வேதங்கள்
3 நேபி 24


அதிகாரம் 24

கர்த்தருடைய தூதுவன் இரண்டாம் வருகைக்கென்று வழியை ஆயத்தப்படுத்துவான் – கிறிஸ்து நியாயந்தீர்க்க உட்காருவார் – தசமபாகங்களையும் காணிக்கைகளையும் செலுத்தும்படி இஸ்ரவேல் கட்டளையிடப்படுதல் – ஞாபகப் புஸ்தகம் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது – மல்கியா 3ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.பி. 34.

1 அந்தப்படியே, அவன் அவர்களுக்குச் சொல்லவிருக்கிற, மல்கியாவிற்கு பிதாவானவர் கொடுத்த வார்த்தைகளை, அவர்கள் எழுதவேண்டுமென்று அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார். அந்தப்படியே, அவைகள் எழுதப்பட்ட பின்பு அவர் அவைகளை விளக்கிச் சொன்னார். அவர் அவர்களிடத்தில் சொன்ன வார்த்தைகள் இவைகளே: பிதா மல்கியாவிடம் சொன்னது இதுவே, இதோ, நான் என் தூதுவனை அனுப்புவேன். அவன் எனக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவான். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும், நீங்கள் களிகூர்கிற உடன்படிக்கையின் தூதனுமானவர், தம்முடைய ஆலயத்திற்கு திடீரென்று வருவார். இதோ, அவர் வருவாரென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

2 அவருடைய வருகையின் நாளில் நிலைத்திருப்பவன் யார்? அவர் தோன்றும்போது நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனின் நெருப்பைப் போலவும், வண்ணானுடைய சவுக்காரம் போலவும் இருப்பார்.

3 அவர் வெள்ளியைப் புடமிட்டு சுத்திகரிப்பவராக உட்காருவார்: அவர் லேவியின் குமாரர்களைச் சுத்திகரித்தும், அவர்கள் நீதியினாலே காணிக்கையைக் கர்த்தருக்கு படைக்கும்படிக்கு, அவர்களை பொன்னைப் போலவும், வெள்ளியைப் போலவும் சுத்திகரிப்பார்.

4 அப்பொழுது பழங்காலத்தைப் போலவும், முந்தின வருஷங்களில் இருந்ததைப் போலவும், யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்கு உகந்ததாகும்.

5 நான் நியாயந்தீர்க்கும்படியாக உங்கள் அருகில் வருவேன். சூனியக்காரர்களுக்கு விரோதமாகவும், விபச்சாரக்காரர்களுக்கு விரோதமாகவும், பொய் ஆணையிடுபவர்களுக்கு விரோதமாகவும், கூலிக்காரனை அவன் கூலியிலும், விதவையையும், தகப்பனில்லாதோரையும் ஒடுக்குபவர்களுக்கும், அந்நியரை நிராகரித்து எனக்குப் பயப்படாதவர்களுக்கும் விரோதமாகவும் நான் விரைந்துவரும் சாட்சியாவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

6 நானே கர்த்தர், நான் மாறுவதில்லை; ஆதலால் யாக்கோபின் குமாரராகிய நீங்கள் பட்சிக்கப்பட்டுப் போவதில்லை.

7 நீங்கள் உங்களுடைய பிதாக்களின் நாட்களிலிருந்தே என்னுடைய நியமங்களிலிருந்து விலகிப்போய், அவைகளைக் கைக்கொள்ளவில்லை. என்னிடத்தில் திரும்புங்கள். நானும் உங்களிடத்தில் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். ஆனாலும் நாங்கள் எந்த விதத்தில் திரும்பவேண்டுமென்று நீங்கள் கேட்கிறீர்கள்.

8 மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? இருப்பினும் என்னை நீங்கள் வஞ்சித்திருக்கிறீர்கள். நீங்களோ எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.

9 முழு தேசத்தாராகிய நீங்கள், என்னை வஞ்சித்ததினிமித்தம், நீங்கள் ஒரு சாபத்தால் சபிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

10 என் வீட்டில் ஆகாரம் இருக்கும்படி, பண்டகசாலையிலே தசமபாகங்களை எல்லாம் நீங்கள் கொண்டு வாருங்கள்; அதனாலே நான் வானத்திலே பலகணிகளைத் திறந்து, இடம்கொள்ளாமல் போகுமளவும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை ஊற்றமாட்டேனோவென்றும், அதனால் என்னை இப்பொழுது சோதித்துப் பாருங்கள், என்றும் சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

11 நான் பட்சிக்கிறவனை உங்கள் நிமித்தம் கடிந்துகொள்வேன், அவன் உங்கள் நிலங்களின் கனிகளை அழிப்பதில்லை. வெளியிலுள்ள உங்கள் திராட்சைச்செடிகள் காலத்திற்கு முன்னாகவே தன் கனிகளைத் தள்ளுகிறதுமில்லை, என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

12 எல்லா தேசங்களும் உங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று அழைப்பார்கள். நீங்கள் விரும்பப்படத்தக்க தேசமாயிருப்பீர்கள், என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

13 நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின வார்த்தைகள் கடினமாய் இருக்கிறது, என்று கர்த்தர் உரைக்கிறார். இருப்பினும் உமக்கு விரோதமாய் என்ன பேசினோம், என்று கேட்கிறீர்கள்.

14 தேவனை சேவிப்பது வீணே. அவருடைய நியமங்களை கைக்கொண்டதாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நாம் துக்கித்து நடந்ததாலும் நமக்கு என்ன பிரயோஜனம்? என்று சொன்னீர்கள்.

15 இப்பொழுதும் பெருமைக்காரர்களை மகிழ்ச்சியுள்ளவர்கள் என்று சொல்லுகிறோம்; ஆம், தீமை செய்கிறவர்கள் திடப்படுத்தப்படுகிறார்கள், ஆம், தேவனை சோதிக்கிறவர்கள் விடுவிக்கப்பட்டும் இருக்கிறார்களே, என்றீர்கள்.

16 அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் அடிக்கடி பேசினார்கள். கர்த்தர் செவிகொடுத்துக் கேட்டார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும், அவருடைய நாமத்தை தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருந்தது.

17 நான் என் ஆபரணங்களைச் செய்யும் அந்நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு மனுஷன் தன்னை சேவிக்கிற தன்னுடைய சொந்த மகனைத் தப்புவிக்கிறதைப் போல, நான் அவர்களைத் தப்புவிப்பேன்.

18 அப்பொழுது நீங்கள் திரும்பி வந்து, நீதிமானையும் துன்மார்க்கனையும், தேவனை சேவிப்பவனையும் அவரைச் சேவிக்காதவனையும் பகுத்தறிவீர்கள்.