வேதங்கள்
மோசியா 25


அதிகாரம் 25

சாரகெம்லாவிலிருக்கும் மூலெக்கின் சந்ததி நேபியர்களாகுதல் – அவர்கள் ஆல்மா மற்றும் சீனிப்பின் ஜனத்தைக் குறித்து அறிதல் – ஆல்மா, லிம்கிக்கும் அவனுடைய சகல ஜனத்திற்கும் ஞானஸ்நானம் கொடுத்தல் – தேவனுடைய சபையை ஸ்தாபிக்கும்படி ஆல்மாவிற்கு மோசியா அதிகாரம் கொடுத்தல். ஏறக்குறைய கி.மு. 120.

1 இப்பொழுது மோசியா ராஜா ஜனங்கள் அனைவரும் ஏகமாய்க் கூடும்படிச் செய்தான்.

2 மூலெக்கின் சந்ததியும், அவனோடுகூட வனாந்தரத்திலே வந்தவர்களுமான சாரகெம்லாவின் ஜனத்தாரைப்போல நேபியின் பிள்ளைகளோ அல்லது நேபியின் சந்ததியினரோ, அதிகமாக இருக்கவில்லை.

3 நேபியின் ஜனங்களும், சாரகெம்லாவின் ஜனங்களும் லாமானியர்களைப் போல, அதிகமாயிருக்கவில்லை. ஆம், அவர்களுடைய எண்ணிக்கையிலே பாதியளவும் கூட இவர்கள் இருக்கவில்லை.

4 இப்பொழுதும் நேபியினுடைய ஜனத்தார் அனைவரும், சாரகெம்லாவின் சகல ஜனமும் ஒன்றாய்க் கூடினார்கள், அவர்கள் இரண்டு கூட்டத்தினராய் ஒன்றாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

5 அந்தப்படியே, மோசியா தன் ஜனத்தாருக்கு சீநிப்பின் பதிவேடுகளை தாமே வாசித்தான், வாசிக்கப்படவும் செய்தான். ஆம், அவர்கள் சாரகெம்லா தேசத்தை விட்டுச்சென்ற காலத்திலிருந்து, மறுபடியும் திரும்பினது வரைக்குமாக உள்ள சீநிப்பின் ஜனத்தினுடைய பதிவேடுகளை வாசித்தான்.

6 ஆல்மாவும் அவனுடைய சகோதரர்களும் சாரகெம்லா தேசத்தைவிட்டுச் சென்று, மறுபடியும் திரும்பிய காலம் வரைக்குமாக உள்ள, அவர்களுடைய விவரத்தையும், அவர்களது அனைத்து உபத்திரவங்களைப்பற்றியும் வாசித்தான்.

7 இப்பொழுதும் மோசியா பதிவேடுகளை வாசித்து முடித்த பின்பு, அத்தேசத்திலே தங்கியிருந்த அவனுடைய ஜனங்கள் ஆச்சரியமும், திகைப்பும் அடைந்தார்கள்.

8 ஏனெனில் என்ன நினைப்பதென்று அவர்கள் அறியவில்லை. ஏனெனில் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தவர்களை அவர்கள் கண்டபோது, அவர்கள் மிகுந்த சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டனர்.

9 மறுபடியும், லாமானியர்களால் கொலை செய்யப்பட்டிருந்த தங்களுடைய சகோதரர்களை அவர்கள் நினைத்தபோது, துக்கத்தால் நிரப்பப்பட்டு, வேதனையால் அதிகமாக கண்ணீர் சிந்தினார்கள்.

10 மறுபடியும் தேவனுடைய உடனடியான நற்குணத்தையும், லாமானியர்களின் கைகளுக்கும், அடிமைத்தனத்திலிருந்தும், ஆல்மாவையும் அவனுடைய சகோதரரையும் விடுவித்ததினாலான அவருடைய வல்லமையையும் நினைத்துப் பார்த்தபோது, அவர்கள் தங்கள் சத்தங்களை உயர்த்தி, தேவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

11 மறுபடியும், தங்களுடைய சகோதரர்களாகிய லாமானியர்களுடைய பாவமும், அசுசியுமான நிலையை நினைத்தபோது, அவர்களுடைய ஆத்துமாக்களின் நலனுக்காக, துக்கத்தாலும், வியாகுலத்தாலும் நிரப்பப்பட்டார்கள்.

12 அந்தப்படியே, லாமானியர்களின் குமாரத்திகளை மனைவிகளாக்கிக் கொண்ட அமுலோன் மற்றும் அவனுடைய சகோதரர்களுடைய பிள்ளைகள், தங்களுடைய தகப்பன்களின் நடத்தைகளினாலே, விசனப்பட்டதினால், இனிமேலும் தங்களுடைய தகப்பன்களின் நாமங்களினாலே அழைக்கப்படாமல், நேபியின் பிள்ளைகளென்று அழைக்கப்படும்படிக்கும், நேபியர்களென்று அழைக்கப்பட்டவர்களோடு கூட எண்ணப்படவும், நேபியின் நாமத்தை தங்கள் மீது தரித்துக்கொண்டார்கள்.

13 இப்பொழுதும் ராஜ்யம் வேறொருவருக்குமல்லாமல், நேபியினுடைய சந்ததிக்கு மாத்திரம் சூட்டப்படுவதினாலே, சாரகெம்லாவின் சகல ஜனங்களும் நேபியர்களோடு எண்ணப்பட்டார்கள்.

14 இப்பொழுதும், அந்தப்படியே, மோசியா தன் ஜனங்களிடத்தில் பேசுவதையும் வாசிப்பதையும் முடித்த பின்பு, ஜனங்களிடத்திலே ஆல்மாவும் பேச வேண்டுமென விரும்பினான்.

15 அவர்கள் திரளான கூட்டங்களாய் கூடியிருந்தபோது ஆல்மா அவர்களிடம் பேசினான். அவன் ஒரு கூட்டத்தாரிடமிருந்து மற்றொன்றிற்குச் சென்று ஜனத்திற்கு மனந்திரும்புதலையும், கர்த்தர்மீது விசுவாசித்தலையும் பிரசங்கித்தான்.

16 அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட யாவருமான லிம்கியினுடைய ஜனத்தினிடமும், அவன் சகோதரர்களிடமும், அவர்களை விடுவித்தது கர்த்தரே என்று அவர்கள் நினைவுகூரும்படி, புத்தி சொன்னான்.

17 அந்தப்படியே, ஆல்மா அநேக காரியங்களை ஜனங்களுக்குப் போதித்து, தன் பேச்சை முடித்தபின்பு, ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று லிம்கி ராஜா விருப்பமுள்ளவனாயிருந்தான்; அவனுடைய சகல ஜனமும் ஞானஸ்நானம் பெறவேண்டுமென விருப்பமுள்ளவர்களாயிருந்தார்கள்.

18 ஆதலால், ஆல்மா தண்ணீரினுள் சென்று அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். ஆம், தன் சகோதரர்களுக்கு மார்மன் தண்ணீர்களிலே ஞானஸ்நானம் கொடுத்ததுபோல அவர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தான். ஆம், அவன் ஞானஸ்நானம் கொடுத்த யாவரும் தேவனுடைய சபைக்கு சொந்தமானார்கள். இது அவர்கள் ஆல்மாவின் வார்த்தைகளிலே விசுவாசித்ததினிமித்தமே.

19 அந்தப்படியே, சாரகெம்லா தேசமுழுவதிலும், சபைகளை ஸ்தாபிக்கும்பொருட்டு மோசியா ராஜா ஆல்மாவிற்கு அனுமதியளித்தான்; ஒவ்வொரு சபையிலும் ஆசாரியர்களையும் ஆசிரியர்களையும் நியமனம் பண்ண அவனுக்கு அதிகாரம் கொடுத்தான்.

20 இப்பொழுது ஒரே ஆசிரியனால் அவர்களனைவரும் நிர்வாகம் செய்ய முடியாதபடி அங்கே அநேகர் இருந்ததாலும், அவர்கள் அனைவரும் ஒரே கூட்டமாய்க் குழுமியிருந்து தேவனுடைய வார்த்தையைக் கேட்கமுடியாததாலும், இப்படிச் செய்யப்பட்டது.

21 ஆதலால் அவர்கள் சபைகள் என்றழைக்கப்பட்டு பல குழுக்களாகக் கூடினார்கள். ஒவ்வொரு சபையும் தங்கள் ஆசாரியர்களையும் தங்கள் ஆசிரியர்களையும் பெற்றிருந்து, ஒவ்வொரு ஆசாரியனும் தனக்கு ஆல்மாவின் வாயினால் சொல்லப்பட்டவைகளின்படியே பிரசங்கித்தான்.

22 இவ்வாறாக அங்கே பல சபைகள் இருந்தபோதிலும், அவைகளனைத்தும், ஆம், தேவனுடைய சபையாகிய ஒரே சபையாயிருந்தது; சபைகள் யாவிலும் மனந்திரும்புதலும், தேவனில் விசுவாசித்தலும் தவிர, வேறொன்றும் பிரசங்கிக்கப்படவில்லை.

23 இப்பொழுதும், சாரகெம்லாவிலே ஏழு சபைகளிருந்தன. அந்தப்படியே, கிறிஸ்துவினுடைய நாமத்தையோ, தேவனுடைய நாமத்தையோ, தங்கள்மீது தரித்துக்கொள்ள விருப்பம்கொண்ட எவரும், தேவனுடைய சபைகளிலே சேர்ந்தார்கள்.

24 தேவனுடைய ஜனம் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள். கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மீது ஊற்றினார். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயிருந்து, தேசத்திலே விருத்தியடைந்தார்கள்.