வேதங்கள்
மோசியா 11


அதிகாரம் 11

நோவா ராஜா துன்மார்க்கத்திலே ஆட்சி செய்தல் – அவன் தன் மனையாட்டிகளோடும், மறுமனையாட்டிகளோடும் கட்டுக்கடங்காமல் ஜீவித்து, களித்திருத்தல் – ஜனங்கள் சிறைத்தனத்திற்குள் கொண்டுபோகப்படுவார்கள் என்று அபிநாதி தீர்க்கதரிசனமுரைத்தல் – அவன் ஜீவனை வாங்கிப்போட நோவா ராஜா முயற்சித்தல். ஏறக்குறைய கி.மு. 160–150.

1 இப்பொழுது, அந்தப்படியே, சீநிப் தன் குமாரர்களில் ஒருவனான நோவாவின்மீது ராஜ்யபாரத்தை அருளினான். ஆதலால் அவனுடைய ஸ்தானத்திலே நோவா ஆட்சி செய்தான். அவன் தன்னுடைய தகப்பனின் வழிகளில் நடக்கவில்லை.

2 ஏனெனில் இதோ, அவன் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தன் சொந்த இருதயத்தின் விருப்பங்களின்படியே நடந்தான். அவனுக்கு அநேக மனையாட்டிகளும், மறுமனையாட்டிகளும் இருந்தார்கள். அவன் தன் ஜனத்தை, பாவத்தையும் கர்த்தருடைய பார்வைக்கு அருவருப்பானவற்றையும், நடப்பிக்கும்படிச் செய்தான். ஆம், அவர்கள் வேசித்தனங்களையும், சகலவிதமான அக்கிரமங்களையும் செய்தார்கள்.

3 அவர்கள் அவர்களின் பொன்னிலும் அவர்களின் வெள்ளியிலும் ஐந்தில் ஒரு பங்கையும், அவர்களின் சிப்பிலும், அவர்களின் தாமிரத்திலும், அவர்களின் பித்தளையிலும், இரும்பிலும் ஐந்தில் ஒரு பங்கையும், அவர்களின் நிணமுள்ளவைகளில் ஐந்தில் ஒரு பங்கையும், அவர்களின் எல்லா தானியங்களிலும் ஐந்தில் ஒரு பங்கையும், மேலும் அவர்கள் வைத்திருந்த சகலவற்றிலும் ஐந்தில் ஒரு பங்கை வரியாய் விதித்தான்.

4 அவன் தன்னையும், தன் மனையாட்டிகளையும், மறுமனையாட்டிகளையும், தன் ஆசாரியர்களையும், அவர்களின் மனையாட்டிகளையும், மறுமனையாட்டிகளையும் ஆதரிக்க, இவைகளெல்லாவற்றையும் செய்தான்; இப்படியாக அவன் ராஜ்ய விவகாரங்களை மாற்றிப்போட்டான்.

5 அவன் தன் தகப்பனால் நியமிக்கப்பட்ட ஆசாரியர்களை நீக்கிப்போட்டு, தங்கள் இருதயங்களிலே இறுமாப்புகொண்டவர்களை அவர்களுக்குப் பதிலாய் நியமனம் பண்ணினான்.

6 ஆம், அவர்கள் சோம்பேறிகளாயும், விக்கிரக ஆராதனைக்காரராயும், வேசித்தனங்களைச் செய்கிறவர்களாயுமிருக்க, நோவா ராஜா தன் ஜனத்தின்மீது விதித்த வரியின் மூலம் ஆதரிக்கப்பட்டார்கள். இப்படியாக அக்கிரமத்தை ஆதரிக்கவே ஜனங்கள் மிகவும் பிரயாசப்பட்டார்கள்.

7 ஆம், அவர்கள் ராஜாவாலும் ஆசாரியர்களாலும் வீணான இச்சக வார்த்தைகளால் வஞ்சிக்கப்பட்டதினால், விக்கிரக ஆராதனைக்காரர்களானார்கள்; ஏனெனில் அவர்களிடத்திலே இச்சகமானவைகளைப் பேசினார்கள்.

8 அந்தப்படியே, நோவா ராஜா அலங்காரமும் விசாலமுமான அநேக கட்டிடங்களைக் கட்டினான்; அவைகளைச் சிறந்த மரவேலைகளாலும், சகல விதமான விலையுயர்ந்த பொருட்களாலும், பொன்னாலும், வெள்ளியாலும், இரும்பாலும், பித்தளையாலும், சிப்பினாலும், செம்பாலுமான, விலையுயர்ந்த பொருட்களாலும் அலங்கரித்தான்.

9 அவன் தனக்கென்று ஒரு விசாலமான அரண்மனையையும், அதன் நடுவே சிறந்த மரத்தாலும், பொன்னாலும், வெள்ளியாலும், விலையுயர்ந்த பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான சிங்காசனத்தையும் கட்டினான்.

10 அவன் தன்னுடைய வேலையாட்கள் ஆலயத்தின் மதில்களின் உட்புறத்திலே மரத்தாலும், தாமிரத்தாலும், பித்தளையாலும் சகல விதமான அருமையான வேலைகளைச் செய்யும்படிச் செய்தான்.

11 பிரதான ஆசாரியர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகள், மற்ற எல்லா இருக்கைகளைக் காட்டிலும் உயர்ந்திருந்தன, அவைகளை பசும்பொன்னால் அலங்கரித்தான்; அவர்கள் தங்கள் ஜனங்களுக்கு பொய்யும் வீணானதுமான வார்த்தைகளைப் பேசும்போது, அவர்களது சரீரங்களும் கரங்களும் ஓய்வாய் சாயும்பொருட்டு, அவைகளுக்கு சாய்வுகள் செய்யப்படும்படிச் செய்தான்.

12 அந்தப்படியே, அவன் ஆலயத்திற்கு அருகாமையிலே ஒரு கோபுரத்தைக் கட்டினான்; ஆம், அந்த உயரமான கோபுரத்தின் உச்சியிலே அவன் நின்றுகொண்டு, சீலோம் தேசத்தையும், லாமானியர்களால் சுதந்தரிக்கப்பட்ட சேம்லோன் தேசத்தையும், சுற்றியுமுள்ள தேசம் முழுவதையும், காணும் அளவிற்கு அது மிக உயரமானதாயிருந்தது.

13 அந்தப்படியே, சீலோம் தேசத்திலே அநேக கட்டிடங்களைக் கட்டும்படிச் செய்தான்; நேபியின் பிள்ளைகள், தேசத்தை விட்டோடும் காலங்களில், அவர்களுக்கு அரணான சீலோம் தேசத்தின் வடக்கேயிருந்த மலையிலே பெரிய கோபுரம் ஒன்றைக் கட்டும்படிச் செய்தான்; தன் ஜனங்களிடமிருந்து வரியாய் பெற்ற ஐஸ்வரியங்களைக் கொண்டு இப்படியாய் செலவழித்தான்.

14 அந்தப்படியே, அவன் தன்னுடைய இருதயத்தை தன் ஐஸ்வரியங்களின் மீது வைத்தான். அவன் நேரத்தை தன் மனைவிகளோடும், தன் மறுமனையாட்டிகளோடும் கட்டுக்கடங்காத விதமாக கழித்தான்; அவ்வாறே அவனுடைய ஆசாரியர்களும் வேசிகளோடே தங்கள் நேரத்தைக் கழித்தார்கள்.

15 அந்தப்படியே, அவன் தேசத்தைச் சுற்றிலும் திராட்சை தோட்டத்தை நாட்டினான்; அவன் திராட்சை ஆலைகளைக் கட்டி, அளவிற்கதிகமாய் திராட்சைரசத்தைத் தயாரித்தான். அதினிமித்தம் அவனும் அவனுடைய ஜனமும் மதுபானப் பிரியரானார்கள்.

16 அந்தப்படியே, லாமானியர்கள், இவன் ஜனத்தில் சிலர் மீது விழுந்து, தங்கள் வயல்களிலே, மந்தைகளைப் பேணிக் காக்கும்போது கொன்றுபோட்டார்கள்.

17 நோவா ராஜா அவர்கள் பிரவேசியாமலிருக்க தேசத்தைச் சுற்றிலும் காவற்காரர்களை அனுப்பினான்; ஆனால் அவன் போதுமானோரை அனுப்பாததினிமித்தம், லாமானியர்கள் அவர்கள் மேல் விழுந்து அவர்களைக் கொன்று, அவர்களின் திரளான மந்தைகளை தேசத்திற்கு வெளியே நடத்திச் சென்றார்கள். இவ்விதமாக லாமானியர்கள் அவர்களை அழித்து, அவர்களின் மீதிருந்த தங்களின் வெறுப்பை செயலாக்கத் துவங்கினார்கள்.

18 அந்தப்படியே, ராஜாவாகிய நோவா, தன் சேனைகளை அவர்களுக்கெதிராக அனுப்பினான்; அவர்கள் துரத்தியனுப்பப்பட்டார்கள். சிறிது காலம் வரைக்கும், அவர்கள் துரத்தப்பட்டிருந்தார்கள். ஆதலால் அவர்கள் தங்களின் கொள்ளைப்பொருளில் களிகூர்ந்து திரும்பினார்கள்.

19 இப்பொழுது இந்த மகா ஜெயத்தினிமித்தம், அவர்கள் தங்கள் இருதயங்களிலே பெருமையில் உயர்த்தப்பட்டார்கள்; தங்களின் ஐம்பதுபேர் ஆயிரக்கணக்கான லாமானியர்களுக்கு விரோதமாய் நிற்கமுடியும் என்று சொல்லி, தங்களின் சொந்த பெலத்திலே பெருமை பாராட்டினார்கள்; இவ்விதமாய் அவர்கள் தற்பெருமை பாராட்டி இரத்தத்திலும், தங்கள் சகோதரரின் இரத்தத்தை சிந்துதலிலும் களிகூர்ந்தார்கள். தங்களின் ராஜா மற்றும் ஆசாரியர்களின் துன்மார்க்கத்தினிமித்தமே இப்படிச் செய்தார்கள்.

20 அந்தப்படியே, அவர்கள் மத்தியிலே அபிநாதி என்று பெயர் கொண்ட மனுஷன் இருந்தான்; அவன் அவர்கள் மத்தியிலே சென்று தீர்க்கதரிசனமுரைக்கத் துவங்கி; இதோ, கர்த்தர் உரைப்பது என்னவெனில், அவர் எனக்குக் கட்டளையிட்டு கர்த்தர் உரைப்பது என்னவெனில், நீ இந்த ஜனத்திற்குள்ளேபோய், இதோ இந்த ஜனத்திற்கு ஐயோ. ஏனெனில் நான் அவர்களின் அருவருப்பையும், அவர்களின் துன்மார்க்கத்தையும், அவர்களின் வேசித்தனங்களையும் கண்டேன். அவர்கள் மனந்திரும்பாவிடில், என்னுடைய கோபாக்கினையிலே அவர்களை விசாரிப்பேன்.

21 அவர்கள் மனந்திரும்பி, கர்த்தராகிய தங்கள் தேவனிடத்தில் திரும்பாமலிருப்பார்களெனில், இதோ, அவர்களை தங்கள் விரோதிகளின் கைகளில் ஒப்புவிப்பேன்; ஆம், அவர்கள் அடிமைத்தனத்திற்குள்ளே கொண்டுபோகப்பட்டு, தங்களின் சத்துருக்களின் கரங்களாலே துன்புறுத்தப்படுவார்கள்.

22 நானே அவர்களின் தேவனாகிய கர்த்தரென்றும், என் ஜனத்தினுடைய அக்கிரமங்களை விசாரிக்கிற, பொறாமையுள்ள தேவனென்றும் அறிவார்கள்.

23 இந்த ஜனத்தார் மனந்திரும்பி கர்த்தராகிய தங்கள் தேவனிடத்தில் திரும்பாமலிருப்பார்களெனில், அவர்கள் சிறைத்தனத்திற்குள்ளே கொண்டுபோகப்படுவார்கள், கர்த்தராகிய சர்வவல்ல தேவனேயல்லாமல் வேறொருவரும் அவர்களைத் தப்புவிப்பதில்லை.

24 ஆம், என்னை நோக்கி அவர்கள் கூக்குரலிடும்போது அவர்களின் விண்ணப்பத்தைக் கேட்க தாமதிப்பேன். ஆம், மேலும் அவர்களின் சத்துருக்களால் அவர்கள் அடிக்கப்பட இடங்கொடுப்பேன்.

25 இரட்டுடுத்தி, சாம்பலைப் போட்டுக்கொண்டு, மனந்திரும்பி, தேவனாகிய தங்கள் கர்த்தரிடத்திலே ஊக்கமாய் கூக்குரலிட்டாலொழிய, அவர்களின் விண்ணப்பங்களுக்கு செவிகொடேன். அவர்களின் உபத்திரவங்களிலிருந்து அவர்களை தப்புவிக்கவும் மாட்டேன் என்று சொல்லுவாயாக என்று, இவைகளின் பிரகாரமே அவர் எனக்குக் கட்டளையிட்டார், என்றான்.

26 இப்பொழுது, அந்தப்படியே, இந்த வார்த்தைகளை அபிநாதி அவர்களிடத்தில் பேசியபோது, அவன்மீது அவர்கள் குரோதம் கொண்டு, அவன் ஜீவனை வாங்கிப்போட வகை தேடினார்கள்; ஆனால் அவர்களின் கைகளிலிருந்து கர்த்தர் அவனைத் தப்புவித்தார்.

27 இப்பொழுது ஜனத்திற்கு அபிநாதி பேசிய வார்த்தைகளை நோவா ராஜா கேள்விப்பட்டபோது அவனும் கோபம்கொண்டு, யார் அபிநாதி, நானும் என் ஜனமும் அவனால் தீர்க்கப்படுவதென்ன? என் ஜனத்தின்மீது இத்தகைய மகா உபத்திரவங்களைக்கொண்டு வருகிற, அந்த கர்த்தர் தான் யார்? என்று சொன்னான்.

28 நான் அபிநாதியை கொன்று போடும்படி, இங்கே கொண்டுவரும்படி உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். ஏனெனில் என் ஜனத்தைத் தூண்டி, ஒருவரோடொருவர் குரோதம் கொண்டிருக்கவும், என் ஜனங்களுக்குள்ளே பிணக்குகள் எழ வேண்டுமென்பதற்காகவே, இவைகளைச் சொல்லியிருக்கிறான். ஆகவே நான் அவனைக் கொன்றுபோடுவேன்.

29 இப்பொழுது ஜனங்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருந்தது, ஆகையால் அபிநாதியின் வார்த்தைகளுக்கு விரோதமாய் தங்கள் இருதயங்களைக் கடினமாக்கி, அச்சமயம் முதற்கொண்டு அவனைப் பிடிக்கும்படி வகை தேடினார்கள். கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாய் நோவா ராஜா தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, தன்னுடைய பொல்லாத செயல்களுக்காக மனந்திரும்பாமலிருந்தான்.