வேதங்கள்
2 நேபி 6


அதிகாரம் 6

யூத வரலாற்றை யாக்கோபு நினைவுகூர்தல். பாபிலோனிய சிறைத்தனமும், திரும்பிவருதலும், இஸ்ரவேலின் பரிசுத்தரின் ஊழியமும், சிலுவையில் அறையப்படுதலும்; புறஜாதியாரிடத்திலிருந்து பெற்ற உதவி; யூதர்கள் மேசியாவை விசுவாசிக்கும்போது, அவர்களின் பிற்கால சீர்பொருந்துதல். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 நேபியின் சகோதரனாகிய யாக்கோபு, நேபியின் ஜனங்களிடத்தில் பேசிய வார்த்தைகளாவன:

2 இதோ, என் பிரியமான சகோதரரே, தேவனால் அழைக்கப்பட்டவனாயும், அவரின் பரிசுத்த முறைமையின் பிரகாரமாய் நியமிக்கப்பட்டவனாயும், நீங்கள் ராஜாவாகவும், காவலனாகவும் பார்க்கிற, பாதுகாப்புக்கு நீங்கள் சார்ந்திருக்கிற, என் சகோதரனாகிய நேபியால் பிரதிஷ்டை பண்ணப்பட்டவனாயுமிருக்கிற, யாக்கோபாகிய நான், உங்களிடத்தில் மிகுதியான பல காரியங்களைப் பேசியிருக்கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள்.

3 ஆயினும், நான் உங்களுடைய ஆத்தும நலனை வாஞ்சிப்பதினிமித்தம், மறுபடியும் உங்களிடத்தில் பேசுகிறேன். ஆம், உங்களினிமித்தம் என் கவலை பெரிதாயுள்ளது; அது என்றைக்கும் இவ்வண்ணமாகவே இருந்திருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். ஏனெனில் நான் மிகவும் கருத்தாய் உங்களுக்குப் புத்திசொன்னேன்; நான் உங்களுக்கு என் தகப்பனின் வார்த்தைகளைக் கற்பித்தேன்; உலக சிருஷ்டி முதல் எழுதப்பட்டிருக்கிற எல்லாக் காரியங்களையும் குறித்து, உங்களிடத்தில் பேசியிருக்கிறேன்.

4 இப்பொழுதும், இதோ, நடப்பவைகளையும் மற்றும் வரப்போகிற காரியங்களையும் குறித்து நான் உங்களிடத்தில் பேசுவேன்; ஆகையால், ஏசாயாவின் வார்த்தைகளை உங்களுக்கு வாசிப்பேன். மேலும் நான், உங்களிடத்தில் பேசவேண்டுமென்று என் சகோதரன் வாஞ்சித்த வார்த்தைகள் அவைகளே. மேலும் நீங்கள் தேவனுடைய நாமத்தை அறிந்து, மகிமைப்படுத்தல் வேண்டும் என்று, உங்கள் நன்மையினிமித்தம் உங்களிடம் பேசுகிறேன்.

5 இப்பொழுது, நான் வாசிக்கப்போகும் வார்த்தைகள், ஏசாயா இஸ்ரவேல் வீட்டார் அனைவரையும் குறித்துப் பேசியவை; ஆதலால், நீங்களும் இஸ்ரவேல் வீட்டாராயிருப்பதால், அவைகளை உங்களுக்கும் ஒப்பிடலாம். மேலும் நீங்களும், இஸ்ரவேல் வீட்டாராயிருப்பதால், ஏசாயாவால் பேசப்பட்டிருக்கின்ற அநேக காரியங்களை உங்களுக்கும் ஒப்பிடலாம்.

6 இப்பொழுதும், இவைகளே அந்த வார்த்தைகள்: இதோ, நான் என் புயத்தை புறஜாதியாருக்கு நேராக உயர்த்துவேன். ஜனத்துக்கு என் கொடியை ஏற்படுத்துவேன், அவர்கள் உன் குமாரர்களைத் தங்கள் கரங்களில் ஏந்துவார்கள். உன் குமாரத்திகளை, தங்கள் தோள்களின்மீது சுமந்துகொண்டு வருவார்கள், என்று கர்த்தராகிய தேவன் உரைக்கிறார்.

7 ராஜாக்கள் உன்னை போஷிக்கும் தகப்பன்களாகவும், அவர்களுடைய இராணிகள், தாபரிக்கும் தாய்மார்களாகவும் இருப்பார்கள்; அவர்கள் தரையில் முகம்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உனது கால்களின் தூசியை நக்குவார்கள்; நானே கர்த்தர் என்று அறிவாய், ஏனெனில், எனக்காக காத்திருப்பவர்கள் வெட்கப்பட்டுப் போகமாட்டார்கள்.

8 இப்பொழுது யாக்கோபாகிய நான், இந்த வாரத்தைகளைக் குறித்து சற்று பேசுகிறேன். ஏனெனில், இதோ, நாங்கள் எவ்விடத்திலிருந்து வந்தோமோ, அந்த எருசலேமில் இருந்தவர்கள், கொலை செய்யப்பட்டு, சிறைத்தனத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று கர்த்தர் எனக்குக் காண்பித்திருக்கிறார்.

9 ஆயினும், அவர்கள் மறுபடியும் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் எனக்குக் காண்பித்திருக்கிறார். மேலும் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய, கர்த்தராகிய தேவன், தம்மையே அவர்களுக்கு மாம்சத்தில் வெளிப்படுத்துவார் என்றும், அவர் எனக்குக் காண்பித்திருக்கிறார்; இவைகளை என்னிடம் பேசிய தூதனின் வார்த்தைகளின்படியே, அவர் தம்மையே வெளிப்படுத்திய பின்பு, அவர்கள் அவரைச் சவுக்கினால் அடித்து, சிலுவையில் அறைய வேண்டும்.

10 அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய்த் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, தங்கள் கழுத்துக்களை கடினப்படுத்திய பிறகு, இதோ, இஸ்ரவேலின் பரிசுத்தருடைய நியாயத்தீர்ப்புகள் அவர்கள் மீது வரும். அவர்கள் அடிக்கப்பட்டு, உபத்திரவப்படும் காலமும் வரும்.

11 ஆகையால், அவர்கள் அங்கேயும் இங்கேயுமாக விரட்டப்பட்டு, அநேகர் மாம்சத்தில் உபத்திரவப்பட்டுப் போனபின்பு, விசுவாசிகளின் ஜெபத்தினிமித்தம் அழிவிற்குட்படுத்தப்படமாட்டார்கள்; அவர்கள் சிதறடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, வெறுக்கப்படுவார்கள்; இருப்பினும் தங்கள் மீட்பரின் ஞானத்திற்கு அவர்கள் வரும்போது, தங்கள் சுதந்திர தேசங்களுக்கு மறுபடியும் அவர்கள் ஒன்றாய்க் கூட்டிச்சேர்க்கப்படும்படிக்குக் கர்த்தர் அவர்களுக்கு இரக்கமுள்ளவராய் இருப்பாரென்று, தூதன் சொன்னான்.

12 இந்தத் தீர்க்கதரிசி குறிப்பிட்டு எழுதிய அந்த புறஜாதியார் பாக்கியவான்கள்; ஏனெனில் இதோ, அவர்கள் மனந்திரும்பி சீயோனுக்கு விரோதமாய்ச் சண்டையிடாமல், அந்தப் பெரிதும், அருவருப்புமான சபையில் தங்களைச் சேர்த்துக்கொள்ளாமல் இருந்தார்களெனில், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்; கர்த்தராகிய தேவன், தன் பிள்ளைகளுக்குத் தான் செய்த, தன் உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார். இந்தக் காரணத்திற்காக இவற்றை தீர்க்கதரிசி எழுதினான்.

13 ஆகையால் சீயோனுக்கும், கர்த்தரின் உடன்படிக்கையின் ஜனத்திற்கும் விரோதமாய்ச் சண்டையிடுகிறவர்கள் அவர்களின் பாதங்களின் தூசியை நக்குவார்கள்; கர்த்தருடைய ஜனம் வெட்கப்பட்டுப் போகமாட்டார்கள். ஏனெனில் அவருக்காகக் காத்திருப்பவர்களே கர்த்தருடைய ஜனம்; ஏனெனில், அவர்கள் மேசியாவின் வருகைக்காக இன்னும் காத்திருக்கிறார்கள்

14 இதோ, தீர்க்கதரிசியின் வார்த்தைகளின்படியே, மேசியா அவர்களை திரும்பக்கொண்டு வரும்படி மறுபடியும் இரண்டாம் விசை துவங்குவார்; ஆதலால் அவர்கள் அவரிலே விசுவாசிக்கும் அந்த நாள் வருகையிலே, அவர்கள் சத்துருக்களின் அழிவிற்கேதுவாய் வல்லமையிலும் மகா மகிமையிலும் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவார்; மேலும் தம்மில் விசுவாசிக்கிற ஒருவரையும் அவர் அழிப்பதில்லை.

15 அவரை விசுவாசிக்காதவர்கள், நெருப்பாலும், புயலாலும், பூமியதிர்ச்சியாலும், இரத்தம் சிந்துதல்களாலும், கொள்ளை நோய்களாலும், பஞ்சத்தாலும் அழிக்கப்படுவார்கள். அவர்கள் கர்த்தரே இஸ்ரவேலின் பரிசுத்தராகிய தேவன், என்பதை அறிவார்கள்.

16 பராக்கிரமசாலியிடமிருந்து கொள்ளைப்பொருளை எடுக்க முடியுமோ அல்லது சட்டப்படியாக சிறைபிடிக்கப்பட்டவனை தப்புவிக்கக்கூடுமோ?

17 ஆனாலும் கர்த்தர் உரைப்பதாவது: பராக்கிரமசாலிகளின் சிறைத்தனத்திலுள்ளோர் கூட வெளியே கொண்டு செல்லப்படுவர், பயங்கரமானவர்களின் கொள்ளைப்பொருள் கூட தப்புவிக்கப்படும், ஏனெனில் வல்லமையான தேவன், தம் உடன்படிக்கையின் ஜனத்தைத் தப்புவிப்பார், ஏனெனில் கர்த்தர் சொல்லுகிறார்: உன்னோடுகூடப் போராடுகிறவனுடன் நானும் போராடுவேன்.

18 உன்னை ஒடுக்குகிறவர்களை அவர்களின் சொந்த மாம்சத்தால் போஷிப்பேன்; அவர்கள் சுவையுள்ள திராட்சை இரசத்தைப்போல தங்கள் சொந்த இரத்தத்தைக் குடிப்பார்கள்; மாம்சமான யாவரும், யாக்கோபின் வல்லவரும், உங்களின் மீட்பரும், உங்களின் இரட்சகருமாகிய நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.