பொது மாநாடு
அம்மனுஷனைப் புகழ்கிறோம்
அக்டோபர் 2023 பொது மாநாடு


அம்மனுஷனைப் புகழ்கிறோம்

இந்த கடைசி ஊழியக் காலத்தின் தீர்க்கதரிசியான ஜோசப் ஸ்மித் நமக்கு இருப்பதால், நமக்குத் தெரிந்த அனைத்தையும் தெரிந்துகொள்வதில் நாம் எவ்வளவு தாராளமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

என் அன்பான சகோதர சகோதரிகளே, இந்த காலை நேரத்தில் உங்களோடிருப்பதில் நான் கனம்பண்ணப்பட்டு இருக்கிறேன். கர்த்தர் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

என் கண்கள் முன்பு இருந்தது போல் இல்லை. நான் சென்று கண் மருத்துவரைப் பார்த்தேன், “என்னால் டெலிப்ராம்ப்டரைப் பார்க்க முடியவில்லை” என்றேன்.

அதற்கு அவர் சொன்னார், “சரி, உங்கள் கண்கள் வயதானவை. அவை மாறப்போவதில்லை.”

அதனால் என்னால் முடிந்ததைச் செய்வேன்.

என் மனதில் தோன்றிய சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக என் மனதில் தீர்க்கதரிசி ஜோசப் இருப்பதாகத் தோன்றியது. காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலத்தில் தீர்க்கதரிசியாக மாறுவதில் அவரது மகிமைமிக்க பொறுப்பை நான் உட்கார்ந்து சிந்தித்தேன்.

பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்களாகிய நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன், ஜோசப் ஸ்மித் சிறுவனாக, தனது பாவங்கள் மன்னிக்கப்பட என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய விரும்பி, மரங்களின் தோப்புக்குள் செல்ல தைரியம் அடைந்து, நியூயார்க்கின் பல்மைராவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில், அங்கு ஜெபத்தில் முழங்கால்படியிட்டு, அவரது சொந்த வார்த்தையின்படி முதல் முறையாக சத்தமாக ஜெபம் செய்தார் (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:14 பார்க்கவும்).

அந்தச் சந்தர்ப்பத்தில், நாம் பரிசுத்த தோப்பு என்று அழைக்கும் இடத்தில் ஜோசப் மண்டியிட்டபோது, வானம் திறந்தது. மத்தியான சூரியனை விட பிரகாசமான இரண்டு நபர்கள் அவர் முன் தோன்றினர். ஒருவர் அவரிடம் பேசி சொன்னார்,“[ஜோசப்] இவர் என் நேச குமாரன். இவருக்குச் செவிகொடு!” (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:17). இயேசு கிறிஸ்துவின் நிலையான சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் முழுமை இவ்வாறு தொடங்கியது.

நம்முடைய இரட்சகரும், மீட்பருமான இயேசு, சிறுவன் ஜோசப்பிடம் பேசி, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஊழியக்காலத்தை திறந்ததால், “யெகோவாவோடு உரையாடிய மனுஷனைப் புகழ்கிறோம்!” என்று பாடுகிறோம். (“Praise to the Man,” Hymns, no. 27). ஜோசப் ஸ்மித்துக்காகவும், நியூயார்க்கில் உள்ள பால்மைராவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் 1820-ல் அந்த மரங்களின் தோப்புக்குள் சென்றதற்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம்.

நமக்குத் தெரிந்த அற்புதமான விஷயங்கள் மற்றும் நம்மிடம் உள்ள எல்லா விஷயங்களையும் பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். என் அன்பான சகோதர சகோதரிகளே, இன்று காலை உங்களுக்கு நான் அளிக்கும் சாட்சியம், இந்த காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலத்தில் தீர்க்கதரிசியான ஜோசப் ஸ்மித் நம்மிடம் இருப்பதால், நமக்குத் தெரிந்த அனைத்தையும் அறிந்து கொள்வதில் நாம் எவ்வளவு தாராளமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான்.

வாழ்க்கையின் நோக்கம், நாம் யார் என்பதைப் பற்றிய புரிதல் நமக்கு இருக்கிறது.

தேவன் யார் என்று நமக்குத் தெரியும்; இரட்சகர் யார் என்பதை நாம் அறிவோம், ஏனென்றால் சிறுவனாக இருந்தபோது மரங்களின் தோப்புக்குள் சென்ற ஜோசப், உண்மையில் தனது பாவங்களுக்கு மன்னிப்பைத் தேடி சென்றார்.

இந்த உலகில் உள்ள எவரும் அறியக்கூடிய மிக மகிமையான மற்றும் அற்புதமான விஷயங்களில் ஒன்றாக நான் நினைக்கிறேன்— நம்முடைய பரலோக பிதாவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த பிற்காலத்தில் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் மற்றும் இயேசு கிறிஸ்துவின் நித்திய சுவிசேஷத்தின் முழுமையை மறுஸ்தாபிதம் செய்ய ஜோசப் எழுப்பப்பட்டார்.

நம்மிடம் மார்மன் புஸ்தகம் உள்ளது. சபையின் உறுப்பினர்களுக்கு மார்மன் புஸ்தகம் என்ன ஒரு அதிசயமான மற்றும் அற்புதமான பரிசு. இது மற்றொரு சாட்சி, இயேசு கிறிஸ்து என்பதற்கு மற்றொரு ஏற்பாடு. ஜோசப் தகடுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர், தேவனின் வரம் மற்றும் வல்லமையால் அவற்றை மொழிபெயர்க்கவும், புஸ்தகத்தை உலகுக்கு வழங்கவும் பரலோகத்தால் உணர்த்தப்பட்டார் என்பதால் நாம் இதைப் பெற்றிருக்கிறோம்.

இன்று காலை எனது செய்தி எளிமையானது என்றாலும், அது ஆழமானது, மேலும் அது ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசி மீதும், அவரை ஆதரித்த மற்றும் அவரது இளமைக்காலத்தில் அவரை ஆதரிக்க தயாராக இருந்த என் சகோதர சகோதரிகள் மீதும் அன்பு நிறைந்திருக்கிறது.

அவரது தாயாருக்கு இன்று காலை அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். பரிசுத்த தோப்பில் ஜோசப் அந்த அனுபவத்திலிருந்து வந்து தனது தாயிடம் நடந்ததைச் சொன்னபோது, லூசி மேக் ஸ்மித் அவரை நம்பியது எவ்வளவு அற்புதமானது என்று நான் எப்போதும் நினைத்தேன்.

இயேசு கிறிஸ்துவின் நிலையான சுவிசேஷத்தின் முழுமையை மீண்டும் பூமியில் மறுஸ்தாபிதம் செய்யும் தீர்க்கதரிசியாக வருவதற்கு கர்த்தர் தன் மீது சுமத்திய இந்த மகத்தான பொறுப்பில் அவரை ஆதரித்த அவரது தகப்பன் மற்றும் அவரது சகோதரர்கள் மற்றும் அவரது சகோதரிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

எனவே இன்று காலை எனது சாட்சியம் என்னவென்றால், இயேசு கிறிஸ்து உலகத்தின் இரட்சகர் மற்றும் மீட்பர் என்பதை நான் அறிவேன். நம்முடைய பரலோக பிதாவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தோன்றி ஜோசப்பிடம் பேசி, அவரை தீர்க்கதரிசியாக ஆயத்தப்படுத்தியதையும் நான் அறிவேன்.

நான் வியப்படைகிறேன், உங்களில் பலரைப்போல, வாழ்க்கையில் நமது நோக்கம், நாம் ஏன் இங்கு இருக்கிறோம், நம் அன்றாட வாழ்வில் என்ன செய்ய முயற்சிக்க வேண்டும் மற்றும் சாதிக்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் அறிந்திருப்பதால் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறோம், ஒரு நாளுக்கு ஒரு முறை, கொஞ்சம் சிறப்பாக இருக்க, கொஞ்சம் கனிவாக இருக்க, நிச்சயமாக வரவிருக்கிற நம்முடைய பரலோக பிதா மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் அந்த நாளுக்காக இன்னும் கொஞ்சம் தயாராக இருக்க வேண்டும்.

அது எனக்கு கொஞ்சம் நெருக்கமாக வருகிறது. நான் சீக்கிரத்தில் 95 வயதாவேன். சில நாட்களில் நான் அதை விட மிகவும் வயதானவனாக இருக்கிறேன் என்று அவர்கள் நினைப்பதாக என் பிள்ளைகள் என்னிடம் கூறுகிறார்கள், ஆனால் அது சரி. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.

ஆனால், 50 வருடங்களாக, சகோதர சகோதரிகளே, சபையின் பொது அதிகாரியாக என் பணியில் உலகத்தைச் சுற்றும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். இது ஒரு அற்புதமான ஆசீர்வாதம். நான் உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் மிகவும் அருகில் சென்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் உலகம் முழுவதும் உள்ள சபை உறுப்பினர்களை சந்தித்திருக்கிறேன்.

நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன். உங்கள் முகங்களைப் பார்ப்பதும், உங்கள் முன்னிலையில் இருப்பதும், கர்த்தர் மீதும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின்மீதும் நீங்கள் வைத்திருக்கும் உங்கள் அன்பை உணருவது என்ன ஒரு அற்புதமான அனுபவம்.

நமது பரலோக பிதா இப்போது நம்மைக் கவனித்து, மாநாட்டின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பாராக. கர்த்தருடைய ஆவியானவர் நம் இருதயங்களில் நிறைந்திருப்பாராக, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மீதும், நம்முடைய அன்பான இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமீதும் நம் அன்பு பெருகட்டும்—நமது பொது மாநாட்டில் கலந்து கொண்டதன் விளைவாக, நாம் அவரைச் சேவிக்கவும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் இன்னும் அதிகமாக அவரைப் போலிருக்கவும் முயற்சி செய்கிறோம். நீங்கள் இந்த உலகில் எங்கிருந்தாலும், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தருடைய ஆவி நம்மோடு இருப்பாராக. மாநாட்டின் இந்த அமர்வில் நாம் ஒன்றாக ஆராதிக்கும்போது பரலோக வல்லமையை உணரலாம்.

இயேசுவே கிறிஸ்து என்பதை நான் அறிவேன் என்பதற்கு என் சாட்சியையும் சாட்சியத்தையும் உங்களிடம் விட்டுச் செல்கிறேன். அவரே நமது இரட்சகர், நமது மீட்பர். அவர் நமது சிறந்த நண்பர். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.