தேவனுடனான உடன்படிக்கைகள் நித்திய மகிமைக்காக நம்மை பலப்படுத்துகின்றன, பாதுகாக்கின்றன, ஆயத்தப்படுத்துகின்றன
உடன்படிக்கைகளைச் செய்து அவற்றைக் கடைப்பிடிக்க நாம் தேர்ந்தெடுக்கும்போது, இந்த வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியாலும் வரவிருக்கும் மகிமையான நித்திய ஜீவனாலும் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.
சகோதரிகளே, உலகளாவிய சகோதரியத்துவத்தில் கூடுவது எவ்வளவு மகிழ்ச்சி! தேவனுடன் உடன்படிக்கைகளை செய்து, கடைப்பிடிக்கும் பெண்களாக, நமது நாளின் சவால்களை எதிர்கொள்ளவும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்தவும் உதவும் ஆவிக்குரிய பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம். அந்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது, மற்றவர்களை இரட்சகரிடம் கவரக்கூடிய செல்வாக்குள்ள பெண்களாக இருக்க நம்மை அனுமதிக்கிறது.
ஞானஸ்நானம் பெற்றவர்கள், இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் உறுப்பினராகி, அவரை எப்போதும் நினைவில் வைத்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, இறுதிவரை அவரைச் சேவிப்பதன் மூலம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத் தங்கள் மீது தரித்துக்கொள்ள அந்த ஒருபோதும் மறக்க முடியாத நாளில் உடன்படிக்கை செய்தார்கள். நாம் இவற்றைச் செய்யும்போது, பரலோக பிதா நம்முடைய பாவங்களை மன்னித்து, பரிசுத்த ஆவியின் தோழமையை நமக்குத் தருவதாக வாக்களிக்கிறார். நாம் தொடர்ந்து முன்னேறி, இறுதிவரை தரித்திருந்தால், பரலோக ராஜ்யத்தில் அவருடனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் வாழ அனுமதிக்கும் பாதையில் இந்த ஆசீர்வாதங்கள் நம்மைத் தொடங்க வைக்கின்றன. ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அந்த விசேஷ நாளில் தாங்கள் செய்த உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், இந்த ஆசீர்வாதங்களும் சிலாக்கியங்களும் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்படுகிறது.
ஆலயத்தில் கூடுதலான உடன்படிக்கைகளைச் செய்பவர்கள் தனிப்பட்ட விசுவாசத்தின் அடிப்படையில் வல்லமைவாய்ந்த வாக்குறுதிகளைப் பெறுகிறார்கள். தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்வோம், ஒழுக்க ரீதியில் தூய்மையாக இருப்போம், நம்முடைய நேரத்தையும் திறமையையும் கர்த்தருடைய சேவைக்காக அர்ப்பணிப்போம் என்று பயபக்தியுடன் நாம் உறுதியளிக்கிறோம். பதிலுக்கு, தேவன் இந்த வாழ்க்கையில் ஆசீர்வாதங்களையும், அவருடன் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பையும் வாக்களிக்கிறார்.1 அந்தச் செயல்பாட்டில், ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் நம்மைத் தாக்கும் குழப்பமான மற்றும் எதிர்மறையான குரல்களின் எண்ணிக்கையில், உண்மைக்கும் தவறுக்கும் இடையில், சரி மற்றும் தவறுகளுக்கு இடையில் பகுத்தறியும் வல்லமை நமக்கு வழங்கப்பட்டுள்ளது அல்லது தரிப்பிக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு வல்லமைவாய்ந்த வரம்!
ஆலயத்துக்கு முதல் பயணத்துக்கு ஆயத்தமாகும் வகையில், அழகான சடங்குக்கான உடைகள் உட்பட எனக்குத் தேவையான பொருட்களைத் தேர்ந்தெடுக்க என் அம்மாவும் அனுபவமிக்க ஒத்தாசைச் சங்க சகோதரிகளும் எனக்கு உதவினார்கள். ஆனால் என்ன அணிய வேண்டும் என்பதை அறிவதற்கு முன்பே மிக முக்கியமான ஆயத்தம் வந்தது. நான் தகுதியானவளா என்பதைத் தீர்மானிக்க என்னை நேர்காணல் செய்த பிறகு, நான் செய்யும் உடன்படிக்கைகளை என் ஆயர் விளக்கினார். அவருடைய கவனமான விளக்கம், அந்த உடன்படிக்கைகளை செய்யும் பொறுப்பை ஏற்கத் தயாராகவும், சிந்திக்கவும் எனக்கு வாய்ப்பளித்தது.
அந்த நாள் வந்தபோது, அந்த பயபக்தியான நிகழ்வுகளில் நன்றியுணர்வுடனும் சமாதானத்துடனும் பங்கேற்றேன். அன்று நான் செய்த உடன்படிக்கைகளின் முழு முக்கியத்துவத்தையும் நான் புரிந்து கொள்ளாவிட்டாலும், அந்த உடன்படிக்கைகளின் மூலம் நான் தேவனுடன் கட்டப்பட்டேன் என்பதையும், உடன்படிக்கைகளைக் கடைப்பிடித்தால் நான் புரிந்து கொள்ள முடியாத ஆசீர்வாதங்கள் வாக்களிக்கப்பட்டதையும் நான் அறிந்தேன். கர்த்தருடைய வீட்டில் அந்த முதல் அனுபவத்திலிருந்து, தேவனுடன் நாம் செய்யும் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது இரட்சகரின் வல்லமையைப் பெற அனுமதிக்கிறது, இது தவிர்க்க முடியாத சோதனைகளில் நம்மைப் பலப்படுத்துகிறது, சத்துருவின் செல்வாக்கிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் நித்திய மகிமையின் எதிர்காலத்திற்காக நம்மை ஆயத்தப்படுத்துகிறது.
வாழ்க்கையின் அனுபவங்கள் நகைச்சுவையிலிருந்து இருதயத்தைப் பிழிகிற, கொடூரமானவை முதல் மகிமையானவை வரை இருக்கலாம். ஒவ்வொரு அனுபவமும் நம் பிதாவின் அரவணைக்கிற அன்பைப்பற்றியும், இரட்சகரின் கிருபையின் வரத்தின் மூலம் மாற்றுவதற்கான நமது திறனைப்பற்றியும் அதிகம் புரிந்துகொள்ள உதவுகிறது. நமது உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது, அனுபவத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ளும்போது, அது ஒரு சிறிய தவறான தீர்ப்பாக இருந்தாலும் சரி அல்லது ஒரு பெரிய தோல்வியாக இருந்தாலும் சரி, இரட்சகரின் வல்லமை நம்மைச் சுத்திகரிக்க அனுமதிக்கிறது. நாம் அவரிடம் திரும்பினால் நாம் விழும்போது நம்மைப் பிடிக்க நம் மீட்பர் இருக்கிறார்.
நீங்கள் எப்போதாவது ஒரு உயரமான குன்றின் மீது உங்கள் கால்விரல்களை அதன் விளிம்பில் ஊன்றி, கீழே உள்ள படுகுழியில் உங்கள் முதுகின் பின் இருக்கும்படி நின்றிருக்கிறீர்களா? கயிற்றில் இறங்கும்போது, வலுவான கயிறுகள் மற்றும் உபகரணங்களின் அமைப்புடன் நீங்கள் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளீர்கள், குன்றின் அடிப்பகுதிக்கு உங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல முடியும், என்பது உங்களுக்குத் தெரிந்தாலும், விளிம்பில் நிற்பது இன்னும் பயமுறுத்தும் அனுபவமாக இருக்கிறது. குன்றின் மேல் இருந்து பின்நோக்கி அடியெடுத்து வைத்து மெல்லிய காற்றில் ஊசலாடுவதற்கு, அசையாத பொருளில் பாதுகாக்கப்பட்ட நங்கூரத்தில் நம்பிக்கை தேவை. நீங்கள் கீழே இறங்கும் போது கயிற்றில் விறைப்பு செலுத்தும் நபர் மீது நம்பிக்கை தேவை. நீங்கள் இறங்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சில திறனை உபகரணங்கள் உங்களுக்கு வழங்கினாலும், உங்கள் பங்காளி உங்களை விழ அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு இளம் பெண்களுடன் கயிற்றில் இறங்கியது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. சென்ற குழுவில் நான் முதலில் இருந்தேன். குன்றின் மேல் இருந்து பின்நோக்கி அடியெடுத்து வைத்தபோது, திடீரெனக் கட்டுப்பாட்டின்றி விழ ஆரம்பித்தேன். நன்றிசொல்லும் விதமாக, கயிறு வழுக்கியது மற்றும் எனது மிக விரைவான இறங்குதல் நிறுத்தப்பட்டது. பாறை முகத்தில் நான் பாதி வழியில் தொங்கிக்கொண்டிருந்தபோது, கீழே உள்ள பாறைகளில் என்னை விழவிடாமல் தடுக்கும் யாருக்காகவும் அல்லது எதுவாக இருந்தாலும் நான் மனதார வேண்டிக்கொண்டேன்.
பின்னர், நங்கூர ஆணி பாதுகாப்பாக அமைக்கப்படவில்லை என்பதை நான் அறிந்தேன், நான் விளிம்பிலிருந்து இறங்கியவுடன், என்னைத் தாங்கியவர் முதுகு வழுக்கி தள்ளப்பட்டு, குன்றின் விளிம்பை நோக்கி வேகமாக இழுத்தார். எப்படியோ, அவர் தனது கால்களை சில பாறைகளுக்கு எதிராக விரைவாக ஆப்பு வைத்தார். அந்த நிலையில் நிலைநிறுத்தப்பெற்று, கயிற்றால், கைகொடுத்து, என்னை மிகவும் சிரமப்பட்டு கீழே இறக்கினார். என்னால் அவரைப் பார்க்க முடியாவிட்டாலும், மேலும் ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்ற அவர் தனது முழு பலத்தோடும் உழைத்துக்கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும். மற்றொரு நண்பர் குன்றின் அடியில் இருந்தார், கயிறு பிடிப்பதை நிறுத்தினால் என்னைப் பிடிக்கத் தயாராக இருந்தார். நான் தொடும் தூரத்தில் வந்ததும், அவர் என் கயிறு முடிச்சைப் பிடித்து, என்னைத் தரையில் இறக்கினார்.
இயேசு கிறிஸ்து நம்முடைய நங்கூரமாகவும், பரிபூரண துணையாகவும் இருப்பதால், சோதனைக் காலங்களில் அவருடைய அன்பான பலம் மற்றும் இறுதியில் அவர் மூலம் விடுதலை கிடைக்கும் என்பது நமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. தலைவர் எம். ரசல் பல்லார்ட் போதித்தது போல்: “தேவன் மற்றும் அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம், சமூகக் கொந்தளிப்பு மற்றும் பொல்லாத காலங்களில் நம்மைக் கட்டுக்குள் வைத்திருக்க நம் வாழ்வில் இருக்க வேண்டிய நங்கூரம். … நம்முடைய விசுவாசம் … இயேசு கிறிஸ்துவிலும், அவருடைய வாழ்க்கையிலும், அவருடைய பாவநிவிர்த்தியிலும், அவருடைய சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்திலும் மையமாக இருக்க வேண்டும்.”2
துன்பத்தின் பாறைகளில் நம்மை உடைக்காமல் காக்கும் ஆவிக்குரிய உபகரணங்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நமது சாட்சிகளும், கர்த்தருடைய சபையின் உறுப்பினர்களாக நாம் செய்யும் உடன்படிக்கைகளும் ஆகும். நம்மை வழிநடத்தவும் பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல இந்த ஆதரவுகளை நாம் நம்பலாம். நமது விருப்பமான பங்காளியாக, இரட்சகர் அவருக்கு எட்டாத அளவுக்கு அப்பால் நம்மை விழ அனுமதிக்க மாட்டார். நம்முடைய துன்பம் மற்றும் துக்க காலங்களில் கூட, அவர் நம்மை உயர்த்தவும், ஊக்கப்படுத்தவும் இருக்கிறார். மற்றவர்களின் தேர்வுகளின் அழிவுகரமான தாக்கத்திலிருந்து அடிக்கடி மீளவும் அவருடைய வல்லமை நமக்கு உதவுகிறது. இருப்பினும், நாம் ஒவ்வொருவரும் முடிச்சைக் கட்டிக்கொண்டு, முடிச்சுகள் பாதுகாப்பாக கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இரட்சகரிடம் நங்கூரமிடப்படுவதற்கும், நம்முடைய உடன்படிக்கைகளால் அவருடன் கட்டப்படுவதற்கும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.3
அந்த நங்கூரத்தை எப்படி பலப்படுத்துவது? தாழ்மையான இருதயத்துடன் நாம் ஜெபிக்கிறோம், வேதங்களைப் படித்து, சிந்திக்கிறோம், ஒவ்வொரு வாரமும் மனந்திரும்புதல் மற்றும் பயபக்தியுடன் திருவிருந்தை எடுத்துக்கொள்கிறோம், கட்டளைகளைக் கடைப்பிடிக்க முயற்சிக்கிறோம், தீர்க்கதரிசியின் ஆலோசனையைப் பின்பற்றுகிறோம். மேலும் நமது அன்றாட பணிகளை “உயர்ந்த மற்றும் பரிசுத்தமான” முறையில் நிறைவேற்றும்போது4 இரட்சகருடன் நாம் அதிகம் இணைந்துள்ளோம், அதே நேரத்தில், மற்றவர்கள் அவரிடம் வர உதவுகிறோம்.
அந்த “உயர்ந்த மற்றும் பரிசுத்தமான வழி” எப்படி இருக்கும்? நமது எல்லா தொடர்புகளிலும் சுவிசேஷத்தின்படி வாழ முயற்சிக்கிறோம். உண்மையிலேயே ஊழியம் செய்வதன் மூலமும், எளிய சேவையின் மூலம் அன்பை வெளிப்படுத்துவதன் மூலமும் தேவைப்படுபவர்களை நாம் கவனித்துக்கொள்கிறோம். தங்கள் வாழ்வில் சமாதானமும் வலிமையும் தேவைப்படுபவர்கள், மேலும் “அதை எங்கே கண்டுபிடிப்பது என்று தெரியாதவர்களுடன்”சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.”5 திரையின் இருபுறமும் குடும்பங்களை நித்தியமாக ஒன்றிணைக்க நாம் உழைக்கிறோம். கர்த்தரின் வீட்டில் உடன்படிக்கை செய்தவர்களுக்கு, தலைவர் ரசல் எம். நெல்சன் விளக்கியது போல், “ஒவ்வொரு வயது வந்த ஆலய புரவலரும் ஆசாரியத்துவத்தின் பரிசுத்த ஆடையை அணிவார்கள், [அது] … ஒவ்வொருவரும் உடன்படிக்கை பாதையில் ஒரு உயர்ந்த மற்றும் பரிசுத்தமான வழியில் நடக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது.”6 இந்தச் செயல்கள் எப்போதாவது நடக்கும் சிலிர்ப்பு மட்டுமல்ல, ஆனால் நமது அன்றாட மகிழ்ச்சிக்கும், நமது நித்திய மகிழ்ச்சிக்கும் இன்றியமையாதவை.
நமது நித்திய முன்னேற்றத்திற்கு தேவனுடன் நமது உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்வதை விட முக்கியமானது எதுவுமில்லை. நமது பரிசுத்த ஆலய உடன்படிக்கைகள் நடைமுறையில் இருக்கும் போது, திரையின் மறுபுறத்தில் உள்ள அன்பானவர்களுடன் மகிழ்ச்சியான மறு சந்திப்பில் நாம் நம்பிக்கை வைக்கலாம். ஏற்கனவே உலகத்தை விட்டு வெளியேறிய குழந்தை அல்லது பெற்றோர் அல்லது மனைவி உங்களை என்றென்றும் இணைக்கும் உடன்படிக்கைகளுக்கு நீங்கள் உண்மையாக இருப்பீர்கள் என்று முழு மனதுடன் நம்புகிறார்கள். தேவனுடனான நமது உடன்படிக்கைகளை நாம் புறக்கணித்தால் அல்லது இலகுவாக கருதினால், அந்த நித்திய உறவுகளை நாம் ஆபத்தில் ஆழ்த்துகிறோம். மனந்திரும்பி, சரிசெய்து, மீண்டும் முயற்சிக்க வேண்டிய நேரம் இது.
நித்திய மகிழ்ச்சியின் ஆசீர்வாதங்களை நாம் தற்காலிகமாக சௌகரியத்துக்காக பரிமாறிக் கொண்டால் மகிழ்ச்சி வெறுமையானது. நம்முடைய வயது பொருட்டின்றி, அதுவே முழுமையான உண்மை: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ்வதும், நாம் செய்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதும் நிலையான மகிழ்ச்சிக்கான திறவுகோல். “நமது முழு பாதுகாப்பு மற்றும் நமது ஒரே நிலையான மகிழ்ச்சி, இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் இரும்புக் கம்பியைப் பிடித்துக்கொள்வதில் உள்ளது, அதன் உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களுடன் நிறைவானது. நாம் அப்படிச் செய்யும்போது, தேவ வல்லமை நமக்குக் கிடைப்பதால், கரடுமுரடான நீர் வழியாகப் பாதுகாப்பாகச் செல்லலாம்”7 என நமது தீர்க்கதரிசி, தலைவர் நெல்சன் உறுதியளித்தார்.
நம்மில் பலர் கடும் வெள்ளத்தை அனுபவித்து வருகிறோம். துன்பத்தின் அலைகளால் நாம் அலைக்கழிக்கப்படுவதால், அந்த சிரமங்களில் வரும் கண்ணீரின் பெருக்கால் சில சமயங்களில் குருடாக்கப்படுகிறோம், நம் வாழ்க்கைப் படகை எந்த திசையில் துடுப்பு போடுவது என்று நமக்குத் தெரியாது. கரைக்கு வருவதற்கு நமக்கு வலிமை இருப்பதாக நாம் நினைக்காமல் இருக்கலாம். நீங்கள் யார், தேவனின் அன்பான குழந்தை, நீங்கள் ஏன் பூமியில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது, தேவன் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் வாழ்வது என்ற உங்கள் குறிக்கோள் உங்கள் பார்வையைத் தெளிவுபடுத்தி உங்களுக்கு சரியான திசையை சுட்டிக்காட்டும். புயலின் மத்தியிலும், நமக்கு வழி காட்ட ஒரு பிரகாசமான ஒளி உள்ளது. “இருளில் பிரகாசிக்கும் ஒளி நானே”8 என்று இயேசு அறிவித்தார். நாம் அவருடைய ஒளியைப் பார்க்கும்போதும், நமது உடன்படிக்கைகளின் உத்தமத்தைக் கடைப்பிடிக்கும்போதும் நாம் பாதுகாப்பைப் பெறுவோம்.
உலகெங்கிலும் உள்ள அனைத்து வயதினரும் தங்கள் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளும் பல்வேறு சூழ்நிலைகளில் வாழும் பெண்களைச் சந்திப்பது ஒரு பாக்கியம். ஒவ்வொரு நாளும், அவர்கள் பிரபலமான ஊடகங்களைக் காட்டிலும், வழிகாட்டுதலுக்காக கர்த்தரையும் அவருடைய தீர்க்கதரிசியையும் நோக்கிப் பார்க்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட சவால்கள் மற்றும் தங்கள் உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்க முயற்சி செய்கிற உலகத்தின் தீங்கான தத்துவங்கள் இருந்தபோதிலும், அவர்கள் உடன்படிக்கை பாதையில் தொடர்ந்து இருக்க உறுதிபூண்டுள்ளனர். அவர்கள் “பிதாவிடம் உடையவையெல்லாம்” என்ற வாக்குறுதியை நம்பியிருக்கிறார்கள்.”9 உங்கள் வயது எதுவாக இருந்தாலும், தேவனுடன் உடன்படிக்கை செய்துள்ள ஒவ்வொரு பெண்மணியும் கர்த்தரின் ஒளியை உயரப்பிடித்துக் கொண்டு, மற்றவர்களை அவரிடம் வழிநடத்தும் திறன் கொண்டவர்கள்.10 உங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், அவர் தம்முடைய ஆசாரியத்துவத்தின் வல்லமையைக் கொண்டு உங்களை ஆசீர்வதிப்பார், மேலும் நீங்கள் யாருடன் பழகுகிறீர்களோ அவர்கள் மீது ஆழமான செல்வாக்கைப் பெற உங்களுக்கு சாத்தியமாக்குவார். தலைவர் நெல்சன் அறிவித்தபடி, முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றும் பெண்கள் நீங்கள்!11
அன்பான சகோதரிகளே, எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கை பாதையில் தரித்திருங்கள்! உலகம் முழுவதும் ஆலயங்கள் காணப்படும் நேரத்தில் நாம் பூமிக்கு வரும் பாக்கியம் பெற்றுள்ளோம். ஆலய உடன்படிக்கைகளை உருவாக்குவதும் கடைப்பிடிப்பதுவும் சபையின் ஒவ்வொரு தகுதியான உறுப்பினருக்கும் கிடைக்கும். இளம் வயதுவந்தவர்களே, அந்த பரிசுத்த உடன்படிக்கைகளை செய்ய திருமணம் வரை அல்லது ஒரு ஊழியம் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரு இளம் பெண்ணாக ஆயத்தப்படலாம், இதன் மூலம் நீங்கள் 18 வயதிற்குப் பிறகு ஆலய உடன்படிக்கைகள் வழங்கும் பாதுகாப்பையும் வலிமையையும் பெறுவீர்கள், மேலும் அந்த ஆலய உடன்படிக்கைகளைப் பெறவும் மதிக்கவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்.12 ஏற்கனவே ஆலய ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ள நீங்கள், இந்த நித்திய சத்தியங்களிலிருந்து உங்களைக் கெடுப்பவர்கள் அல்லது கவனச்சிதறல்கள் ஈர்க்க விடாதீர்கள். நீங்கள் செய்துள்ள உடன்படிக்கைகளின் பரிசுத்தமான முக்கியத்துவம் மற்றும் ஆசீர்வாதங்களைப்பற்றி நன்கு புரிந்துகொள்ள நம்பகமான ஆதாரங்களைப் படிக்கவும். உங்களால் முடிந்தவரை ஆலயம் சென்று ஆவியானவருக்குச் செவிகொடுங்கள். நீங்கள் கர்த்தரின் பாதையில் செல்கிறீர்கள் என்ற இனிய உறுதியை உணர்வீர்கள். தொடரவும், மற்றவர்களை உங்களுடன் அழைத்து வரவும் நீங்கள் தைரியத்தைக் காண்பீர்கள்.
பரலோக பிதாவுடன் உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் காத்துக்கொள்ள இரட்சகரின் வல்லமையை நாம் தேர்ந்தெடுக்கும்போது, இந்த வாழ்க்கையில் நாம் இப்போது கற்பனை செய்வதைவிட அதிக மகிழ்ச்சியையும், வரவிருக்கும் உலகில் ஒரு மகிமையான நித்திய ஜீவனையும் பெறுவோம் என்று நான் சாட்சி கூறுகிறேன்.13 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.