பொது மாநாடு
கிறிஸ்துவுடன் உடன்படிக்கை உறவில் நடத்தல்
அக்டோபர் 2023 பொது மாநாடு


கிறிஸ்துவுடன் உடன்படிக்கை உறவில் நடத்தல்

நமக்காக அடித்து நொறுக்கப்பட்டவர், அநித்தியம் நம்மில் கிரியை செய்ய அனுமதிப்பார், ஆனால் அந்த சவால்களை தனியாக எதிர்கொள்ள அவர் நம்மைக் கேட்கவில்லை.

எனது நல்ல நண்பன் இலான் மூலம் இஸ்ரேலில் ஒரு பாதை எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. “இது இயேசுவின் பாதை என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் நாசரேத்திலிருந்து கப்பர்நகூமுக்கு செல்லும் பாதையில் இயேசு நடந்தார் என்று பலர் நம்புகிறார்கள்” என்று அவர் கூறினார். நான் அப்போதே முடிவு செய்தேன், அந்த பாதையில் நடக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், எனவே நான் இஸ்ரேலுக்கு ஒரு பயணத்தைத் திட்டமிட ஆரம்பித்தேன்.

பயணத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்பு, என் கணுக்கால் உடைந்தது. என் கணவர் காயத்தைப் பற்றி கவலைப்பட்டார்; ஒரு மாதத்திற்குப் பிறகு நான் எப்படி “இயேசுவின் பாதையில்” நடப்பேன் என்பதுதான் எனது மிகப்பெரிய கவலை. நான் இயல்பிலேயே பிடிவாதமானவள், அதனால் நான் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யவில்லை.

அந்த அழகான ஜூன் காலை எங்கள் இஸ்ரேலிய வழிகாட்டியை சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் வேனில் இருந்து இறங்கி ஊன்றுகோல் மற்றும் முழங்கால் ஸ்கூட்டரை வெளியே எடுத்தேன். எங்கள் வழிகாட்டியான மியா, எனது வேடத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, அட, “அந்த நிலையில் உங்களால் இந்த பாதையில் நடக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்றார்.

“ஒருவேளை இல்லை,” நான் பதிலளித்தேன். “ஆனால் முயற்சி செய்வதிலிருந்து என்னைத் தடுக்க எதுவும் இல்லை.” அவள் சிறிதாக தலையசைத்தாள், நாங்கள் தொடங்கினோம். அதற்காக நான் அவளை நேசிக்கிறேன், நான் உடைந்த காலுடன் நடக்க முடியும் என்று நம்பினாள்.

செங்குத்தான பாதையிலும் கற்பாறைகளிலும் நானே சிறிது நேரம் பயணித்தேன். பின்னர், எனது உறுதிப்பாட்டின் நேர்மையால் நெகிழ்ந்து, மியா ஒரு மெல்லிய கயிற்றை வெளியே இழுத்து, என் ஸ்கூட்டரின் கைப்பிடியில் கட்டி, இழுக்க ஆரம்பித்தாள். அவள் என்னை மலைகள் வழியாகவும், எலுமிச்சை தோட்டங்கள் வழியாகவும், கலிலேயா கடலின் கரையிலும் இழுத்துச் சென்றாள். பயணத்தின் முடிவில், நான் சொந்தமாகச் சாதிக்க ஒருபோதும் முடியாத ஒன்றைச் செய்ய எனக்கு உதவிய இனிய வழிகாட்டிக்கு நன்றியைத் தெரிவித்தேன்.

கர்த்தர் ஏனோக்கை தேசம் முழுவதும் பிரயாணம் செய்து அவரைப் பற்றி சாட்சி சொல்ல அழைத்தபோது, ஏனோக்கு தயங்கினான்.1 அவன் ஒரு சிறுவன், மெதுவாக பேசுவான். அவன் நிலையில் எப்படி அந்த பாதையில் நடக்க முடியும்? அவனுள் உடைந்து போனவற்றால் அவன் குருடாக்கப்பட்டான். அவனைத் தடை செய்த கர்த்தரின் பதில் எளிமையானது மற்றும் உடனடியானது: “என்னுடன் சஞ்சரி.”2 ஏனோக்கைப் போலவே, நமக்காக காயப்படுத்தப்பட்டு நொறுக்கப்பட்டவர்,3 அநித்தியம் நம்மில் கிரியை செய்ய அனுமதிப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ஆனால் அந்த சவால்களை தனியாக எதிர்கொள்ள அவர் நம்மைக் கேட்கவில்லை.4 நம் கதையின் கனமோ, தற்போதைய பாதையோ எதுவாக இருந்தாலும், அவருடன் நடக்க அவர் நம்மை அழைப்பார்.5

இக்கட்டான இடத்தில் இருக்கும் இளைஞன், வனாந்தரத்தில் கர்த்தரைச் சந்தித்ததை நினைத்துப் பாருங்கள். யாக்கோபு வீட்டை விட்டு வெகுதூரம் சென்றிருந்தான். இரவின் இருட்டில், அவன் ஒரு கனவு கண்டான், அது ஒரு ஏணியைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், ஐந்து விரல் வாக்குறுதி என்று நான் அழைக்க விரும்புவது உட்பட குறிப்பிடத்தக்க உடன்படிக்கை வாக்குறுதிகளையும் கொண்டிருந்தது.6 அந்த இரவில் கர்த்தர் யாக்கோபின் அருகில் நின்று, யாக்கோபின் பிதாவின் தேவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், பின்னர் வாக்குறுதி அளித்தார்:

  • நான் உன்னுடன் இருக்கிறேன்.

  • நான் உன்னைப் பாதுகாப்பாக வைத்திருப்பேன்.

  • நான் உன்னை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறேன்.

  • நான் உன்னை விட்டுவிடமாட்டேன்.

  • நான் உனக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன்.7

யாக்கோபு செய்ய ஒரு தேர்வு இருந்தது. அவன் தனது தகப்பனின் தேவனை எளிமையாக அறிந்தவனாக தனது வாழ்க்கையை வாழ தேர்வு செய்யலாம் அல்லது அவருடன் உறுதியான உடன்படிக்கை உறவில் வாழ அவன் தேர்வு செய்யலாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த உடன்படிக்கை வாக்குறுதிகளுக்குள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி யாக்கோபு சாட்சியளித்தான்: “எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவன்.”8 யாக்கோபுக்கு அவர் செய்தது போல், கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையை அவருடன் இணைக்க முடிவு செய்தால், நம்முடைய துன்ப நாளில் அவர் பதிலளிப்பார். அவர் வழியில் நம்முடன் நடப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதை நாம் உடன்படிக்கை பாதை என்று அழைக்கிறோம்—இது ஞானஸ்நான உடன்படிக்கையுடன் தொடங்கி, ஆலயத்தில் நாம் செய்யும் ஆழமான உடன்படிக்கைகளுக்கு வழிவகுக்கும். ஒருவேளை நீங்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டு சரிபார்ப்பு கட்டங்களைப்பற்றி நினைக்கலாம். ஒருவேளை நீங்கள் பார்ப்பது தேவைகளின் பாதையாக இருக்கலாம். கூர்ந்து கவனித்தால் இன்னும் அழுத்தமான ஒன்று புலப்படும். ஒரு உடன்படிக்கை முக்கியமானது என்றாலும் ஒரு ஒப்பந்தத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு உறவைப் பற்றியது. தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “உடன்படிக்கை பாதை என்பது தேவனுடனான நமது உறவைப் பற்றியது.”9

திருமண உடன்படிக்கையைக் கவனியுங்கள். திருமண தேதி முக்கியமானது, ஆனால் அதற்குப் பிறகு ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் மூலம் உருவான உறவும் சமமாக முக்கியமானது. தேவனுடனான உடன்படிக்கை உறவிலும் இதுவே உண்மை. நிபந்தனைகள் அமைக்கப்பட்டுள்ளன, வழியில் எதிர்பார்ப்புகள் இருக்கும். நம்மால் முடிந்தவரை, முழு மனதுடன் வரவும், அவருடைய வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் வரும் என்று நம்பி, அவருடன் “முன்னேறிச் செல்ல” 10 அவர் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். அந்த ஆசீர்வாதங்கள் பெரும்பாலும் அவருடைய சொந்த நேரத்திலும் அவருடைய சொந்த வழியிலும் வரும் என்று வேதம் நமக்கு நினைவூட்டுகிறது: 38 ஆண்டுகள்,11 12 ஆண்டுகள்,12 உடனடியாக.13 உங்கள் பாதை கடினமாயிருப்பது போல், அவருடைய உதவியும் இருக்கும்.14

அவருடையது ஒரு பணிவான ஊழியம். நாம் இருக்கும் இடத்தில் நாம் இருப்பதுபோலவே இயேசு கிறிஸ்து நம்மை சந்திப்பார். இதனால்தான் தோட்டம், சிலுவை, மற்றும் கல்லறை. மீட்பர் நாம் ஜெயிக்க, நமக்கு உதவ அனுப்பப்பட்டார்.15 ஆனால் நாம் இருக்கும் இடத்தில் இருப்பது, நாம் தேடும் விடுதலையைக் கொண்டு வராது. யாக்கோபை அங்கே அழுக்குக்குள் விட்டுச் செல்லாதது போல், நாம் இருக்கும் இடத்தில் நம்மில் யாரையும் விட்டுவிட கர்த்தர் விரும்பவில்லை.

அவருடையது மேலே ஏறும் ஊழியமும் கூட. அவர் இருக்கும் இடத்திற்கு நம்மை உயர்த்துவதற்கு அவர் நமக்குள் வேலை செய்வார்,16 மேலும், அந்த செயல்பாட்டில், அவர் இருப்பது போல ஆவதற்கு நமக்கு உதவுவார். இயேசு கிறிஸ்து நம்மை உயர்த்த வந்தார்.17 அவரைப்போலாக அவர் நமக்கு உதவ விரும்புகிறார். இதுவே ஆலயம் ஏன் என்பதற்குக் காரணம்.

நாம் நினைவில் கொள்ள வேண்டும், அது மட்டும் நம்மை உயர்த்தும் பாதை அல்ல, அந்த தோழன்—நமது இரட்சகர். இதுவே உடன்படிக்கை உறவுக்கான காரணம்.

நான் இஸ்ரேலில் இருந்தபோது, மேற்குச் சுவரைப் பார்வையிட்டேன். யூதர்களுக்கு, இது இஸ்ரேலில் மிகவும் பரிசுத்தமான இடம். அவர்களின் தேவாலயத்தில் எஞ்சியிருப்பது இதுவே. இந்த பரிசுத்த ஸ்தலத்திற்குச் செல்லும்போது பெரும்பாலானோர் தங்கள் சிறந்த ஆடைகளை அணிவார்கள்; அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆடை தேவனுடனான அவர்களது உறவின் அர்ப்பணிப்பின் அடையாளமாகும். அவர்கள் வேதத்தைப் படிக்கவும், ஆராதிக்கவும், தங்கள் ஜெபங்களை ஏறெடுக்கவும் சுவற்றிடம் வருகிறார்கள். அவர்கள் மத்தியில் ஒரு ஆலயத்துக்கான வேண்டுகோள் அவர்களின் ஒவ்வொரு நாளையும், அவர்களின் ஒவ்வொரு ஜெபத்தையும், உடன்படிக்கையின் இல்லத்திற்கான ஏக்கத்தையும் உட்கொள்கிறது. அவர்களின் அர்ப்பணிப்பை நான் போற்றுகிறேன்.

நான் இஸ்ரேலிலிருந்து தாயகம் திரும்பியபோது, உடன்படிக்கைகள் சம்பந்தமாக என்னைச் சுற்றி நடந்த உரையாடல்களை நான் மிகவும் உன்னிப்பாகக் கேட்டேன். நான் ஏன் உடன்படிக்கையின் பாதையில் நடக்க வேண்டும் என்று மக்கள் கேட்பதை நான் கவனித்தேன். உடன்படிக்கை செய்து கொள்வதற்காக நான் ஏன் வீட்டிற்குள் நுழைய வேண்டும்? நான் ஏன் பரிசுத்த வஸ்திரத்தை அணிகிறேன்? நான் ஏன் கர்த்தருடன் உடன்படிக்கை உறவில் முதலீடு செய்ய வேண்டும்? இந்த நல்ல மற்றும் முக்கியமான கேள்விகளுக்கான பதில் எளிமையானது: இது இயேசு கிறிஸ்துவுடன் நீங்கள் எந்த அளவு உறவை அனுபவிக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.18 அந்த ஆழ்ந்த தனிப்பட்ட கேள்விகளுக்கு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த பதிலைக் கண்டறிய வேண்டும்.

என்னுடையது இங்கேயிருக்கிறது: “நேச பரலோக பெற்றோரின் குமாரத்தி,”19 தெய்வீகமாக அறியப்பட்ட20 ஆழமாக நம்பப்பட்ட நான் இந்தப் பாதையில் நடக்கிறேன்.21 உடன்படிக்கையின் குழந்தையாக, வாக்குறுதியளிக்கப்பட்ட22 ஆசீர்வாதங்களைப் பெற நான் தகுதியுடையவள். நான் கர்த்தருடன் நடக்க தேர்வு23 செய்தேன். கிறிஸ்துவின் சாட்சியாக நிற்க நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.24 பாதை மிகப்பெரியதாக உணரும்போது, சாத்தியப்படுத்தும் கிருபை மூலம் நான் பலப்படுத்தப்படுகிறேன்.25 ஒவ்வொரு முறையும் நான் அவருடைய வீட்டின் வாசலைக் கடக்கும்போது, அவருடன் ஆழமான உடன்படிக்கை உறவை நான் அனுபவிக்கிறேன். நான் அவருடைய ஆவியால் பரிசுத்தமாக்கப்பட்டேன்,26 அவருடைய வல்லமையால் தரிப்பிக்கப்பட்டேன்,27 அவருடைய ராஜ்யத்தைக் கட்டுவதற்காக பணிக்கப்பட்டேன்.28 தினசரி மனந்திரும்புதல் மற்றும் திருவிருந்தில் வாராந்திரம் பங்கேற்பதன் மூலம், நான் உறுதியாக29 இருப்பதற்கும், நல்லதைச் செய்வதற்கும் கற்றுக்கொள்கிறேன்.30 நான் இயேசு கிறிஸ்துவோடு இந்தப் பாதையில் நடக்கிறேன், அவர் மீண்டும் வருவார் என்று வாக்களிக்கப்பட்ட நாளை எதிர்நோக்குகிறேன். பின்னர் நான் அவருடையவளாக முத்திரிக்கப்பட்டு,31 தேவனின் பரிசுத்த32 மகளாக உயர்த்தப்படுவேன்.

இதனால்தான் நான் உடன்படிக்கையின் பாதையில் நடக்கிறேன்.

இதனால்தான் நான் உடன்படிக்கை வாக்குறுதிகளை பற்றிக்கொண்டிருக்கிறேன்.

இதனால்தான் நான் அவருடைய உடன்படிக்கை இல்லத்திற்குள் நுழைகிறேன்.

அதனால்தான் நான் பரிசுத்த வஸ்திரத்தை ஒரு நிலையான நினைவூட்டலாக அணிகிறேன்.

ஏனென்றால் நான் அவருடன் ஒப்புக்கொடுக்கப்பட்ட உடன்படிக்கையில் வாழ விரும்புகிறேன்.

ஒருவேளை நீங்களும் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்தில் தொடங்குங்கள்.33 உங்கள் நிலைமை உங்களைத் தடுக்க விடாதீர்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள், பாதையில் வேகம் அல்லது இடம் என்பது முன்னேற்றத்தைப் போல முக்கியமில்லை.34 உடன்படிக்கையின் பாதையில் செல்லும் நீங்கள் நம்பும் ஒருவரிடம், அவர்கள் அறிந்த இரட்சகரை உங்களுக்கு அறிமுகப்படுத்தச் சொல்லுங்கள். அவரைப் பற்றி மேலும் அறியுங்கள். அவருடன் உடன்படிக்கை செய்து உறவில் முதலீடு செய்யுங்கள். உங்கள் வயது அல்லது உங்கள் நிலை முக்கியமல்ல. நீங்கள் அவருடன் நடக்கலாம்.

நாங்கள் இயேசு பாதையில் நடந்து முடித்த பிறகு, மியா தனது கயிற்றை எடுக்கவில்லை. ஸ்கூட்டரில் கட்டி வைத்துவிட்டு போனாள். அடுத்த சில நாட்களுக்கு என் பதின்ம வயது மருமகன்களும் அவர்களது நண்பரும் ஜெருசலேமின் தெருக்களில் என்னை இழுத்துச் சென்றனர்.35 இயேசுவின் கதைகளை நான் தவறவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். வளர்ந்து வரும் தலைமுறையின் வலிமையை நினைவுபடுத்தினேன். உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளலாம். வழிகாட்டியாகிய இயேசு கிறிஸ்துவை அறிய உங்களுக்கு உண்மையான விருப்பம் உள்ளது. அவருடன் நம்மை இணைக்கும் கயிற்றின் வலிமையை நீங்கள் நம்புகிறீர்கள். மற்றவர்களை அவரிடம் கூட்டிச் சேர்ப்பதில் நீங்கள் வரம் பெற்றவர்.36

நன்றியோடு, நாம் ஒன்றாக இந்த பாதையில் நடக்கிறோம், வழியில் ஊக்கத்தை அழைக்கிறோம்.37 நம்முடைய தனிப்பட்ட அனுபவத்தை கிறிஸ்துவுடன் பகிர்ந்து கொள்ளும்போது, தனிப்பட்ட அர்ப்பணிப்பை பலப்படுத்துவோம். இதைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. ஏனோக்கின் மக்கள் வழிதவறிப் போனார்கள், கிறிஸ்துவை மறுதலித்தார்கள், “இருளில் தங்கள் சொந்த ஆலோசனைகளைத் தேடிக்கொண்டார்கள்” (மோசே 6:27–28 பார்க்கவும்). மனித நேயத்தில் விசுவாசம் இழந்த ஒரு காலத்தில், ஏனோக் வழிகாட்டுதலுக்காக கர்த்தரிடம் திரும்பினான். ஏனோக்கிற்கான இந்த அழைப்பு, கர்த்தர் நம் அனைவருக்கும் கொடுக்கும் அதே அழைப்பாகும்: “என்னோடு சஞ்சரிப்பாய்” (மோசே 6:34; மேலும் மத்தேயு 11:28 பார்க்கவும்). ஆனால், ஏனோக்கைப் போல, உங்கள் நிலையில் இந்தப் பாதையில் நடக்க முடியுமா என்று உங்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் ஏதோ ஒரு வகையில் தடை ஏற்படுத்தப்படுவதாக உணரலாம். ஒருவேளை நாம் உடன்படிக்கையின் பாதையில் நடக்க வேண்டியதன் காரணமே நமது நிலைமையின் காரணமாக இருக்கலாம், ஏனென்றால் நாம் ஏதோவொரு வகையில் தடைபடுத்தப்படுகிறோம், மேலும் நமக்கு அவருடைய உதவி தேவை.

  2. மோசே 6:23–34 பார்க்கவும்.

  3. See “Jesus of Nazareth, Savior and King,” Hymns, no. 181.

  4. ஏத்தேர் 12:27 பார்க்கவும்.

  5. மத்தேயு 11:28–30 பார்க்கவும்.

  6. என் மகள்கள் இந்த ஐந்து விரல் வாக்குறுதியை ஒவ்வொரு காலையிலும் தங்கள் குழந்தைகளுக்கு (என் பேரக்குழந்தைகள்) கிசுகிசுக்க விரும்புகிறார்கள்—பரலோகத்தில் உள்ள ஒரு பிதாவின் நினைவூட்டல், அவருடைய ஒவ்வொரு குழந்தையையும் தெய்வீகமாக அறிந்திருக்கிறார்.

  7. ஆதியாகமம் 28:10-22 பார்க்கவும். ஆபிரகாமிய உடன்படிக்கை அந்த இரவின் குறிப்பிடத்தக்க முக்கியத்துவமாகவும் இருந்தது. ஆபிரகாமிய உடன்படிக்கையின் இந்த கூறுகள் நம் வாழ்விலும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன: (1). நித்திய சுதந்தரத்தின் வாக்குறுதி (வசனம் 13); (2). நித்திய சந்ததி (வசனம் 14); மற்றும் (3). பூமியின் அனைத்து நாடுகளையும் ஆசீர்வதிப்பதற்கான ஆசீர்வாதமும் பொறுப்பும் (வசனம் 14).

  8. ஆதியாகமம் 35:3; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது. யாக்கோபின் பெற்றோர் அவனைக் கொன்றுவிடுவதாக மிரட்டிய ஏசாவிடமிருந்து விலகி, உடன்படிக்கையில் திருமணம் செய்து கொள்ளக்கூடிய ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவதற்காக வீட்டை விட்டு வெளியேறும்படி அவனுக்கு அறிவுறுத்தினர்.(ஆதியாகமம் 27:41–45; 28:1–2, 5 பார்க்கவும்).

  9. Russell M. Nelson, “The Everlasting Covenant,” Liahona, Oct. 2022, 11.

  10. 2 நேபி 31:20.

  11. யோவான் 5:5 பார்க்கவும், பெதஸ்தா குளத்தின் கதை.

  12. மாற்கு 5:25 பார்க்கவும், கிறிஸ்துவின் அங்கியைத் தொட்ட பெண்ணின் கதை.

  13. மத்தேயு 14:31ஐப் பார்க்கவும், பேதுரு தண்ணீரில் நடந்த கதை.

  14. “How Firm a Foundation,” Hymns, no. 85 பார்க்கவும்.

  15. 1 நேபி 11:16–33 பார்க்கவும்.

  16. பிலிப்பியர் 1:6; 2:13; மார்மனின் வார்த்தைகள் 1:7 பார்க்கவும்.

  17. யோவான் 12:32 பார்க்கவும்.

  18. ஒரு பாதை பெரும்பாலும் வழிகாட்டிகள் அல்லது மைல் குறிப்பான்கள் போன்ற முக்கிய பண்புகளால் வரையறுக்கப்படுகிறது. நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்களா அல்லது சரியான திசையில் முன்னேறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இது ஒரு வழியாகும். ஒரு உறவை முக்கிய பண்புகள் மூலம் வரையறுக்கலாம். இவற்றில் சில எதிர்பார்ப்புகளும் அடங்கும் (எரேமியா 29:11 கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:7 பார்க்கவும்); பணிவு (மோசியா 3:19; ஆல்மா 7:23; 13:28 பார்க்கவும்;); தாழ்மை, கீழ்ப்படிதல், பொறுமை, விட்டுக்கொடுத்தல், நம்பிக்கை (நீதிமொழிகள் 3:5 பார்க்கவும்); மற்றும் அன்பு (ரோமர் 8:31–39 பார்க்கவும்).

  19. Young Women Theme,” Gospel Library, emphasis added; see also Bonnie H. Cordon, “Beloved Daughters,” Liahona, Nov. 2019, 67.

  20. யோவான் 4:1–29, கிணற்றருகில் இருந்த பெண்ணின் கதையைப் பார்க்கவும்.

  21. ஆல்மா 38:1–3 பார்க்கவும்.

  22. எண்ணாகமம் 6:23–27 பார்க்கவும்.

  23. யோசுவா 24:22 பார்க்கவும்.

  24. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:3, எம்மா ஸ்மித்தின் கதையைப் பார்க்கவும்.

  25. 1 நேபி 15:9–10 பார்க்கவும்.

  26. 2 நாளாகமம் 20:1–17, விசேஷமாக வசனம் 14.

  27. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:1–46 பார்க்கவும்.

  28. 1 சாமுவேல் 16:11–13 பார்க்கவும்.

  29. எஸ்தர் 4:16, எஸ்தரின் கதையைப் பார்க்கவும்.

  30. அப்போஸ்தலர் 10:38 பார்க்கவும்.

  31. ஏசாயா 43:1–5 பார்க்கவும்.

  32. உபாகமம் 28:1–9 பார்க்கவும்.

  33. எந்தவொரு உறவிலும் செயலுக்கான அழைப்பு முக்கியமானது என்பதை ஒரு நல்ல நண்பர் எனக்கு நினைவூட்டினார்.

  34. Conversation with Kristen Olsen, Sept. 2023.

  35. To Mack Oswald, Camden Oswald, Ashton Matheny, and Jack Butler, thanks for pulling me along.

  36. “இன்று பூமியில் மிகப் பெரிய காரணமான இஸ்ரவேலின் கூடுகையில் பங்கேற்க கர்த்தருடைய இளைஞர் பட்டாளத்தில் சேர பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் இளைஞர்களை நான் அழைத்ததை நீங்கள் நினைவுகூருவீர்கள். நமது இளைஞர்கள் வழக்கத்திற்கு மாறாக மற்றவர்களை அணுகுவதிலும், அவர்கள் நம்புவதை உறுதியான பாணியில் பகிர்ந்து கொள்வதிலும் திறமைசாலிகளாக இருப்பதால் அவர்களுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளேன்” (Russell M. Nelson, “Witnesses, Aaronic Priesthood Quorums, and Young Women,” Liahona, Nov. 2019, 39).

  37. “தேவனின் ராஜ்யம் … எல்லா பக்கங்களிலும் மரணத்தால் சூழப்பட்ட முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றது. ஒவ்வொரு மனிதனும் தற்காத்துக்கொள்ள சுவரில் அவனது இடம் உள்ளது, மற்றொருவர் நிற்கும் இடத்தில் யாராலும் நிற்க முடியாது, ஆனால் ‘ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதை எதுவும் தடுக்காது’” (Martin Luther, in Lewis William Spitz, The Renaissance and Reformation Movements [1987], 335).