வேதங்கள்
மோசியா 22


அதிகாரம் 22

ஜனங்கள் லாமானிய அடிமைத்தனத்திலிருந்து தப்பியோட திட்டங்கள் தீட்டப்படுதல் – லாமானியர்களைக் குடிக்கச் செய்தல் – ஜனங்கள் தப்பியோடி சாரகெம்லாவிற்குத் திரும்பி அங்கே மோசியா ராஜாவினுடைய குடிகளாகுதல். ஏறக்குறைய கி.மு. 121–120.

1 இப்பொழுதும், அந்தப்படியே, அம்மோனும், லிம்கி ராஜாவும் அடிமைத்தனத்திலிருந்து, தங்களை விடுவிப்பதெப்படி என்று ஜனங்களோடே ஆலோசிக்கலானார்கள்; எல்லா ஜனமும் ஏகமாய்க்கூடும்படியும் செய்தார்கள்; இந்தக் காரியத்தைக் குறித்து ஜனங்களுடைய அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளவே இப்படிச் செய்தார்கள்.

2 அந்தப்படியே, தங்களின் ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், தங்களின் மந்தைகளையும், தங்களின் ஆடுகளையும், தங்களின் கூடாரங்களையும் எடுத்துக்கொண்டு வனாந்தரத்திற்குள் தப்பியோடுவதைத் தவிர அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஒரு வழியையும் அறியாமலிருந்தார்கள்; லாமானியர்கள் அதிகமாய் இருந்தபடியாலே, லிம்கியினுடைய ஜனங்கள், தங்களை அடிமைத்தனத்திலிருந்து பட்டயத்தினால் மீட்டுக்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு விரோதமாய் சண்டையிடுவது கூடாத காரியமாயிருந்தது.

3 இப்பொழுது, அந்தப்படியே, கிதியோன் போய், ராஜாவின் முன்னின்று, இப்பொழுதும் ராஜாவே, நம்முடைய சகோதரர்களாகிய லாமானியர்களிடம் நாம் சண்டையிட்ட போதெல்லாம், இம்மட்டுமாய் அநேகந்தரம் என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்திருக்கிறீர்.

4 இப்பொழுதும் ராஜாவே, நான் தகுதியற்ற ஊழியனாக நீர் காணாவிட்டால், அல்லது என் வார்த்தைகளை சிறிதளவாகிலும் கேட்டிருந்தால், அது உமக்கு சேவை செய்யத்தான். அவ்வாறே இச்சமயத்திலும் என் வார்த்தைகளை நீர் கேட்கும்படி விரும்புகிறேன். நான் உம்முடைய ஊழியனாயிருந்து, இந்த ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பேன், என்றான்.

5 அவன் பேசும்படிக்கு ராஜா அனுமதி வழங்கினான். கிதியோன் அவனை நோக்கி:

6 இதோ பட்டணத்தின் பின்புறத்திலேயுள்ள பின் அலங்கித்தினூடே வழியிருக்கிறது. லாமானியர்கள் அல்லது லாமானியர்களின் காவற்காரர்கள் இரவிலே குடித்து வெறித்திருப்பார்கள்; ஆதலால் நம் ஜனமெல்லாரும் தங்களின் மந்தைகளையும், ஆடுகளையும் ஏகமாய்ச் சேர்த்து, அவைகளை அவர்கள் இரவிலே வனாந்தரத்திற்குள்ளே நடத்திப்போகும்படி, இந்த ஜனமெல்லாருக்குள்ளும் ஒரு அறிக்கையை அனுப்புவோம்.

7 உம்முடைய கட்டளையின்படி நான் சென்று லாமானியர்களுக்கு இறுதி மதுவரியைச் செலுத்துவேன், அவர்கள் குடித்து வெறித்திருப்பார்கள்; அவர்கள் குடித்து வெறித்து நித்திரையிலிருக்கும்போது நாம் அவர்களுடைய முகாமிற்கு இடது புறத்திலே இருக்கிற இரகசிய வழியாய் கடந்துபோவோம்.

8 இவ்விதமாய் நம்முடைய ஸ்திரீகளோடும், நம்முடைய பிள்ளைகளோடும், நம்முடைய மந்தைகளோடும், நம்முடைய ஆடுகளோடும், வனாந்தரத்தினுள் புறப்பட்டுப்போவோம். நாம் சீலோம் தேசத்தைச் சுற்றி பிரயாணம் பண்ணுவோம் என்றான்.

9 அந்தப்படியே, ராஜா கிதியோனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்தான்.

10 லிம்கி ராஜா தன்னுடைய ஜனத்தார் தங்களுடைய மந்தைகளை ஏகமாய்க் கூட்டும்படிச் செய்தான்; அவன் லாமானியர்களுக்கு வரியாய் மதுவை அனுப்பினான். அதிக மதுவை அவர்களுக்கு வெகுமானமாக அனுப்பி வைத்தான்; அவர்கள் லிம்கி ராஜா தங்களுக்கு அனுப்பிய மதுவை மிகுதியாய் பானம்பண்ணினார்கள்.

11 அந்தப்படியே, லிம்கி ராஜாவினுடைய ஜனங்கள் தங்கள் மந்தைகளோடும், தங்களின் ஆடுகளோடும், இரவிலே வனாந்தரத்திற்குள்ளே புறப்பட்டுப்போய், அம்மோனாலும் அவனுடைய சகோதரர்களாலும் நடத்தப்பட்டு, வனாந்தரத்திலே சீலோம் தேசத்தைச் சுற்றிச் சென்று, சாரகெம்லா தேசத்திற்கு நேராக தங்களின் மார்க்கத்தைத் திருப்பினார்கள்.

12 அவர்கள் தங்களால் தூக்கமுடிந்த தங்களுடைய எல்லா பொன்னையும் வெள்ளியையும், தங்களுடைய விலையுயர்ந்த பொருட்களையும், தங்களுடைய ஆகாரங்களையும் அவர்களுடன் வனாந்தரத்தினுள் எடுத்துச்சென்று, தங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தார்கள்.

13 அவர்கள் வனாந்தரத்திலே அநேக நாட்கள் இருந்த பின்னர் சாரகெம்லாவின் தேசத்தையடைந்து, மோசியாவின் ஜனங்களுடன் சேர்ந்து, அவனுடைய குடிகளானார்கள்.

14 அந்தப்படியே, மோசியா அவர்களை மகிழ்ச்சியுடனே ஏற்றுக்கொண்டான்; அவன் அவர்களின் பதிவேடுகளையும், லிம்கி ஜனத்தால் கண்டெடுக்கப்பட்ட பதிவேடுகளையும், பெற்றுக்கொண்டான்.

15 இப்பொழுதும், அந்தப்படியே, இரவிலே லிம்கியினுடைய ஜனத்தார் தேசத்தை விட்டோடியதை லாமானியர்கள் கண்டபோது, அவர்களை பின்தொடரும்படி, வனாந்தரத்தினுள் ஒரு சேனையை அனுப்பினார்கள்.

16 இரண்டு நாட்கள் அவர்களைப் பின்தொடர்ந்துபோன பின்பு, அவர்களால் அவர்களுடைய வழித்தடங்களை காணமுடியாமற்போனது. ஆதலால் அவர்கள் வனாந்தரத்திலே தொலைந்துபோனார்கள்.