வேதங்கள்
3 நேபி 4


அதிகாரம் 4

நேபிய சேனைகள் காதியாந்தன் திருடர்களை வீழ்த்துதல் – கித்தியானி கொல்லப்படுதல். அவன் பின் வந்தவனான செம்னாரியா தூக்கிலிடப்படுதல் – நேபியர்கள் தங்களின் ஜெயங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரித்தல். ஏறக்குறைய கி.பி. 19–22.

1 அந்தப்படியே, பதினெட்டாம் வருஷ பிற்பகுதியிலே அந்தத் திருடர் சேனைகள் யுத்தத்திற்காக ஆயத்தப்பட்டு, கீழ் இறங்கி வந்து, குன்றுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும், வனாந்தரத்திலிருந்தும், தங்கள் கொத்தளங்களிலிருந்தும், தங்கள் மறைவிடங்களிலிருந்தும் வெளியேறி, வடதேசத்திலும் தென்தேசத்திலும் ஆக இரண்டிலுமுள்ள நிலங்களை ஆக்கிரமித்து, நேபியர்களால் கைவிடப்பட்ட தேசங்களையும், பாழாய்ப் போகவிடப்பட்ட பட்டணங்களையும் வசப்படுத்தத் துவங்கினார்கள்.

2 ஆனால் இதோ, நேபியர்களால் கைவிடப்பட்ட அந்த நிலங்களில், எந்த வனவிலங்குகளோ, அல்லது வேட்டைக்குரிய மிருகங்களோ காணப்படவில்லை. வனாந்தரத்திலேயல்லாமல் வேறெங்கும் திருடர்களுக்கான வேட்டைக்குரிய மிருகங்கள் உண்டாயிருக்கவில்லை.

3 திருடர்கள் உணவு வேண்டி வனாந்தரத்தைத் தவிர வேறெங்கும் ஜீவித்திருக்க முடியவில்லை, ஏனெனில் நேபியர்கள் தங்கள் தேசங்களைக் கைவிட்டுவிட்டு, தங்கள் மந்தைகளையும் தங்கள் கால்நடைகளையும் தங்களின் எல்லா வஸ்துக்களையும் கூட்டி அவர்கள் ஒரே கூட்டமாய் இருந்தார்கள்.

4 ஆதலால் திருடர்கள் நேரடியாக வந்து நேபியர்களோடு யுத்தம் செய்வதைத் தவிர, அவர்கள் களவாடி ஆகாரத்தைப் பெற எந்த வாய்ப்பும் இல்லாமற் போயிற்று; நேபியர்கள் ஒரே குழுவாய் இருந்ததாலும், அவர்கள் அதிகமானோராய் இருந்ததாலும், தங்களுக்கென்று தாங்கள் ஏழுவருஷம் தொடர்ந்து ஜீவித்திருக்கும்படி அவர்கள் வஸ்துக்களையும், குதிரைகளையும், கால்நடைகளையும், எல்லா வகையான மந்தைகளையும் வைத்திருந்ததாலும், அந்தக் காலத்திற்குள்ளாக திருடர்களைப் பூமியிலிருந்து அழித்துப் போடவும் நம்பிக்கையாயிருந்தார்கள்; இப்படியாக பதினெட்டாம் வருஷமும் கடந்து போயிற்று.

5 அந்தப்படியே, களவாடுவதையும், கொள்ளையிடுவதையும், கொலை செய்வதையும் தவிர, அவர்கள் ஜீவித்திருக்க எந்த ஒரு வழியும் இல்லாததினால், கித்தியானி பத்தொன்பதாவது வருஷத்தில் தான் நேபியர்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்குப் போவது அவசியமெனக் கண்டான்.

6 நேபியர்கள் தங்கள் மேல் வந்து, தங்களைக் கொன்றுபோடக்கூடும் என்று அவர்கள் அஞ்சி, அவர்கள் தானியங்களை விளைவிக்கும்படி தேசத்தின்மேல் பரவ தைரியங்கொள்ளவில்லை; ஆதலால் கித்தியானி தன் சேனைகள் இவ்வருஷத்திலே நேபியர்களுக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போகவேண்டுமெனக் கட்டளையிட்டான்.

7 அந்தப்படியே, அவர்கள் யுத்தத்திற்கு வந்தார்கள்; அது ஆறாம் மாதமாய் இருந்தது. இதோ, அவர்கள் யுத்தத்திற்கு வந்த அந்த நாள் கொடியதும் பயங்கரமுமாயும் இருந்தது. அவர்கள் திருடர்களின் முறைப்படி அரைக் கட்டியிருந்தார்கள், அவர்கள் ஆட்டுத் தோலை தங்கள் அரைகளில் கட்டியிருந்தார்கள். அவர்கள் இரத்தத்தால் சாயம் பூசப்பட்டிருந்தார்கள்; அவர்களின் தலைகள் சிரைக்கப்பட்டிருந்தன; அவர்கள் அவைகள்மேல் தலைச்சீராவை அணிந்திருந்தார்கள்; கித்தியானியின் சேனைகள் தங்கள் கவசத்தினாலும், தாங்கள் இரத்தத்தினால் சாயம் பூசப்பட்டதினாலும் அவர்களின் தோற்றம் கொடியதாயும் பயங்கரமாயுமிருந்தது.

8 அந்தப்படியே, நேபியர்களின் சேனைகள், கித்தியானியின் சேனையினுடைய தோற்றத்தைக் கண்டபோது, அவர்கள் பூமியில் விழுந்து, தங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களைக் காத்து, தங்களின் விரோதிகளின் கைகளுக்கு தங்களைத் தப்புவிக்கவேண்டுமென்று, தங்கள் கூக்குரல்களை உயர்த்தினார்கள்.

9 அந்தப்படியே, கித்தியானியின் சேனைகள் இதைக் கண்டபோது, அவர்கள் தங்கள் சந்தோஷத்தினிமித்தம் உரத்த சத்தமாய் ஆர்ப்பரிக்கத் துவங்கினார்கள், ஏனெனில், தங்கள் சேனைகள் பயங்கரமாயிருப்பதினாலே நேபியர்கள் பயந்து விழுந்தார்கள் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள்.

10 ஆனால் இக்காரியத்தில் அவர்கள் ஏமாந்து போனார்கள், ஏனெனில் நேபியர்கள் அவர்களுக்குப் பயப்படவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் தேவனுக்குப் பயந்து, பாதுகாப்புக்காக அவரை வேண்டினார்கள்; ஆதலால், கித்தியானியின் சேனைகள் இவர்கள் மேல் விழவந்தபோதோ, இவர்கள் அவர்களைச் சந்திக்க ஆயத்தமாயிருந்தார்கள்; ஆம், கர்த்தருடைய பெலத்திலே அவர்களைச் சந்தித்தார்கள்.

11 யுத்தம் இந்த ஆறாவது மாதத்தில் துவங்கியது; அந்த யுத்தம் கொடியதும் பயங்கரமுமாயிருந்தது. ஆம், அதில் ஏற்பட்ட சங்காரம் கொடியதும் பயங்கரமாயுமிருந்தது, லேகி எருசலேமைவிட்டு வந்தது துவங்கி, அவனுடைய ஜனங்கள் எல்லோருக்குள்ளும் இப்படிப்பட்ட மிகப்பெரும் சங்காரம் அறியப்படாத அளவிலிருந்தது.

12 கித்தியானியின் பயமுறுத்தல்களையும் ஆணைகளையும் பொருட்படுத்தாமல், இதோ, அவர்கள் தங்களுக்கு முன்பாக திரும்பிப் போகுமளவிற்கு நேபியர்கள் அவர்களை அடித்தார்கள்.

13 அந்தப்படியே, கித்கித்தோனி தன் சேனைகள் அவர்களை வனாந்தர எல்லைகள் மட்டுமாய்த் துரத்தி, வழியிலே தங்கள் கைகளுக்குள் விழுகிற எவரையும் தப்புவிக்கக்கூடாதென்று கட்டளையிட்டான்; இப்படியாக கித்கித்தோனியின் கட்டளையை நிறைவேற்றும்வரை அவர்கள் அவர்களை வனாந்தர எல்லை மட்டும் துரத்தி, அவர்களைக் கொன்றும் போட்டார்கள்.

14 அந்தப்படியே, நின்று தைரியத்தோடே சண்டையிட்ட கித்தியானியும் ஓடஓட துரத்தப்பட்டான். அவன் அதிக யுத்தம் பண்ணி களைத்துப்போயிருந்ததால் அவன் முந்தப்பட்டு, வெட்டப்பட்டான். இதுவே திருடனாகிய கித்தியானியின் முடிவாயிருந்தது.

15 அந்தப்படியே, நேபியர்களின் சேனைகள் மறுபடியும் தங்களுடைய பாதுகாப்பு ஸ்தலத்திற்குத் திரும்பினார்கள். அந்தப்படியே, இந்த பத்தொன்பதாவது வருஷமும் கடந்து போயிற்று. திருடர்கள் மறுபடியும் யுத்தத்திற்கு வரவில்லை; அவர்கள் இருபதாவது வருஷத்திலும் மறுபடியும் வரவில்லை.

16 இருபத்தோராம் வருஷத்தில், அவர்கள் யுத்தத்திற்கு வராமல், நேபியின் ஜனங்களைச் சுற்றி எல்லா பக்கங்களிலும் முற்றுகையிட வந்தார்கள்; நேபியின் ஜனங்களை அவர்களுடைய நிலங்களுக்குச் செல்லாமல் தடுப்பதாலும், எல்லா பக்கங்களிலிருந்தும் அவர்களைச் சூழ்வதாலும், அவர்களுடைய எல்லா வெளிப்புற சிலாக்கியங்களிலிருந்தும் அவர்களைத் தடுப்பதாலும், தங்களுடைய விருப்பங்களின்படியே அவர்களை விட்டுக்கொடுக்கச் செய்யமுடியும், என்று எண்ணினார்கள்.

17 இப்பொழுது இவர்கள் தங்களுக்கென்று செம்னாரியா என்ற பெயர் கொண்ட வேறொரு தலைவனை நியமித்துக் கொண்டார்கள்; ஆதலால் செம்னாரியாதான் இந்த முற்றுகையை செய்யப்பண்ணினான்.

18 ஆனால் இதோ, இது நேபியர்களுக்கு அனுகூலமாய் அமைந்தது; அவர்கள் அதிக உணவை சேமித்து வைத்திருந்ததால், நேபியர்களின் மேல் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தும்படியாக, திருடர்களால் நீண்ட காலம் போதுமான முற்றுகை பண்ண முடியாமற் போயிற்று.

19 திருடர்களுள்ளோ உணவுத் தட்டுப்பாடு இருந்ததால், இதோ, ஜீவியத்திற்கென்று அவர்களிடம் மாமிசமேயல்லாமல் வேறொன்றும் இல்லை, அந்த மாமிசத்தை அவர்கள் வனாந்தரத்தில் பெற்றார்கள்.

20 அந்தப்படியே, வேட்டைக்குரிய வனவிலங்குகள் வனாந்தரத்தில் கிடைக்க அரிதாய் இருந்ததால், திருடர்கள் அழிந்து போக இருந்தார்கள்.

21 நேபியர்கள் இரவும் பகலும் தொடர்ந்து அணிவகுத்துப்போய் அவர்களுடைய சேனைகள்மேல் விழுந்து அவர்களை ஆயிரக்கணக்கிலும், பதினாயிரக்கணக்கிலும் வெட்டிப் போட்டார்கள்.

22 இப்படியாக இரவும் பகலுமாக தங்கள் மேல் வந்த அந்த மகா அழிவினிமித்தம், தங்களின் திட்டத்தைக் கைவிடவேண்டுமென்பது செம்னாரியா ஜனங்களின் வாஞ்சையானது.

23 அந்தப்படியே, அவர்கள் முற்றுகையிடுவதிலிருந்து பின்வாங்கி, வடதேசத்தின் தூரப் பகுதிகளுக்குப் போகவேண்டுமென தன் ஜனங்களுக்கு செம்னாரியா கட்டளையிட்டான்.

24 இப்பொழுது கித்கித்தோனி அவர்களுடைய திட்டத்தை தெரிந்தவனாய், உணவுப்பற்றாக்குறையினிமித்தமும், அவர்களுள் செய்யப்பட்ட அந்தப் பெரும் சங்காரத்தினிமித்தமுமான அவர்களுடைய பெலவீனத்தை அறிந்தவனாய், இரவு நேரத்தில் தன் சேனைகளை அனுப்பி அவர்கள் பின்வாங்கும் வழியில் தன் சேனைகளை நிறுத்தினான்.

25 அவர்கள் இரவு வேளையில் இதைச் செய்துவிட்டு, திருடர்களையும் கடந்து அணிவகுத்துப்போனதால், மறுநாளில் திருடர்கள் தங்கள் அணிவகுப்பைத் துவங்கியபோது, அவர்கள் முன்னாலும் பின்னாலுமாக நேபியின் சேனைகளால் சந்திக்கப்பட்டார்கள்.

26 தெற்கில் இருந்த திருடர்களும், அவர்களுடைய பாதுகாப்பிடங்களில் வெட்டப்பட்டார்கள். இவை யாவும் கித்கித்தோனியின் கட்டளையால் நடப்பிக்கப்பட்டது.

27 அங்கே பல்லாயிரக்கணக்கானோர் தங்களையே கைதிகளாக நேபியர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், அவர்களில் மீதியானோர் கொல்லப்பட்டார்கள்.

28 அவர்களுடைய தலைவனாகிய செம்னாரியா பிடிக்கப்பட்டு அவன் மரித்துப்போகும் மட்டும் ஒரு மரத்தில் தொங்கவிடப்பட்டான். அவர்கள் அவன் மரித்துப்போகுமட்டும் அவனைத் தொங்கவிட்ட பின்னர், அந்த மரத்தை பூமியில் சாய்த்து உரத்த சத்தமாய் சொன்னதாவது:

29 கர்த்தர் தமது ஜனத்தை நீதியோடும், பரிசுத்த இருதயத்தோடும் காப்பாராக. வல்லமையினிமித்தமும், இரகசிய சங்கங்களினிமித்தமும் அவர்களைக் கொல்ல நாடுகிற யாவரும் இந்த மனுஷன் பூமியில் விழத் தள்ளப்பட்டதைப் போலவே பூமியிலே விழத்தள்ளுவாராக.

30 இந்த ஜனங்கள் பாதுகாப்புக்கென்று தங்களின் தேவனுடைய நாமத்தைக் கூப்பிடும் காலம் வரைக்குமாய், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் இவர்களை நீதியிலே காப்பாராக என, அவர்கள் களிகூர்ந்து, ஏகசத்தமாய் மறுபடியும் கூக்குரலிட்டார்கள்.

31 அந்தப்படியே, அவர்கள் யாவரும் தேவன் தங்களைத் தங்களுடைய பகைவரின் கைகளுக்குள் விழாமல் காப்பாற்றியதில், அவர் செய்த அந்த மகத்துவமான காரியத்தினிமித்தம், கூடிவந்து அவரை ஏகமாய்ப் பாடித் துதித்தார்கள்.

32 ஆம், அவர்கள் கூக்குரலிட்டு அதி உன்னத தேவனுக்கு ஓசன்னா என்றார்கள். மகா உன்னதமான தேவனாகிய, சர்வ வல்ல தேவனாகிய கர்த்தரின் நாமம் ஸ்தோத்திரிக்கப்படுவதாக, என்று கூக்குரலிட்டார்கள்.

33 தங்களுடைய விரோதிகளின் கைகளுக்குத் தங்களைத் தப்புவித்த தேவனுடைய பெரிதான கிருபையினிமித்தம் அவர்கள் இருதயம் சந்தோஷத்தால் பொங்கி அதிகம் கண்ணீர் வடித்தார்கள்; தங்களுடைய மனந்திரும்புதலினாலும், தங்களுடைய மனத்தாழ்ச்சியினிமித்தமுமே, அவர்கள் அந்த என்றுமுள்ள அழிவிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் என்று அவர்கள் அறிவார்கள்.