வேதங்கள்
ஆல்மா 22


அதிகாரம் 22

ஆரோன் லாமோனியின் தகப்பனுக்கு சிருஷ்டிப்பைப் பற்றியும், ஆதாமின் வீழ்ச்சியைக் குறித்தும் கிறிஸ்துவின் மூலம் உண்டான மீட்பின் திட்டத்தைப் பற்றியும் போதித்தல் – ராஜாவும், அவன் வீட்டார் யாவரும் மனமாற்றப்படுதல் – நேபியருக்கும், லாமானியருக்கும் இடையே பிரிக்கப்பட்ட தேசத்தைக் குறித்து விவரித்தல் – ஏறக்குறைய கி.மு. 90–77.

1 இப்படியாக அம்மோன் லாமோனியின் ஜனங்களுக்கு இடைவிடாமல் போதித்துக் கொண்டிருந்தான்; இப்பொழுது நாம் ஆரோனையும் அவனுடைய சகோதரரையும் பற்றிய விவரத்துக்குத் திரும்புவோமாக. அவன் மித்தோனி தேசத்திலிருந்து புறப்பட்ட பின்பு, அவன் நேபியின் தேசத்திற்குள்ளாக, இஸ்மவேல் தேசத்தைத் தவிர, எல்லா தேசத்திற்கும் ராஜாவான, லாமோனியின் தகப்பனுடைய வீட்டினுள் ஆவியானவராலே வழிநடத்தப்பட்டான்.

2 அந்தப்படியே, அவன் தன்னுடைய சகோதரருடன், ராஜாவினுடைய அரண்மனையினுள் பிரவேசித்து, ராஜாவிற்கு முன்பாகப் பணிந்து அவனை நோக்கி: இதோ, ராஜாவே, நாங்கள், நீர் சிறையிலிருந்து விடுவித்த அம்மோனின் சகோதரர், என்றான்.

3 இப்பொழுதும் ராஜாவே, நீர் எங்களுடைய ஜீவன்களைத் தப்புவித்தால், நாங்கள் உம்முடைய வேலைக்காரராயிருப்போம் என்றார்கள். ராஜா அவர்களை நோக்கி: எழுந்திருங்கள், நான் உங்களுக்கு ஜீவனளிப்பேன். நீங்கள் என் வேலைக்காரராயிருக்க அனுமதியேன்; அதனால் எனக்கு நீங்கள் உதவிசெய்ய வேண்டுமென வேண்டுகிறேன் ஏனெனில் உங்களுடைய சகோதரனாகிய அம்மோனின் தயாளத்துவத்தினாலும், அவனது வார்த்தையின் மகத்துவத்தினிமித்தமும், என் மனம் எப்படியோ கலங்கிப்போனது. அவன் மித்தோனியிலிருந்து உங்களுடனே கூட வராததின் காரணத்தை அறிய, நான் வாஞ்சிக்கிறேன், என்றான்.

4 ஆரோன் ராஜாவை நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆவியானவர் அவனை மற்றொரு மார்க்கமாய் அழைத்துப் போனார்; அவன் லாமோனியின் ஜனங்களுக்குப் போதிக்கும்படி இஸ்மவேல் தேசத்திற்குப் போயிருக்கிறான், என்றான்.

5 அதற்கு ராஜா அவனை நோக்கி: கர்த்தருடைய ஆவியானவரைக் குறித்து நீர் சொன்னதென்ன? இதோ, இக்காரியமே என்னைக் கலக்கமடையச் செய்கிறது, என்றான்.

6 நீர் மனந்திரும்பினால் இரட்சிக்கப்படுவீர், நீர் மனந்திரும்பாமற்போனால் கடைசி நாளிலே தள்ளுண்டு போவீர், என்று அம்மோன் சொன்னதன் அர்த்தமென்ன? என்று கேட்டான்.

7 ஆரோன் அவனை நோக்கி, அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறீரா? அதற்கு ராஜா, தேவன் உண்டென்று அமலேக்கியர் சொல்லியிருப்பதை நான் அறிவேன். அவர்கள் ஏகமாய்க் கூடி, அவரைத் தொழுது கொள்ளும்படிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலங்களைக் கட்ட நான் அவர்களுக்கு அனுமதி வழங்கினேன். இப்பொழுது தேவன் உண்டென்று நீ சொல்லுவாயானால், இதோ நான் விசுவாசிப்பேன், என்றான்.

8 இப்பொழுது ஆரோன் இதைக் கேட்டபோது, அவன் இருதயம் களிகூரத்துவங்கி, அவன் சொன்னதாவது: இதோ ராஜாவே, நிச்சயமாகவே நீர் ஜீவிக்கிறதைப்போல, தேவன் ஒருவர் உண்டு, என்றான்.

9 அதற்கு ராஜா, எருசலேம் தேசத்திலிருந்து நம்முடைய தகப்பன்மார்களை வழிநடத்தி வந்த அந்த மகா அரூபிதான் தேவனா? என்று கேட்டான்.

10 பின்பு ஆரோன் அவனை நோக்கி: ஆம், அவரே அந்த மகா அரூபி. அவர் வானத்திலும் பூமியிலும், சகலத்தையும் சிருஷ்டித்தார். இதை நீர் விசுவாசிக்கிறீரா என்றான்.

11 அதற்கு அவன்: ஆம், அந்த மகா அரூபிதான் யாவையும் படைத்தார், என்று நான் விசுவாசிக்கிறேன். இவை எல்லாவற்றையும் குறித்தும் நீ எனக்கு சொல்லவேண்டுமென்று மனதாயிருக்கிறேன். நான் உன் வார்த்தைகளை விசுவாசிப்பேன், என்றான்.

12 அந்தப்படியே, ராஜா தன் வார்த்தைகளை விசுவாசிக்க மனதாயிருக்கிறான், என்று ஆரோன் கண்டபோது, அவன் ஆதாம் சிருஷ்டிப்பு தொடங்கி, தேவன் எப்படி மனுஷனைத் தம்முடைய சொந்த சாயலில் படைத்தார் என்றும், தேவன் அவனுக்கு கட்டளைகளைக் கொடுத்தார் என்றும், மீறுதலினிமித்தம் மனுஷன் வீழ்ந்துபோனான் என்கிற, வேத வாக்கியங்களை வாசித்தான்.

13 ஆரோன் அவனிடத்தில் ஆதாமின் சிருஷ்டிப்பு முதலான வேத வாக்கியங்களை விவரித்துக் காண்பித்து, மனுஷனுடைய வீழ்ச்சியையும், அவர்களின் மாம்சமான நிலைமையையும், கிறிஸ்துவின் நாமத்தை விசுவாசிக்கிற யாவருக்காவும், உலக அஸ்திபாரம் முதலாய், அவர் மூலமாக ஆயத்தப்படுத்தப்பட்ட மீட்பின் திட்டத்தைக் குறித்தும், சொன்னான்.

14 மனுஷன் வீழ்ந்துபோனதினிமித்தம் அவன் தனக்கென்று எதையுமே ஆதாயப்படுத்த முடியவில்லை, ஆனால் அவர்களுடைய பாவங்களுக்காக கிறிஸ்துவினுடைய பாடுகளும், மரணமும், விசுவாசம், மனந்திரும்புதல் முதலியவைகளின் மூலமாய் பாவநிவர்த்தி செய்கிறது என்றும், கல்லறை ஜெயம் கொள்ளாமலும், மகிமையின் நம்பிக்கைகளில் அவர் மரணத்தின் வேதனை விழுங்கப்பட்டுப்போகும்படியும், மரணத்தின் கட்டுக்களை அறுத்துப் போடுகிறார் என்றும், ஆரோன் இக்காரியங்கள் யாவையும் ராஜாவுக்கு விளக்கமாய் சொன்னான்.

15 அந்தப்படியே, ஆரோன் இக்காரியங்களை அவனுக்கு விவரித்துச் சொன்ன பின்பு, ராஜா சொன்னதாவது: நீர் பேசின இந்த நித்திய ஜீவனை நான் பெறும்படிக்கு நான் செய்யவேண்டியதென்ன? ஆம், நான் கடைசி நாளின்போது, புறம்பே தள்ளப்பட்டுப் போகாதபடிக்கும், சந்தோஷத்தால் நிறைக்கப்படும்பொருட்டும், நான் தேவனால் ஜெனிப்பிக்கப்பட்டு, இந்த பொல்லாத ஆவி என் மார்பிலிருந்து வேரோடே பிடுங்கப்பட்டு, அவருடைய ஆவியைப் பெற நான் செய்யவேண்டியதென்ன? அவன் இதோ, நான் இந்த மிகுந்த சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள நான் வைத்திருக்கிற யாவையும் விட்டு விடுகிறேன். ஆம், என் ராஜ்யத்தையும் துறப்பேன் என்றான்.

16 ஆரோன் அவனை நோக்கி: நீர் இக்காரியத்தை வாஞ்சிக்கிறதுண்டானால், நீர் தேவனுக்கு முன்பாக பணிந்துகொண்டால், ஆம், உம் பாவங்கள் அனைத்திலுமிருந்து மனந்திரும்பி நீர் பெற்றுக்கொள்வீர் என்று நம்பி, தேவனுக்கு முன்பாகப் பணிந்து, விசுவாசத்தோடு அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்வீரானால், நீர் விரும்புகிற நம்பிக்கையை பெற்றுக்கொள்வீர், என்றான்.

17 அந்தப்படியே, ஆரோன் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜா முழங்கால்படியிட்டு கர்த்தருக்கு முன்பாகப் பணிந்துகொண்டான். ஆம், அவன் பூமியில் சாஷ்டாங்கமாய் விழுந்து உரத்த சத்தமாய்:

18 தேவனே, ஆரோன், தேவன் ஒருவர் உண்டென்று என்னிடத்தில் சொன்னான்; தேவன் என்று ஒருவர் உண்டென்றால், நீரே தேவனாய் இருந்தால், நீர் உம்மை எனக்குத் தெரியப்பண்ணுவீரா. நான் உம்மை அறிந்து அதினிமித்தம் மரித்தோரிலிருந்து எழுந்து, கடைசி நாளில் இரட்சிக்கப்பட என் பாவங்கள் அனைத்தையும் நான் விட்டுவிடுவேன் என்றான். இப்பொழுது ராஜா இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, அவன் அடிக்கப்பட்டு, மரித்தவனைப் போலானான்.

19 அந்தப்படியே, அவன் வேலையாட்கள் ஓடிப்போய், ராஜாவிற்கு சம்பவித்த அனைத்தையும் ராஜஸ்திரீயினிடத்தில் சொன்னார்கள். அவள் ராஜாவின் அருகே வந்து, அவன் மரித்தவன்போல் கிடப்பதையும், தாங்களே அவன் விழுந்து கிடப்பதற்கு காரணமானோர் போல ஆரோனும் அவன் சகோதரரும் நிற்பதைக் கண்டு, அவர்களிடத்தில் கோபம்கொண்டு அவர்களைப் பிடித்துக் கொன்றுபோடும்படி, தன் வேலையாட்களிடத்தில் அல்லது ராஜாவின் வேலையாட்களிடம் கட்டளையிட்டாள்.

20 இப்பொழுதும் ராஜா விழுந்து போனதன் முகாந்திரத்தை வேலையாட்கள் கண்டதினிமித்தம் அவர்கள் ஆரோன் மேலும், அவனுடைய சகோதரரின் மேலும், தங்கள் கைகளைப் போடாமல் ராஜஸ்திரீயினிடத்தில்: இதோ, அவர்களில் ஒருவன் எங்கள் எல்லோரிலும் பலவானாயிருக்கக் கண்டும், நாங்கள் இம்மனுஷரைக் கொன்றுபோட ஏன் கட்டளையிடுகிறீர்? ஆகவே நாங்கள் அவர்கள் முன் வீழ்ந்து போவோம், என்றார்கள்.

21 ராஜஸ்திரீ, வேலையாட்கள் பயப்படுகிறதைக் கண்டபோது, தனக்கு பொல்லாப்பு நேரிடுமோ என்று அவளும் மிகுதியாய்ப் பயந்தாள். ஆரோனையும் அவன் சகோதரரையும் கொன்றுபோட, போய் ஜனங்களை அழைத்துவரும்படி தன் வேலையாட்களுக்குக் கட்டளையிட்டாள்.

22 இப்பொழுது ராஜஸ்திரீயின் உறுதியான தீர்மானத்தைக் கண்டபோது, ஆரோன் ஜனங்களுடைய இருதயங்களின் கடினத்தை அறிந்தவனாய், திரளானோர் ஏகமாய்க் கூடினால், அவர்களுக்குள்ளே பிணக்கும், குழப்பமும் ஏற்படும் எனப்பயந்து, தன் கையை நீட்டி, தரையிலிருந்து ராஜாவை தூக்கிவிட்டு, அவனை நோக்கி: எழுந்திரும், என்றான். அவன் தன் பெலத்தைப் பெற்று காலூன்றி நின்றான்.

23 இப்பொழுது இது ராஜஸ்திரீ மற்றும் அநேக வேலையாட்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. அவர்கள் இதைக் கண்டபோது வெகுவாய் ஆச்சரியப்பட்டு பயப்படத் தொடங்கினார்கள். ராஜாவோ எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யத் துவங்கினான். அவன் வீட்டார் அனைவரும் கர்த்தருக்குள்ளாக மனம் மாறும்படிக்கு, அவன் அவர்களுக்கு ஊழியம் செய்தான்.

24 ராஜஸ்திரீயின் கட்டளையினிமித்தம் அங்கே திரளானோர் ஏகமாய்க் கூடிவந்தார்கள். அவர்களுக்குள்ளே ஆரோன் மற்றும் அவனுடைய சகோதரன் நிமித்தம் மிகுந்த முறுமுறுத்தல்கள் உண்டாகத் துவங்கின.

25 ஆனால் ராஜா அவர்கள் மத்தியில் நின்று அவர்களுக்கு பணிவிடை செய்தான். அவர்கள் ஆரோனிடத்திலும், அவனோடுகூட இருந்தவர்களிடத்திலும் சமாதானமானார்கள்.

26 அந்தப்படியே, ஜனங்கள் அமைதலானதை ராஜா கண்டபோது, ஆரோனும், அவன் சகோதரரும் அந்த திரளான கூட்டத்தின் நடுவே நின்று, அவர்களுக்கு வசனத்தை பிரசங்கிக்கச் செய்தான்.

27 அந்தப்படியே, ராஜா தேசமுழுவதும், கிழக்கிலும் மேற்கிலும் சமுத்திரத்தின் எல்லைகளாகக் கொண்டிருந்த தன்னுடைய தேசமனைத்துக்கும், சுற்றுப்புறங்களில் அமைந்த பகுதிகள் எல்லாவற்றிலுமிருந்த, கிழக்கு சமுத்திரத்திற்கும், மேற்கு சமுத்திரத்திற்குமாய் நீண்டிருந்ததும், கடற்கரையோரமாய் சுற்றிலும் குறுகிய ஓர் வனாந்தரத்தினால், சாரகெம்லா தேசத்திலிருந்து பகுக்கப்பட்டிருந்த, அவன் தேசத்துக்குக், கிழக்கிலிருந்து மேற்கு வரைக்குமாய் ஓடிய, சீதோன் நதியினுடைய ஊற்றுக்கண் ஓரமாய், மேன்தி எல்லைகளினூடே அமைந்திருந்த, வனாந்தரத்தின் நீண்ட எல்லைகள் உடைய, சாரகெம்லா தேசத்திற்கு வடக்கே அமைந்திருந்த, இப்படியாக லாமானியரும், நேபியரும் அந்தக் குறுகிய வனாந்தரத்தினால் பிரிக்கப்பட்டிருந்த, சகல ஜனங்களுக்கும் ஒரு ஆணையை அனுப்பினான்.

28 லாமானியரில் அதிக சோம்பேறிகள் வனாந்தரத்தில் குடிகொண்டு, கூடாரங்களில் வாசம் பண்ணினார்கள், அவர்கள் நேபியின் தேசத்தின் வனாந்தரத்தின் மேற்கேமுழுவதும் பரவியிருந்தார்கள். ஆம், கடற்கரையோரமாய் தங்கள் பிதாகளின் முதற் சுதந்தர பூமியாகிய, நேபியின் தேசத்திற்கு மேற்கேயிருந்த கடற்கரையோரமாய், சாரகெம்லா தேசத்தின் மேற்கில் இருந்தார்கள்.

29 நேபியர் லாமானியரைத் துரத்திவிட்ட, கடற்கரையின் கீழ்த்திசையில் அநேக லாமானியர் இருந்தார்கள். இப்படியாக நேபியர் லாமானியரால் ஏறக்குறைய சூழப்பட்டிருந்தார்கள்; இருப்பினும் வனாந்தரத்தைச் சுற்றி, கிழக்கிலிருந்து மேற்குவரை, சீதோன் நதியின் ஊற்றண்டையில், வனாந்தரத்தின் எல்லையிலுள்ள வடக்கு பகுதிகள் அனைத்தையும், வடக்கில் தாங்கள் உதாரத்துவஸ்தலம் என்று அழைத்த, தேசம் மட்டும், நேபியர் சொந்தமாக்கிக் கொண்டார்கள்.

30 சாரகெம்லாவின் ஜனங்களால் கண்டுபிடிக்கப்பட்ட, அவர்கள் கரைசேர்ந்த முதலிடமான, இந்த ஜனங்களினுடைய எலும்புகளைக் குறித்து நாம் சொன்ன, ஜனங்கள் வாழ்ந்து அழிக்கப்பட்டுப்போன, வடக்கே தூரமாய் தள்ளியிருந்த தேசம் வரை வந்ததால், அது பாழ்க்கடிப்பு என்றழைக்கப்பட்ட தேசத்தின் எல்லையாக இருந்தது.

31 அவர்கள் அங்கிருந்து தென் வானாந்தரத்திற்கு வந்தார்கள். இப்படியாக தேசத்தின் வடபகுதி பாழ்க்கடிப்பென்றும், தென்பகுதி உதாரத்துவ ஸ்தலமென்றும் அழைக்கப்பட்டன. சகலவிதமான வனவிலங்குகளால் நிறைக்கப்பட்டிருந்த வனாந்தரமாயிருந்தால், அவைகளில் ஒரு பகுதி தேசத்தின் வடபகுதியிலிருந்து இரைக்காக வந்திருந்தன.

32 ஒரு நேபியனுக்கு கிழக்கிலிருந்து, மேற்கு சமுத்திரத்திற்கு, உதாரத்துவஸ்தலம் மற்றும் பாழ்க்கடிப்பு தேசம், ஒன்றரை நாள் மட்டுமே பயணம் செய்கிற தூரமாயிருந்தது. நேபியின் தேசமும், சாரகெம்லா தேசமும் தண்ணீரால் ஏறக்குறைய சூழப்பட்டு, வட தேசத்திற்கும், தென் தேசத்திற்கும் இடையே ஒரு குறுகிய நிலம் மாத்திரமே இருந்தது.

33 அந்தப்படியே, நேபியர் கிழக்கிலிருந்து மேற்கு சமுத்திரம் வரைக்குமாய் பரந்திருந்த உதாரத்துவஸ்தலத்தில் வாசம் பண்ணினார்கள். இப்படியாக நேபியர் ஞானமாய் தங்கள் காவற்காரர்களைக் கொண்டும், தங்கள் சேனைகளைக் கொண்டும் லாமானியரைத் தெற்கே இருக்கப்பண்ணி, அவர்கள் வடதேசத்தை ஆக்கிரமிக்காதபடியும், வடக்கே எதையும் சுதந்தரிக்காதபடியும், தெற்கில் லாமானியரை ஓரங்கட்டினர்.

34 நேபியின் தேசத்திலும், அதைச் சுற்றியிருந்த வனாந்தரத்திலும் மட்டும், லாமானியர் எதையும் அடைய முடியவில்லை. இது நேபியர் ஞானமாய் செய்த காரியம். ஏனெனில் லாமானியர் அவர்களுக்கு விரோதிகளாயிருந்ததாலும், அவர்களுடைய உபத்திரவங்களை எல்லா பக்கங்களிலிருந்தும் சகிக்க வேண்டியிராமலும், தங்களுடைய வாஞ்சைகளுக்கேற்ப பறந்தோட ஒரு தேசமிருக்கும்படிக்கே இப்படிச் செய்தார்கள்.

35 இப்போது நான், இவைகளை சொல்லி முடித்து, மறுபடியும் அம்மோன், ஆரோன், ஓம்னர், ஈம்னி மற்றும் அவர்களுடைய சகோதரர்களைப் பற்றிய விவரத்திற்குத் திரும்புகிறேன்.