வேதங்கள்
3 நேபி 12


அதிகாரம் 12

இயேசு பன்னிரு சீஷர்களை அழைத்து அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தல் – மலைப் பிரசங்கத்தைப் போலவே அவர் நேபியர்களுக்கும் ஒரு பிரசங்கம் பண்ணுதல் – ஆசீர்வாதங்களைக் கூறுதல் – அவருடைய போதனைகள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடந்து அதைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறுதல் – அவரும் அவருடைய பிதாவும் எப்படி சம்பூரணராயிருக்கிறார்களோ அப்படியே மனுஷரும் சம்பூரணராயிருக்க கட்டளையிடப்படுதல் – மத்தேயு 5 ஒப்பிடுக. ஏறக்குறைய கி.பி. 34

1 அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளை நேபியினிடத்திலும் அழைக்கப்பட்டவர்களிடத்திலும் (இப்பொழுது அழைக்கப்பட்டு ஞானஸ்நானம் கொடுக்க வல்லமையையும், அதிகாரத்தையும் பெற்றவர்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிருந்தது) பேசின பின்பு, இதோ, அவர் திரளானோருக்கு நேராய் தன் கரத்தை நீட்டி அவர்களிடத்தில் உரத்த சத்தமாய்ச் சொன்னதாவது: உங்களுக்கு ஊழியம்பண்ணவும் உங்களுடைய பணிவிடைக்காரராய் இருக்கும்படிக்கும் உங்களுக்குள்ளிருந்து நான் தெரிந்துகொண்ட இந்த பன்னிரெண்டு பேருடைய வார்த்தைகளுக்கு நீங்கள் செவிகொடுத்தால், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள்; உங்களுக்கு ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்க அவர்களுக்கு நான் வல்லமையைக் கொடுத்திருக்கிறேன், நீங்கள் ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்ற பின்பு இதோ, நான் உங்களுக்கு அக்கினியாலும் பரிசுத்த ஆவியானவராலும் ஞானஸ்நானம் கொடுப்பேன்; ஆதலால் என்னில் நீங்கள் விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டால், அதன்பின்பு நீங்கள் என்னைக்கண்டு, நான் இருக்கிறேன் என அறிந்து, நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

2 மறுபடியும் நீங்கள் என்னைக் கண்டதாகவும், நான் இருப்பதாக அறிந்திருப்பதாகவும், நீங்கள் சாட்சி கொடுக்க இருப்பதால், உங்களுடைய வார்த்தைகளை விசுவாசிக்கிறவர்கள் அதிக பாக்கியவான்களாயிருப்பார்கள். ஆம், உங்களுடைய வார்த்தைகளை விசுவாசித்து தாழ்மையின் ஆழங்களில் வந்து ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் அக்கினியாலும் பரிசுத்த ஆவியானவராலும் சந்திக்கப்பட்டு, தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெறுவார்கள்.

3 ஆம், என்னிடத்தில் வருகிற, ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

4 மறுபடியும் துயரப்படுகிறவர்கள் யாவரும் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதலடைவார்கள்.

5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்.

6 நீதியின்மேல் பசியும் தாகமும் உள்ள யாவரும் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிறைக்கப்படுவார்கள்.

7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

8 இருதயத்தில் தூய்மையுள்ளவர்கள் யாவரும் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தேவனைக் காண்பார்கள்.

9 சமாதானம் பண்ணுகிறவர்கள் யாவரும் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் தேவனுடைய புத்திரர் என்று அழைக்கப்படுவார்கள்.

10 என் நாமத்தினிமித்தம் துன்பப்படுகிற யாவரும் பாக்கியவான்கள், ஏனெனில் பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

11 என்னிமித்தம் மனுஷர் உங்களை நிந்தித்துத் துன்புறுத்தி, உங்களுக்கு விரோதமாக சகலவிதமான பொல்லாதவைகளைப் பொய்யாய்ச் சொல்வார்களானால், நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

12 நீங்கள் மிகுந்த சந்தோஷத்தைப் பெற்று, அதிகமாய் மகிழ்ந்திருப்பீர்கள், ஏனெனில் பரலோகத்தில் உங்களுடைய பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அவர்கள் அப்படியே துன்புறுத்தினார்கள்.

13 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கும் பொறுப்பை உங்களுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் உப்பானது சாரமற்றுப் போனால் எதினால் பூமி சாரமேற்றப்படும், அதன் பின்பு உப்பானது வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்கும் ஒழிய, வேறொன்றுக்கும் உதவாது.

14 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் இந்த ஜனத்திற்கு ஒளியாயிருக்கும் பொறுப்பை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். மலையில் அமைந்துள்ள பட்டணம் மறைக்கப்பட முடியாது.

15 இதோ, மனுஷர் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைப்பார்களா? இல்லையே, மெழுகுவர்த்தியைத் தண்டின்மேல் வைப்பார்கள். அது வீட்டிலுள்ள யாவருக்கும் ஒளி கொடுக்கும்.

16 ஆதலால் இவ்விதமாய், ஜனங்கள் உங்களுடைய நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, அவர்களுக்கு முன்பாக உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது.

17 நியாயப்பிரமாணத்தையோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையோ அழிக்க வந்தேன் என்று எண்ணாதிருங்கள். அழிக்கிறதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

18 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நியாயப்பிரமாணத்திலிருந்து ஒரு எழுத்தாகிலும் உறுப்பாகிலும் ஒழிந்து போகவில்லை. ஆனால் என்னில் அவை யாவும் நிறைவேறிற்று.

19 இதோ, நீங்கள் என்னில் விசுவாசிக்கும்படிக்கும், நீங்கள் உங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி, என்னிடத்தில் நொறுங்குண்ட இருதயத்தோடும் நருங்குண்ட ஆவியோடும் வரும்படிக்கும் நான் உங்களுக்கு நியாயப்பிரமாணத்தையும் என் பிதாவினுடைய கட்டளைகளையும் கொடுத்திருக்கிறேன். இதோ, உங்களுக்கு முன்பாகக் கட்டளைகள் இருக்கின்றன. நியாயப்பிரமாணமும் நிறைவேற்றப்பட்டது.

20 ஆதலால் நீங்கள் என்னிடத்தில் வந்து இரட்சிப்படையுங்கள்; ஏனெனில் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் இச்சமயத்தில் உங்களுக்குக் கட்டளையிட்ட என் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளாவிடில் நீங்கள் ஒருபோதும் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்கமுடியாது.

21 கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலை செய்கிறவன் எவனும் தேவ நியாயத்தீர்ப்பின் பயங்கரத்திற்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாரால் சொல்லப்பட்டதும், உங்களுக்கு முன்பாகவே எழுதப்பட்டதாயும் இருக்கிறது, என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் சகோதரனிடத்தில் கோபம் கொள்ளுகிற எவனும் அவருடைய நியாயத்தீர்ப்பின் பயங்கரத்திற்கு ஏதுவாயிருப்பான். தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் எவனும் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பின் பயங்கரத்திற்கு ஏதுவாயிருப்பான். மூடனே, என்று சொல்லுகிற எவனும் பாதாள அக்கினியின் பயங்கரத்திற்கு ஏதுவாயிருப்பான்.

23 ஆதலால் நீ என்னிடத்தில் வந்தோ, அல்லது என்னிடத்தில் வரவிரும்பி, உன்பேரில் உன்னுடைய சகோதரனுக்கு குறை உண்டென்று நினைவுகூர்ந்தால்,

24 நீ உன் சகோதரனிடத்தில் போய், முதலில் உன் சகோதரனிடத்தில் ஒப்புரவாகி, பின்பு என்னிடத்தில் இருதயத்தின் முழு நோக்கத்தோடு வருவாயாக. நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்.

25 நீ உன் சத்துருவோடு வழியிலிருக்கும்போதே, சீக்கிரமாய் அவனோடு ஒப்புரவாகு. இல்லாவிடில் அவன் எந்நேரத்திலும் உன்னில் குற்றம் காண்பான். நீ சிறையினுள் போடப்படுவாய்.

26 மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன். ஒரு சினயீனும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து வெளியே உன்னால் எந்த வழியிலும் வரமுடியாதே. நீ சிறையிலிருக்கும்போது உன்னால் ஒரு சீனயீனையாகிலும் கொடுக்கமுடியுமா? முடியாது, என்று மெய்யாகவே மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன்.

27 இதோ, நீ விபசாரம் பண்ணாதிருப்பாயாக என்று பூர்வத்தாரால் எழுதப்பட்டிருக்கிறது.

28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சிக்கும்படியாக அவளைக் காண்கிற எவனும், ஏற்கனவே தன் இருதயத்தில் விபசாரம் செய்தாயிற்று.

29 இதோ, இவைகளில் ஒன்றையும் உன் இருதயத்தில் பிரவேசிக்க அனுமதிக்கக்கூடாது, என்று உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்.

30 நீ பாதாளத்தில் தள்ளப்படுவதைக் காட்டிலும், நீ உன் சிலுவையை எடுத்துக்கொள்ளும்படியாக, நீ உன்னைத்தானே இக்காரியங்களிலிருந்து வெறுப்பது நலமாயிருக்கும்.

31 தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், அவளுக்கு தள்ளுதற் சீட்டைக் கொடுக்கக் கடவன் என்று எழுதப்பட்டிருக்கிறது.

32 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், அவளை விபச்சாரம் செய்யப் பண்ணுகிறான்; தள்ளப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரம் செய்கிறவனாயிருப்பான்.

33 அன்றியும் உனக்கென்று நீ பொய்யாணையிடாமல், கர்த்தருக்கு முன்பாக உன் ஆணைகளைச் செலுத்துவாயாக, என்று எழுதப்பட்டிருக்கிறது.

34 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். சத்தியம் பண்ணவேண்டாம். வானத்தின்பேரில் சத்தியம் பண்ணவேண்டாம். அது தேவனுடைய சிங்காசனம்.

35 பூமியின் பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம். அது அவருடைய பாதப்படி.

36 உன் சிரசின்பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம். ஏனெனில் அதின் ஒரு மயிரையாவது கறுப்பாக்கவோ வெண்மையாக்கவோ உன்னால் கூடாதே;

37 உங்கள் சம்பாஷணையில் உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை, இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினதாய் வருகிறதெதுவும் பொல்லாப்பாயிருக்கிறது.

38 இதோ, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று எழுதப்பட்டிருக்கிறது;

39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தீமையோடு நீங்கள் எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்காட்டு.

40 ஒருவன் உன்னோடு வழக்குத் தொடுத்து, உன்னுடைய மேல் சட்டையை எடுத்துக்கொண்டால், அவன் உன் அங்கியையும் எடுத்துக் கொள்ளட்டும்.

41 ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு. உன்னிடத்தில் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு, முகங்கோணாதே.

43 இதோ, நீ உன் அயலானைச் சிநேகித்து உன் விரோதியை வெறுப்பாயாக என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

44 ஆனால் இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்கள் விரோதிகளைச் சிநேகியுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை இகழ்ச்சியுடன் பயன்படுத்துபவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.

45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலுள்ள உங்களுடைய பிதாவின் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில் அவர் தமது சூரியனைப் பொல்லாதவர்கள் மேலும், நல்லவர்கள் மேலும் எழப்பண்ணுகிறார்.

46 ஆதலால் பூர்வகாலத்தின் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்பட்ட அந்தக் காரியங்கள், என்னில் நிறைவேற்றப்பட்டன.

47 பழையவை ஒழிந்து போயின, அனைத்தும் புதிதாயின.

48 பூரண சற்குணராயிருக்கிற என்னைப்போலவோ, அல்லது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவைப் போலவோ, நீங்களும் பூரண சற்குணராயிருக்க வேண்டுமென, வாஞ்சிக்கிறேன்.