வேதங்கள்
மோசியா 1


மோசியாவின் புஸ்தகம்

அதிகாரம் 1

பென்யமீன் ராஜா தன் குமாரர்களுக்கு தங்கள் பிதாக்களின் பாஷையையும், தீர்க்கதரிசனங்களையும் போதித்தல் – பல்வேறு தகடுகளின்மீது பாதுகாக்கப்பட்ட பதிவுகளினிமித்தம் அவர்களின் மதமும், நாகரீகமும் பாதுகாக்கப்பட்டது – மோசியா ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுதல். பதிவேடுகளையும் மற்ற காரியங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அவனிடம் கொடுக்கப்படுதல். ஏறக்குறைய கி.மு. 130–124.

1 இப்பொழுதும் சாரகெம்லா தேசமனைத்திலும், பென்யமீன் ராஜாவைச் சார்ந்த ஜனங்களுக்குள் எந்த ஒரு பிணக்குமில்லாமல் இருந்தது. ஆதலால் பென்யமீன் ராஜா தன் மீதி நாட்கள் முழுவதிலும் தொடர்ந்து சமாதானமாயிருந்தான்.

2 அந்தப்படியே, அவனுக்கு மூன்று குமாரர்களிருந்தார்கள். அவர்களை மோசியா, ஏலோரம், ஏலமன் என்ற பெயர்களால் அழைத்தான். கர்த்தருடைய கரத்தால் தங்கள் பிதாக்களுக்கு ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் நாவுகளினால் பேசப்பட்ட தீர்க்கதரிசனங்களைக் குறித்து இவர்கள் அறியும்படிக்கும், புரிந்துகொள்ளுதலையுடைய மனுஷர்களாகும்படிக்கும், தன் பிதாக்களின் சகல பாஷைகளிலும் அவர்கள் போதிக்கப்படும்படிச் செய்தான்.

3 அவன் பித்தளைத் தகடுகளின்மீது பதிக்கப்பட்டிருக்கிற பதிவுகளைக் குறித்து அவர்களுக்குப் போதித்து சொன்னதாவது: என் குமாரரே, இந்தப் பதிவுகளும், கட்டளைகளும் அடங்கியிருக்கிற இத்தகடுகள் இல்லையெனில் இச்சமயத்தில் கூட நாம் அறியாமையிலே தவித்து, தேவனுடைய இரகசியங்களை அறியாதிருப்போம், என்பதை நீங்கள் நினைவுகூரவேண்டுமென, நான் விரும்புகிறேன்.

4 இந்தத் தகடுகளின் உதவியிராமல் இருந்திருக்குமேயானால், நம் தகப்பனாகிய லேகி தன் பிள்ளைகளுக்கு இந்தக் காரியங்கள் அனைத்தையும் நினைவில்கொண்டு, போதிக்கக் கூடாமற் போயிருக்கும்; அவர் எகிப்தியரின் பாஷையிலே போதிக்கப்பட்டமையால், பொறிக்கப்பட்ட இவைகளை வாசித்து, தன் பிள்ளைகளுக்கு அவைகளை போதித்து, அதன்படி அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கும் போதித்து இப்படியாய் இச்சமயம்வரைக்கும் தேவனுடைய கட்டளைகளை நிறைவேற்றினார்.

5 என் குமாரரே, நாம் வாசிக்கவும் அவருடைய இரகசியங்களை அறியவும், அவருடைய கட்டளைகளை நித்தமும் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறுத்தவும், தேவனுடைய கரத்தால் பாதுகாத்து வைக்கப்பட்ட இந்த காரியங்கள் இல்லையெனில், நம் பிதாக்களும் அவிசுவாசத்திலே படிப்படியாக நலிந்து போயிருப்பார்கள். இந்தக் காரியங்களைக் குறித்து ஒன்றும் அறியாதவர்களும், அவைகளைக் குறித்து போதிக்கப்படுகிறபோதும், தங்களின் பிதாக்களின் தவறான பாரம்பரியங்களினிமித்தம், அவைகளை விசுவாசியாத நம்முடைய சகோதரர்களாகிய லாமானியர்களைப்போல, நாமும் இருந்திருப்போமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6 என் குமாரரே, சொல்லப்பட்ட இவை உண்மையானவை என்றும், இந்தப் பதிவேடுகளும் உண்மையானவை என்றும், நீங்கள் நினைவில் கொள்ளவேண்டுமென நான் வாஞ்சிக்கிறேன். இதோ, நம் பிதாக்கள் எருசலேமிலிருந்து வந்த காலம் தொடங்கி இந்நாள் வரைக்கும், நம் பிதாக்களின் குறிப்புக்களும், அவர்கள் சொன்னவையும் அடங்கியிருக்கிற நேபியின் தகடுகள் உண்மையானவை; நம் கண்களுக்கு முன்பாக அவைகள் இருக்கிறபடியாலே அவைகளின் நிச்சயத்தையும் நாம் அறியலாம்.

7 இப்பொழுதும் என் குமாரரே, நீங்கள் பிரயோஜனப்பட, அவைகளை கருத்தாய் தேட வேண்டுமென நான் விரும்புகிறேன். நம் பிதாக்களுக்கு கர்த்தர் செய்த வாக்குத்தத்தங்களின்படியே, தேசத்திலே நீங்கள் விருத்தியடையும்படிக்கு, தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ளவேண்டுமென, நான் விரும்புகிறேன்.

8 இப்புஸ்தகத்தில் எழுதப்பட்டிராத இன்னும் அநேக காரியங்களை பென்யமீன் ராஜா தன் குமாரர்களுக்குப் போதித்தான்.

9 அந்தப்படியே, பென்யமீன் ராஜா தன் குமாரர்களுக்கு போதித்து முடித்த பின்பு, அவன் பூரண வயதாகி, பூமியின் அனைவரும் சென்ற வழியே தானும் சீக்கிரமாய் செல்லவேண்டுமெனக் கண்டான்; அதனால் ராஜ்யபாரத்தை தன் குமாரர்களில் ஒருவன் மீது சூட்டுவது அவசியமென்று எண்ணினான்.

10 ஆகையால் மோசியா தனக்கு முன்பாக அழைத்து வரப்பட்ட பின்னர், அவனை நோக்கி இவன் பேசிய வார்த்தைகள் இவைகளே: என் குமாரனே, இந்த தேவனாகிய நம் கர்த்தர் நமக்குக் கொடுத்த என் ஜனத்திற்கு, நீயே ராஜாவாகவும், அதிகாரியாகவும் இருப்பாயென்று, என்னுடைய சொந்த நாவினால் இந்த ஜனத்திற்கு நாளை நான் அறிவிக்க, சாரகெம்லாவின் ஜனமாகிய இந்த ஜனமும், இந்த தேசத்திலே வாசமாயிருக்கிற மோசியாவின் ஜனமும் ஒன்றாய்க்கூடும்படிக்கு, இந்த தேசம் முழுவதிலும் நீ ஒரு பிரகடனத்தை அனுப்புவாயாக.

11 மேலும் எருசலேம் தேசத்திலிருந்து தேவனாகிய கர்த்தர் கொண்டுவந்த எல்லா ஜனங்களிலும் இந்த ஜனம் வேறுபட்டிருக்க, இவர்களுக்கு ஒரு நாமத்தைத் தரிப்பேன்; கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொள்வதில் ஒரு கருத்துள்ள ஜனமாய் அவர்கள் இருந்ததினிமித்தம் இப்படிச் செய்வேன்.

12 அவர்களின் மீறுதல்களினாலே அல்லாமல், எப்பொழுதும் நீங்கப்பெறாத ஒரு நாமத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்.

13 ஆம், கர்த்தருக்கு மிகவும் பிரியமான இந்த ஜனம் மீறுதலில் விழுந்து, துன்மார்க்கராயும் விபச்சாரமுள்ள ஜனமாயுமானார்களெனில், அவர்களுடைய சகோதரர்களைப்போல அவர்களும் மெலிந்துபோகும்படிக்கு, கர்த்தர் அவர்களை ஒப்புவிப்பார், நம்முடைய பிதாக்களை அவர் இதுகாலம் வரைக்கும் பாதுகாத்துள்ளது போல, இனி ஒருபோதும் இவர்களை தம்முடைய நிகரற்ற மகத்துவமான வல்லமையால் காத்துக்கொள்ள மாட்டாரென்றும் உனக்கு மேலும் சொல்லுகிறேன்.

14 ஏனெனில் அவர் நமது பிதாக்களைக் காக்க தம் புயத்தை நீட்டாமலிருந்திருப்பாரெனில், அவர்கள் லாமானியர்களின் கரங்களுக்குள் விழுந்து, அவர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருப்பார்கள், என்று உனக்குச் சொல்லுகிறேன்.

15 அந்தப்படியே, பென்யமீன் ராஜா தன் குமாரனிடம் இந்த வார்த்தைகளைப் பேசி முடித்த பின்பு, ராஜ்யத்தின் சகல விவகாரங்களைக் குறித்த பொறுப்பை அவனிடம் கொடுத்தான்.

16 மேலும் பித்தளைத் தகடுகளின்மீதும் நேபியின் தகடுகளின் மீதும் கூட பொறிக்கப்பட்டிருந்த பதிவுகள், லாபானின் பட்டயம் மற்றும் வனாந்தரத்தினுள் எங்கள் பிதாக்களை வழிநடத்திச் சென்றதும், அவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தருக்கு செவிசாய்த்து, கருத்தாயிருப்பதற்கேற்ப அவர்கள் வழிநடத்தப்படவும், அவருடைய கரத்தால் ஆயத்தம்பண்ணப்பட்டதுமான, அந்த உருண்டை அல்லது வழிகாட்டியினுடைய பொறுப்பையும், அவனிடத்தில் கொடுத்தான்.

17 ஆதலால் அவர்கள் அவிசுவாசிகளானபோது, அவர்கள் விருத்தியடையாமலும் தங்கள் பிரயாணத்தில் முன்னேறாமலும் பின்னோக்கித் துரத்தப்பட்டு, தங்கள் மீது தேவனுடைய கோபாக்கினையை வரவழைத்தார்கள். ஆதலால் தங்களின் கடமையைக்குறித்து அவர்கள் எண்ணிப்பார்க்கும்படி பஞ்சத்தாலும், கொடிய உபத்திரவங்களினாலும் அடிக்கப்பட்டார்கள்.

18 இப்பொழுதும், அந்தப்படியே, மோசியா போய், தன் தகப்பன் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடியே செய்து, சாரகெம்லா தேசத்திலே இருந்த சகல ஜனமும் தங்களுக்குள்ளே ஒன்றாய்க்கூடி, தன் தகப்பன் அவர்களுக்கு பேசவிருக்கிற வார்த்தைகளைக் கேட்கும்பொருட்டு, ஆலயத்திற்கு போகும்படி அவர்களுக்கு அறிவித்தான்.