பொது மாநாடு
உங்கள் தெய்வீக இயல்பும் நித்திய இலக்கும்
ஏப்ரல் 2022 பொது மாநாடு


உங்கள் தெய்வீக இயல்பும் நித்திய இலக்கும்

உங்கள் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவை மையமாக வைத்து இளம் பெண்கள் தலைப்பில் உள்ள அடிப்படை சத்தியங்களை நினைவில் கொள்ள உங்களை நான் அழைக்கிறேன்.

அன்புள்ள சகோதரிகளே, இங்கு இருப்பதற்காக உங்களுக்கு நன்றி. இந்த பொது மாநாட்டில் பெண்கள் கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். சில சமயங்களில் நான் இளம் பெண்கள் வகுப்புகளில் கலந்துகொள்ளும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறேன். ஆனால் நான் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறேன், நான் இளைஞனும் இல்லை, நான் ஒரு பெண்ணும் அல்ல! இருப்பினும், இளம் பெண்களுடன் சேர்ந்து இளம் பெண்கள் தலைப்பை வாசிக்க முடிந்ததால், நான் இடம் மாறி அமர்ந்திருப்பதை குறைவாக உணர்கிறேன் என்று கற்றுக்கொண்டேன். இளம் பெண்கள் தலைப்பில்1 கற்பிக்கப்படும் ஆழமான கோட்பாடு இளம் பெண்களுக்கு முக்கியமானது, ஆனால் இது இளம் பெண்கள் அல்லாத நாம் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.

இளம் பெண்கள் தலைப்பு தொடங்குகிறது, “நான் தெய்வீக தன்மை மற்றும் நித்திய இலக்குடன் பரலோக பெற்றோரின் நேசக் குமாரத்தி.”2 இந்த அறிக்கையில் நான்கு முக்கியமான உண்மைகள் உள்ளன. முதலில், நீங்கள் ஒரு நேச குமாரத்தி. நீங்கள் செய்யும் அல்லது செய்யாத எதுவும் அதை மாற்ற முடியாது. நீங்கள் அவருடைய ஆவி குமாரத்தியானதால் தேவன் உங்களை நேசிக்கிறார். சிலநேரங்களில் நாம் அவருடைய அன்பை உணராமலிருக்கலாம், ஆனால் அது எப்போதும் இருக்கிறது. தேவனின் அன்பு பரிபூரணமானது.3 அந்த அன்பை உணரும் நமது திறன் அப்படியில்லை.

தேவனின் அன்பை நமக்கு தெரிவிப்பதில் ஆவியானவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.4 ஆயினும், பரிசுத்த ஆவியின் செல்வாக்கு “கோபம், வெறுப்பு, … [அல்லது] பயம் … போன்ற வலுவான உணர்ச்சிகளால் மறைக்கப்படலாம், ஜலபீனோ மிளகு சாப்பிடும் போது திராட்சையின் மென்மையான சுவையை ருசிக்க முயற்சிப்பது போன்றது. … [ஒரு வாசனை] மற்றொன்றை முற்றிலுமாக முறியடிக்கிறது.”5 அதேபோல், பாவம் உட்பட, பரிசுத்த ஆவியிலிருந்து நம்மை விலக்கும் நடத்தைகள்,6 தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்துகொள்வதை கடினமாக்குகிறது.

இதேபோல், சவாலான சூழ்நிலைகள் மற்றும் உடல் அல்லது மன நோய் போன்ற பிற காரியங்களுக்கு மத்தியில், தேவ அன்பின் நமது உணர்வு மழுங்கடிக்கப்படலாம். இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், நம்பகமான தலைவர்கள் அல்லது தொழில் வல்லுநர்களின் ஆலோசனைகள் பெரும்பாலும் நன்மை பயக்கும். “தேவன் மீது எனக்குள்ள அன்பு நிலையானதா அல்லது எனக்கு நல்ல நாட்கள் இருக்கும்போது நான் அவரை நேசிக்கிறேனா, ஆனால் எனக்கு கெட்ட நாட்கள் வரும்போது அவ்வளவாக நேசிக்கவில்லையா?” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதன் மூலம் தேவனின் அன்பை பெறுவதை மேம்படுத்த முயற்சி செய்யலாம்.

இரண்டாவது உண்மை என்னவென்றால், நமக்கு பரலோக பெற்றோரான, ஒரு தந்தை மற்றும் தாய் உள்ளனர்.7 பரலோகத் தாயின் கோட்பாடு வெளிப்பாட்டின் மூலம் வருகிறது மற்றும் பிற்காலப் பரிசுத்தவான்களின் ஒரு தனித்துவமான நம்பிக்கையாகும். தலைவர் டாலின் எச். ஓக்ஸ் இந்த சத்தியத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்: “நமது இறையியல் பரலோக பெற்றோரிடம் இருந்து தொடங்குகிறது. அவர்களைப் போல இருக்க வேண்டும் என்பதே நமது உயர்ந்த லட்சியம்.”8

பரலோகத்திலுள்ள தாயைப்பற்றி மிகக் கொஞ்சமே வெளிப்படுத்தப்படடுள்ளது, ஆனால் நமக்குத் தெரிந்தவை நமது சுவிசேஷ நூலக செயலியில் காணப்படும் சுவிசேஷ தலைப்புக் கட்டுரைகளில் சுருக்கப்பட்டுள்ளன.9 நீங்கள் அதில் உள்ளதைப் படித்தவுடன், இந்தத் தலைப்பை்பற்றி எனக்கு தெரிந்த விஷயத்தை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். நான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களிடமும் இன்னும் கேள்விகள் இருக்கலாம், அதிக பதில்களைக் கண்டறிய விரும்பலாம். அதிக புரிதலை நாடுவது நமது ஆவிக்குரிய வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதியாகும், ஆனால் தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள். காரணம் வெளிப்படுத்துதலை மாற்ற முடியாது.

ஊகங்கள் அதிக ஆவிக்குரிய அறிவுக்கு வழிவகுக்காது, ஆனால் அது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் அல்லது வெளிப்படுத்தப்பட்டவற்றிலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்பலாம்.10 உதாரணமாக, இரட்சகர் தம் சீஷர்களுக்கு, “நீங்கள் எப்பொழுதும் என் நாமத்தினாலே பிதாவிடம் ஜெபிக்க வேண்டும்” என்று போதித்தார்.”11 நாம் இந்த மாதிரியைப் பின்பற்றி, கிறிஸ்துவின் நாமத்தில் நமது பரலோக பிதாவிடத்தில் நமது ஆராதனையைச் செய்கிறோம், பரலோகத் தாயிடம் ஜெபிப்பதில்லை.12

தேவன் தீர்க்கதரிசிகளை நியமித்ததிலிருந்து, அவர்கள் அவருடைய சார்பாக பேசுவதற்கு அதிகாரம் கொடுக்கப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் “[தங்கள்] சொந்த மனதினால்”13 இட்டுக்கட்டப்பட்ட கோட்பாடுகளை உச்சரிக்க மாட்டார்கள் அல்லது வெளிப்படுத்தப்படாததைக் கற்பிப்பதில்லை. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி பிலேயாமின் வார்த்தைகளைக் கருத்தில் கொள்ளுங்கள், அவன் மோவாபுக்கு நன்மை செய்ய இஸ்ரவேலர்களை சபிக்க லஞ்சம் கொடுக்கப்பட்டான். பிலேயாம், “[மோவாபின் ராஜா] எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியையும் பொன்னையும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்யும்பொருட்டு என் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையை நான் மீறக்கூடாது,” என்றான்.14 பிற்காலத் தீர்க்கதரிசிகளும் இதேபோல் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். தேவனிடமிருந்து வெளிப்பாட்டை வலியுறுத்திக்கேட்பது ஆணவமானது மற்றும் பயனற்றது. மாறாக, அவர் ஏற்படுத்திய வழிமுறைகளின் மூலம் அவருடைய சத்தியங்களை வெளிப்படுத்த கர்த்தருக்கும் அவருடைய கால அட்டவணைக்கும் நாம் காத்திருக்கிறோம்.15

இளம் பெண்கள் தலைப்பின் தொடக்கப் பத்தியில் உள்ள மூன்றாவது சத்தியம் என்னவென்றால், நம்மிடம் “தெய்வீக தன்மை” உள்ளது. இது நாம் யார் என்பதில் உள்ளார்ந்ததாகும். இது ஆவிக்குரியவிதமாக “மரபியல் ரீதியிலானது”, நமது பரலோக பெற்றோரிடமிருந்து சுவீகரிக்கப்பட்டது,16 இதற்கு நமது முயற்சி தேவையில்லை. இதுவே நமது மிக முக்கியமான அடையாளம், நாம் வேறு எப்படி நம்மை அடையாளம் கண்டுகொள்ள விரும்புகிறோம் என்பது பொருட்டல்ல. இந்த ஆழ்ந்த சத்தியத்தைப் புரிந்துகொள்வது அனைவருக்கும் முக்கியமானது, ஆனால் குறிப்பாக வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அல்லது அடிபணியச் செய்யப்பட்ட குழுக்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கு. உங்கள் மிக முக்கியமான அடையாளம் தேவனின் குழந்தையாக உங்கள் தெய்வீக இயல்புடன் தொடர்புடையது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான்காவது சத்தியம் என்னவென்றால், நமக்கு ஒரு “நித்திய இலக்கு” உள்ளது. அத்தகைய இலக்கு நம் மீது திணிக்கப்படாது. மரணத்திற்குப் பிறகு, நாம் தகுதிபெற்றதைப் பெறுவோம், “[நாம்] பெற விரும்புவதை [மட்டும்] அனுபவிப்போம்.“17 நமது நித்திய இலக்கை அடைவது நமது விருப்பங்களைப் பொறுத்தது. அதற்குப் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து கடைபிடிக்க வேண்டும். இந்த உடன்படிக்கை பாதை நாம் கிறிஸ்துவிடம் வரும் வழி மற்றும் முழுமையான சத்தியம் மற்றும் நித்திய, மாறாத நியாயப்பிரமாணத்தை அடிப்படையாகக் கொண்டது. நாம் நம்முடைய சொந்த பாதையை உருவாக்கி, தேவனின் வாக்களிக்கப்பட்ட விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. முன்னறவிக்கப்பட்ட அந்த நித்திய நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றாமல், அவருடைய ஆசீர்வாதங்களை எதிர்பார்த்தல்,18 சூடான அடுப்பைத் தொடலாம் என நினைத்து, எரிக்கப்படக் கூடாது என்று “முடிவெடுப்பது” போன்றதாகும்.

இருதய செயலிழப்பு நோயாளிகளுக்கு நான் சிகிச்சையளித்து வந்தேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். உறுதிசெய்யப்பட்ட, சான்றளிக்கப்பட்ட அடிப்படையிலான சிகிச்சைத் திட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் அவற்றின் சிறந்த முடிவுகள் அவர்களுக்குப் பெறப்பட்டன. இதை அறிந்திருந்தும், சில நோயாளிகள் வேறு சிகிச்சை திட்டத்தைப்பற்றி பேச முயன்றனர். அவர்கள், “நான் பல மருந்துகளை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை” அல்லது “நான் பல பின்தொடரும் சோதனைகளை மேற்கொள்ள விரும்பவில்லை,”என்றார்கள். நிச்சயமாக, நோயாளிகள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க சுதந்திரமாக இருந்தனர், ஆனால் அவர்கள் உகந்த சிகிச்சை திட்டங்களிலிருந்து விலகியிருந்ததால், அவர்களின் முடிவுகள் பாதிக்கப்பட்டன. இருதய செயலிழப்பு உள்ள நோயாளிகள் ஒரு மோசமான முறையை தேர்ந்தெடுக்க முடியாது, பின்னர் மோசமான விளைவுகளுக்கு தங்கள் இருதயநோய் நிபுணரை குறை கூற முடியாது.

நமக்கும் அப்படித்தான், இதுவே உண்மை. பரலோக பிதாவின் பரிந்துரைக்கப்பட்ட பாதை சிறந்த நித்திய விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. நாம் தேர்ந்தெடுக்க சுயாதீனர்களாயிருக்கிறோம், ஆனால், வெளிப்படுத்தப்பட்ட பாதையை பின்பற்றாததன் விளைவுகளை நாம் தேர்ந்தெடுக்கமுடியாது.19 “நியாயப்பிரமாணத்தை மீறி, நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றாமல், தனக்குத்தானே ஒரு நியாயப்பிரமாணமாக மாற முயல்பவர்கள், … நியாயப்பிரமாணத்தினாலும், இரக்கத்தினாலும், நியாயத்தினாலும், நியாயத்தீர்ப்பினாலும் பரிசுத்தமாக்கப்பட முடியாது” என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார்.20 பரலோக பிதாவின் பாதையிலிருந்து நாம் விலகி, பின் குறைவான விளைவுகளுக்காக அவரைக் குறை கூற முடியாது.

இளம் பெண்கள் தலைப்பின் இரண்டாவது பத்தி இவ்வாறு கூறுகிறது: “இயேசு கிறிஸ்துவின் சிஷ்யையாக நான் அவரைப் போலாக முயற்சி செய்கிறேன். தனிப்பட்ட வெளிப்படுத்தலை நான் நாடி செயல்படுகிறேன். அவரது பரிசுத்த நாமத்தில் பிறருக்கு ஊழியம் செய்கிறேன். விசுவாசத்தில் செயல்படுவதன் மூலம் இயேசு கிறிஸ்துவில் சாட்சியை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.21 “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதையும், உலகத்தின் பாவங்களுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதையும் அறிந்துகொள்ள” ஆவிக்குரிய வரத்தை நாம் கோரலாம். அல்லது நாமே அறியும் வரை, தெரிந்தவர்களின் வார்த்தைகளை நம்புவதற்கு, நாம் வரத்தைப் பெறலாம்,22 இரட்சகரின் போதனைகளை நாம் பின்பற்றலாம், மற்றும் மற்றவர்கள் அவரிடம் வர உதவலாம். இந்த வழியில், நாம் அவருடைய பணியில் அவருடன் இணைகிறோம்.23

இளம் பெண்கள் தலைப்பு தொடர்கிறது, “எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் நான் தேவனின் சாட்சியாக நிற்பேன்.” அப்போஸ்தலர்களும் எழுபதின்மரும் கிறிஸ்துவின் நாமத்தின் சிறப்பு சாட்சிகளாக நியமிக்கப்பட்டாலும்கூட,24 சபையின் அனைத்து உறுப்பினர்களும் தேவனின் சாட்சிகளாக தேவைப்படுகிறார்கள்.25 கோலி மட்டுமே இலக்கைப் பாதுகாக்கிற ஒரு கால்பந்து போட்டியை கற்பனை செய்து பாருங்கள். மற்ற அணி வீரர்களின் உதவியின்றி, கோலியால் இலக்கை போதுமான அளவு பாதுகாக்க முடியாமல், அணி எப்போதும் தோல்வியையே சந்திக்கும். அதுபோல், கர்த்தரின் அணியில் ஒவ்வொருவரும் தேவை.26

இளம் பெண்கள் தலைப்பின் கடைசி பத்தி தொடங்குகிறது, “மேன்மைப்படுதலுக்கு தகுதிபெற நான் முயலும்போது, மனந்திரும்புதலின் வரத்தை பேணுகிறேன், ஒவ்வொரு நாளும் முன்னேற முயல்வேன்.” இரட்சகரின் பாவநிவாரண பலியின் காரணமாக, நாம் மனந்திரும்பலாம், நம் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம், அவைகளால் கண்டிக்கப்படாதிருக்கலாம். தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “பலர் மனந்திரும்புவதை தண்டனையாக கருதுகின்றனர். … ஆனால் தண்டிக்கப்படுவதான இந்த உணர்வு சாத்தானால் தோற்றுவிக்கப்படுகிறது. நம்மை குணமாக்கவும், மன்னிக்கவும், சுத்தப்படுத்தவும், பெலப்படுத்தவும், தூய்மைப்படுத்தவும், பரிசுத்தப்படுத்தவும் நம்பிக்கையுடனும் விருப்பத்துடனும் நீட்டிய கரங்களுடன் நின்றுகொண்டிருக்கிற இயேசு கிறிஸ்துவை நோக்குவதிலிருந்து நம்மை தடுக்க அவன் முயற்சிக்கிறான்.27

நாம் உண்மையாக மனந்திரும்பும்போது, ​​நாம் என்ன செய்திருந்தாலும், எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும், எத்தனை முறை திரும்பத் திரும்பச் செய்தாலும், எந்த ஆவிக்குரிய வடுவும் இருக்காது.28 நாம் மனந்திரும்பி, உண்மையான நோக்கத்துடன் மன்னிப்புத் தேடும்போதெல்லாம், நாம் மன்னிக்கப்படலாம்.29 நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து என்ன ஒரு விசேஷித்த வரம்!30 நாம் மன்னிக்கப்பட்டோம் என்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு உறுதியளிக்க முடியும். நாம் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் உணரும்போது,31 குற்ற உணர்வு துடைக்கப்படுகிறது,32 இனிமேலும் நாம் நமது பாவத்தால் துன்புறுத்தப்படுவதில்லை.33

இருப்பினும், உண்மையான மனந்திரும்புதலுக்குப் பிறகும், நாம் தடுமாறலாம். தடுமாற்றம் என்பது மனந்திரும்புதல் போதுமானதாக இல்லை என்று அர்த்தமல்ல, ஆனால் அது மனித பலவீனத்தையே பிரதிபலிக்கலாம். “கர்த்தர் கலகத்தை விட பலவீனங்களை வித்தியாசமாகப் [பார்க்கிறார்]” என்பதை அறிவது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது. நம்முடைய பலவீனங்களுக்கு உதவும் இரட்சகரின் திறனை நாம் சந்தேகிக்கக்கூடாது, ஏனென்றால் “கர்த்தர் பலவீனங்களைப்பற்றி பேசும்போது, அது எப்போதும் இரக்கத்துடன் இருக்கிறது.”34

இளம் பெண்கள் தலைப்பு நிறைவடைகிறது, “விசுவாசத்துடன், என் வீட்டையும் குடும்பத்தையும் பெலப்படுத்துவேன், பரிசுத்த உடன்படிக்கைகள் செய்து காத்துக் கொள்வேன், பரிசுத்த ஆலயங்களின் நியமங்களையும் ஆசீர்வாதங்களையும் பெறுவேன்.” வீட்டையும் குடும்பத்தையும் பலப்படுத்துவது என்பது விசுவாசத்தின் சங்கிலியில் முதல் இணைப்பை உருவாக்குவது, நம்பிக்கையின் மரபை தூக்கிச் செல்வது அல்லது அதை மீட்டெடுப்பது.35 அது பொருட்டின்றி, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் பரிசுத்த உடன்படிக்கைகளை செய்வதன் மூலம் வலிமை வருகிறது.

ஆலயத்தில், நாம் யார், எங்கு இருந்தோம் என்று கற்றுக்கொள்கிறோம். ரோமானிய தத்துவஞானி சிசரோ கூறினார், “நீங்கள் பிறப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைப்பற்றி அறியாமல் இருப்பது, எப்பொழுதும் ஒரு குழந்தையாக இருப்பதாகும்.”36 அவர், நிச்சயமாக, மதச்சார்பற்ற வரலாற்றைக் குறிப்பிடுகிறார், ஆனால் அவரது புத்திசாலித்தனமான அவதானிப்பு விரிவாக்கப்படலாம். ஆலயங்களில் பெறும் நித்திய கண்ணோட்டத்தை அறியாமல் இருந்தால் நாம் நிரந்தர குழந்தைகளாக வாழ்கிறோம். அங்கே நாம் கர்த்தருக்குள் வளர்கிறோம், “பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெறுகிறோம்,”37 மேலும் இரட்சகரின் சீஷர்களாக இன்னும் முழுமையாக அர்ப்பணிப்புள்ளவர்களாக ஆகிறோம்.38 நாம் நமது உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது, நம் வாழ்வில் தேவ வல்லமையைப் பெறுகிறோம்.39

உங்கள் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவை மையமாக வைத்து இளம் பெண்கள் தலைப்பில் உள்ள அடிப்படை சத்தியங்களை நினைவில் கொள்ள உங்களை நான் அழைக்கிறேன். நீங்கள் விரும்பினால், பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துவார். நீங்கள் அவருடைய வாரிசாக வேண்டும் என்றும், அவரிடம் உள்ள அனைத்தையும் பெற வேண்டும் என்றும் நமது பரலோக பிதா விரும்புகிறார்.40 அவர் உங்களுக்கு மேலும் வழங்க முடியாது. அவர் உங்களுக்கு அதிகமாக வாக்களிக்க முடியாது. அவர் உங்களுக்குத் தெரிந்ததை விட அதிகமாக உங்களை நேசிக்கிறார், மேலும் நீங்கள் இந்த வாழ்க்கையிலும் வரவிருக்கும் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.