பொது மாநாடு
உடன்படிக்கை பாதை: நித்திய ஜீவனுக்கான வழி
ஏப்ரல் 2022 பொது மாநாடு


உடன்படிக்கை பாதை: நித்திய ஜீவனுக்கான வழி

பரிபூரணத்திற்கான பாதை உடன்படிக்கை பாதையாகும், இயேசு கிறிஸ்து அனைத்து நியமங்களின், உடன்படிக்கைகளின் மையமாக இருக்கிறார்.

ஒரு வல்லமைவாய்ந்த ராஜா தனது மகன் தனது ராஜ்யங்களில் ஒன்றை ஆள வேண்டும் என்று விரும்பினான். இளவரசன் அரியணையில் அமர ஞானத்தை கற்று, வளர வேண்டும். ஒரு நாள், ராஜா இளவரசரை சந்தித்து தனது திட்டத்தை பகிர்ந்து கொண்டார். இளவரசன் வேறு ஊருக்குச் சென்று அனுபவங்களைப் பெறுவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர் சவால்களை எதிர்கொள்வதுடன் அங்கே பல நல்ல விஷயங்களையும் அனுபவிப்பார். ராஜா பின்னர் அவரை நகரத்திற்கு அனுப்பினார், அங்கு இளவரசர் ராஜாவிடம் தனது விசுவாசத்தை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது மற்றும் ராஜா தனக்காக சேமித்து வைத்திருக்கும் சலுகைகள் மற்றும் பொறுப்புகளைப் பெற அவர் தகுதியானவர் என்பதை நிரூபிப்பார். இளவரசரின் விருப்பங்கள் மற்றும் விசுவாசத்தைப் பொறுத்து இந்த சலுகைகள் மற்றும் பொறுப்புகளைப் பெறலாமா வேண்டாமா என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட்டது. இளவரசருக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவன் ராஜ்யத்தை சுதந்தரிக்க திரும்ப வந்தானா?

அன்பான சகோதர சகோதரிகளே, நாம் ஒவ்வொருவரும் ஒரு இளவரசன் அல்லது இளவரசி. இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நித்தியமான ஒரு சரீர ஆசீர்வாதத்தை அனுபவிக்க அன்பான பரலோக பிதாவால் நாம் அநித்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளோம். “[நமது]தேவனாகிய கர்த்தர் [நமக்கு] கட்டளையிடுகிறபடி எல்லாவற்றையும் செய்வோம்” (ஆபிரகாம் 3:25) என்பதை நிரூபிப்பதன் மூலம் தேவனுடைய பிரசன்னத்திற்குத் திரும்புவதற்கு நாம் தயாராக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நமக்கு உதவவும், நம்மை மீட்கவும், தேவனிடம் திரும்புவதற்கான பாதையைக் காட்டவும் இரட்சகர் வந்தார். தேவனுடைய பிள்ளைகள் இரட்சகரிடம் வரவும், அவரில் பூரணப்படுத்தப்படவும் அழைக்கப்படுகிறார்கள். வேதங்களில், 90 முறைக்கு மேல் நாம் கர்த்தரிடம் வரும்படியான அழைப்பைக் காண்கிறோம், இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை கர்த்தரின் தனிப்பட்ட அழைப்புகளாகும். இரட்சகரின் அழைப்பை ஏற்றுக்கொள்வது என்பது அவருடைய நியமங்களில் பங்குகொள்வதும் அவருடன் நமது உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுவதும் ஆகும். இயேசு கிறிஸ்து வழியும், சத்தியமும், ஜீவனுமானவர்” (யோவான் 14:6), மேலும் அவர் நம்மை அழைக்கிறார். “அனைவரும் தம்மிடம் வரும்படியாகவும் தன் நன்மையைப் புசிக்கும்படியாகவும். தம்மிடம் வரும் ஒருவரையும் அவர் தடைபண்ணுவதில்லை” (2 நேபி 26:33) .

நமது சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதலும் போதித்தலும் பரலோக பிதாவினிடத்திலும் இயேசு கிறிஸ்துவிடமும் நமது மனமாற்றத்தை ஆழமாக்கி அதிகமாக அவரைப்போலாக நமக்குதவுவதாகும். “மேன்மையடைதலின் ஆசீர்வாதங்கள் அருளப்படும் துல்லியமான நேரம் மற்றும் முறையைப்பற்றிய” அனைத்து காரியங்களும் வெளிப்படுத்தப்படவில்லை, ஆயினும் அவை குறித்து நாம் உறுதியாக இருக்கிறோம் (M. Russell Ballard, “Hope in Christ,” Liahona, May 2021, 55).

சாரகெம்லா தேசத்தில் போதிக்கும் பிரதான ஆசாரியனான ஆல்மா, இயேசு கிறிஸ்துவின் ஆழமான அழைப்பை நினைவூட்டினான்:

“இதோ, சகல மனுஷருக்கும் நேராக காருண்யப் புயங்களை நீட்டி, அவர்களை அழைத்து, மனந்திரும்புங்கள் உங்களை நான் ஏற்றுக் கொள்வேன்” என சாரகெம்லா தேசத்தில் போதிக்கும் பிரதான ஆசாரியனான ஆல்மா, இயேசு கிறிஸ்துவின் மகத்துவமான அழைப்பை விவரித்தான்.

“ஆம், அவன் சொல்கிறான், நீங்கள் என்னிடத்தில் வருவீர்களெனில், ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிப்பீர்கள்” (ஆல்மா 5:33–34).

இந்த கொந்தளிப்பான உலகத்தில் நாம் இளைப்பாறுவதற்கு, இரட்சகர் தாமே, தம்மிடம் வந்து, அவருடைய நுகத்தை நம்மீது சுமக்கும்படி நம்மை அழைக்கிறார் (மத்தேயு 11:28–29 பார்க்கவும்). “நாம் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, அனுதினமும் மனந்திரும்பி, இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் நியமங்களைப் பெறும்போது தேவனுடன் உடன்படிக்கைகளை செய்து, அந்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுவதன் மூலம் இறுதிவரை நிலைத்திருப்பதன் மூலம்” நாம் அவரிடம் வருகிறோம். (General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 1.2.1, ChurchofJesusChrist.org). பரிபூரணத்திற்கான பாதை உடன்படிக்கை பாதையாகும், இயேசு கிறிஸ்து அனைத்து நியமங்களின், உடன்படிக்கைகளின் மையமாக இருக்கிறார்.

நாம் செய்யும் உடன்படிக்கைகளின் காரணமாக, ஆவிக்குரிய ரீதியில் நம்மை ஜென்மித்த கிறிஸ்துவின் குமாரர்களாகவும், குமாரத்திகளாகவும் நாம் மாறுகிறோம், அவருடைய தலைமையின் கீழ் நாம் விடுதலையாக்கப்பட்டோம், ஏனென்றால் “இரட்சிப்பு வரும்படி வேறு எந்த நாமமும் கொடுக்கப்படவில்லை” (மோசியா 5:7–8 பார்க்கவும்) என்று பென்யமீன் ராஜா கற்பித்தான். “ஜீவனுள்ள தேவனின் குமாரன் வகுத்த எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றுவதன் மூலம்”(2 நேபி 31:16), நாம் இறுதிவரை நிலைத்திருக்கும்போது நாம் இரட்சிக்கப்படுகிறோம். நெருக்கமும் இடுக்கமுமான வழியில் செல்வதன் மூலம் அனைத்தும் செய்யப்படுவதில்லை என்று நேபி ஆலோசனையளித்தான், “கிறிஸ்துவில் திட நம்பிக்கையாய், பூரணமான நம்பிக்கையின் பிரகாசத்தோடும், தேவனிடத்திலும், எல்லா மனிதரிடத்திலும் அன்போடு நீங்கள் முன்னேறிச் செல்லவேண்டும்” (2 நேபி 31:19–20).

உடன்படிக்கையின் பாதையைக் கண்டுபிடித்து தங்க, கிறிஸ்துவின் கோட்பாடு உதவுகிறது, சுவிசேஷமானது கர்த்தருடைய வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் பரிசுத்த நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள் மூலம் பெறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது ஜனவரி 16, 2018 ஒளிபரப்பில், தேவனின் தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன் அறிவுறுத்தினார். “உடன்படிக்கைப் பாதையில் செல்லுங்கள். “இரட்சகருடன் உடன்படிக்கைகள் செய்வதன் மூலம், பின்னர் அந்த உடன்படிக்கைகளை கைக்கொள்ளுவதன் மூலம் அவரைப் பின்பற்ற, உங்கள் ஒப்புக் கொடுத்தல், எல்லா இடங்களிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் கிடைக்கும் ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்கும் சிலாக்கியங்களுக்கும் கதவைத் திறக்கும். … நாம் ஒவ்வொருவரும் அடைய முயல்கிற முடிவு, கர்த்தரின் வீட்டில் வல்லமையோடு தரிப்பிக்கப்படவும், குடும்பங்களாக முத்திரிக்கப்படவும், நித்திய ஜீவனாகிய தேவனின் மிகப் பெரிய வரத்துக்கு நம்மை தகுதிப்படுத்துகிற, ஆலயத்தில் செய்யப்படுகிற உடன்படிக்கைகளுக்கு விசுவாசமாக இருப்பதுவுமே” (“As We Go Forward Together,” Liahona, Apr. 2018, 7).

தேவன் எந்த உண்மையுள்ள உடன்படிக்கையைக் கைக்கொள்ளுபவருடனும் அவருடைய உறவை கைவிடமாட்டார் அல்லது நித்திய ஜீவனின் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைத் தடுக்கமாட்டார். மேலும் நாம் பரிசுத்த உடன்படிக்கைகளை மதிக்கும்போது, இரட்சகரிடம் நாம் நெருங்கி வருகிறோம். கிறிஸ்துவிடம் வருவதற்கும், அவரைப் போலவே மாறுவதற்கும் சுவிசேஷ உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள், முக்கிய வழிகாட்டுதலைக் கொடுக்கும் திசைகாட்டி போல நம் வாழ்வில் செயல்படுகின்றன என்பதை மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் நேற்று நமக்குக் கற்பித்தார்.

உடன்படிக்கைகள் தேவனிடம் திரும்பும் பாதையைக் குறிக்கின்றன. ஞானஸ்நானமும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுதலும், ஆசாரியத்துவ நியமிப்பு மற்றும் திருவிருந்து, கர்த்தருடைய மேன்மையடைதலின் நியமங்களில் பங்குகொள்ள நம்மை அவருடைய ஆலயத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

உடன்படிக்கைகளை உண்மையாகக் கடைப்பிடிக்க நமக்கு உதவுவதற்காக நமது இரட்சகர் வலியுறுத்திய இரண்டு காரியங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன்:

  1. பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்பிக்க முடியும், இரட்சகரின் போதனைகளை நமக்கு நினைவூட்ட முடியும், நம்முடன் என்றென்றும் நிலைத்திருக்க முடியும் (யோவான் 14:16, 26 பார்க்கவும்). உடன்படிக்கை பாதையில் நம்மை வழிநடத்த அவர் நமது நிலையான துணையாக இருக்க முடியும். “வருகிற நாட்களில், வழிகாட்டுதலில்லாமல், வழிநடத்துதலில்லாமல், ஆறுதலில்லாமல், பரிசுத்த ஆவியின் நிரந்தர செல்வாக்கில்லாமல் ஆவிக்குரியவிதமாக பிழைத்திருப்பது சாத்தியமாகாது” என விமர்சன ரீதியாக நமது தீர்க்கதரிசி ரசல் எம். நெல்சன் நமக்குப் போதித்தார்.” (“Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018).

  2. நாம் எப்பொழுதும் அவரை நினைவுகூரவும், அவருடைய ஆவி நம்முடன் இருக்கவும் இரட்சகர் திருவிருந்தின் நியமத்தை நிறுவினார். ஞானஸ்நானம் நித்திய ஜீவனுக்கான வாயிலைத் திறக்கிறது, உடன்படிக்கையின் பாதையில் உறுதியுடன் முன்னேறிச் செல்ல திருவிருந்து நமக்கு உதவுகிறது. நாம் திருவிருந்தில் பங்கேற்கும்போது, அவருடைய குமாரனை நாம் எப்போதும் நினைவுகூருகிறோம் என்பதற்கு அது பிதாவுக்கு ஒரு சாட்சியாக இருக்கும். நாம் எப்பொழுதும் அவரை நினைத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது, அவருடைய ஆவி நம்முடன் இருக்கும். இந்த வாக்குறுதியுடன் சேர்த்து, நாம் மனத்தாழ்மையுடன் நம் பாவங்களுக்காக மனந்திரும்பும்போது, வாக்குறுதியளிக்கப்பட்ட பாவ மன்னிப்பை கர்த்தர் புதுப்பிக்கிறார்.

நமது உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம், திருவிருந்தில் தகுதியுள்ளவர்களாக பங்கேற்பதற்கு நம்மைத் ஆயத்தப்படுத்துவதற்கு நாம் எப்போதும் ஆவியானவரைப் பெற முயற்சி செய்ய வேண்டும், அப்படியே, எப்பொழுதும் ஆவியானவர் நம்முடன் இருப்பதற்காக நாம் திருவிருந்தில் தவறாமல் பங்குகொள்கிறோம்.

எங்கள் மகளுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, பேட்டரியில் இயங்கும் மாடல் கார் ஒன்றை அவள் வைத்திருந்தாள், அதை வீட்டைச் சுற்றி ஓட்ட விரும்பினாள். ஒரு மாலை, அவள் என்னிடம் வந்து, “அப்பா, என் கார் இனி ஓடாது. உங்கள் காரிலிருந்து கொஞ்சம் எரிவாயுவை எடுத்து அதில் போட்டு மீண்டும் ஓட்ட முடியுமா? ஒருவேளை ஓட்டுவதற்கு உங்கள் காரைப் போன்ற எரிவாயு இதற்கு தேவைப்படலாம்.”

பேட்டரி சக்தி குறைந்திருப்பதை நான் பின்னர் கவனித்தேன், எனவே ஒரு மணி நேரத்தில் அதை ஓட்டுவோம் என்று நான் சொன்னேன். மிகுந்த உற்சாகத்துடன், அவள் சொன்னாள், “சரி! . நாம் இதை எரிவாயு நிலையத்திற்கு கொண்டு செல்வோம்.” நான் சார்ஜ் செய்வதற்காக பேட்டரியை மின்சார ஆதாரத்துடன் இணைத்தேன், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவளால் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி மூலம் காரை ஓட்ட முடிந்தது. அப்போதிலிருந்து, பேட்டரியை எப்பொழுதும் மின்சார மூலத்துடன் இணைப்பதன் மூலம் ரீசார்ஜ் செய்வது முக்கியம் என்பதை அவள் அறிந்தாள்.

எங்கள் மகள் தனது பொம்மை காரை ஓட்டுவதற்கு பேட்டரிக்கும் மின்சாரத்துக்கும் உள்ள தொடர்பைக் கற்றுக்கொண்டது போல, இயேசு கிறிஸ்து, திருவிருந்து மற்றும் ஆவியைப்பற்றி நாம் கற்றுக்கொள்கிறோம். நாம் விசுவாசத்துடன் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளும்போது, அநித்தியத்தைக் கடந்து செல்ல நமக்கு ஆவியானவர் உதவ வேண்டும் மற்றும் நமது ஆவிக்குரிய வாழ்வை சக்தியூட்ட திருவிருந்து நமக்கு தேவையாயிருக்கிறது. நமது ஞானஸ்நான உடன்படிக்கையைப் புதுப்பித்தல் மற்றும் திருவிருந்தில் பங்கேற்பது மற்ற எல்லா உடன்படிக்கைகளுக்கும் விசுவாசத்தை செலுத்துகிறது. இரட்சகரின் அழைப்பை நாம் ஜெபத்துடன் படித்து, மதிப்பளித்து, அவருடைய வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்போது ஒரு மகிழ்ச்சியான முடிவு உறுதியளிக்கப்படுகிறது. அவர் சொன்னார், “உலகத்தால் கறைபடாதபடிக்கு உங்களை முழுவதுமாக காத்துக்கொள்வீர்களாக, என்னுடைய பரிசுத்த நாளில் ஜெப ஆலயத்திற்குச் சென்று உங்களுடைய திருவிருந்துகளை நீங்கள் செலுத்துவீர்களாக” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:9).

உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு “இவ்வுலகில் சமாதானமும், வரவிருக்கும் உலகில் நித்திய ஜீவனும் வாக்களிக்கப்பட்டிருக்கின்றன” என்று நான் சாட்சி கூறுகிறேன் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:23). திருவிருந்தின் மூலம் இரட்சகரின் அடையாளங்களில் நீங்கள் தவறாமல் பங்குகொள்ளும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உடன்படிக்கையின் பாதையில் உங்களை வழிநடத்தவும், உங்கள் உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருக்கவும் அவருடைய ஆவியை நீங்கள் பெறுவீர்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.