வேதங்கள்
மோசியா 8


அதிகாரம் 8

லிம்கியின் ஜனங்களுக்கு அம்மோன் உபதேசித்தல் – அவன் யாரேதியர்களின் இருபத்தி நான்கு தகடுகளைக் குறித்து அறிதல் – பூர்வகால பதிவேடுகள் ஞானதிருஷ்டிக்காரர்களால் மொழிபெயர்க்கப்படக்கூடும் – ஞானதிருஷ்டித்தன்மையைக்காட்டிலும் மற்ற எந்த ஒரு வரமும் மேன்மையானதல்ல. ஏறக்குறைய கி.மு. 121.

1 அந்தப்படியே, லிம்கி ராஜா தன் உரையை முடித்துக் கொண்டான், தன் ஜனங்களிடம் அநேக காரியங்களைப் பேசினபடியால், அவைகளில் சிலவற்றையே இந்த புஸ்தகத்திலே எழுதியிருக்கிறேன், அவன் தன் ஜனத்திற்கு சாரகெம்லா தேசத்திலே இருந்த தங்களின் சகோதரர்களைக் குறித்து எல்லாவற்றையும் சொன்னான்.

2 அம்மோன் எழுந்து திரள் கூட்டத்தாருக்கு முன்பு நின்று, சீநிப் தேசத்தைவிட்டு வெளியேறிய காலம் முதற்கொண்டு, அவன் தேசத்தைவிட்டு வந்த காலம் வரைக்கும், தங்களின் சகோதரர்களுக்கு சம்பவித்த யாவையும் சொல்லச் செய்தான்.

3 பென்யமீன் ராஜா தங்களுக்குப் பேசின கடைசி வார்த்தைகளை, லிம்கி ராஜாவினுடைய ஜனங்களுக்கு அவன் மறுபடியும் அவர்கள் புரிந்து கொள்ளும்படி, அவைகளை அவர்களுக்கு விளக்கினான்.

4 அந்தப்படியே, இதையெல்லாம் அவன் செய்த பின்னர், லிம்கி ராஜா திரள்கூட்டத்தாரை அனுப்பி அவர்களில் ஒவ்வொருவனும் தன் சொந்த வீட்டுக்கு போகும்படிச் செய்தான்.

5 அந்தப்படியே, சாரகெம்லா தேசத்தைவிட்டு வந்த காலம் முதற்கொண்டு தன் ஜனத்தினுடைய வரலாற்றைக் கொண்டிருக்கிற தகடுகளை, அம்மோன் வாசிக்கும்பொருட்டு அவன் முன்னே கொண்டுவரப்படும்படிச் செய்தான்.

6 இப்பொழுதும் அம்மோன் பதிவேடுகளை வாசித்த உடனே, அவனால் பாஷைகளை மொழிபெயர்க்கக்கூடுமோ என்று ராஜா அறிந்துகொள்ள அவனை விசாரித்தான், தன்னால் இயலாது, என அம்மோன் அவனுக்குச் சொன்னான்.

7 ராஜா அவனை நோக்கி சொன்னான்: என் ஜனத்தினுடைய உபத்திரவங்களால் சஞ்சலப்பட்டு, என் ஜனத்திலிருந்து நாற்பத்தி மூன்றுபேரை வனாந்தரத்திலே பிரயாணம் செய்து, சாரகெம்லா தேசத்தைக் கண்டுபிடித்து, எங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்குமாறு, எங்களுடைய சகோதரர்களிடத்தில் நாங்கள் விண்ணப்பமிடும்படி செய்தேன்.

8 அவர்கள் அநேக நாட்கள் வனாந்தரத்தில் வழி தப்பிப்போனாலும், கருத்துள்ளவர்களாய் இருந்தார்கள். சாரகெம்லா தேசத்தைக் கண்டடையாமல், அநேக தண்ணீர்களைக் கொண்ட தேசத்திலே பிரயாணம்பண்ணி, மனுஷ, மற்றும் மிருக எலும்புகளினாலே மூடப்பட்டும், எல்லா வகையான அழிந்துபோன கட்டடங்களினாலும் மூடப்பட்டும், இஸ்ரவேலின் திரளானோரைப்போல ஏராளமான ஜனங்களைக் கொண்டிருந்த ஒரு தேசத்தைக் கண்டுபிடித்த பின்னர் இத்தேசத்திற்குத் திரும்பினார்கள்.

9 தாங்கள் சொன்னவை உண்மையானவை என்பதற்கு சாட்சியமாக, முழுவதுமாய் பொறிக்கப்பட்டதும், பசும்பொன்னாலானதுமான இருபத்தி நான்கு தகடுகளைக் கொண்டு வந்தார்கள்.

10 இதோ, தாமிரத்தாலும், பித்தளையாலும் செய்யப்பட்டதும், பழுதற்றதும், பெரிதுமான மார்புக் கவசங்களையும் கொண்டு வந்திருந்தார்கள்.

11 மேலும், துருப்பிடித்த கைப்பிடிகளை உடைய பட்டயங்களைக்கொண்டு வந்தார்கள்; அதன் கருக்குகளோ துருப்பிடித்து அழிந்து போயிருந்தன; தகடுகளிலே இருந்த பாஷையை அல்லது பொறிக்கப்பட்டிருந்ததை மொழிபெயர்க்க, தேசத்திலே எவராலும் கூடாமற்போயிற்று. ஆகவேதான் நான் உன்னை நோக்கி: மொழிபெயர்க்க இயலுமா என்றேன்.

12 உன்னை மறுபடியும் கேட்கிறேன், மொழிபெயர்க்கக்கூடிய எவரையாகிலும் நீ அறிவாயா? ஏனெனில் எங்களுடைய பாஷைக்கு இந்தப் பதிவேடுகளை மொழிபெயர்க்கவேண்டும் என்று, நான் விருப்பம் கொண்டிருக்கிறேன். ஏனெனில் இந்தப் பதிவேடுகள் சங்கரிக்கப்பட்ட ஜனத்தின் மீதியானவர்களைப்பற்றிய அறிவையும், இப்பதிவேடுகள் எங்கிருந்து வந்தன என்றும், நமக்கு தெரிவிக்கலாம். இல்லாவிடில் ஒருவேளை சங்கரிக்கப்பட்ட அதே ஜனத்தைப்பற்றிய அறிவை நமக்குத் தெரிவிக்கலாம். ஏனெனில் நான் அவர்களது அழிவின் காரணத்தை அறிந்து கொள்ள வாஞ்சையுள்ளவனாயிருக்கிறேன்.

13 இப்பொழுது அம்மோன் அவனை நோக்கி: ராஜாவே, பதிவேடுகளை மொழிபெயர்க்கக்கூடிய ஒருவனைக்குறித்து திட்டவட்டமாய் உமக்குச் சொல்லக்கூடும்; தான் வைத்திருக்கிறவைகளைப் பார்த்து, பூர்வகால பதிவேடுகள் அனைத்தையும் அவனால் மொழிபெயர்க்கக்கூடும்; அது தேவனிடத்திலிருந்து வந்த வரமாயிருக்கிறது. அவைகள் மொழிபெயர்ப்பான்கள் என்று அழைக்கப்படுகின்றன. கட்டளையிடப்பட்டாலொழிய ஒருவனும் அவைகளை காணக்கூடாது. அப்படியே பார்க்கக்கூடாதவன் பார்ப்பானேயாகில், அவன் சாகவேண்டும். அவைகளைப் பார்க்கும்படி எவன் கட்டளையிடப்பட்டிருக்கிறானோ அவனே ஞானதிருஷ்டிக்காரன் என்றழைக்கப்படுகிறான்.

14 இதோ, சாரகெம்லா தேசத்தின் ஜனங்களின் ராஜாவாயிருக்கிற அந்த மனுஷனே இவைகளைச் செய்யும்படி கட்டளையிடப்பட்டும், தேவனிடத்திலிருந்து இந்த உன்னத வரத்தைப் பெற்றவனுமாயிருக்கிறான்.

15 ஞானதிருஷ்டிக்காரன், தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேன்மை பொருந்தியவன் என்று ராஜா சொன்னான்.

16 அம்மோன் சொன்னது என்னவெனில், ஞானதிருஷ்டிக்காரன் வெளிப்படுத்துபவனாயும், தீர்க்கதரிசியாயுமிருக்கிறான்; ஒருவனும் பெறக்கூடாத தேவ வல்லமையை அவன் பெற்றிருந்தாலொழிய அதைக் காட்டிலும் மேலான வரத்தை ஒருவனும் பெற்றிருக்க முடியாது. இருப்பினும் ஒருவன் தேவனிடத்திலிருந்து தனக்குக் கொடுக்கப்பட்ட மிகுந்த வல்லமையைப் பெற்றிருக்கக் கூடும்.

17 கடந்து போனவைகளையும், இனி வரவிருக்கிறவைகளையும் குறித்து ஒரு ஞானதிருஷ்டிக்காரன் அறிந்துகொள்ளக் கூடும். அவர்கள் மூலமாய் காரியங்கள் யாவும் வெளிப்படுத்தப்படும். அல்லது இரகசியமானவைகளும் வெளியரங்கமாக்கப்படும். மறைபொருட்களும் வெளிச்சத்திற்கு வரும். அறியப்படாதவைகள் அவர்கள் மூலமாய் அறியப்படுத்தப்படும். மற்ற எவ்விதத்திலும், அறியப்பட முடியாத காரியங்கள் அவர்களினால் அறியப்படுத்தப்படும்.

18 ஆகையால் மனுஷன் தன் சகமனுஷருக்கு மிகுந்த பிரயோஜனமாயிருக்கும் பொருட்டு, அவன் விசுவாசத்தினாலே பலத்த அற்புதங்களைப் புரிய தேவன் வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், என்றான்.

19 இப்பொழுது அம்மோன் இவ்வார்த்தைகளை பேசி முடித்தபின்பு ராஜா மிகவும் களிகூர்ந்து தேவனுக்கு நன்றிகளைச் செலுத்தி, எவ்வித சந்தேகமுமின்றி இத்தகடுகள் மகா இரகசியங்களைக் கொண்டிருக்கின்றன என்றும், மனுபுத்திரருக்கு இவ்விதமான எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்தும்படிக்கே இம்மொழிபெயர்க்கும் கருவிகள் சந்தேகமின்றி ஆயத்தம் பண்ணப்பட்டன.

20 கர்த்தருடைய கிரியைகள் எவ்வளவு அற்புதமானவை. தன் ஜனங்களிடத்தில் எவ்வளவு காலம் நீடிய சாந்தமாயிருக்கிறார்; மனுபுத்திரர்களின் புத்தி எவ்வளவு குருடாயும், துளைக்க முடியாததுமாயிருக்கிறது. ஏனெனில் அவர்கள் ஞானத்தைத் தேடுவதுமில்லை. அவள் தங்கள் மீது ராஜரீகம் பண்ண அவர்கள் விரும்புவதுமில்லை.

21 ஆம், அவர்கள் மேய்ப்பனிடமிருந்து ஓடி, சிதறி, துரத்தப்பட்டு, கானகத்து மிருகங்களினால் பட்சிக்கப்படுகிற காட்டு மந்தையைப்போல இருக்கிறார்கள், என்றான்.