வேதங்கள்
3 நேபி 7


அதிகாரம் 7

பிரதான நியாயாதிபதி கொலை செய்யப்படுதல். ராஜாங்கம் அழிக்கப்படுதல். ஜனங்கள் கோத்திரங்களாக பிரிந்து போகுதல் – அந்திக் கிறிஸ்துவான யாக்கோபு ஒரு இரகசிய சங்கத்திற்கு ராஜாவாகுதல் – நேபி மனந்திரும்புதலையும் கிறிஸ்துவில் விசுவாசத்தையும் பிரசங்கித்தல் – தூதர்கள் அவனுக்கு அனுதினமும் பணிவிடை செய்தல். அவன் தன் சகோதரனை மரித்தோரிலிருந்து எழப்பண்ணுதல் – அநேகர் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறுதல். ஏறக்குறைய கி.பி. 30–33.

1 இப்பொழுதும் இதோ, அவர்கள் தேசத்தின்மேல் ஒரு ராஜாவை ஏற்படுத்தவில்லையென்று உங்களுக்குக் காட்டுவேன்; ஆனால் இதே வருஷத்தில், ஆம், முப்பதாவது வருஷத்தில் அவர்கள் நியாயாசனத்தை அழித்து, ஆம், தேசத்தின் பிரதான நியாயாதிபதியைக் கொலைபண்ணினார்கள்.

2 ஜனங்கள் ஒருவருக்கு விரோதமாய் ஒருவர் பிரிந்து போனார்கள்; தன் குடும்பம் தன் கோத்திரம் மற்றும் நண்பர்களுக்குத் தக்கதாக அவர்களில் ஒவ்வொருவரும் மற்றவரிடத்திலிருந்து கோத்திரங்களாகப் பிரிந்தார்கள். இப்படியாக அவர்கள் தேசத்தின் ராஜாங்கத்தை அழித்துப் போட்டார்கள்.

3 ஒவ்வொரு கோத்திரமும் தங்கள்மேல் ஒரு பிரதானியையோ அல்லது ஒரு தலைவனையோ நியமித்திருந்தது; இப்படியாக அவர்கள் கோத்திரங்களாகவும் கோத்திரங்களின் தலைவர்களாகவும் ஆனார்கள்.

4 இப்பொழுதும் இதோ, அதிகக் குடும்பத்தையும், அநேக கோத்திரங்களையும், நண்பர்களையும் பெற்றிராத மனுஷன் ஒருவனும் அவர்களுக்குள்ளில்லை; ஆதலால் அவர்களின் கோத்திரங்கள் மிகவும் பெரிதாயின.

5 இப்பொழுதும் இவையெல்லாம் நிறைவேறிய பின்பும், அவர்களுக்குள் இதுவரைக்கும் எந்த யுத்தங்களும் வந்ததில்லை; இந்த அக்கிரமம் யாவும் ஜனங்கள் தங்களையே சாத்தானின் வல்லமைக்கு ஒப்புக்கொடுத்ததினிமித்தம் அவர்கள் மேல் வந்தது.

6 தீர்க்கதரிகளைக் கொலை செய்தவர்களுடைய நண்பர்கள் மற்றும் இனத்தாரின் இரகசிய சங்கத்தினிமித்தம், ராஜாங்கத்தின் ஒழுங்குமுறைகள் அழிக்கப்பட்டன.

7 அவர்கள் தேசத்திலே பெரும் பிணக்கை ஏற்படுத்தியதினிமித்தம் நீதிமான்களில் பெரும்பாலோர் கிட்டத்தட்ட எல்லோருமே துன்மார்க்கரானார்கள்; ஆம், அவர்களுக்குள் சில நீதிமான்கள் மாத்திரமிருந்தார்கள்.

8 இப்படியாக ஆறு வருஷங்கள் கடந்துபோவதற்கு முன்னதாகவே, ஜனங்களில் பெரும்பாலானோர், நாய் தான் கக்கினதைத் தின்பது போலவும், அல்லது கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளத் திரும்புவது போலவும், தங்கள் நீதியிலிருந்து புறம்பே போனார்கள்.

9 இப்பொழுதும் ஜனங்கள் மேல் இப்பேர்ப்பட்ட மிகப்பெரிய அக்கிரமத்தைக் கொண்டுவந்த இந்த இரகசிய சங்கம், ஏகமாய்க் கூடி யாக்கோபு என்று தாங்கள் அழைத்த ஒரு மனுஷனை தங்கள் தலைமையாக வைத்தார்கள்.

10 அவர்கள் அவனைத் தங்கள் ராஜா என்று அழைத்தார்கள்; ஆதலால் அவன் இந்த துன்மார்க்க கூட்டத்திற்கு ராஜாவானான். இயேசுவைக் குறித்து சாட்சி பகர்ந்த தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக, தன் சத்தத்தை உயர்த்தியவர்களில் இவனும் பிரதானியானவன்.

11 அந்தப்படியே, தங்கள் தலைவன் ஒவ்வொருவனும் தன்தன் கோத்திரத்திற்குத் தக்கதாக தங்கள் சட்டங்களை ஸ்தாபித்ததிலேயல்லாமல் ஒன்றாக இணைந்திருந்த ஜனங்களின் கோத்திரங்களைப் போல அவர்கள் எண்ணிக்கையிலே அதிகமானோராய் இருக்கவில்லை; இருந்தாலும் அவர்கள் விரோதிகளாயிருந்தார்கள். அவர்கள் நீதியுள்ள ஜனமாயில்லாதிருந்தும்கூட, ராஜாங்கத்தை அழிக்கும்படியான உடன்படிக்கையினுள் பிரவேசித்தவர்களுடன், வெறுப்பிலே ஒன்றுபட்டிருந்தார்கள்.

12 ஆகையால், தங்களுடைய விரோதிகள் தங்களைக் காட்டிலும் அதிகமானோராய் இருப்பதைக்கண்டு, அந்தக் கூட்டத்திற்கு தான் ராஜாவாக இருப்பதினாலும் யாக்கோபு தன் தேசத்தின் வடகோடிக்குப் பறந்தோடி, அங்கே அவர்கள் கலகக்காரருடன் இணைக்கப்பட்டு (ஏனெனில் அங்கே அநேக கலகக்காரர் இருப்பார்களென்று அவன் அவர்களிடம் இச்சகம் பேசி) ஜனங்களின் கோத்திரங்களோடு போராட போதுமான பெலனுள்ளவர்களாகும் வரைக்கும் அங்கே தங்களுக்கென்று ஒரு ராஜ்யத்தைக் கட்டவேண்டுமென்று கட்டளையிட்டான், அவர்களும் அப்படியே செய்தார்கள்.

13 அவர்களின் அணிவகுப்பு மிகவும் துரிதமாய் இருந்தபடியாலே, அவர்களைத் தடைசெய்ய முடியாதபடிக்கு ஜனங்களிடத்திலிருந்து வெகுதூரமாய்ப் போனார்கள். இப்படியாக முப்பதாவது வருஷமும் முடிவடைந்தது; நேபியின் ஜனங்களுடைய விவகாரங்கள் இப்படியாய் இருந்தது.

14 அந்தப்படியே, முப்பத்தோறாம் வருஷத்தில் அவர்களின் ஒவ்வொரு மனுஷனும் தன்தன் குடும்பம், இனம் மற்றும் நண்பர்களுக்குத் தக்கதாக கோத்திரங்களாக பிரிந்து போனார்கள்; ஆயினும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தத்திற்கு போகமாட்டோமென்று ஓர் ஒப்பந்தத்திற்குள் பிரவேசித்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய சட்டங்களின்படியேயும், தங்களுடைய ராஜாங்கத்தின் முறைமையின்படியேயும் இணைந்திருக்கவில்லை. ஏனெனில் அவைகள் அவர்களுடைய பிரதானிகளாயும் அவர்களுடைய தலைவர்களாயும் இருந்தவர்களுடைய எண்ணங்களின்படியே ஏற்படுத்தப்பட்டன. அவர்கள் ஒரு கோத்திரம் மற்றொரு கோத்திரத்திற்கு விரோதமாக மீறுதல் பண்ணக்கூடாதென்று மிக திருத்தமான சட்டங்களை ஏற்படுத்தினார்கள். அதினிமித்தம் அவர்களுக்கு தேசத்தில் ஓரளவுக்கு சமாதானம் இருந்தது; ஆயினும் அவர்களுடைய இருதயங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலிருந்து திருப்பப்பட்டது. அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கல்லெறிந்து, தங்கள் மத்தியிலிருந்து அவர்களைப் புறம்பே தள்ளினார்கள்.

15 அந்தப்படியே, தூதர்களாலும், கர்த்தருடைய சத்தத்தாலும், நேபி சந்திக்கப்பட்டவனாயும், அதனாலே தூதர்களைக் கண்டவனாயும், கண்கண்ட சாட்சியாயுமிருந்து, கிறிஸ்துவினுடைய ஊழியத்தைக் குறித்து அவன் அறிந்துகொள்ளும்படியாக அவனுக்கு வல்லமை கொடுக்கப்பட்டிருந்து, நீதியிலிருந்து உடனே தங்களுடைய துன்மார்க்கத்திற்கும், அருவருப்புகளுக்கும் அவர்கள் திரும்பினதிற்கு கண்கண்ட சாட்சியுமாயிருந்தான்.

16 ஆகவே அவர்களுடைய இருதயங்களின் கடினத்தினிமித்தமும், அவர்களுடைய எண்ணங்களின் குருட்டுத்தன்மையினிமித்தமும், சஞ்சலப்பட்டவனாயும் இருக்கிறபடியால், அதே வருஷத்தில் அவர்களுக்குள்ளே போய், மனந்திரும்புதலைக் குறித்தும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின்மூலம், பாவமன்னிப்பைக் குறித்தும், தைரியமாய் சாட்சி பகரத் துவங்கினான்.

17 அவன் அவர்களுக்கு அநேக காரியங்களைப் போதித்தான்; அவைகள் எல்லாவற்றையும் எழுதமுடியாது. அவைகளில் ஒரு பகுதியும் போதுமானதாய் இராது. ஆதலால் அவைகள் இப்புஸ்தகத்தில் எழுதப்படவில்லை. நேபி வல்லமையோடும் மிகுந்த அதிகாரத்தோடும் போதித்தான்.

18 அந்தப்படியே, அவன் அவர்களைக் காட்டிலும் அதிக வல்லமையைக் கொண்டிருந்ததால், அவர்கள் அவனோடு கோபமாயிருந்தார்கள். ஏனெனில் தூதர்கள் அவனுக்கு அனுதினமும் பணிவிடை செய்யத்தக்கதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் அவனுடைய விசுவாசம் பெரிதாய் இருந்தமையால், அவனுடைய வார்த்தைகளை அவர்கள் நம்பாமல் இருக்க முடியவில்லை.

19 அவன் இயேசுவின் நாமத்தில் பிசாசுகளையும் அசுத்த ஆவிகளையும் துரத்தினான்; ஜனங்களால் கல்லெறியப்பட்டு, மரித்துப்போன தன் சகோதரனையும்கூட அவன் மரித்தோரிலிருந்து எழுப்பினான்.

20 ஜனங்கள் அதைக் கண்டு, அதற்கு சாட்சியாயிருந்து, அவனுடைய வல்லமையினிமித்தம் அவன்மேல் கோபப்பட்டார்கள்; ஜனங்களின் பார்வையிலேயே இயேசுவின் நாமத்தில் அவன் அநேக பல அற்புதங்களையும் செய்தான்.

21 அந்தப்படியே, முப்பத்தோராம் வருஷம் கடந்துபோயிற்று, அங்கிருந்த சிலர் மாத்திரம் கர்த்தருக்குள்ளாக மனம் மாறினார்கள்; ஆனாலும் மனம் மாறியவர்கள் அனைவருமே, தாங்கள் விசுவாசித்த இயேசு கிறிஸ்துவில் இருந்த தேவ ஆவியாலும், வல்லமையாலும், அவர்கள் சந்திக்கப்பட்டார்களென்று ஜனங்களுக்கு மெய்யாகவே நடத்தையில் தெரிவித்தார்கள்.

22 தங்களிலிருந்து பிசாசுகள் துரத்தப்பட்டவர்களும், தங்கள் பெலவீனங்களிலிருந்தும் தங்கள் நோய்களிலிருந்தும் சுகப்பட்டவர்களுமான அநேகரும், தாங்கள் தேவ ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு சுகப்படுத்தப்பட்டோம், என்று ஜனங்களுக்கு மெய்யாகவே வெளிப்படுத்தினார்கள்; அவர்கள் அறிகுறிகளையும் காண்பித்து, ஜனங்களுக்குள்ளே சில அற்புதங்களையும் செய்தார்கள்.

23 இப்படியாக முப்பத்திரண்டாம் வருஷமும் கடந்து போயிற்று. முப்பத்தி மூன்றாம் வருஷ துவக்கத்தில் நேபி ஜனங்களிடத்தில் கூக்குரலிட்டான்; அவன் அவர்களுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் பிரசங்கித்தான்.

24 இப்பொழுதும் ஜலத்தினால் ஞானஸ்நானம் பெறாமல் எவரும் மனந்திரும்புதலுக்கு கொண்டுவரப்படவில்லை என்றும், நீங்கள் நினைவுகூரவேண்டுமென்று விரும்புகிறேன்.

25 ஆதலால் மனந்திரும்பி தங்கள் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்றோம் என்று தேவனுக்கு முன்பாகவும், ஜனங்களுக்கு முன்பாகவும் சாட்சியாகவும், சாட்சியமாகவும் இருக்கும் பொருட்டு, தங்களிடம் வருகிற யாவரும் தண்ணீரால் ஞானஸ்நானம் பெறும்படியாக, இந்த ஊழியத்துக்கு நேபியால் மனுஷர் நியமிக்கப்பட்டார்கள்.

26 இந்த வருஷத்தின் துவக்கத்திலே அநேகர் மனந்திரும்புதலுக்கேதுவாக ஞானஸ்நானம் பெற்றார்கள்; இப்படியாக வருஷத்தின் அதிக பகுதி கடந்துபோயிற்று.