வேதங்கள்
ஆல்மா 30


அதிகாரம் 30

கோரிகோர் என்னும் அந்திக்-கிறிஸ்து, கிறிஸ்துவையும், பாவநிவர்த்தியையும், தீர்க்கதரிசன ஆவியையும் ஏளனம் செய்தல் – அவன் தேவனில்லையென்றும், மனித வீழ்ச்சியில்லையென்றும், பாவத்திற்குத் தண்டனையில்லையென்றும், கிறிஸ்து இல்லையென்றும் போதித்தல் – கிறிஸ்து வருவாரென்றும், சகல காரியங்களும் தேவன் ஒருவர் உண்டென்று புலப்படுத்துகிறதென்றும் ஆல்மா சாட்சி கொடுத்தல் – கோரிகோர் ஒரு அறிகுறியைக் கோருதலும், அவன் ஊமையாக்கப்படுதலும் – கோரிகோரினிடத்தில் பிசாசு ஒரு தூதனைப்போலத் தோன்றி, சொல்லவேண்டியதென்ன என்று அவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தான் – கோரிகோர் மிதிபட்டு மரித்துப்போகுதல். ஏறக்குறைய கி.மு. 76–74.

1 இதோ, இப்பொழுது, அந்தப்படியே, எருசோன் தேசத்தில் அம்மோன் ஜனங்கள் நிலைப்படுத்தப்பட்ட பின்பும், ஆம், தேசங்களிலிருந்து லாமானியர் துரத்தப்பட்ட பின்பும், அவர்களது மரித்தோர் அந்த தேசத்திலுள்ள ஜனங்களால் அடக்கம் பண்ணப்பட்டனர்.

2 இப்பொழுது, அதிகமானோர் மரித்ததினிமித்தம் அவர்களது மரித்தோர் எண்ணப்படவில்லை. நேபியரின் மரித்தோரும் எண்ணப்படவில்லை. ஆனால் அந்தப்படியே, அவர்களது மரித்தோர் அடக்கம் பண்ணப்பட்ட பின்பு, உபவாசம், துக்கம் மற்றும் ஜெப நாட்கள் கழிந்த பின்பும் (நேபியின் ஜனங்களின்மீது நியாயாதிபதிகளின் பதினாறாம் வருஷ ஆளுகையின்போது) அங்கே தேசமுழுவதும் தொடர்ந்து சமாதானம் நிலவத் தொடங்கியது.

3 ஆம், ஜனங்கள் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு ஆசரித்தார்கள்; அவர்கள் தேவ நியமங்களை மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கேற்ப ஆசரிப்பதில் உறுதியாயிருந்தார்கள். ஏனெனில் மோசேயின் நியாயப்பிரமாணம் நிறைவேறும்வரைக்கும் அதைக் கைக்கொள்ளும்படி அவர்கள் போதிக்கப்பட்டிருந்தார்கள்.

4 நேபியின் ஜனங்களின் மீது, நியாயாதிபதிகளின் ஆளுகையின் பதினாறாம் வருஷ முழுவதிலும் ஜனங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை.

5 அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் பதினேழாம் வருஷ துவக்கத்திலும் அங்கே தொடர்ந்து சமாதானம் நிலவியது.

6 ஆனால், அந்தப்படியே, பதினேழாம் வருஷத்தின் பிற்பகுதியில், சாரகெம்லா தேசத்தினுள் ஒருவன் வந்தான். அவன் அந்திக் கிறிஸ்துவாயிருந்தான். ஏனெனில் கிறிஸ்துவின் வருகையைக் குறித்து தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்களுக்கு விரோதமாய் ஜனங்களிடத்தில் அவன் போதிக்கலானான்.

7 மனுஷனுடைய நம்பிக்கைக்கு விரோதமாய் எந்த நியாயப்பிரமாணமுமில்லை; ஏனெனில் மனுஷரை பட்சபாதமான நிலைக்குக் கொண்டு செல்கிற நியாயப்பிரமாணம் இருப்பது தேவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் முரணானது.

8 ஏனெனில் வேதம் இப்படிச் சொல்லுகிறது: நீங்கள் யாரைச் சேவிப்பீர்களென்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

9 இப்பொழுது தேவனைச் சேவிக்க ஒரு மனுஷன் விரும்பினால் அது அவனுடைய சிலாக்கியம்; அல்லது அவன் தேவனில் விசுவாசித்தால் அது அவரை சேவிக்கும்படியேயான அவனுடைய சிலாக்கியமாயிருக்கிறது; ஆனால் அவன் அவரில் விசுவாசியாமற்போனால் அவனைத் தண்டிக்க எந்த நியாயப்பிரமாணமுமில்லை.

10 ஆனால் அவன் கொலை செய்தால் அவன் மரணத்திற்கேதுவாய் தண்டிக்கப்பட்டான்; அவன் திருடினாலும் தண்டிக்கப்பட்டான்; அவன் களவு செய்தாலும் தண்டிக்கப்பட்டான்; அவன் விபசாரம் புரிந்தாலும் தண்டிக்கப்பட்டான்; ஆம், இந்த எல்லா துன்மார்க்கத்திற்காகவும் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

11 ஏனெனில், மனுஷர் தங்களுடைய குற்றங்களுக்குத் தக்கதாக நியாயந்தீர்க்கப்பட வேண்டுமென்ற ஒரு நியாயப்பிரமாணம் அங்கே இருந்தது. இருப்பினும் ஒரு மனுஷனுடைய நம்பிக்கையை எதிர்த்து ஒரு சட்டமும் அங்கே இல்லை; எனவே ஒருவன் தான் செய்த குற்றத்திற்காக மாத்திரமே தண்டிக்கப்பட்டான், ஆகவே மனுஷர் யாவரும் சமமான நிலையில் இருந்தார்கள்.

12 கோரிகோர் என்று பெயர்கொண்ட இந்த அந்தி கிறிஸ்து (நியாயப்பிரமாணம் இவன் மீது அதிகாரத்தைச் செலுத்த முடியவில்லை) கிறிஸ்து இருக்க முடியாதென்று மக்களிடத்தில் பிரசங்கிக்கலானான். அவன் பிரசங்கித்துச் சொன்னவிதமாவது:

13 பைத்தியமும், வீணானதுமான நம்பிக்கையின் கீழ் கட்டப்பட்டிருப்போரே, நீங்கள் ஏன் அப்படிப்பட்ட பைத்தியமானவைகளைக் கொண்டு உங்களை நீங்களே பிணைத்துக் கொள்ளுகிறீர்கள்? நீங்கள் ஏன் கிறிஸ்துவை எதிர்பார்க்கிறீர்கள்? ஏனெனில் வரப்போகிற எதைக் குறித்தும் ஒருவனாலும் அறியக்கூடாதே.

14 இதோ, பரிசுத்த தீர்க்கதரிசிகளால் கொடுக்கப்பட்டது, என்று நீங்கள் சொல்லுகிற, தீர்க்கதரிசனங்கள் என்று நீங்கள் அழைக்கிற இக்காரியங்கள், இதோ, உங்கள் பிதாக்களினுடைய பைத்தியமான பாரம்பரியங்களே.

15 அவைகளினுடைய நிச்சயத்தை நீங்கள் எப்படி அறிவீர்கள்? இதோ, நீங்கள் காணாதவைகளைக் குறித்து அறியக்கூடாதே; ஆதலால் கிறிஸ்து என்று ஒருவர் உண்டென்று உங்களால் அறிய முடியாது.

16 நீங்கள் எதிர்பார்த்து, பாவமன்னிப்பைக் காண்பதாகச் சொல்லுகிறீர்கள். ஆனால் இதோ, அது கிறுக்கு பிடித்த மனத்தினால் உண்டான பாதிப்பாகும். மெய்யற்ற காரியங்களில் விசுவாசிக்க உங்களை நடத்திச் செல்லும் உங்களின் பிதாக்களுடைய பாரம்பரியத்தினிமித்தமே உங்களுக்கு இந்த மனப்பிரமை உண்டாகிறது.

17 இப்படிப்பட்ட இன்னும் அநேகத்தை அவர்களுக்குச் சொன்னான். அவன், அவர்களிடத்தில் மனுஷருடைய பாவங்களுக்காக, பாவநிவர்த்தி பண்ணப்பட முடியாதென்றும், ஆனால் ஒவ்வொரு மனுஷனும் தன்னை நடத்திக்கொள்கிற விதத்தில், இந்த ஜீவியத்தில் கொடுக்கப்படுகிறான். ஆகவே அவனவன் தன் திறமைக்குத்தக்கதாக விருத்தியடைகிறான், அவனவன் தன் பலத்திற்குத்தக்கதாக ஜெயம்கொள்கிறான், ஒரு மனுஷன் எதைச் செய்தாலும் அது குற்றமில்லை.

18 இப்படியாய் அவன் அவர்களுக்குப் பிரசங்கித்து, ஒருவன் மரித்துப்போனால், அதுவே அவனுடைய முடிவு என்று அவர்களுக்குச் சொல்லி, அநேகரின் இருதயங்களை வழிநடத்தி, அவர்களுடைய துன்மார்க்கத்திலே அவர்கள் தங்கள் சிரசுகளை உயர்த்தும்படி செய்து, ஆம், அநேக ஸ்திரீகளையும், புருஷரையும் வேசித்தனம் பண்ணும்படியாக நடத்திச் சென்றான்.

19 இப்பொழுது இந்த மனுஷன், முன்னே லாமானிய ஜனமாயிருந்த, அம்மோன் ஜனத்திற்குள்ளே இக்காரியங்களைப் பிரசங்கிக்கும்படி, எருசோன் தேசத்திற்கும் போனான்.

20 ஆனால் இதோ அவர்கள் அநேக நேபியர்களைக் காட்டிலும் ஞானமுள்ளவர்களாய் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் அவனைப் பிடித்து, கட்டி, அந்த ஜனத்தின் பிரதான ஆசாரியனாயிருந்த அம்மோனிடத்தில் தூக்கிச் சென்றார்கள்.

21 அந்தப்படியே, அவன் அவனை தேசத்தைவிட்டு வெளியே கொண்டு போகும்படியாகக் கட்டளையிட்டான். அவன் கிதியோன் தேசத்திற்கு வந்து, அவர்களுக்கும் பிரசங்கம் பண்ணலானான்; இவன் இங்கே அதிகம் ஜெயம் பெறவில்லை, ஏனெனில் அவன் பிடிபட்டு, கட்டுண்டு தேசத்தின் பிரதான ஆசாரியன் முன்பும், பிரதான நியாயாதிபதியின் முன்பும் தூக்கிவரப்பட்டான்.

22 அந்தப்படியே, பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: கர்த்தருடைய வழிகளைப் புரட்டிப்போட நீ ஏன் சுற்றித்திரிகிறாய்? இந்த ஜனங்களினுடைய களிகூருதலைத் தடுக்கும்படியாக, நீ ஏன் இவர்களுக்கு கிறிஸ்து என்று ஒருவர் இருக்கமாட்டார், என்று போதிக்கிறாய்? பரிசுத்த தீர்க்கதரிசிகளின் சகல தீர்க்கதரிசனங்களுக்கும் விரோதமாய் ஏன் பேசுகிறாய் என்று கேட்டான்.

23 இப்பொழுது, இந்தப் பிரதான ஆசாரியனின் பெயர் கித்தியோன்னா என்பதாகும். கோரிகோர் அவனை நோக்கி: நான் உங்கள் பிதாக்களின் மூடபாரம்பரியங்களைப் போதிப்பதில்லையாதலால், அவர்கள்மீது பலத்தையும், அதிகாரத்தையும் செலுத்தவும், அறியாமையில் இருக்கச்செய்யவும், அவர்கள் தங்கள் சிரசுகளை உயரப்பண்ணாதபடிக்கு, ஆனால், உமது வார்த்தைகளின்படியே இந்த ஜனங்களை சிறுமைப்படுத்தவும், பூர்வகால ஆசாரியர்களால் ஏற்படுத்தப்பட்ட மூட நியமங்கள் கீழும், சடங்குகள் கீழும் தாங்களே கட்டுண்டு இருக்க இவர்களுக்கு நான் போதிப்பதில்லையே என்றான்.

24 இந்த ஜனம் சுயாதீனமுள்ள ஜனமென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இதோ, இவர்கள் அடிமைத்தனத்திலிருக்கிறார்கள், என்று நான் சொல்லுகிறேன். அந்த பூர்வகாலத்து தீர்க்கதரிசனங்கள் உண்மையென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இதோ, அவைகள் உண்மையென்று நீங்கள் அறியவில்லை, என்று நான் சொல்லுகிறேன்.

25 பெற்றோரின் மீறுதலினிமித்தம் இந்த ஜனம் குற்றமுள்ள வீழ்ந்துபோன ஜனமென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இதோ, ஒரு பிள்ளை தன் பெற்றோரினிமித்தம் குற்றமுடையதாகாது, என்று நான் சொல்லுகிறேன்.

26 கிறிஸ்து வருவாரென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால் இதோ, கிறிஸ்து உண்டென்று நீங்கள் அறியவில்லை, என்று நான் சொல்லுகிறேன். அவர் உலகத்தின் பாவங்களுக்காக கொல்லப்படுவார் என்றும் நீங்கள் சொல்கிறீர்கள்,

27 இப்படியாக இந்த ஜனத்தை உங்களுடைய பிதாக்களுடைய மூடபாரம்பரியத்தின் பிரகாரமாயும், உங்களுடைய விருப்பத்தின் படியேயும் நடத்துகிறீர்கள், அவர்களுடைய கைகளின் பிரயாசங்களால் நீங்கள் ஆடம்பரமாய் ஜீவிக்கவும், அவர்கள் தைரியமாய் ஏறிட்டுப் பார்க்காதபடிக்கும், அவர்கள் தங்கள் உரிமைகளையும் பாக்கியங்களையும் அனுபவிக்காமலிருக்கும்படிக்கும், அவர்கள் அடிமைத்தனத்திலே இருப்பதைப்போல, அவர்களைக் கீழ்ப்படுத்துகிறீர்கள்.

28 ஆம், அவர்கள் தங்களுடைய ஆசாரியர்களை கோபப்படுத்தாதபடிக்கு, தங்களின் உடைமைகளைப் பயன்படுத்தவில்லை. அந்த ஆசாரியர்களோ தங்கள் பாரம்பரியத்தின்படியும், தங்கள் சொப்பனங்களின்படியும், தங்கள் தரிசனங்களின்படியும், போலியான அதிசயங்களின்படியும், அவர்கள் நடக்கவேண்டுமென்று, தங்கள் வாஞ்சையின்படியே பிணைத்து, அவர்களை நம்ப வைக்கிறார்கள். அவர்கள் தங்கள் வார்த்தைகளின்படி செய்யவில்லையெனில் ஒருபோதும் காணப்படாததும் அறியப்படாததும், ஒருபோதும் இருந்திராததும், இருக்கப் போகாததும், தேவன் என்று இவர்கள் சொல்லுகிற, ஏதோ ஒரு அறியாத ஜீவியை கோபப்படுத்துகிறார்கள், என்கிறார்கள்.

29 இப்பொழுது பிரதான ஆசாரியனும், தலைமை நியாயாதிபதியும் அவனுடைய இருதயக் கடினத்தைக் கண்டு, ஆம், தேவனுக்கு விரோதமாயும் அவன் கலகம் செய்வான் என்று அவர்கள் கண்டபோது, அவனுடைய வார்த்தைகளுக்கு அவர்கள் பிரதியுத்தரம் அளிக்கவில்லை. அவன் கட்டப்படும்படிச் செய்தார்கள். அதிகாரிகளின் கைகளில் அவனை ஒப்புவித்து, ஆல்மா முன்பாகவும், தேசமனைத்தின் மேலும் ஆளுனராய் விளங்கிய தலைமை நியாயாதிபதி முன்பும் கொண்டு வரும்படிக்கு, அவனை சாரகெம்லா தேசத்திற்கு அனுப்பினார்கள்.

30 அந்தப்படியே, ஆல்மா மற்றும் தலைமை நியாயாதிபதி முன்பு அவன் கொண்டுவரப்பட்டபோது, அவன் கிதியோன் தேசத்தில் செய்தது போலவே செய்தான்; ஆம், அவன் தேவனைத் தூஷித்துக் கொண்டேயிருந்தான்.

31 அவன் ஆல்மாவின் முன்னே உரக்கப் பேசி, ஜனங்களினுடைய பிரயாசத்தை தங்களுடைய சுகபோக ஜீவியத்திற்கென்று எடுத்துக் கொள்ளும்படிக்கு, ஜனங்களை தங்களுடைய பிதாக்களின் அற்ப பாரம்பரியங்களுக்கேற்ப நடத்துவதாக ஆசாரியர்களையும், ஆசிரியர்களையும் குற்றம்சாட்டி, அவர்களுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்.

32 இப்பொழுதும் ஆல்மா அவனை நோக்கி: இந்த ஜனங்களுடைய பிரயாசத்தை எங்களுடைய சுகபோக ஜீவியத்திற்கென்று நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை, என்று நீ அறிந்திருக்கிறாய்; ஏனெனில் இதோ, என் ஜனங்களுக்கு தேவ வசனத்தை அறிவிக்க தேசமுழுவதிலும் நான் மேற்கொள்ளும் என்னுடைய பிரயாணங்களைப் பொருட்படுத்தாமல், நியாயாதிபதிகளின் ஆளுகை தொடக்க முதல் இதுவரைக்குமாய், என்னுடைய ஆதரவுக்கென்று என் சொந்த கைகளினால் பிரயாசப்பட்டிருக்கிறேன்.

33 நான் சபையிலே அநேக பிரயாசங்களைச் செய்திருப்பினும், என் பிரயாசத்திற்கென்று ஒரு சினயீனையாகிலும் பெற்றதேயில்லை; நியாயாசனத்திலிருந்தவர்களைத் தவிர, என் சகோதரரில் ஒருவர் கூட அப்படிப் பெற்றதில்லை. எங்களுடைய காலத்தின் சட்டத்திற்கேற்ப நாங்கள் பெற்றுக்கொண்டோம்.

34 இப்பொழுதும், சபையில் எங்களுடைய பிரயாசங்களுக்காக நாங்கள் எதையும் பெறவில்லையானால், எங்களுடைய சகோதரரின் சந்தோஷத்தில் நாங்களும் களிகூரும்படி, சத்தியத்தை அறிவிப்பதேயல்லாமல், சபையில் நாங்கள் பிரயாசப்படுகிறதினால் எங்களுக்கு உண்டான ஆதாயம் என்ன?

35 நாங்கள் ஆதாயம் பெறுவதில்லை, என்று நீ அறிந்திருந்தும், ஆதாயம் பெறவேண்டியே இந்த ஜனங்களுக்கு நாங்கள் பிரசங்கிக்கிறோம் என்று நீ ஏன் சொல்லுகிறாய்? இப்பொழுதும், இந்த ஜனங்களினுடைய இருதயங்களில் இப்படிப்பட்ட சந்தோஷத்தை உண்டாக்குகிற, நாங்கள் இவர்களை வஞ்சிக்கிறோம் என்று நீ நம்புகிறாயா என்று கேட்டான்.

36 அதற்கு கோரிகோர் பிரதியுத்தரமாக, ஆம், என்றான்.

37 பின்னும் ஆல்மா அவனை நோக்கி: தேவன் ஒருவர் உண்டென்று நீ விசுவாசிக்கிறாயா என்று கேட்டான்.

38 அதற்கு அவன், இல்லை, என்றான்.

39 இப்பொழுது ஆல்மா அவனை நோக்கி: நீ தேவன் இருப்பதையும், கிறிஸ்து உண்டென்பதையும் மறுபடியும் மறுப்பாயோ? இதோ நான் உனக்குச் சொல்லுகிறேன், தேவன் ஒருவர் உண்டென்றும், கிறிஸ்து வருவாரென்றும், நான் அறிவேன்.

40 இப்பொழுது, தேவனில்லை என்பதற்கும், கிறிஸ்து வருவதில்லை என்பதற்கும், உன்னிடத்தில் என்ன சாட்சியிருக்கிறது? உன் வார்த்தையே அல்லாமல் உன்னிடத்தில் வேறு எதுவுமில்லை, என்று நான் உனக்குச் சொல்லுகிறேன்.

41 ஆனால் இதோ, இக்காரியங்கள் உண்மையென்பதற்கு என்னிடத்தில் சகலமும் சாட்சியமாக இருக்கிறது; அவைகள் உண்மையென்பதற்கு உன்னிடத்திலும் சகலமும் சாட்சியமாக இருக்கிறது; அவைகளை நீ மறுப்பாயோ? இக்காரியங்கள் உண்மையென்று நீ விசுவாசிக்கிறாயா?

42 இதோ, நீ நம்புகிறாய், என்று நான் அறிவேன், ஆனாலும் பொய்யுரைக்கும் ஆவியால் நீ பீடிக்கப்பட்டிருக்கிறாய். உன்னில் இடம் கொள்ளாதபடிக்கு தேவ ஆவியை விலக்கினாய்; ஆனால் பிசாசு உன்மேல் வல்லமை கொண்டிருக்கிறான். அவன் தேவ பிள்ளைகளை அழிக்கும்படிக்குத் திட்டங்களை வகுத்து உன்னை ஆட்கொண்டிருக்கிறான்.

43 இப்பொழுது கோரிகோர் ஆல்மாவை நோக்கி: தேவன் ஒருவர் உண்டென்று நான் உணரும்படிக்கு ஒரு அறிகுறியை எனக்குக் காண்பித்தால், ஆம், அவருக்கு வல்லமையுண்டு என்பதை எனக்குக் காண்பிப்பாயானால், உனது வார்த்தைகளின் சத்தியத்தை நான் நம்புவேன், என்றான்.

44 ஆனால் ஆல்மா அவனை நோக்கிச் சொன்னான்: நீ போதிய அறிகுறிகளைப் பெற்றாய்; நீ உன் தேவனை சோதனைக்குட்படுத்துவாயோ? உனது சகோதரர்களாகிய இவர்களின் சாட்சியமத்தையும், சகல பரிசுத்த தீர்க்கதரிசிகளின் சாட்சியமத்தையும் நீ பெற்றிருக்கும்போது, எனக்கு ஒரு அறிகுறியைக் காண்பியும் என்று சொல்லுவாயோ? வேதங்கள் உனக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஆம், அனைத்துக் காரியங்களும் தேவன் ஒருவர் உண்டென்று புலப்படுத்துகிறது, ஆம், பூமியும் அதன் மீதிருக்கிற சகல காரியங்களும், அதனுடைய இயக்கமும், தங்களுடைய நிர்ணயித்த பாதைகளில் இயங்குகிற சகல கிரகங்களும், ஒரு உன்னதமான சிருஷ்டிகர் உண்டென்று சாட்சி கொடுக்கின்றன.

45 இருப்பினும் நீ தேவனில்லை என்று இந்த ஜனத்திற்கு சாட்சி கொடுத்து, அவர்களுடைய இருதயங்களை புறம்பே வழிநடத்த நீ திரிகிறதென்ன? இன்னும் நீ இந்த சகல சாட்சிகளையும் மறுப்பாயோ என்று கேட்டான். அதற்கு அவன்: ஆம், நீ எனக்கு ஒரு அறிகுறியைக் காண்பிக்காவிடில் நான் மறுப்பேன், என்றான்.

46 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மா அவனை நோக்கி: இதோ உன் இருதயக் கடினத்தினிமித்தமும், உனது ஆத்துமா அழிந்து போகும்படியாய், ஆம், சத்திய ஆவியை எதிர்த்து நிற்கிறதினிமித்தமும், நான் துக்கப்படுகிறேன்.

47 ஆனால் இதோ, உனது பொய்யான இச்சகமான வார்த்தைகளால் அநேக ஆத்துமாக்களை அழிவிற்குள்ளாகக் கொண்டு வருவதைப் பார்க்கிலும், உன்னுடைய ஆத்துமா தொலைந்து போவது நலமாயிருக்கும்; ஆதலால் நீ மறுபடியும் மறுதலித்தால், இதோ, நீ இந்த ஜனத்தை இனி ஒருபோதும் வஞ்சியாதிருக்கும்படிக்கு, இனி நீ உனது வாயைத் திறக்க முடியாது, ஊமையாயிருக்கும்படி தேவன் உன்னை அடிப்பார்.

48 இப்பொழுது கோரிகோர் அவனை நோக்கி: தேவன் இருப்பதை நான் மறுப்பதில்லை. ஆனால் தேவன் என்று ஒருவர் இருக்கிறார் என நான் விசுவாசிப்பதுதானில்லை; நான் மேலும் சொல்லுகிறேன், தேவன் ஒருவர் உண்டென்று நீங்கள் அறியவில்லை; நீங்கள் எனக்கு ஒரு அறிகுறியைக் காண்பிக்கவில்லையெனில், நான் விசுவாசிக்கமாட்டேன், என்றான்.

49 பின்னும் ஆல்மா அவனை நோக்கி: என் வார்த்தைகளின்படி, நீ ஊமையாகவேண்டுமென்பதே நான் உனக்குக் கொடுக்கும் அறிகுறி; நான் சொல்லுகிறேன், நீ இனி பேசவே முடியாதபடிக்கு, தேவனின் நாமத்திலே ஊமையாக்கப்படுவாய், என்றான்.

50 இப்பொழுது ஆல்மா இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ஆல்மாவின் வார்த்தைகளின்படி, கோரிகோர் பேச முடியாதபடிக்கு ஊமையாக்கப்பட்டான்.

51 இப்பொழுது தலைமை நியாயாதிபதி இதைக் கண்டபோது, அவன் தன் கையை நீட்டி கோரிகோருக்கு எழுதியதாவது: நீ தேவ வல்லமையைப்பற்றி உணர்ந்து கொண்டாயா? ஆல்மா தன் அறிகுறியை எவரிடத்தில் காண்பிக்கவேண்டுமென நீ விரும்பினாய்? இதோ, அவன் உனக்கு ஓர் அறிகுறியைக் காண்பிக்கும்படி அவன் மற்றவர்களை வருத்த வேண்டுமென நீ விரும்பினாயா? இதோ அவன் உனக்கு ஓர் அறிகுறியைக் காண்பித்திருக்கிறான்: இதற்கு மேலும் நீ தர்க்கம் செய்வாயோ என்றான்.

52 கோரிகோர் தன் கையை நீட்டி எழுதியதாவது: நான் பேச முடியாததினிமித்தம், நான் ஊமை என்று அறிவேன்; தேவ வல்லமையேயல்லாமல் இதை என் மீது வேறெதுவும் கொண்டு வந்திருக்க முடியாது, என்றும் அறிவேன்; ஆம், தேவன் ஒருவர் உண்டென்று நான் எப்போதும் அறிந்திருக்கிறேன்.

53 ஆனால் இதோ, பிசாசு என்னை வஞ்சித்திருக்கிறான்; ஏனெனில் அவன் என்னிடத்தில் தூதனைப் போலத் தோன்றி, என்னை நோக்கி, இந்த ஜனங்கள் யாவரும் ஒரு அந்நிய தேவன் பின்னால் வழிதப்பிப் போயிருக்கிறார்கள். நீ போய் அவர்களைச் சரிப்படுத்து, என்றான். அவன் என்னை நோக்கி, தேவன் இல்லை, என்றான். ஆம், நான் சொல்லவேண்டியவைகளை அவன் எனக்குப் போதித்தான்; நான் அவன் வார்த்தைகளைப் போதித்தேன்; அவைகள் மாம்ச சிந்தைக்கு பிரியமானவைகளாயிருப்பதினிமித்தம் நான் அவைகளைப் போதித்தேன்; நான் அதிக ஜெயம் பெறும் வரைக்குமாய் அவைகளைப் போதித்து, அவைகள் மெய்யென்றே விசுவாசித்தேன்; இதினிமித்தமாகவே நான் இந்த மகா சாபத்தை என்மீது வரவழைக்கும் மட்டுமாய், சத்தியத்தை எதிர்த்து நின்றேன், என்றான்.

54 இப்பொழுது அவன் இதைச் சொல்லி தன்னிடத்திலிருந்து சாபத்தை எடுத்துக் கொள்ளும்படி, தேவனிடத்தில் ஆல்மா ஜெபிக்க வேண்டுமென, வேண்டிக்கொண்டான்.

55 ஆனால் ஆல்மா அவனை நோக்கி: இந்த சாபம் உன்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படுமேயானால், நீ இந்த ஜனத்தின் இருதயத்தை மறுபடியும் வழிதப்பிப்போகச் செய்வாய்; ஆதலால் கர்த்தருடைய சித்தத்தின்படியே, உனக்கு சம்பவிப்பதாக என்றான்.

56 அந்தப்படியே, அந்த சாபம் கோரிகோரிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படவில்லை; அவன் புறம்பே தள்ளப்பட்டு, தன் உணவுக்காக வீடு வீடாய் பிச்சை எடுத்துத் திரிந்தான்.

57 இப்பொழுது, கோரிகோருக்கு சம்பவித்த செய்தி உடனடியாக தேசமுழுவதிலும் அறிவிக்கப்பட்டது; ஆம், கோரிகோரின் வார்த்தைகளை விசுவாசித்தவர்கள் சீக்கிரமாய் மனந்திரும்ப வேண்டுமென்றும், இல்லாவிடில் அதே தீர்ப்புகள் அவர்களுக்கும் சம்பவிக்கும் என்றும், அவர்களுக்கு அறிவித்து, தேசத்திலுள்ள ஜனங்கள் யாவருக்கும் பிரதான நியாயாதிபதியால் ஒரு பிரகடனம் அனுப்பப்பட்டது.

58 அந்தப்படியே, அவர்கள் யாவரும் கோரிகோரின் துன்மார்க்கத்தைப்பற்றிப் புரிந்து கொண்டார்கள்; ஆதலால் அவர்கள் யாவரும் மறுபடியும் கர்த்தருக்குள்ளாக மனமாறினார்கள்; இது கோரிகோரின் வழக்கமான துன்மார்க்கத்திற்கு முடிவு கட்டியது. கோரிகோர் தன்னை பராமரிக்க வீடு வீடாய்த் திரிந்து பிச்சை எடுத்தான்.

59 அந்தப்படியே, நேபியர்களிலிருந்து பிரிந்து சோரம் என்ற பெயர் கொண்ட ஒரு மனுஷனால் வழிநடத்தப்பட்டமையால், தங்களை சோரமியர் என்று அழைத்துக்கொண்ட ஜனங்களுக்குள்ளே அவன் போனபோது, இதோ அவன் மரித்துப் போகுமட்டுமாய் கீழே தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டான்.

60 இப்படியாய் கர்த்தருடைய வழிகளைப் புரட்டிப் போடுகிறவனுடைய முடிவை நாம் பார்க்கிறோம். பிசாசு கடைசி நாளில் தன் பிள்ளைகளை ஆதரியாமல், அவர்களைப் பாதாளத்திற்குத் துரிதமாய் இழுத்துச் செல்லுவதையும் நாம் காண்கிறோம்.