தேவன் உங்களை அறிந்திருக்கிறார், நேசிக்கிறார்
மகிழ்ச்சிக்கான தேவனின் திட்டம் உங்களைப் பற்றியது. நீங்கள் அவருடைய விலையேறப்பெற்ற குழந்தை மற்றும் மதிப்புமிக்கவர்
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் குடும்பத்தோடு ஆக்ஸ்போர்டு நகருக்கு வெளியே ஒரு நெடுஞ்சாலையில் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தோம். சிறு குழந்தைகளுடன் இருந்ததால், நாங்கள் அடிக்கடி நிறுத்த வேண்டியிருந்தது, அப்போது கடைகள் மற்றும் உணவகங்களின் வரிசையைக் கொண்ட ஒரு சேவை நிலையத்தைக் கண்டோம். சரியாக, நாங்கள் காரில் இருந்து வெளியேறி, சேவைகளை பயன்படுத்தி, மீண்டும் காரில் ஏறி, எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, எங்கள் மூத்த மகன் ஒரு குறிப்பிடத்தக்க கேள்வியைக் கேட்டான்: “ஜாஸ்பர் எங்கே?” ஜாஸ்பர் எப்பொழுதும் காரின் பின்புறம் தனியாக அமர்ந்திருப்பான். அவன் தூங்கிவிட்டான் அல்லது ஒளிந்து கொண்டிருந்தான் அல்லது எங்களை ஏமாற்றி விளையாடுகிறான் என்று நாங்கள் கருதினோம்.
அவனது சகோதரன் காரின் பின்புறத்தை இன்னும் நெருக்கமாகப் பார்த்தபோது, எங்கள் ஐந்து வயது மகன் அங்கு இல்லாததைக் கண்டுபிடித்தோம். எங்கள் இருதயங்கள் அச்சத்தால் நிறைந்தன. சேவை நிலையத்துக்குத் திரும்புவதற்காக நாங்கள் காரைத் திருப்பும்போது, ஜாஸ்பர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பரலோக பிதாவிடம் மன்றாடினோம். போலீஸாரை அழைத்து நிலைமையைத் தெரிவித்தோம்.
நாங்கள் கவலையுடன், 40 நிமிடங்களுக்கும் மேலாக வந்தபோது கார் பார்க்கிங்கில் இரண்டு போலீஸ் வாகனங்கள், விளக்குகள் ஒளிர்வதைக் கண்டோம். அதில் ஒன்றின் உள்ளே ஜாஸ்பர் பட்டன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனுடன் மீண்டும் இணைந்ததில் நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை என்னால் மறக்க முடியாது.
இரட்சகரின் உவமை போதனைகள் பல, சிதறடிக்கப்பட்ட அல்லது தொலைந்து போனவற்றைச் கூட்டிச் சேர்ப்பது, மீட்டெடுப்பது அல்லது சிதறுண்டதைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகிறது. இவற்றில் காணாமற்போன ஆடு, காணாமற்போன காசு, காணாமற்போன மகனைப் பற்றிய உவமைகள் உள்ளன.1
ஜாஸ்பருடனான இந்த சம்பவம் பல ஆண்டுகளாக என் மனதில் இருந்ததால், தேவனின் குழந்தைகளின் தெய்வீக அடையாளத்தையும் முக்கியத்துவத்தையும், இயேசு கிறிஸ்துவின் மீட்பின் வல்லமையையும், உங்களையும் என்னையும் அறிந்த பரலோக பிதாவின் பரிபூரண அன்பையும் நான் சிந்தித்து பார்த்தேன் இன்று இந்த சத்தியங்கள் குறித்து சாட்சியளிக்கலாம் என்று நம்புகிறேன்.
I. தேவனின் குழந்தைகள்
வாழ்க்கை சவால் நிறைந்தது பலர் கடினமாகவோ, தனியாகவோ, தனிமைப்படுத்தப்பட்டோ அல்லது சோர்வாகவோ உணர்கிறார்கள் விஷயங்கள் கடினமாக இருக்கும்போது, நாம் அலைக்கழிக்கப்பட்டதாகவோ அல்லது பின்தங்கியதாகவோ உணரலாம். நாம் அனைவரும் தேவனின் பிள்ளைகள் மற்றும் அவருடைய நித்திய குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை அறிவது, அவருடையவராக இருப்பதற்கும், நோக்கத்தை புதுப்பிக்கவும் உதவும்.2
தலைவர் பல்லார்ட் பகிர்ந்து கொண்டார்: “நாம் அனைவரும் இப்போதும் என்றென்றும் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கியமான அடையாளம் உள்ளது. … அதாவது நீங்கள் எப்போதும் தேவனின் குமாரன் அல்லது குமாரத்திகளாக இருக்கிறீர்கள். … இந்த சத்தியத்தைப் புரிந்துகொள்வது—உண்மையில் அதைப் புரிந்துகொள்வதும் அதைத் தழுவுவதும்— வாழ்க்கையை மாற்றும்.”3
பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் அல்லது குறைவாக மதிப்பிடாதீர்கள். நீங்கள் இயற்கையின் தற்செயலான தயாரிப்பு அல்ல, அண்டத்தில் ஆதரவற்றோரோ அல்லது நேரம் மற்றும் வாய்ப்புகளின் மூலம் வந்த பொருட்களின் விளைவுகளோ அல்ல வடிவமைப்பு இருக்கும்போது அங்கே ஒரு வடிவமைப்பாளரும் இருக்கிறார்.
உங்கள் வாழ்க்கை அர்த்தமும் நோக்கமும் கொண்டது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் தொடர்ச்சியான மறுஸ்தாபிதம் உங்கள் தெய்வீக அடையாளத்தைப் பற்றிய வெளிச்சத்தையும் புரிதலையும் தருகிறது. நீங்கள் பரலோக பிதாவின் ஒரு நேசத்துக்குரிய பிள்ளை அந்த உவமைகள் மற்றும் போதனைகள் அனைத்திற்கும் நீங்கள் கருப்பொருள் தேவன் உங்களை மிகவும் நேசிக்கிறார், அவர் உங்களை குணப்படுத்தவும், காப்பாற்றவும், மீட்கவும் தனது மகனை அனுப்பினார்.4
ஒவ்வொரு நபரின் தெய்வீக தன்மையையும் நித்திய மதிப்பையும் இயேசு கிறிஸ்து அங்கீகரித்தார்.5 தேவனை நேசிப்பதும் அயலாரை நேசிப்பதுமான6 இரண்டு பெரிய கட்டளைகள் எவ்வாறு தேவனின் அனைத்து கட்டளைகளுக்கும் அடித்தளமாக உள்ளன என்பதை அவர் விளக்கினார். நமது தெய்வீகப் பொறுப்புகளில் ஒன்று தேவையிலிருப்பவர்களைக் கவனிப்பது.7 அதனால்தான் இயேசு கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம், “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து, … துக்கப்படுவோரோடு கூட துக்கப்படவும், ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆறுதலளிக்கவும்” வேண்டும். 8
மதம் என்பது தேவனுடனான நமது உறவைப் பற்றியது மட்டுமல்ல; இது ஒருவருக்கொருவருடனான நம் உறவைப் பற்றியது. மூப்பர் ஹாலண்ட் விளக்கினார், ஆங்கில வார்த்தை religion லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது religare, என்பது “கட்ட” அல்லது, மிக நிதர்சனமாக, “மீண்டும் கட்ட.” ஆகவே, “உண்மையான மார்க்கம் என்பது நம்மை தேவனோடும் ஒருவருக்கொருவரோடும் பிணைக்கும் பிணைப்பாகும்.”9
நாம் ஒருவரையொருவர் எப்படி நடத்துகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. தலைவர் ரசல் எம். நெல்சன் போதிக்கிறார், “இரட்சகரின் செய்தி தெளிவாக உள்ளது: அவருடைய உண்மையான சீடர்கள் கட்டியெழுப்புகிறார்கள், உயர்த்துகிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள், அறிவுறுத்துகிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள்.”10 நம் சக பயணிகள் தொலைந்துவிட்டதாகவோ, தனியாகவோ, மறக்கப்பட்டதாகவோ அல்லது அகற்றப்பட்டதாகவோ உணரும்போது இது இன்னும் முக்கியமானது.
கஷ்டப்படுகிறவர்களைக் கண்டுபிடிக்க நாம் வெகுதூரம் பார்க்க வேண்டியதில்லை. நமது சொந்த குடும்பம், சபை அல்லது உள்ளூர் சமூகத்தில் உள்ள ஒருவருக்கு உதவுவதன் மூலம் நாம் தொடங்கலாம். மிகவும் வறுமையில் வாடும் 700 மில்லியன் மக்களின் துன்பத்திலிருந்து விடுபடவும் நாம் முயலலாம் 11 அல்லது துன்புறுத்தல், மோதல்கள் மற்றும் வன்முறை காரணமாக பலவந்தமாக இடம்பெயர்ந்த 100 மில்லியன் மக்கள் துன்பத்திலிருந்து விடுபடவும் நாம் முயலலாம்.12 பசியுள்ளவர்கள், அந்நியர்கள், நோயாளிகள், ஏழைகள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போன்ற தேவையிலிருப்பவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு இயேசு கிறிஸ்து சிறந்த உதாரணம். அவரது பணியே நமது பணி.
மூப்பர் கெரிட் டபிள்யூ. காங் போதிக்கிறார், “தேவனுக்கான நமது பயணம் பெரும்பாலும் ஒன்றாகக் காணப்படுகிறது.”13 எனவே, நமது தொகுதிகள் தேவனின் குழந்தைகள் அனைவருக்கும் புகலிடமாக இருக்க வேண்டும். நாம் உயிரற்ற முறையில் சபைக்குச் செல்கிறோமா அல்லது கிறிஸ்துவை வணங்குவதையும், கிறிஸ்துவை நினைவுகூருவதையும், ஒருவருக்கொருவர் ஊழியம் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட சமூகங்களை தீவிரமாக உருவாக்குகிறோமா?14 குறைவாக தீர்ப்பளிக்கவும், அதிகமாக நேசிக்கவும், நமது வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம் இயேசு கிறிஸ்துவின் தூய அன்பை வெளிப்படுத்தவும் தலைவர் நெல்சனின் அறிவுரைக்கு நாம் செவிசாய்க்கலாம்.15
II. இயேசு கிறிஸ்துவின் மீட்கும் வல்லமை
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி, நமது பரலோக பிதா தம் குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பின் உச்சகட்ட வெளிப்பாடாகும்.16 பாவநிவர்த்தி என்ற வார்த்தை, பிரிந்த அல்லது பிரிந்தவர்களின் “ஐக்கியத்தை” விவரிக்கிறது.
பரலோக பிதாவிடம் திரும்புவதற்கான வழியையும் பயணத்தில் நிவாரணத்தையும் வழங்குவதே நமது இரட்சகரின் பணி. வாழ்க்கையின் சவால்களில் நம்மை எவ்வாறு ஆதரிப்பது என்பதை இரட்சகர் தனது அனுபவத்தின் மூலம் அறிந்திருக்கிறார்.17 தவறு செய்யாதீர்கள்: கிறிஸ்து நம்மை மீட்பவர் மற்றும் நம் ஆத்துமாக்களை குணப்படுத்துபவர் என்பதில் எந்தத் தவறும் செய்யாதீர்கள்.
நாம் விசுவாசத்தைப் பிரயோகிக்கும்போது, கஷ்டங்களைச் சமாளிக்க அவர் நமக்கு உதவுகிறார். அவர் தொடர்ந்து அன்புடனும் இரகத்துடனும் அழைப்பு விடுக்கிறார்.
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
“என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.”18
நுகத்தின் உருவகம் வல்லமை வாய்ந்தது. தலைவர் ஹோவர்ட் டபிள்யூ. ஹண்டர் விளக்கியது போல்: “நுகம் என்பது இரண்டாவது விலங்கின் ‘வலிமையை’, ஒரு விலங்கின் முயற்சியுடன் இணைத்து, கையில் உள்ள பணியின் அதிக உழைப்பைப் பகிர்ந்து கொள்வதற்கும் குறைப்பதற்கும் அனுமதிக்கும் ஒரு சாதனமாகும் ஒருவரால் சுமக்க முடியாத அளவுக்கு அதிகமாகவோ அல்லது சுமக்க முடியாததாகவோ இருந்த ஒரு சுமையை, பொதுவான நுகத்தடியால் பிணைக்கப்பட்ட இருவரால் சமமாகவும் வசதியாகவும் சுமக்க முடியும்.”19
தலைவர் நெல்சன் போதித்தார்: “நீங்கள் கிறிஸ்துவோடும் அவருடைய வல்லமையோடும் இணைக்கப்படுவதற்காக அவரிடம் வருகிறீர்கள், அதனால் நீங்கள் வாழ்க்கையின் சுமையை தனியாக இழுக்கவில்லை. உலகத்தின் மீட்பர், இரட்சகருடன் இணைக்கப்பட்ட வாழ்க்கையின் சுமையை நீங்கள் இழுக்கிறீர்கள்.”20
இரட்சகரிடம் நாம் எவ்வாறு நம்மை இணைத்துக் கொள்வது அல்லது பிணைப்பது? மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் விளக்குகிறார்:
“பரிசுத்த உடன்படிக்கைகளை செய்துகொள்வதும் கடைப்பிடிப்பதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நம்மை இணைக்கிறது. சாராம்சமாக, இரட்சகர் தம்மை நம்பி அவருடன் சேர்ந்து இழுக்குமாறு அழைப்பு விடுக்கிறார்.
நாம் தனியாக இல்லை, ஒருபோதும் தனியாக இருக்க வேண்டியதில்லை.21
பாரம் சுமத்தப்பட்டு, இழந்த, குழப்பம் உள்ள எவருக்கும், நீங்கள் இதை தனியாகச் செய்ய வேண்டியதில்லை.22 கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் அவருடைய நியமங்கள் மூலம் நீங்கள் அவருடன் இணைக்கப்படலாம் அல்லது பிணைக்கப்படலாம். முன்னோக்கிச் செல்லும் பயணத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான வலிமையையும் குணப்படுத்துதலையும் அவர் அன்புடன் வழங்குவார். அவரே நமது புயல்களில் இருந்து இன்றும் அடைக்கலம்.23
III. பரலோக பிதாவின் அன்பு
இயற்கையில், ஜாஸ்பர் நகைச்சுவையானவன், பாசமுள்ளவன், புத்திசாலி மற்றும் மூர்க்கத்தனமானவன். ஆனால் இந்த கதையின் முக்கிய கருத்து அவன் என்னுடையவன் என்பதே. அவன் என் மகன், அவன் அறிந்ததை விட நான் அவனை அதிகம் நேசிக்கிறேன். ஒரு பூரணமற்ற, பூமிக்குரிய தகப்பன் தன் குழந்தையைப் பற்றி இப்படி உணர்ந்தால், ஒரு பரிபூரணமான, மகிமைப்படுத்தப்பட்ட, அன்பான பரலோக பிதா உங்களைப் பற்றி எப்படி உணருகிறார் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
வளர்ந்து வரும் தலைமுறையைச் சேர்ந்த எனது அன்பான நண்பர்களான ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா அவர்களுக்கு: விசுவாசத்துக்கு உழைப்பு தேவை என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள்.24 பலர் “கண்டு விசுவாசிப்பது” என இருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். விசுவாசம் சவாலானது மற்றும் அதற்கு தேர்வுகள் தேவை. ஆனால் ஜெபங்கள் பதிலளிக்கப்படுகின்றன.25 மற்றும் பதில்களை உணர முடியும்.26 வாழ்க்கையில் சில உண்மையான விஷயங்கள் காணப்படுவதில்லை; அவை உணரப்படுகின்றன, அறியப்படுகின்றன மற்றும் அனுபவிக்கப்படுகின்றன. அவை அதிக உண்மையானவை.
பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை நீங்கள் அறிந்துகொள்ளவும் அவருடன் உறவை மேற்கொள்ளவும் இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.27 அவர் போதித்தார், “உங்களில் ஒருவர் ஒரு மகனைப் பெற்றிருக்கிறார், அவன் வெளியே நின்று, அப்பா, நான் உள்ளே வந்து உங்களுடன் உணவருந்துவதற்கு உங்கள் வீட்டைத் திறவுங்கள் என்று கூறினால், உள்ளே வா, என் மகனே. ஏனென்றால் என்னுடையது உன்னுடையது, உன்னுடையது என்னுடையது என்று சொல்லமாட்டாரா?28 நித்திய பிதாவாகிய தேவனின் இதற்கும் மேலான தனிப்பட்ட, அன்பான, தோற்றத்தைப் பற்றி உங்களால் சிந்திக்க முடியுமா?
நீங்கள் அவருடைய பிள்ளை. நீங்கள் தொலைந்துவிட்டதாக உணர்ந்தால், உங்களிடம் கேள்விகள் இருந்தால் அல்லது ஞானம் இல்லாதிருந்தால், உங்கள் சூழ்நிலைகளுடன் போராடினால் அல்லது ஆவிக்குரிய முரண்பாடுகளுடன் மல்யுத்தம் செய்தால், அவரிடம் திரும்புங்கள். ஆறுதல், அன்பு, பதில்கள் மற்றும் வழிகாட்டுதலுக்காக அவரிடம் ஜெபம் செய்யுங்கள். தேவை எதுவாக இருந்தாலும், நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் பரலோக பிதாவிடம் உங்கள் இருதயத்தை ஊற்றுங்கள் சிலர், நீங்கள் தலைவர் நெல்சனின் அழைப்பைப் பின்பற்ற விரும்பலாம் மற்றும் “அவர் உண்மையில் இருக்கிறாரா—அவர் உங்களை அறிந்திருக்கிறாரா என்று கேட்கலாம். உங்களைப்பற்றி அவர் எப்படி உணருகிறாரென அவரிடத்தில் கேளுங்கள். பின்னர் செவிகொடுங்கள்.”29
அன்பான சகோதர சகோதரிகளே:
-
பரலோக பிதாவை அறிந்து கொள்ளுங்கள். அவர் பரிபூரணர் மற்றும் அன்பானவர்.
-
இயேசு கிறிஸ்து யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.30 அவரே நமது இரட்சகர், நமது மீட்பர். உங்களையும் நீங்கள் நேசிப்பவர்களையும் அவருடன் பிணைத்துக் கொள்ளுங்கள்.
-
மேலும் நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உண்மையான தெய்வீக அடையாளத்தை அறிந்து கொள்ளுங்கள். மகிழ்ச்சிக்கான தேவனின் திட்டம் உங்களைப் பற்றியது. நீங்கள் அவருடைய விலையேறப்பெற்ற குழந்தை மற்றும் மதிப்புமிக்கவர். அவர் உங்களை அறிந்திருக்கிறார், நேசிக்கிறார்.
இந்த எளிய ஆனால் அடிப்படை சத்தியங்கள் குறித்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.