் சகோதரரும் மித்தோனியில் சிறையில் அடைக்கப்படுதல் – அவர்கள் விடுதலையான பின்பு ஜெபவீடுகளில் போதித்து, அநேகரை மனமாறச் செய்தல் – லாமோனி இஸ்மவேல் தேசத்திலிருக்கும் ஜனங்களுக்கு மதச் சுதந்தரத்தை அளித்தல். ஏறக்குறைய கி.மு. 90–77.

1 லாமானியரின் தேச எல்லையிலே அம்மோனும் அவன் சகோதரரும் பிரிந்துசென்ற பின்பு, இதோ, ஆரோன் தன் பிரயாணத்தை எருசலேம் என்று, லாமானியரால் அழைக்கப்பட்ட தேசத்தை நோக்கி மேற்கொண்டான், அதை அவர்கள் தங்கள் தகப்பன்மார்களின் பூர்வீகதேசத்தின்படியே அழைத்தார்கள். அது மார்மனின் எல்லைகளை இணைத்து, தூரமாய் இருந்தது.

2 லாமானியரும் அமலேக்கியரும், அமுலோன் ஜனத்தாரும், எருசலேம் என்று அழைக்கப்பட்ட பெரிய பட்டணத்தைக் கட்டினார்கள்.

3 லாமானியர் தாங்களே போதுமானபடி கடினப்பட்டவர்களாயும், அமலேக்கியரும் அமுலோனியரும் மிகவும் கடினப்பட்டவர்களாயும் இருந்தார்கள். ஆகவே அவர்கள் லாமானியர்களின் இருதயங்களைக் கடினப்படுத்தி, அவர்களை துன்மார்க்கத்திலும் அருவருப்புகளிலும் பெலப்படச் செய்தார்கள்.

4 அந்தப்படியே, ஆரோன் எருசலேம் பட்டணத்திற்கு வந்து, முதலாவதாய் அமலேக்கியருக்கு பிரசங்கிக்க ஆரம்பித்தான். அவன் அவர்களுடைய ஜெப ஆலயங்களிலே அவர்களுக்குப் போதித்தான். ஏனெனில் அவர்கள் நிகோரின் முறைமையின்படி ஜெப ஆலயங்களைக் கட்டினார்கள்; ஏனெனில் அமலேக்கியரிலும், அமுலோனியரிலும் அநேகர் நிகோரின் முறைமையின்படியானவர்கள்.

5 ஆதலால், ஜனங்களுக்கு பிரசங்கிக்க ஆரோன் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் பிரவேசித்து, அவர்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கையில், இதோ, அங்கே ஒரு அமலேக்கியன் எழுந்து, அவனுடனே தர்க்கம்பண்ணி, நீ சாட்சி கொடுத்தது என்ன? நீ தூதனைக் கண்டிருக்கிறாயோ? தூதர்கள் ஏன் எங்களுக்கு தரிசனமாவதில்லை? இதோ, இந்த ஜனமும் உன் ஜனத்தாரைப்போல நல்லவர்கள் இல்லையா? என்றான்.

6 நாங்கள் மனந்திரும்பவில்லையெனில் அழிந்துபோவோம், என்று நீ சொல்லுகிறாய். நீ எங்களுடைய எண்ணத்தையும் எங்கள் இருதயத்தையும் அறிந்ததெப்படி? மனந்திரும்ப எங்களுக்கு காரணம் இருந்ததென எப்படி அறிவாய்? நாங்கள் நீதியுள்ள ஜனம் இல்லை என்று எப்படி அறிவாய்? இதோ நாங்கள் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினோம். தேவனைத் தொழுதுகொள்ள ஏகமாய்க் கூடுகிறோம். தேவன் மனுஷர் யாவரையும் இரட்சிப்பாரென்று விசுவாசிக்கிறோமென்று சொன்னான்.

7 ஆரோன் அவனை நோக்கி: தேவகுமாரன் மனுக்குலத்தை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்டுக்கொள்ள வருவாரென்று விசுவாசிக்கிறாயா என்று கேட்டான்.

8 அதற்கு அந்த மனுஷன் அவனை நோக்கி: நீ அப்பட்டிப்பட்ட ஒரு காரியத்தை அறிந்திருக்கிறாய் என்று நாங்கள் நம்பவில்லை. அப்படிப்பட்ட புத்தியீன பாரம்பரியங்களிலே நாங்கள் விசுவாசிக்கிறதில்லை. வரவிருக்கிறவைகளைக் குறித்து நீ அறிவாய் எனவோ, உன் பிதாக்களும், எங்கள் பிதாக்களும் அவர்கள் பேசியவைபற்றி அறிந்திருந்தார்கள் என்றும், நாங்கள் விசுவாசிக்கிறதில்லை, என்று சொன்னான்.

9 இப்பொழுது ஆரோன், கிறிஸ்துவினுடைய வருகையைப்பற்றியும், மரித்தோரின் உயிர்த்தெழுதலைப்பற்றியும், கிறிஸ்துவினுடைய மரணமும், பாடுகளினாலுமேயன்றி, மனுக்குலத்திற்கு மீட்பில்லை என்றும், அவருடைய இரத்தத்தின் பாவநிவர்த்தியைக் குறித்த வேத வாக்கியங்களை அவர்களுக்கு விவரிக்கத் துவங்கினான்.

10 அந்தப்படியே, இவைகளைக் குறித்து அவர்களுக்கு வியாக்கியானம் பண்ணுகையில், அவர்கள் இவன்மேல் கோபம்கொண்டு, அவனைப் பரியாசம் பண்ணினார்கள்; அவன் பேசின வார்த்தைகளைக் கேட்க அவர்கள் வாஞ்சிக்கவில்லை.

11 ஆதலால் அவன் தன் வார்த்தைகளை அவர்கள் கேட்க மாட்டார்கள் என்று கண்டு, அவர்களுடைய ஜெப ஆலயங்களைவிட்டு புறப்பட்டு, அனி-அந்தி என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமத்திற்கு வந்தான். அங்கே அவர்களுக்கு மூலொக்கியும், ஆம்மாவும், அவன் சகோதரரும் வார்த்தையைப் பிரசங்கிப்பதைக் கண்டான். அவர்கள் வார்த்தையைப்பற்றி அநேகருடன் தர்க்கம் பண்ணினார்கள்.

12 அந்தப்படியே, ஜனங்கள் தங்கள் இருதயங்களை கடினப்படுத்துவார்கள், என அவர்கள் கண்டதால், அவர்கள் புறப்பட்டு மித்தோனி தேசத்திற்கு வந்தார்கள். அவர்கள் அநேகருக்கு வார்த்தையைப் பிரசங்கித்தார்கள். அவர்கள் போதித்த வார்த்தைகளை சிலர் விசுவாசித்தார்கள்.

13 இருப்பினும், ஆரோனும் அவன் சகோதரரில் சிலரும் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீந்திருந்தவர்கள் மித்தோனி தேசத்தைவிட்டு ஓடி சுற்றுப்புறமுள்ள பகுதிகளுக்கு ஓடிப்போனார்கள்.

14 சிறையில் தள்ளப்பட்டவர்கள் அநேக பாடுகள் பட்டார்கள். அவர்கள் லாமோனி மற்றும் அம்மோனின் கரத்தால் தப்புவிக்கப்பட்டு, போஷிக்கப்பட்டு, வஸ்திரம் உடுத்தப்பட்டார்கள்.

15 மறுபடியும் அவர்கள் வசனத்தை அறிவிக்கப்போனார்கள். இவ்விதமாய் முதல் முறையாய் அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். இவ்விதமாய் அவர்கள் பாடுகளையும் அனுபவித்திருந்தார்கள்.

16 அவர்கள் கர்த்தரின் ஆவியால் நடத்தப்பட்டு எவ்விடத்திற்கும்போய், தாங்கள் அனுமதிக்கப்பட்ட அமுலேக்கியரின் எல்லா ஜெப ஆலயங்களிலும், அல்லது லாமானியரின் சகல ஆலயங்களிலும் தேவ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.

17 அந்தப்படியே, சத்தியத்தைப்பற்றிய ஞானத்திற்கு அநேகரைக் கொண்டுவருமளவிற்கு, கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கத் துவங்கினார்; ஆம், அநேகரை அவர்கள் பாவங்களைக் குறித்தும், அவர்களுடைய தகப்பன்மார்களின் தவறான பாரம்பரியத்தைக் குறித்தும், அவர்கள் உணரப்பண்ணினார்கள்.

18 அந்தப்படியே, அம்மோனும், லாமோனியும், மித்தோனி தேசத்தை விட்டு, தங்களுடைய சுதந்தர தேசமாகிய இஸ்மவேலின் தேசத்திற்குத் திரும்பினார்கள்.

19 லாமோனி ராஜா, அம்மோன் தனக்கு ஊழியக்காரனாய் இருக்கவோ, அல்லது தனக்கு பணிவிடை செய்யவோ அனுமதிக்கவில்லை.

20 அவன் இஸ்மவேல் தேசத்திலே ஜெப வீடுகள் கட்டப்படும்படி செய்தான்; அவன் தன் ஜனம், அல்லது தன் ஆளுகையின் கீழ் இருந்த ஜனத்தை ஏகமாய்க் கூடிவரச்செய்தான்.

21 அவன் அவர்களைக் குறித்து களிகூர்ந்து, அவர்களுக்கு அநேக காரியங்களைப் போதித்தான். அவன் அவர்களிடத்தில், அவர்கள் தனக்கு கீழ்ப்பட்ட ஜனமென்றும், அவர்கள் சுயாதீனர்களென்றும், இஸ்மவேலின் தேசத்திலும், அதைச் சுற்றியுள்ள தேசமனைத்திலுமுள்ள ஜனங்கள்மீது, தான் ராஜரீகம்பண்ணும்படி ராஜாவாகிய தன் தகப்பன் தனக்கு அருளியதாலே, தன் தகப்பனின் ஒடுக்கத்திற்கு ஆளாகாமல், சுயாதீனர்களாயிருக்கிறார்களென்று அறிவித்தான்.

22 அவர்கள் லாமோனி ராஜா ஆளுகை செய்யும் தேசத்திலுள்ள எவ்விடத்திலும், தங்களுடைய விருப்பதிற்கேற்ப தேவனாகிய, தங்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ள சுதந்திரம் அவர்களுக்கு உண்டாயிருக்கிறதென்றும், அவர்களுக்கு அறிவித்தான்.

23 லாமோனி ராஜாவினுடைய ஜனத்திற்கு அம்மோன் பிரசங்கித்தான், அந்தப்படியே, அவன் நீதிக்கேற்ற சகல காரியங்களையும் அவர்களுக்குப் போதித்தான். அவன் சகல கருத்துடனே அவர்களுக்கு அனுதினமும் புத்தி சென்னான். அவர்கள் அவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுத்தார்கள். அவர்கள் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.