வேதங்கள்
மோசியா 10


அதிகாரம் 10

லாமான் ராஜா மரித்தல் – அவன் ஜனம் மூர்க்கராயும், பொல்லாதவராயும் இருந்து, தவறான பாரம்பரியங்களில் விசுவாசித்தல் – அவர்களுக்கு விரோதமாய் சீநிப்பும், அவன் ஜனமும் ஜெயம்கொள்ளுதல். ஏறக்குறைய கி.மு. 187–160.

1 அந்தப்படியே, மறுபடியும் நாங்கள் ராஜ்யத்தை ஸ்தாபிக்கத் துவங்கி, சமாதானமாய் தேசத்திலே வாசமாயிருந்தோம். என் ஜனத்திற்கு விரோதமாய் லாமானியர்கள் மறுபடியும் யுத்தத்திற்கு வரும் காலத்திலே, என் ஜனத்திற்கு ஆயுதமிருக்கும் பொருட்டு, சகலவிதமான போர்க்கருவிகளையும் தயாரிக்கப்படும்படிச் செய்தேன்.

2 லாமானியர்கள் மறுபடியும் எதிர்பாராதபோது வந்து எங்களைச் சங்கரிக்காதபடிக்கு தேசத்தைச் சுற்றிலும் காவல் வைத்தேன்; இவ்விதமாய் என் ஜனங்களையும், மந்தைகளையும் என்னுடைய சத்துருக்களின் கைகளில் விழாதபடி காத்துக்கொண்டேன்.

3 அந்தப்படியே, அநேக வருஷங்கள் எங்கள் பிதாக்களின் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டோம். ஆம், இருபத்தி இரண்டு வருஷமளவும்.

4 புருஷர் நிலத்தைப் பண்படுத்தி, சகல விதமான தானியங்களையும், சகல விதமான கனிகளையும் பயிரிடப்பண்ணினேன்.

5 நாங்கள் வஸ்திரம் தரித்திருக்க, ஸ்திரீகள் நூல் நூற்று உழைத்து, வேலை செய்து சகலவிதமான மென்மையான பட்டுடைகளையும், ஆம் சகலவிதமான வஸ்திரங்களையும் நெய்யும்படிச் செய்தேன். இவ்விதமாய் தேசத்திலே நாங்கள் விருத்தியடைந்து, இருபத்திரண்டு வருஷங்களளவும் தேசத்திலே தொடர்ந்து சமாதானத்தைப் பெற்றிருந்தோம்.

6 அந்தப்படியே, லாமான் ராஜா மரித்துப்போனான். அவன் ஸ்தானத்திலே அவனுடைய குமாரன் அரசாளத் துவங்கினான். என் ஜனத்திற்கு விரோதமாய் கலகம் செய்யவேண்டுமென்று தன் ஜனத்தைத் தூண்டிவிட்டான்; ஆதலால் அவர்கள் என் ஜனத்திற்கு விரோதமாய் வந்து சண்டையிட யுத்தத்திற்காக ஆயத்தப்பட்டார்கள்.

7 அவர்களின் ஆயத்தங்களை அறிந்து கொள்ளும்படிக்கு, அவர்கள் என் ஜனத்தின்மீது வந்து அழித்துப் போடாதபடிக்கு, அவர்களுக்கு விரோதமாய் நான் காவல் வைக்கும்படிக்கும், சேம்லோன் தேசத்தைச் சுற்றிலும் நான் வேவுகாரரை அனுப்பினேன்.

8 அந்தப்படியே, அவர்கள் விற்களாலும், அம்புகளாலும், பட்டயங்களாலும், உடைவாள்களாலும், கற்களாலும், கவண்களாலும், ஆயுதம் தரித்த புருஷர்களைக் கொண்ட, ஏராளமான சேனைகளோடு சீலோம் தேசத்தின் வடதிசைக்கு வந்தார்கள்; மொட்டைத் தலையாயிருக்கும்படிக்கு, அவர்கள் தங்கள் சிரசுகளின் மயிரை சிரைத்திருந்தார்கள்; அவர்கள் தோலால் செய்யப்பட்ட ஒரு கச்சையைத் தங்கள் அரைகளிலே உடுத்தியிருந்தார்கள்.

9 அந்தப்படியே, என் ஜனத்தாரிலிருக்கிற ஸ்திரீகளும் பிள்ளைகளும் வனாந்தரத்திலே மறைத்து வைக்கப்படும்படிச் செய்தேன். ஆயுதம் தரிக்கக்கூடிய எனது சகல வயதான புருஷர்களையும், ஆயுதம் தரிக்கக்கூடிய எனது சகல வாலிபர்களையும், லாமானியர்களுக்கு விரோதமாக யுத்தத்திற்குச் செல்ல ஏகமாய்க் கூடும்படிச் செய்தேன்; அவர்களின் வயதுக்குத் தக்கதாய் ஒவ்வொரு மனுஷனையும் தன் தன் அணியிலே நிற்க வைத்தேன்.

10 அந்தப்படியே, லாமானியர்களுக்கு விரோதமாய் நாங்கள் யுத்தம் புரியச் சென்றோம். நான் என்னுடைய வயதான காலத்திலும் லாமானியர்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்குச் சென்றேன். அந்தப்படியே, நாங்கள் கர்த்தருடைய பெலத்திலே யுத்தத்திற்குச் சென்றோம்.

11 இப்பொழுது லாமானியர்கள் கர்த்தரையோ, கர்த்தருடைய பெலத்தைப்பற்றியோ ஒன்றும் அறியாமலிருந்தார்கள். ஆதலால் அவர்கள் தங்கள் சொந்த பெலத்தையே சார்ந்திருந்தார்கள். ஆகிலும் மனுஷருடைய பெலத்தின்படி பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.

12 அவர்கள் மூர்க்கத்தனமுள்ளவர்களாகவும், பொல்லாதவர்களாகவும், இரத்ததாகம் கொண்ட ஜனங்களாகவுமிருந்து, தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலே எருசலேம் தேசத்தைவிட்டு துரத்தப்பட்டார்கள் எனவும், தங்கள் சகோதரர்களால் வனாந்தரத்தில் அநியாயஞ் செய்யப்பட்டார்களெனவும், சமுத்திரத்தைக் கடக்கும்போதும் அநியாயஞ் செய்யப்பட்டார்களெனவும்,

13 அவர்கள் சமுத்திரத்தைக் கடந்த பின்னரும் தங்கள் முதற் சுதந்தர பூமியிலும் அநியாயஞ்செய்யப்பட்டார்கள் என்றும், இவைகளெல்லாம் நேபி கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதில் அதிக விசுவாசமாயிருந்ததாலே சம்பவித்தது என்றும், ஆகையால் கர்த்தர் அவனது விண்ணப்பங்களைக் கேட்டு அவைகளுக்குப் பதிலளித்ததால், கர்த்தரிடத்திலிருந்து தயைபெற்று, வனாந்தரத்திலே அவர்களின் பயணங்களை அவன் முன்னின்று நடத்தினான், என்பதான தங்கள் பிதாக்களின் பாரம்பரியத்திலே விசுவாசித்தார்கள்.

14 கர்த்தருடைய நடவடிக்கைகளை அறியாததினிமித்தம் அவனது சகோதரர்கள் அவன் மேல் உக்கிரம் கொண்டார்கள்; கர்த்தருக்கு விரோதமாய் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தினதாலே, தண்ணீர்கள் மீதிருக்கும்போதும் அவனோடு உக்கிரம் கொண்டார்கள்.

15 வாக்குத்தத்தின் தேசத்தை அவர்கள் அடைந்த பின்னும் அவன்மேல் உக்கிரம் கொண்டார்கள், ஏனெனில் தங்கள் கைகளிலிருந்து ஜனத்தை அரசாளுவதை அபகரித்துக் கொண்டான் என்று சொன்னார்கள். அவனைக் கொலை செய்யவும் வகைதேடினார்கள்.

16 மேலும் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, பித்தளைத் தகடுகளின்மீது பொறிக்கப்பட்டிருந்த பதிவேடுகளை எடுத்துக்கொண்டு, அவன் வனாந்தரத்தினுள் புறப்பட்டுப்போனதினிமித்தம், அவன் மேல் உக்கிரம்கொண்டார்கள். ஏனெனில் அவைகளை அவன் களவாடினான், என்றார்கள்.

17 இவ்விதமாய் அவர்களை வெறுக்கவும் அவர்களைக் கொலை செய்யவும், அவர்களை களவாடி சூறையாடவும், அவர்களை அழிக்க எல்லாவற்றையும் செய்யவும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் போதித்திருக்கிறார்கள்; ஆதலால் அவர்கள் நேபியின் பிள்ளைகளிடம் ஒரு தணியா வெறுப்பை உடையவர்களாயிருக்கிறார்கள்.

18 இந்தக் காரணத்துக்காகவே லாமான் ராஜா தன் தந்திரத்தாலும், வஞ்சிக்கிறதிற்கேதுவான சூதாலும், சரியான தனது வாக்குத்தத்தங்களாலும் என்னை வஞ்சித்து, என் ஜனத்தை அழித்துப் போடும்படிக்கே தேசத்திற்குள் கொண்டுவரப்பண்ணினான்; ஆம், இத்தேசத்தில் இதுகாலம் வரைக்கும் துன்பங்களை அனுபவித்திருக்கிறோம்.

19 இப்பொழுதும் சீநிப்பாகிய நான், லாமானியர்களைக் குறித்து இக்காரியங்கள் அனைத்தையும் என் ஜனத்திற்கு சொன்ன பின்பு, கர்த்தரில் தங்கள் நம்பிக்கையை வைத்து, தங்களின் ஊக்கத்தோடு யுத்தத்திற்கு செல்லும்படி உற்சாகமளித்தேன்; ஆதலால் முகமுகமாய் அவர்களுடன் யுத்தம் புரிந்தோம்.

20 அந்தப்படியே, எங்கள் தேசத்தைவிட்டு மறுபடியும் அவர்களைத் துரத்தினோம்; பெரும் சங்காரத்திலே அவர்களைக் கொன்றுபோட்டதினாலே, எண்ணக்கூடாத அளவுக்கு அதிகமாக இருந்தது.

21 அந்தப்படியே, மறுபடியும் எங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பினோம். என்னுடைய ஜனங்கள் மறுபடியும் தங்களின் மந்தைகளை மேய்க்கவும், நிலத்தைப் பண்படுத்தவும் துவங்கினார்கள்.

22 இப்பொழுதும் நான் வயது முதிர்ந்த போது என் குமாரரில் ஒருவனிடத்திலே என் ராஜ்யபாரத்தைக் கொடுத்தேன்; எனவே நான் இனி எதுவும் சொல்லுவதில்லை. கர்த்தர் என் ஜனத்தை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.