வேதங்கள்
3 நேபி 2


அதிகாரம் 2

துன்மார்க்கமும் அருவருப்புகளும் ஜனங்களுக்குள் அதிகரித்தல் – நேபியர்களும், லாமானியரும் காதியாந்தன் திருடர்களுக்கு விரோதமாய்த் தங்களைத் தற்காத்துக்கொள்ள இணைதல் – மனமாறிய லாமானியர் வெள்ளையாகி நேபியர்கள் என்று அழைக்கப்படுதல். ஏறக்குறைய கி.பி. 5–16.

1 அந்தப்படியே, தொண்ணூற்று ஐந்தாம் வருஷமும் கடந்து போயிற்று. ஜனங்கள் தாங்கள் கேட்ட அந்த அறிகுறிகளையும் அற்புதங்களையும் மறக்கத் துவங்கினார்கள். வானத்திலிருந்து வந்த அறிகுறியையோ அல்லது அற்புதத்தையோ பற்றிய ஆச்சரியமும் குன்ற ஆரம்பித்தது, இதனால் அவர்கள் தங்கள் இருதயங்களில் கடினம் கொள்ளத் துவங்கி, தங்கள் மனதில் குருடர்களாகி, தாங்கள் கண்டதும் கேட்டதுமான யாவற்றையும் அவநம்பிக்கை கொள்ளத் துவங்கினார்கள்.

2 ஜனங்களுடைய இருதயங்களை வழிநடத்திப்போய், வஞ்சிக்கத்தக்கதாக, மனுஷராலும் பிசாசின் வல்லமையாலும் இது நடப்பிக்கப்பட்டதென்று, அவர்கள் தங்கள் இருதயங்களிலே சில வீணான காரியங்களை எண்ணிக்கொண்டார்கள்; இப்படியாக சாத்தான் ஜனங்களுடைய இருதயங்களை மறுபடியும் வசப்படுத்திக்கொண்டு, அவர்களுடைய கண்களைக் குருடாக்கி, கிறிஸ்துவினுடைய உபதேசம் மூடத்தனமும், வீணானதுமாயிருக்கிறதென்று அவர்கள் நம்பும்படி வழிநடத்தினான்.

3 அந்தப்படியே, ஜனங்கள் துன்மார்க்கத்திலும் அருவருப்புகளிலும் பெருகத் துவங்கினார்கள்; இனிமேலும் அறிகுறிகளோ அல்லது அற்புதங்களோ கொடுக்கப்படும் என்று அவர்கள் விசுவாசிக்கவில்லை; சாத்தான் போய் ஜனங்களுடைய இருதயங்களை நடத்திச் சென்று அவர்களைச் சோதித்து தேசத்தில் அவர்கள் பெரும் துன்மார்க்கம் செய்யும்படியாக அவர்களை ஏவினான்.

4 இப்படியாக தொண்ணூற்று ஆறாம் வருஷமும், தொண்ணூற்று ஏழாம் வருஷமும், தொண்ணூற்று எட்டாம் வருஷமும், தொண்ணூற்று ஒன்பதாம் வருஷமும் கடந்து போயிற்று.

5 நேபியர்களின் ஜனங்கள்மேல் ராஜாவாக இருந்த, மோசியாவின் நாட்கள் துவங்கி, நூறு வருஷமும் கடந்து போயிற்று.

6 எருசலேமை விட்டு லேகி போனதிலிருந்து, அறுநூற்று ஒன்பது வருஷங்கள் கடந்து போயின.

7 கிறிஸ்து உலகினுள் வரவேண்டுமென்று தீர்க்கதரிசிகளால் பேசப்பட்ட அந்த அறிகுறி கொடுக்கப்பட்ட காலம் துவங்கி, ஒன்பது வருஷங்கள் கடந்து போயின.

8 இப்போதும் அந்த அறிகுறி கொடுக்கப்பட்ட காலகட்டம் முதல், அல்லது கிறிஸ்துவினுடைய வருகையிலிருந்து, தங்கள் காலத்தை நேபியர்கள் கணக்கிடத் துவங்கினார்கள்; ஆதலால் ஒன்பது வருஷங்கள் கடந்து போயின.

9 நேபியின் தகப்பனும், பதிவேடுகளை வைத்திருக்கும் பொறுப்பை உடையவனுமாகிய நேபி, சாரகெம்லா தேசத்திற்குத் திரும்பவில்லை. அவன் தேசம் முழுவதிலும் காணப்படவுமில்லை.

10 அந்தப்படியே, ஜனங்களுக்குள் அனுப்பப்பட்ட அதிக பிரசங்கங்களையும் தீர்க்கதரிசனங்களையும் பொருட்படுத்தாமல், அவர்கள் துன்மார்க்கத்திலே நிலைத்திருந்தார்கள்; இப்படியாக பத்தாம் வருஷமும் கடந்து போயிற்று; பதினோராம் வருஷமும் அக்கிரமத்திலே கடந்து போயிற்று.

11 அந்தப்படியே, பதிமூன்றாம் வருஷத்தில் அங்கே தேசம் முழுவதிலும் யுத்தங்களும் பிணக்குகளும் உண்டானது. ஏனெனில் காதியாந்தன் திருடர்கள் அதிகமாய்ப் பெருகி, ஜனங்களில் அநேகரை வெட்டி, அநேக பட்டணங்களைப் பாழாக்கி, தேசம் முழுவதிலும் மிகுந்த சாவையும் சங்காரத்தையும் உண்டாக்கினதால், நேபியர்களும் லாமானியர்களுமான சகல ஜனங்களும் அவர்களுக்கு விரோதமாக ஆயுதங்களை எடுக்க வேண்டியது அவசியமானது.

12 ஆதலால், கர்த்தருக்குள்ளாக மனம் மாறிய லாமானியர் அனைவரும் தங்கள் சகோதரராகிய நேபியருடன் இணைந்தார்கள், அவர்கள் தங்கள் ஜீவன், தங்கள் ஸ்திரீகள் மற்றும் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அந்த காதியாந்தன் திருடர்களுக்கு விரோதமாக ஆயுதங்களை எடுக்கவும், ஆம், தங்கள் உரிமைகளையும், தங்கள் சபை மற்றும் தங்கள் ஆராதனையின் சிலாக்கியங்களையும், தங்கள் சுதந்திரத்தையும், தங்கள் விடுதலையையும் காக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

13 அந்தப்படியே, இந்த பதிமூன்றாம் வருஷம் கடந்துபோகும் முன்னே, மிகவும் கொடியதாய் மாறிப்போன இந்த யுத்தத்தினிமித்தம், மிகுந்த அழிவினால் நேபியர் பயப்படுத்தப்பட்டார்கள்.

14 அந்தப்படியே, நேபியரோடு இணைந்த அந்த லாமானியரும் நேபியர்களுக்குள்ளே எண்ணப்பட்டார்கள்;

15 அவர்களுடைய சாபம் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, அவர்களுடைய சருமம் நேபியர்களைப் போலவே வெண்மையானது.

16 அவர்களுடைய வாலிபரும் அவர்களுடைய குமாரத்திகளும் மிகவும் அழகுடையவர்களானார்கள், அவர்கள் நேபியர்களுக்குள்ளே எண்ணப்பட்டு, நேபியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இப்படியாக பதிமூன்றாம் வருஷமும் முடிவுற்றது.

17 அந்தப்படியே, பதினான்காம் வருஷ துவக்கத்தில் திருடர்களுக்கும் நேபியின் ஜனங்களுக்கும் இடையே யுத்தம் தொடர்ந்து அது மிகவும் கொடியதாயிற்று; இருப்பினும் நேபியின் ஜனங்கள் திருடர்களின்மேல் ஆதிக்கம் பெற்றதினாலே, அவர்கள் அவர்களைத் தங்களின் தேசங்களிலிருந்து மலைகளுக்கும் அவர்களுடைய இரகசிய இடங்களுக்கும் திரும்பத் துரத்தினார்கள்.

18 இப்படியாக பதினான்காம் வருஷமும் முடிவுற்றது. பதினைந்தாம் வருஷத்தில் அவர்கள் நேபியின் ஜனங்களுக்கு விரோதமாய் வந்தார்கள்; நேபியின் ஜனங்களுடைய துன்மார்க்கத்தினாலும், அவர்களுடைய அநேக பிணக்குகளாலும், கலகங்களினாலும் காதியாந்தன் திருடர்கள் அவர்கள்மேல் பல அனுகூலங்களைப் பெற்றிருந்தார்கள்.

19 இப்படியாக பதினைந்தாம் வருஷம் முடிவுற்றது, இப்படியாக ஜனங்கள் அநேக உபத்திரவங்களின் நிலையிலிருந்தார்கள்; சங்காரப் பட்டயம் அவர்கள் மேல் தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் அதனால் வெட்டப்படவிருந்தார்கள். இது அவர்களின் அக்கிரமத்தினிமித்தமே.