வேதங்கள்
3 நேபி 29


அதிகாரம் 29

கர்த்தர் இஸ்ரவேலைச் சேர்க்கவும் அவருடைய உடன்படிக்கைகளை நிறைவேற்றவும் துவங்கிவிட்டார் என்பதற்கு மார்மன் புஸ்தகம் வெளிவருதல் ஓர் அறிகுறி – அவருடைய பிற்கால வெளிப்படுத்தல்களையும் வரங்களையும் மறுப்பவர்கள் சபிக்கப்படுவார்கள். ஏறக்குறைய கி.பி. 34–35.

1 இப்பொழுதும் இதோ, கர்த்தர் புறஜாதிகளுக்குத் தம்முடைய வார்த்தையின்படியே இவ்வார்த்தைகள் வரும் என்று தம்முடைய ஞானத்தில் சரியென்று காண்கிறபோது, இஸ்ரவேல் புத்திரர் அவர்களுடைய சுதந்திர பூமிகளில் மீண்டும் சேர்க்கப்படுவார்கள் என்பதைக் குறித்து, பிதாவானவர் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை, ஏற்கனவே நிறைவேறத் துவங்கியது, என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள், என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2 பரிசுத்த தீர்க்கதரிசிகளால் பேசப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகள் யாவும் நிறைவேறும் என்றும் நீங்கள் அறிவீர்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தம்முடைய வருகையைத் தாமதிக்கிறார் என்று நீங்கள் சொல்லவேண்டாம்.

3 பேசப்பட்ட வார்த்தைகள் வீணென்று நீங்கள் உங்கள் இருதயங்களில் எண்ணிக் கொள்ளவும் வேண்டாம். ஏனெனில் இதோ, கர்த்தர் இஸ்ரவேலின் வீட்டாராகிய தம்முடைய ஜனத்தோடு செய்துகொண்ட தம்முடைய உடன்படிக்கையை நினைவுகூருவார்.

4 இந்த வார்த்தைகள் உங்களுக்குள்ளே வருகிறதை நீங்கள் காணும்போது, நீங்கள் இனி ஒருபோதும் கர்த்தருடைய செய்கைகளை நிந்திக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவருடைய நியாயத்தின் பட்டயம் அவருடைய வலது கரத்திலிருக்கிறது. இதோ, அந்த நாளில், நீங்கள் அவருடைய செய்கைகளை நிந்தித்தால், அது உங்களை சீக்கிரமாய் மேற்கொள்ளும்படி அவர் செய்திடுவார்.

5 கர்த்தருடைய செய்கைகளை நிந்திக்கிறவனுக்கு ஐயோ; ஆம், கிறிஸ்துவையும் அவருடைய கிரியைகளையும் மறுதலிப்பவனுக்கு ஐயோ!

6 ஆம், கர்த்தருடைய வெளிப்படுத்தல்களை மறுதலித்து, கர்த்தர் வெளிப்படுத்தலினாலாவது, தீர்க்கதரிசனத்தினாலாவது, வரங்களினாலாவது, பாஷைகளினாலாவது, சுகப்படுத்தலினாலாவது, அல்லது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலாவது இனி ஒருபோதும் கிரியை செய்வதில்லை என்று சொல்பவனுக்கு ஐயோ!

7 ஆம், இயேசு கிறிஸ்துவினால் எந்த ஒரு அற்புதத்தையும் செய்யமுடியாதென்று அந்நாளிலே லாபத்திற்கென்று சொல்லுகிறவனுக்கு ஐயோ. இப்படிச் செய்கிறவன் கேட்டின் மகனைப் போலாவான். கிறிஸ்துவின் வார்த்தையின்படி அப்படிப்பட்டவனுக்கு இரக்கமே கிடையாது.

8 ஆம், இனியும் நீங்கள் யூதர்களையும், இஸ்ரவேல் வீட்டாரின் மீதியானோர் எவரையும் கோபிக்கவோ, நிந்திக்கவோ, கேலிப்பொருளாக்கவோ வேண்டாம்; ஏனெனில் இதோ, கர்த்தர் அவர்களுடனான தமது உடன்படிக்கையை நினைவுகூருகிறார். அவர் ஆணையிட்டபடியே அவர்களுக்குச் செய்வார்.

9 ஆதலால் கர்த்தர் இஸ்ரவேலின் வீட்டாரிடத்தில் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றும்படிக்கு, நியாயந்தீர்க்காமல் இருக்கும்படி அவருடைய வலது கரத்தை இடது புறமாக உங்களால் திருப்பக்கூடும் என்று நீங்கள் நினையாதிருங்கள்.