வேதங்கள்
மோசியா 14


அதிகாரம் 14

ஏசாயா மேசியாவைப்பற்றிப் பேசுதல் – மேசியாவின் பாடுகளும், நிந்தனைகளும் முன்னறிவிக்கப்படுதல் – அவர் தன் ஆத்துமாவை பாவத்திற்கான பலியாய் ஈந்து மீறுபவர்களுக்காக பரிந்துபேசுவார். ஏசாயா 53ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 148.

1 ஆம், ஏசாயா சொல்லவில்லையா: நம்முடைய செய்தியை விசாரித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

2 ஏனெனில் அவருக்கு முன்பாக ஒரு இளம் செடியைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து வெளிவரும் வேரைப்போலவும் எழும்புவார். அவருக்கு ரூபமில்லை, சவுந்தரியமுமில்லை. அவரை நாம் காணும்போது, நாம் அவரை விரும்பும்படியான அழகு இல்லாமலுமிருக்கிறது.

3 அவர் மனுஷரால் தூஷிக்கப்பட்டவராயும், ஒதுக்கப்பட்டவராயும், சஞ்சலமுள்ளவராயும், துக்கம் நிறைந்தவராயும் இருக்கிறார். அவரைவிட்டு நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டை செய்யப்பட்டார். அவரை மதியாமற்போனோம்.

4 மெய்யாகவே அவர் நம் சஞ்சலங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; ஆயினும் அவர் தேவனால் அடிக்கப்பட்டு, வாதிக்கப்பட்டு, உபத்திரவப்பட்டார் என எண்ணினோம்.

5 ஆனால் அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்; நம்முடைய பாவத்தின் சிட்சை அவர் மீதிருந்தது. அவருடைய தழும்புகளினாலே நாம் குணமாகிறோம்.

6 ஆடுகளைப்போல நாமெல்லோரும் வழிதவறிப்போய், அனைவரும் தன் தன் சொந்த வழிகளுக்குத் திரும்பினோம். கர்த்தரே நம் எல்லோருடைய அக்கிரமங்களையும் அவர்மீது விழப்பண்ணினார்.

7 அவர் ஒடுக்கப்பட்டு, உபத்திரவப்பட்டபோதும் தன் வாயைத் திறவாமல் இருந்தார். அடிக்கப்படுவதற்கு எடுத்துச் செல்லப்படுகிற ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க் கத்திரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாமலிருந்தார்.

8 சிறையிலிருந்தும், நியாய விசாரிப்பிலிருந்தும் அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவருடைய வம்சத்தை யார் அறிவிக்கக்கூடும்? ஏனெனில் அவர் ஜீவனுள்ளோர் தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதல்களினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

9 துன்மார்க்கரோடு தம்முடைய கல்லறையை நியமித்து, தம் மரணத்திலே ஐஸ்வரியவான்களோடு இருந்தார்; அவர் பொல்லாப்பைச் செய்ததுமில்லை. அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

10 ஆயினும் அவரை நொறுக்குவது கர்த்தருக்கு சித்தமாகி, அவரைச் சஞ்சலப்படுத்தினார்; அவருடைய ஆத்துமாவை நீ பாவகாணிக்கையாய், செலுத்தும்போது, அவன் தமது சந்ததியைக் கண்டு, தன் நாட்களை நீடித்துப்போடுவான். கர்த்தருடைய சித்தமானது அவன் கையிலே விருத்தியடையும்.

11 அவர் தமது ஆத்துமாவின் வருத்தத்தைக் கண்டு திருப்தியடைவார்; அவருடைய ஞானத்தினால் என் சன்மார்க்க தாசன் அநேகரை நியாயவான்களாக்குவார்; ஏனெனில் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமந்துகொள்ளுவார்.

12 ஆகையால் நான் மகத்துவமுள்ளவர்களின் நடுவே அவருக்கு ஒரு பங்கைக் கொடுப்பேன். அவர் தமது ஆத்துமாவை மரணத்திற்கேதுவாக ஊற்றினதினிமித்தம், பராக்கிரமசாலிகளுடன் கொள்ளைப்பொருளைப் பகிர்ந்தளிப்பார்; அக்கிரமக்காரரோடு அவர் எண்ணப்பட்டு அநேகருடைய பாவங்களைச் சுமந்து அக்கிரமக்காரர்களுக்காக பரிந்துபேசினார்.