வேதங்கள்
மோசியா 28


அதிகாரம் 28

மோசியாவின் குமாரர்கள் லாமானியர்களுக்கு பிரசங்கிக்க போகுதல் – இரண்டு ஞானதிருஷ்டிக் கற்களைப் பயன்படுத்தி மோசியா யாரேதிய தகடுகளை மொழிபெயர்த்தல். ஏறக்குறைய கி.மு. 92.

1 இப்பொழுது, அந்தப்படியே, இந்தக் காரியங்கள் அனைத்தையும் மோசியாவின் குமாரர்கள் செய்த பின்பு, அவர்கள் தங்களோடு சிலரை கூட்டிக்கொண்டு தங்கள் தகப்பனாகிய ராஜாவினிடத்திலே திரும்பிப்போய், தாங்கள் தெரிந்துகொண்ட சிலரோடு லாமானியர்களாகிய தங்கள் சகோதரர்களுக்கு தாங்கள் கேட்ட காரியங்களைப் பிரசங்கித்து, தேவவசனத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிக்க, நேபியின் தேசத்திற்குச் செல்வதற்கு தங்களை அவன் அனுமதிக்க வேண்டுமென விரும்பினார்கள்.

2 அது ஒருவேளை நேபியர்களிடம் கொண்டிருந்த அவர்களின் பகையை நீக்கிப்போட்டு, அவர்கள் தேவனாகிய தங்கள் கர்த்தரிலே களிகூர்ந்து, அவர்கள் ஒருவரோடொருவர் நேசமாயிருந்து, அவர்களுக்கு தேவனாகிய தங்கள் கர்த்தர் கொடுத்த தேசத்தில், எந்த ஒரு பிணக்குமில்லாதிருக்கும்படிக்கு, அவர்களை தேவனாகிய தங்கள் கர்த்தருடைய ஞானத்திற்குக் கொண்டுவரவும், அவர்களுடைய பிதாக்களின் அக்கிரமங்களை அவர்களுக்கு உணர்த்தவும் சித்தமாயிருந்தார்கள்.

3 இப்பொழுதும் அவர்களால் எந்த ஒரு மனுஷ ஆத்துமாவும் அழிந்துபோவதை தாங்கிக்கொள்ளமுடியாததால், எல்லா சிருஷ்டிக்கும் இரட்சிப்பு அறிவிக்கப்படவேண்டும் என்று வாஞ்சித்தார்கள்; ஆம், எந்த ஆத்துமாவும் நித்திய வேதனையை சகிக்கவேண்டும், என்ற எண்ணம் கூட அவர்களை நடுங்கவும் திகிலடையவும் செய்தது.

4 அவர்கள் பாவிகளிலே கொடிய பாவிகளாயிருந்ததினால் கர்த்தருடைய ஆவி அவர்கள்மீது இவ்விதமாக கிரியை செய்தது. கர்த்தர் தம்முடைய எல்லையற்ற இரக்கத்தினாலே அவர்களைத் தப்பவிடுவது ஏற்றதெனக் கண்டார். இருப்பினும் அவர்களின் அக்கிரமங்களினிமித்தம், அவர்கள் என்றென்றுமாய் புறம்பே தள்ளிவிடப்படுவார்கள் என்று பயந்து, அதிகமாய் துன்பப்பட்டு, ஆத்துமாவின் வியாகுலத்தால் கஷ்டப்பட்டார்கள்.

5 அந்தப்படியே, நேபியின் தேசத்திற்கு அவர்கள் போகும்படி தங்களுடைய தகப்பனிடத்திலே அநேக நாட்களாய் கெஞ்சினார்கள்.

6 மோசியா ராஜா தன் குமாரர்கள் லாமானியர்களுக்குள்ளே சென்று வார்த்தையைப் பிரசங்கிக்க தான் அனுப்பவேண்டுமா, என்று, கர்த்தரிடத்திலே வினவினான்.

7 கர்த்தர் மோசியாவை நோக்கி: அவர்களுடைய வார்த்தைகளை அநேகர் விசுவாசிக்கப்போவதால், அவர்கள் செல்வார்களாக; அவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்; நான் உன் குமாரர்களை லாமானியர்களின் கைகளுக்கு விலக்கிக் காப்பேன், என்றார்.

8 அந்தப்படியே, அவர்கள் சென்று, தாங்கள் வேண்டிக்கொண்டதின்படியே செய்யும்படி, மோசியா அனுமதித்தான்.

9 லாமானியர்களுக்குள் வார்த்தையைப் பிரசங்கிக்க வனாந்தரத்திற்குள்ளே அவர்கள் தங்கள் பிரயாணத்தை மேற்கொண்டார்கள்; இனி அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு விவரத்தை நான் கொடுக்கிறேன்.

10 இப்பொழுதும் மோசியா ராஜாவின் குமாரருக்குள் எவரும் ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் ராஜ்யபாரத்தை ஏற்க எவருமில்லாமலிருந்தார்கள்

11 ஆதலால் அவன் பித்தளைத் தகடுகளின்மீது பதிக்கப்பட்டிருந்த பதிவேடுகளையும், நேபியின் தகடுகளையும், லிம்கி ஜனத்தால் கண்டெடுக்கப்பட்டு, லிம்கியின் கரத்தால் இவனுக்குக் கொடுக்கப்பட்ட தங்கத் தகடுகளையும் மொழிபெயர்த்து, எழுதப்படச் செய்து, தேவனுடைய கட்டளைக்கு ஏற்ப பாதுகாத்து வைத்த எல்லாவற்றையும் எடுத்தான்.

12 தன் ஜனத்தின் பேராவலினிமித்தம் இதைச் செய்தான். ஏனெனில் அழிக்கப்பட்ட ஜனங்களைக் குறித்து அறிய அவர்கள் அளவிற்கதிகமாய் வாஞ்சையுடையவர்களாயிருந்தார்கள்.

13 இப்பொழுதும் ஒரு வில்லின் இரண்டு முனைகளிலும் கட்டப்பட்டிருந்த, அந்த இரண்டு கற்களைக்கொண்டு அவைகளை மொழிபெயர்த்தான்.

14 இப்பொழுது இந்தக் காரியங்கள் ஆதியிலிருந்தே ஆயத்தம் பண்ணப்பட்டு, மொழிபெயர்க்கும் நோக்கத்தோடு தலைமுறை தலைமுறைகளாய் கைமாற்றப்பட்டு வந்தன

15 இந்த தேசத்தை சுதந்தரிக்கும் ஒவ்வொரு சிருஷ்டிக்கும், தம் ஜனங்களினுடைய அக்கிரமங்களையும், அருவருப்புகளையும் கர்த்தர் தெரிவிக்கும்படி, அவருடைய கரத்தால் இவை வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன.

16 பூர்வ காலங்களைப்போலவே, இவைகளை வைத்திருக்கிறவர்கள் ஞானதிருஷ்டிக்காரர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

17 இப்பதிவேடுகளை மோசியா மொழிபெயர்த்து முடித்த பின்பு, இதோ, அவை அழிக்கப்பட்டுப்போன, ஒரு ஜனத்தாருடைய வரலாற்றைக் கொடுத்தது. அவர்கள் நிர்மூலமாக்கப்பட்ட சமயமுதல், அதற்கு அதிமுன்னமே சம்பவித்ததான ஆதாமின் சிருஷ்டி துவங்கி கர்த்தர் ஜனங்களுடைய பாஷையைத் தாறுமாறாக்கி, அவர்களை பூமியின் மீதெங்கும் சிதறடிக்கப்பண்ணின காலமாகிய, இதோ, அழிக்கப்பட்டுப்போன, ஜனத்தாருடைய வரலாற்றைக் கொடுத்தது. அவர்கள் நிர்மூலமாக்கப்பட்ட சமயமுதல், அதற்கு அதிமுன்னமே சம்பவித்ததான ஆதாமின் சிருஷ்டி துவங்கி கர்த்தர் ஜனங்களுடைய பாஷையைத் தாறுமாறாக்கி, அவர்களால் கோபுரம் கட்டப்பெற்ற காலவரைக்குமான ஒரு விவரத்தைக் கொடுத்தது.

18 இப்பொழுது இந்த விவரம் மோசியாவின் ஜனத்தை மிகவும் துக்கப்படச் செய்தது. ஆம், அவர்கள் துக்கத்தால் நிரப்பப்பட்டார்கள்; இருப்பினும் அது அவர்களுக்கு அதிக ஞானத்தை கொடுத்தது, அதினிமித்தம் அவர்கள் களிகூர்ந்தார்கள்.

19 இந்த விவரம் இனி எழுதப்படும்; ஏனெனில் இதோ, இந்த விவரத்திலே எழுதப்படுகிற காரியங்கள் எல்லாவற்றையும் குறித்து, சகல ஜனங்களும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாயிருக்கிறது.

20 இப்பொழுதும், நான் உங்களுக்குச் சொன்னதுபோல, மோசியா ராஜா இவைகளைச் செய்த பின்பு, அவன் பித்தளைத் தகடுகளையும், தான் வைத்திருந்த எல்லாவற்றையும் எடுத்து, ஆல்மாவின் குமாரனாகிய ஆல்மாவினுடைய பொறுப்பிலே ஒப்படைத்தான்; ஆம், சகல பதிவேடுகளையும், வியாக்கியான கருவிகளையும் அவனிடம் கொடுத்து அவைகளை அவன் பாதுகாத்து வைத்திருக்கவேண்டுமென்றும், ஜனத்தினுடைய குறிப்புகளை எழுதி வைத்துக்கொண்டு, எருசலேமைவிட்டு லேகி சென்ற காலத்திலிருந்து தலைமுறை தலைமுறை தோறும் கொடுக்கப்பட்டு வந்ததுபோல, இவைகளையும் அவன் வழிவழியாய் கொடுக்கவேண்டுமென்றும் கட்டளையிட்டான்.