வேதங்கள்
ஆல்மா 34


அதிகாரம் 34

இரட்சிப்பை உண்டாக்குகிற வார்த்தை கிறிஸ்துவில் இருக்கிறதென்று அமுலேக் சாட்சி கொடுத்தல் – பாவநிவர்த்தி செய்யப்படாவிடில், மனுஷகுலம் யாவும் அழிய வேண்டும் – மோசேயின் நியாயப்பிரமாணம் முழுவதும், தேவகுமாரனின் பலியைக் குறிக்கிறது – மீட்பைப்பற்றிய நித்திய திட்டம் விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது – லௌகீக மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக ஜெபியுங்கள் – இந்த வாழ்க்கை மனுஷர்கள் தேவனை சந்திக்க ஆயத்தப்படும்படியான காலமே – பயத்தோடு தேவனுக்கு முன்பாக உங்கள் இரட்சிப்புக்காகப் பிரயாசப்படுங்கள். ஏறக்குறைய கி.மு. 74

1 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மா இவ்வார்த்தைகளை அவர்களுக்குப் பேசி முடித்த பின்பு, அவன் தரையில் அமர்ந்தான். அமுலேக் எழுந்து அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கிச் சொன்னதாவது:

2 என் சகோதரரே, தேவகுமாரன் என்று நாங்கள் போதிக்கிற, கிறிஸ்துவின் வருகையைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிற காரியங்களை நீங்கள் அறியாதிருப்பது கூடாத காரியம், என நான் நினைக்கிறேன். ஆம், நீங்கள் எங்களுக்குள்ளிருந்து பிரிந்து போகாததற்கு முன்னமேயே, இவைகளைக் குறித்து அதிகமாய்ப் போதிக்கப்பட்டிருக்கிறீர்கள், என்று நான் அறிவேன்.

3 நீங்கள் என் அருமை சகோதரனிடம், உங்கள் உபத்திரவங்களினிமித்தம், நீங்கள் செய்யவேண்டியதை அவன் தெரிவிக்க வேண்டும் என வாஞ்சித்தீர்கள்; அவன் உங்கள் மனங்களை ஆயத்தப்படுத்த, உங்களிடம் சிலவற்றைப் பேசினான். உங்களுக்கு விசுவாசமாயிருக்கும்படியும், பொறுமையாயிருக்கும்படியும் புத்தி சொன்னான்.

4 ஆம், வார்த்தையை உங்கள் இருதயங்களில் வைத்து, அதன் நன்மையைச் சோதித்தறியும்படியான விசுவாசத்தை நீங்கள் பெற்றிருக்கும்படிக்கும் புத்தி சொன்னான்.

5 வார்த்தை தேவகுமாரனில் இருக்கிறதா, அல்லது கிறிஸ்து இருக்கமாட்டாரா என்ற, உங்கள் மனங்களில் இருக்கிற, அந்தப் பெரிய கேள்வியை நாங்கள் கண்டிருக்கிறோம்.

6 இரட்சிப்பை உண்டாக்குகிற வார்த்தை கிறிஸ்துவில் இருக்கிறதென்று, என் சகோதரன் அநேக தடவைகள் உங்களுக்கு நிரூபித்ததையும் பார்த்திருக்கிறீர்கள்.

7 என் சகோதரன், தேவகுமாரன் மூலமாய் மீட்பு வரும் என்ற சீனஸின் வார்த்தைகளையும், சீனாக்கின் வார்த்தைகளையும் குறிப்பிட்டிருக்கிறான்; இக்காரியங்கள் உண்மையே என்று நிரூபிக்க மோசேயையும் குறிப்பிட்டிருக்கிறான்.

8 இப்பொழுதும், இதோ, என்னைப் பொறுத்தமட்டில் இவைகள் உண்மை என்று உங்களுக்குச் சாட்சி கொடுக்கிறேன். இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தேவனாகிய கர்த்தர் பேசியிருக்கிறபடியே, கிறிஸ்து தம்முடைய ஜனத்தின் மீறுதல்களை தம்மேல் எடுத்துக்கொள்வதற்காக மனுபுத்திரருக்குள்ளே வருவாரென்றும், உலகத்தினுடைய பாவங்களுக்காக அவர் பாவநிவர்த்திபண்ணுவார், என்றும் நான் அறிவேன், ஏனெனில் கர்த்தராகிய தேவன் இதைச் சொன்னார்.

9 ஏனெனில் பாவநிவர்த்தி செய்யப்படவேண்டியது அவசியமாகும். ஏனெனில் நித்திய தேவனுடைய மாபெரும் திட்டத்தின்படி பாவநிவர்த்தி செய்யப்படவேண்டும். இல்லாவிடில் மனுஷகுலம் யாவும் தவிர்க்க முடியாமல் அழிய வேண்டும்; ஆம், எல்லோரும் கடினப்பட்டு வீழ்ந்து, தொலைந்து போனார்கள். அவசியமாய் பண்ணப்படவேண்டிய பாவநிவர்த்தி மூலமேயன்றி சகலமும் அழிந்துபோகவேண்டும்.

10 ஏனெனில் பெரிதும், கடைசியுமான பலி அவசியமாயிருக்கிறது; ஆம், அது மனுஷ பலியோ, விலங்கு பலியோ, எந்த விதமான பட்சி பலியோ அல்ல; ஏனெனில் அது மனுஷ பலியாக இருக்காது; ஆனால் அது அநாதியும், நித்தியமுமான பலியாயிருக்கவேண்டும்.

11 இப்போது மற்றொருவனுடைய பாவங்களை நிவர்த்தியாக்க, தன் இரத்தத்தை பலியாகக் கொடுக்கக்கூடிய எந்த மனுஷனுமில்லை. இப்பொழுது ஒரு மனுஷன் கொலை செய்தால், இதோ நியாயமான நம்முடைய சட்டம் அவன் சகோதரனுடைய ஜீவனை வாங்குமா? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்படியல்ல.

12 நியாயப்பிரமாணமோ கொலை செய்தவனுடைய ஜீவனைக் கேட்கிறது. ஆகையால் உலகத்தினுடைய பாவங்களுக்கு ஈடான முடிவற்ற பாவநிவர்த்தியைத் தவிர வேறெதுவும் இருக்கமுடியாது.

13 ஒரு பெரியதும், கடைசியுமான பலி அவசியம். அப்போதுதான் இரத்தம் சிந்துதல் முற்றுப்பெறும். அப்படி முற்றுப்பெறுவது அவசியம்; அப்பொழுது மோசேயின் நியாயப்பிரமாணம் நிறைவேறும்; ஆம், எல்லாம் நிறைவேற்றப்படும், ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும், எதுவும் ஒழிந்து போயிருக்காது.

14 இதோ, இதுவே நியாயப்பிரமாணத்தின் முழு அர்த்தம். சகலமும் அந்தப் பெரிதும், கடைசியுமான பலியைக் குறிக்கின்றன. அநாதியானவரும், நித்தியமானவருமான தேவ குமாரனே, அந்தப் பெரிதும், கடைசியுமான பலியாயிருப்பார்.

15 இவ்விதமாக அவர் தம்முடைய நாமத்தில் விசுவாசிக்கிற யாவர் மீதும் இரட்சிப்பைக் கொண்டு வருவார்; நியாயத்தை ஜெயிக்கிற இரக்கத்தைக் கொண்டு வருவதும், மனுஷர் மனந்திரும்பும்படியான விசுவாசத்தைப் பெற வழியை ஏற்படுத்துவதுமே, இந்தக் கடைசி பலியின் நோக்கமாயிருக்கிறது.

16 இப்படியாக இரக்கம் நியாயத்தின் தேவைகளை நிவர்த்தியாக்கி, அவர்களை பாதுகாப்பெனும் கரங்களால் அரவணைக்கிறது. மனந்திரும்புதலுக்குள்ளான விசுவாசத்தை பிரயோகிக்காதவனோ, நீதியின் தேவைகளின் முழு நியாயப்பிரமாணத்திற்கும் வெளியரங்கப்படுத்தப்படுகிறான்; ஆகவே மனந்திரும்புதலுக்கான விசுவாசத்தைப் பெற்றிருப்பவனுக்கே பெரிதும், நித்தியமுமான மீட்பின் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

17 ஆகவே என் சகோதரரே, அவர் உங்கள் மீது இரக்கம் கொள்ள, அவருடைய பரிசுத்த நாமத்தில் ஜெபிக்கத் தொடங்க, நீங்கள் உங்கள் விசுவாசத்தை மனந்திரும்புதலுக்குள்ளாக பிரயோகப்படுத்தத் தொடங்கும்படியாக, தேவன் உங்களுக்கு அருளுவாராக.

18 ஆம், இரக்கத்திற்காக கூக்குரலிடுங்கள்; ஏனெனில் அவர் இரட்சிக்க வல்லவர்.

19 ஆம், உங்களைத் தாழ்த்தி, அவரிடத்தில் தொடர்ந்து ஜெபியுங்கள்.

20 நீங்கள் உங்கள் வயல்களில் இருக்கும்போதும், உங்கள் சகல மந்தைகளுக்காகவும் அவரிடத்தில் கூக்குரலிடுங்கள்.

21 காலையும், மதியமும், மாலையும், உங்கள் வீட்டார் யாவருக்காகவும், உங்கள் வீடுகளிலிருந்தவாறே, அவரிடத்தில் கூக்குரலிடுங்கள்.

22 ஆம், உங்கள் சத்துருக்களின் வல்லமைக்கெதிராய் அவரிடத்தில் கூக்குரலிடுங்கள்.

23 ஆம், சகல நீதிக்கும் சத்துருவான பிசாசுக்குக்கெதிராய் அவரிடத்தில் கூக்குரலிடுங்கள்.

24 அவைகளினிமித்தம் நீங்கள் செழிக்க, உங்கள் வயல்களின் பயிர்களுக்காக, அவரிடத்தில் கூக்குரலிடுங்கள்.

25 உங்கள் வயல்களின் மந்தைகள் பெருகும்படியாக, கூக்குரலிடுங்கள்.

26 இது மாத்திரமல்ல; நீங்கள் உங்கள் அறைவீடுகளிலும், அந்தரங்க இடங்களிலும், வனாந்தரங்களிலும் உங்கள் ஆத்துமாக்களை ஊற்ற வேண்டும்.

27 ஆம், நீங்கள் கர்த்தரிடத்தில் கூக்குரலிடாதபோது, உங்களுடைய இருதயம், உங்கள் நலனுக்காகவும், உங்களைச் சுற்றியிருப்போர் நலனுக்காகவும், தொடர்ந்து ஜெபத்தில் ஆழ்ந்து நிரம்பியிருப்பதாக.

28 இப்பொழுதும் இதோ, என் பிரியமான சகோதரரே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இவ்வளவுதான் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். இவைகள் அனைத்தையும் நீங்கள் செய்த பின்பு, தேவையிலிருப்போரையும் வஸ்திரமில்லாதோரையும் திருப்பி அனுப்பி, வியாதியஸ்தரையும், உபத்திரவப்படுவோரையும் விசாரிக்காமல், உங்களிடத்தில் பொருள் இருக்குமானால், அதை தேவைப்படுவோருக்குக் கொடாமல் இருந்தால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இவைகளில் யாதொன்றையும் செய்யாமற்போனால், இதோ, உங்கள் ஜெபம் வீணாய்ப்போகும். யாதொரு பலனையும் ஈயாது. நீங்கள் விசுவாசத்தை மறுதலிக்கிற மாயக்காரருக்கு ஒப்பாவீர்கள்.

29 ஆகையால் நீங்கள் தயாளமுள்ளோராயிருக்க மறந்தால், புடமிடுகிறவனால் தள்ளப்படுகிறதும், மனுஷரால் மிதிக்கப்படுகிறதுமான (பிரயோஜனமற்ற) களிம்பிற்கு ஒப்பாவீர்கள்.

30 இப்பொழுதும், என் சகோதரரே, அநேக சாட்சிகளைப் பெற்று, இவைகளைக் குறித்து பரிசுத்த வேதங்களும் சாட்சி கொடுக்கிறதையும் கண்ட பின்னர், நீங்கள் வந்து மனந்திரும்புதலுக்கான கனியைக் கொடுக்கும்படி விரும்புகிறேன்.

31 ஆம், நீங்கள் இனிமேலும் உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாமல், வரும்படி விரும்புகிறேன்; ஏனெனில் இதோ, இதுவே உங்களின் இரட்சிப்பின் காலமும், நாளுமாயிருக்கிறது; ஆகையால், நீங்கள் மனந்திரும்பி, உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாமல் இருந்தால், உடனே அந்தப் பெரிய மீட்பின் திட்டம் உங்களில் நிறைவேற்றப்படும்.

32 ஏனெனில் இதோ, இந்த ஜீவியம் மனுஷருக்குத் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படும் ஒரு காலமாயிருக்கிறது; ஆம், இதோ, இந்த ஜீவியத்தின் நாள், மனுஷர் தங்கள் பிரயாசங்களைச் செய்யும் நாளாயிருக்கிறது.

33 இப்பொழுதும், நான் முன்னே உங்களுக்குச் சொன்னது போலவே, நீங்கள் அநேக சாட்சிகளைப் பெற்றிருப்பதால், முடிவுவரைக்கும், உங்கள் மனந்திரும்பும் நாளைத் தள்ளிப்போட வேண்டாமென்று உங்களிடம் மன்றாடுகிறேன்; இதோ, இந்த ஜீவியத்தில் நம்முடைய காலத்தை மேம்படுத்தாமல் போனால், நித்தியத்திற்காக ஆயத்தம் பண்ணும்படி நமக்கு கொடுக்கப்பட்ட இந்த ஜீவிய காலத்திற்குப் பின்பு, எந்த பிரயாசமும் செய்ய முடியாத காரிருளான இராக்காலம் வரும்.

34 அந்த பயங்கரமான கஷ்டகாலத்திற்குக் கொண்டு போகப்பட்ட பின்பு, நான் என் தேவனிடத்தில் திரும்பி வரும்படி மனந்திரும்புவேன் என்று உங்களால் சொல்ல முடியாது. நீங்கள் இதைச் சொல்ல முடியாது, ஏனெனில் இந்த ஜீவியத்திலிருந்து நீங்கள் போகும்பொழுது, அதே ஆவி உங்கள் சரீரங்களை ஆட்கொண்டிருப்பதால், நித்திய உலகத்திலும் உங்கள் சரீரங்களை ஆட்கொள்ள அதே ஆவிக்கு வல்லமை உண்டாயிருக்கும்.

35 ஏனெனில் இதோ, நீங்கள் மரணம் மட்டுமாய் உங்கள் மனந்திரும்பும் நாளைத் தள்ளிப் போடுவீர்களெனில், இதோ, நீங்கள் பிசாசின் ஆவிக்கு கீழ்ப்பட்டுப்போய், அவன் உங்களைத் தன்னுடையவர்கள் என்று முத்திரையிட்டுக் கொள்வான். ஆதலால் கர்த்தருடைய ஆவி உங்களிலிருந்து நீங்கி, உங்களில் இடம்கொள்ளாமல் போகும். பிசாசு உங்கள் மேல் சகல அதிகாரத்தையும் செலுத்துவான்; இதுவே துன்மார்க்கரின் இறுதி நிலை.

36 அவர் அசுத்த ஆலயங்களில் வாசம்பண்ணாமல், நீதிமான்களின் இருதயங்களில் வாசம் பண்ணுகிறார் என்று கர்த்தர் சொன்னதினிமித்தம், இதை நான் அறிவேன்; ஆம், நீதிமான்கள் இனி ஒருபோதும் வெளியே போகாதபடிக்கு, அவருடைய ராஜ்யத்திலே வீற்றிருப்பார்கள் என்றும், ஆனால் அவர்களுடைய வஸ்திரம் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் வெண்மையாக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், அவர் சொன்னார்.

37 இப்பொழுதும் என் பிரியமான சகோதரரே, நீங்கள் இவைகளை நினைவில் கொண்டு, தேவனுக்கு முன்பாகப் பயத்தோடு உங்கள் இரட்சிப்புக்காக பிரயாசப்படவேண்டுமென்றும், இனிமேலும் கிறிஸ்துவின் வருகையை மறுக்கக்கூடாதென்றும்,

38 பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாய் பிணக்கு பண்ணாதபடிக்கு, ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும்படிக்கும், கிறிஸ்துவின் நாமத்தை உங்கள்மீது தரித்துக் கொள்ளும்படிக்கும், தூசிக்கு ஒப்பாய் உங்களையே தாழ்த்தி, நீங்கள் இருக்குமிடம் எவ்விடமானாலும், ஆவியோடும், சத்தியத்தோடும் தேவனைத் தொழுது கொள்ளும்படிக்கும், உங்கள்மீது அவர் அருளுகிற அநேக இரக்கங்களுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் தினமும் நன்றிகளை ஏறெடுப்பவர்களாய் ஜீவிக்க வேண்டுமென்றும், நான் வாஞ்சிக்கிறேன்.

39 ஆம், என் சகோதரரே, நீங்கள் பிசாசின் சோதனைகளால் நடத்தப்படாதபடிக்கும், அவன் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாதபடிக்கும், கடைசி நாளின்போது, நீங்கள் அவனுடைய பிரஜைகள் ஆகாதபடிக்கும், நீங்கள் தொடர்ந்து ஜெபத்தில் விழித்திருக்க வேண்டுமென்று, உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன். ஏனெனில் இதோ, அவன் எந்த நல்ல காரியத்தையும் உங்களுக்குப் பிரதிபலனாய் அளிப்பதில்லை.

40 இப்பொழுது என் பிரியமான சகோதரரே, சகலவிதமான உபத்திரவங்களையும் சகிக்கும்படிக்கும், உங்களுடைய மிகுந்த வறுமையினிமித்தம், உங்களை புறம்பே தள்ளுகிறவர்களுக்கு விரோதமாய் நீங்கள் தூஷிக்காமல், நீங்களும் அவர்களைப் போல பாவிகளாகாதபடிக்கு, நீங்கள் பொறுமையாய் இருக்கவேண்டுமென்றும்,

41 ஆனால், ஒருநாள் உங்கள் உபத்திரவங்களிலிருந்து இளைப்பாறுவீர்கள் என்ற திடநம்பிக்கையோடு, அந்த உபத்திரவங்களை பொறுமையாய் சகித்திருக்கும்படிக்கும், உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.